Thursday, 30 January 2014

வலிமையின் ஆதிக்கம்


உலகம் வலிமையை ஆதரித்து அதை ஊக்குவதாகவே இருந்துவருகிறது.
வலிமை பல வகைப்படும்: முக்கியமானது உடல் வலிமை; அடுத்துப் பண வலிமை,  சாதி வலிமை,  பதவி வலிமை,  அதிகார வலிமை,  செல்வாக்கு வலிமை, இவை தனிப்பட்டார்க்கு; இவற்றுள் இரண்டு மூன்று சேர்ந்துவிடில் அசைக்க முடியாத ஆதிக்கம் தலைவிரித்தாடும்.நாடுகளைப் பொருத்தவரை, படை வலிமை முதன்மையானது.

சிங்கம் புலி முதலான உடல் வலு மிக்க விலங்குகள் அது குறைந்த மான், ஆடு மாடுகளை விரட்டி,  மடக்கி, பாய்ந்து கவ்விக் கதறக் கதறக் கொன்று பசியாறுகின்றன. பெரிய மீன்கள் சிறு மீன்களை இரையாக்கிக் கொள்கின்றன. மனிதர்களிலும் வலிமை மிகுந்தோர் எளியோரின் உடைமை,  உரிமைகளைப் பறித்துத் தங்கள் வாழ்வை வளப்படுத்திக் கொள்கின்றார்கள். ஓநாயும் ஆட்டுக் குட்டியும் கதை அத்தகைய மனிதரைக் குறித்ததே. தேக பலம் உள்ளவனுக்கு எல்லாரும் அஞ்சுகிறார்கள்; தான் விரும்பியதை அவன் வன்செயல்களால் அடைகிறான்.

   1 -- வல்லான் வகுத்ததே வாய்க்கால்; வல்லவன் ஆடியதே பம்பரம்.
   2 --- தடி எடுத்தவன் தண்டல்காரன்.

என்னும் பழமொழிகள் உடல் வலிமையின் ஆதிக்கத்தை விளக்குகின்றன.

 தண்டல்காரன் = வசூல்காரன்; கடைத் தெருவில் மாமூல் பிடுங்குகிற ரவுடிகள் உடல் வல்லமையைப் பயன்படுத்தி ஆதாயம் பெறுகின்றனர்.

 ஓட்டப் பந்தயம்,  குத்துச் சண்டை,  மற்போர்,  வட்டு எறிதல்,  நீச்சல் முதலான போட்டிகளில் நோஞ்சான்கள் கலந்துகொள்ளவே இயலாது; அவற்றில் அதிக வலிமைதான் வெற்றி வாகை சூடிப் புகழ் எய்துகிறது.
 உடல் வலிமைக்குச் சொன்னவை மற்ற வலிமைகளுக்கும் பொருந்தும் என்பதைக் கண்கூடாகக் காணலாம்; அனுபவத்தாலும் வரலாற்றாலும் அறியலாம்.

"அதிகாரி வீட்டுக் கோழிமுட்டை குடியானவனின் வீட்டு அம்மியை உடைக்கும்" என்னும் பழமொழி அதிகார வலிமையைச் சுட்டுகிறது.

பழங் காலத்தில் வலிய படையினர் பிற நாடுகளுள் புகுந்து, தாக்கி, வென்று உயிர் உடைமைகளுக்குப் பெருஞ் சேதம் விளைவித்தனர். அந்த நாடுகளைச் சூறையாடி, பற்பலரைக் கைது செய்து, கொண்டுபோய் அடிமைகளாய் நடத்திக் கசக்கிப் பிழிந்து, பென்னம்பெரிய கட்டடங்கள், பாலங்கள், கோவில்கள் முதலானவற்றை எழுப்ப அவர்களைப் பயன்படுத்தினார்கள்.

ஆப்பிரிக்க மக்களை வெள்ளையர் பிடித்து, இடுப்பிலும் கழுத்திலும் இரும்புச் சங்கிலி மாட்டிக் கூட்டங் கூட்டமாய்க் கப்பலில் ஏற்றிக் கடத்திச் சென்று அடிமைகளாய் விற்றார்கள். அமெரிக்காவையும் ஆஸ்திரேலியாவையும் ஆக்கிரமித்துக் கைப்பற்றி, வலிமையற்ற பூர்வ குடிகளை ஈவிரக்கம் இல்லாமல் கொன்று குவித்துக் கிட்டத்தட்ட அறவே ஒழித்து, அவர்களின் இடங்களைப் பிடுங்கிக்கொண்டு வாழ்கிறார்கள். ஆசியா, ஆப்பிரிக்காக் கண்டங்களின் பலபல நாடுகளில், தங்கள் ஆட்சியை நிறுவி, அவற்றைச் சுரண்டிக் கொழுத்தார்கள்.

