Tuesday, 8 April 2014

நீரும் நெருப்பும்


  


நகரங்களில் குழாய் வழிக் குடிநீர் கிடைக்கிறதுசிற்றூர்களில் கிணறு, குளம், ஆறு முதலிய  நீர்நிலைகள் வழங்குகின்றன. நினைத்த நேரத்தில் ஒரு குச்சியைக் கொளுத்தி நெருப்பைப் பெறுகிறோம். இவ்வாறு நீரும் நெருப்பும் எளிய முயற்சியால் அடைய முடிகிறது.

  முன் காலத்தில், நெருப்பு தேவையானால், தீக் கடைகோலை, ஒரு மரத் தட்டில் அழுத்திப் பலமாய்த் தேய்த்து உராய்வால் தோன்றும் பொறியைத் தேங்காய் நாரில் பற்ற வைத்து ஊதியூதி அதிகமாக்கிப் பயன்படுத்தினர். விரும்பும் போதெல்லாம் அதை உடனடியாயும் எளிதாயும் பெறுவதற்குச் செல்வர்கள் தம் இல்லத்தில், உமியில், அதைச் சேமித்து வைத்து அணையாமல் பராமரித்தார்களாம்; மற்றவர்கள் அவர்களிடம் போய், தேங்காய் நார்மூலம்,  தீயைத் தம் வீடுகளுக்கு எடுத்துவந்தார்களாம்.

  நீருக்கும் பணக்காரர் கருணை தேவைப்பட்டது; அவர்கள் அனுமதித்தால், அவர்களின் தோட்டத்துக் கிணற்றில் சேந்திக்கொள்ளலாம்.

 இரு பொருள்களும் அன்றாட அத்தியாவசிய தேவை அல்லவாஆகவே, ஏழைகள் அவர்களிடம் குழைய வேண்டிய கட்டாயம் இருந்தது. யாராவது ஒருவர், பணக்காரனை எதிர்த்துப் பேசினால் அல்லது செயல்பட்டால், "அவனுக்கு யாரும் நீரும் நெருப்பும் தரக்கூடாது" என்ற கட்டளை பிறக்கும். யாவரும் அதை ஏற்றாகவேண்டும். இப்போதுகூட,  கட்டப் பஞ்சாயத்துத் தலைவர், கிராமத்தில் சிலரை ஒதுக்கி வைத்து, "அவர்களுடன் ஒருவரும் தொடர்பு கொள்ளக்கூடாது" என ஆணையிட்டு அமல்படுத்துகிறார்; நாளேடுகளில் வாசிக்கிறோம். அரசு, சட்ட திட்டங்கள், காவல் துறை, தீர்ப்பு மன்றம் ஆகியவை உள்ள இந்தக் காலத்திலேயே, இந்த நிலை எனில், இவை இல்லாத பழங் காலத்தில் எப்படி இருந்திருக்கும்? கற்பனை செய்து பாருங்கள்!

    நெருப்புக் குச்சியை உருவாக்கியவரும் பாதுகாக்கப்பட்ட நீரை வழங்கும் ஊராட்சியாரும் செல்வர்களின் பிடியிலிருந்து ஏழைகளை விடுவித்தனர் எனலாம்.

                           =========================

8 comments:

  1. அடக்குமுறை ஒழித்தவர்களுக்கு என்றும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்துரைக்கு மிகுந்த நன்றி .

      Delete
  2. விஞ்ஞான முன்னேற்றம்..!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் , நீங்கள் சொன்னதுபோல் உலக முன்னேற்றங்களுக்கு அறிவியல் கண்டுபிடிப்புகளே காரணம் . நாம் எடிசன் , ரைட் சகோதரர்கள் , கிரகாம் பெல் , முதலானவர்களை நன்றியுடன் அடிக்கடி நினைகூர வேண்டும் . உங்கள் கருத்துரைக்கு மிகுந்த நன்றி .

      Delete
  3. தங்களது அன்றாட அத்தியாவசியத் தேவைகளைப் பெறவும் செல்வந்தர்களை அண்டியிருந்த ஏழை மக்களின் அன்றைய நிலையை அறியத் தந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. கருத்துரைக்கு மிகுந்த நன்றி .

      Delete
  4. நீரும் நெருப்பும் பணக்காரர்கள் கையில் இருந்த காலத்தில் ஏழைகளின் நிலைமை படுமோசம் தான். அறியாத செய்தியை அறியச் செய்தமைக்கு நன்றி!

    ReplyDelete
  5. கருத்துரைக்கு மிகுந்த நன்றி .

    ReplyDelete