7 - தொங்குதல் -- தூங்குதல் என்பதன் மரு.
நாம் தொங்குதல் என்ற சொல்லைப் பயன் படுத்துகிறோம்: பாபிலோனியாவில் இருந்த தொங்கு தோட்டம் உலகின்
ஏழு அதிசயங்களுள் ஒன்று என்பதை அறிவோம்; தொங்கு சட்ட சபை என்பது எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்க இயலாத சபை; சில ஊர்களில் தொங்கு பாலம் உண்டு; தொங்கு ரயில் என்றால் மொனோரயில்.
பழைய நூல்களில் தூங்குதல் என்னும் சொல்தான்
ஆளப்பட்டது.
1 -- குறுந்தொகை - 18 :
"சிறுகோட்டுப் பெரும்பழம் தூங்கி யாங்கு"
(சிறிய காம்பில் பெரிய கனி தூங்குவது போல்.)
2 -- புற நானூறு - 22 :
"தூங்கு கையான் ஓங்கு நடைய" (தூங்குகிற
கையும் விரைந்த நடையும் உடைய யானைகள்).
3 -- புற நானூறு 163 :
"பழம் தூங்கு முதிரத்துக் கிழவன்" (பழங்கள் தூங்குகிற மரங்கள்
நிறைந்த முதிர மலைக்கு உரியவன்)
தூங்குதல் என்பதன் பிறவினை தூக்குதல்.
கலங்குதல் - கலக்குதல்; மயங்குதல் - மயக்குதல்;
விளங்குதல் -
விளக்குதல் என்பவை போல்.
பிறவினைச் சொல்லான தூக்குதல் மாறவில்லை, தன்வினையாகிய தூங்குதல் மருவிற்று. தூக்கம் கொள்ளுதலைப் பழங்காலத்தில் உறங்குதல்
என்றனர்:
"உறங்குவது போலும் சாக்காடு" (குறள்)
ஆங்கிலம் பிரஞ்சு முதலிய மொழிகளில் மரு அதிகம் இல்லை; தமிழில் ஏராளம் இருப்பதற்குக் காரணம்
நம் எழுத்து மொழியும் பேச்சு வழக்கும்
மிகுதியாக வேறுபட்டிருப்பதுதான். எழுதுவது போலவே தொடக்கத்திலிருந்து தமிழர் பேசிவந்திருந்தால்
சொற்களுக்கு ஒரு ஸ்திரத்தன்மை ஏற்பட்டிருக்கும், மாறுதல் நேர்ந்திருக்காது.
==================================
அனைத்து விளக்கங்களும் மிகவும் அருமை... சிறப்பு... நன்றி ஐயா... தொடர வாழ்த்துக்கள்...
ReplyDeleteதொடர்ந்து வாசித்துப் பாராட்டுகிற உங்களுக்கு என் அகமார்ந்த நன்றி .
Deleteபிறவினைச்சொல் மாறாமல் தன்வினை மட்டும் மருவியது வியப்பையளிக்கிறது. தொங்குதலுக்குத் தூங்குதல் என்ற சொல் பழங்காலத்தில் புழங்கியது என்பது எனக்குப் புதிய செய்தி. இன்னும் இது போல் மாறியிருக்கும் சொற்களை அறிந்து கொள்ள விரும்புகிறேன். இப்பதிவுக்கு மிக்க நன்றி.
ReplyDeleteதமிழ் இலக்கணம் நன்கு பயில வாய்ப்பு இல்லாதோர் சில விஷயங்களையாவது அறிந்துகொள்வார்கள் என்ற எண்ணத்தில் எழுதினேன் . பயன் இருக்கிறது என்று தெரிகிறது . பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி .
Deleteநான் ஒரு திரைப்பாடலைக் கேட்கும்போதெல்லாம் எனக்குள் எழுந்த ஐயம் இன்று உங்கள் பதிவின் மூலம் விலகியது. அந்தப் பாடல், 'தூக்கணாங்குருவிக் கூடு தூங்க்க் கண்டான் மரத்திலே' என்று ஆரம்பிக்கும். தூக்கணாங்குருவிக்கூடு தொங்கக் கண்டான் என்று பாடாமல் தூங்கக்கண்டான் என்று பிழையாகப் பாடுவதாகவே இவ்வளவு நாள் நினைத்திருந்தேன். பல இலக்கிய உதாரணங்களுடன் மருச்சொல்லை விளக்கியமைக்கு மிக்க நன்றி தங்களுக்கு.
ReplyDeleteபின்னூட்டத்திற்கு மிகுந்த நன்றி . அப் பாடலை நானும் கேட்டிருக்கிறேன் பாராட்டுக்கு மிகுந்த நன்றி .
Deleteஇலக்கிய உதாரணங்கள் ரசிக்கவைத்தன் ..
ReplyDeleteமூங்கில் இலை மேலே தூங்கும் பனிநீரே என்னும் ஏற்றப்பாட்டு நினைவுக்கு வந்தது..!
பாராட்டுக்கு மிக்க நன்றி .
Deleteவணக்கம். இன்றைய வலைச்சரத்தில் தங்கள் தளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நன்றி.
ReplyDeletehttp://blogintamil.blogspot.com.au/2014/01/blog-post_21.html
தெரயச் செய்தமைக்கு மிக்க நன்றி .
Delete