நம் காலத்திலும் படை வலிமை செயல்படுவதைக் காண்கிறோம்: இந்தியாவின் கிழக்கில் 22,000 சதுர மைல் பகுதியைச் சீனா பிடித்து வைத்துக்கொண்டிருக்கிறது; மீட்க நம்மால் இயலவில்லை. காஷ்மீரின் மூன்றில் ஒரு பாகத்தைப் பாக்கிஸ்தான் வசப்படுத்தி, " ஆஜாத் காஷ்மீர்" என்று அதற்குப் பெயரிட்டிருக்கிறது; நேரு ஐ. நா. வில் முறையிட்டும் பலனில்லை.

ஈரானும் லிபியாவும் அமெரிக்காவால் சீரழிந்த கொடுமையை அறியாதார் யார்?

 இயற்கைத் தேர்வு (natural selection),  வலுவுள்ளது தங்கல் (survival of the fittest) என உயிரியல் கூறுவது,  இயற்கையானது வலிமையை வளர்க்கிறது என்பதைக் கண்டுதான்.

 இரு காட்டுகள்:

 1 -  இன விருத்திக்கான தருணத்தில், ராணித் தேனீ அடையை விட்டு வெளியே வந்து, பறந்து செல்ல,  எல்லா ஆண் ஈக்களும் தொடர்கின்றன; ஆற்றல் குறைந்தவை பின்தங்க,  வலிமை மிக்க ஒரேயோர் ஆண் ஈ, ராணியை நெருங்குகிறது; இரண்டும் கூடி சக்தி மிகுந்த குழந்தைகளை ஈனுகின்றன.

 2 -   தெரு நாய்களைக் கவனித்திருக்கிறீர்களா? தாய் நாய், தொடக்கத்தில், எல்லாக் குட்டிகளுக்கும் பால் தருகிறது; ஓரளவு வளர்ந்தபின்,  குட்டிகள் பசியோடு தாயை அணுகும்போது, அது ஓடும்;  குட்டிகள் பின்னால் ஓடும்; களைத்துப் போகிறவை அங்கங்கு நின்றுவிடும்; சக்தி அதிகமுள்ள குட்டி ஓடிவரும்; தாய் நின்று அதற்குப் பாலூட்டும்.

வலிமையான சந்ததி உருவாவதற்கு இயற்கை பின்பற்றும் உத்தி!
பலவீனம்,  வல்லமை ஆகியவற்றின் விளைவாக மக்களிடையே ஏற்றத் தாழ்வுகள் ஏற்பட்டு நீடிக்கின்றன; அவற்றைப் போக்கி சமத்துவத்தை மலரச் செய்ய யார்யார் எவ்வளவு பாடுபட்டாலும் வெற்றி கிட்டவே கிட்டாது; ஏனென்றால், வலிமையின் ஆதிக்கம் என்பது இயற்கை நியதி.

  "எளியாரை வலியார் வாட்டினால் வலியாரை தெய்வம் வாட்டும்" என்னும் எச்சரிக்கை ஒரு பயனையும் தருவதில்லை; எளியார் தமக்கு ஆறுதல் சொல்லிக்கொள்ளத்தான் அது உதவுகிறது.
           +++++++++++++++++++++++


4 comments:

 1. வித்தியாசமான சிந்தனை ஐயா...

  வலியாரை அவர்களின் மனச்சாட்சியே கண்டிப்பாக ஒரு நாள் பழிவாங்கும்... அது போதாதா...?

  ReplyDelete
  Replies
  1. பழி வாங்கினால் நல்லதுதான் . உங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி .

   Delete
 2. வலிமை மிகுந்த யானை மனிதனின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது என்றால் அதற்குக் காரணம் அதன் சக்தி அதற்குத் தெரியாது இருப்பதே ஆகும். எளியவர்களின் சக்தியும் அவர்களுக்குத் தெரியாது இருப்பதே இந்த ஏற்ற தாழ்வுகளுக்குக் காரணம் என்று தோன்றுகிறது. சிந்திக்கச் செய்யும் பதிவு ஐயா. .

  ReplyDelete
  Replies
  1. உங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி . யானை கட்டுப்பாட்டில் இருப்பதற்கு அதை அடக்குவதற்கான இரும்பு ஆயுதமாகிய அங்குசம் பாகனின் கையில் உள்ளதுதான் காரணம் ; அதையும் மீறிச் சில சமயம் அவனை யானை கொன்றுவிடும் . " இருந்திருந்தும் பாகனையே கொல்லும் யானை " என்னும் பா இதைக் குறிக்கிறது . எளியவர்களிடம் சக்தி இல்லாமையே அவர்களை அடி பணிய வைக்கிறது . திருவள்ளுவர் எழுதினார்

   வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின்
   மெலியார்மேல் செல்லும் இடத்து .
   என்று .
   "எளியவர்களே ! உங்களிடம் சக்தி இருக்கிறது . திரண்டு எழுந்து அதைப் பயன்படுத்துங்கள் " என்று எந்த நூலும் சொல்லவில்லை .
   புதிய கருத்தை எடுத்துச் சொன்னமைக்கு மிகுந்த நன்றி .

   Delete