செங்கோல், கொடுங்கோல்:
மன்னர்களைப் பற்றி, செங்கோல் செலுத்தினார்கள் என்றோ கொடுங்கோலர்கள் என்றோ குறிப்பிடுவது வழக்கம். கோல் என்றால் கம்பு: ஆளுக்கொரு கம்பைக் கையில் பிடித்திருந்தார்களா சங்கராச்சாரியாரைப் போல?
செங்கோல் (செம்மை + கோல்) என்றால் செம்மையான கம்பு, அதாவது கோணல்மாணல் இல்லாத கம்பு. 390 ஆம் குறளின் உரையில்,
பரிமேலழகர், "செவ்விய கோல் போன்றது ஆகலின் செங்கோல் எனப்பட்டது" ஏன்று விளக்கியுள்ளார்.
குற்றங் குறை அற்ற ஆட்சியை நூல் பிடித்தாற் போல நேராக உள்ள கம்பாக
உருவகித்தார்கள்.
கொடுங்கோல் (கொடுமை + கோல்);
இங்கு,
கொடுமை என்பதற்கு வளைவு என்று பொருள்; ஆகவே, கொடுங்கோல் = வளைந்த கம்பு.
மோசமான ஆட்சிக்குக் கோணல் கம்பு உருவகம்.
சிலப்பதிகாரம், காட்சிக் காதை, அடி 98 , 99 :
வல்வினை வளைத்த கோலை
மன்னவன்
செல்லுயிர் நிமிர்த்துச்
செங்கோல் ஆக்கியது.
ஊழானது கோலை வளைத்துவிட்டது;
மன்னனின் உயிர் அதை நிமிர்த்தது.
இங்கே, கொடுங் கோலை வளைந்த கோல் எனவும் நிமிர்த்திய கோலைச் செங்கோல் எனவும் புலவர்
குறிப்பிடக் காண்கிறோம்.
ஆகையால், செங்கோல் கொடுங்கோல் என்பவை உண்மையான கம்புகள் அல்ல, வெறும் உருவகமே என்று அறிகிறோம்.
---------------------------------------------------
(படம்; நன்றி இணையம்)
இரண்டிற்கும் சொன்ன விளக்கம் அருமை ஐயா... நன்றி...
ReplyDeleteஉங்கள் பாராட்டுக்கு என் அகமார்ந்த நன்றி .
Deleteவிளக்கங்கள் தெளிவாய் இருந்தன. நன்றி
ReplyDeleteஉங்கள் பாராட்டுக்கு என் உளமார்ந்த நன்றி.
Deleteசெங்கோல் பற்றிய தங்களின் விளக்கத்துக்கு நன்றி. எனக்கு ஒரு சந்தேகம். கிரேக்க புராதான கதைகளிலும் பண்டைய மேற்கத்திய அரச பரம்பரையிலும் ஆட்சியுரிமையின் அடையாளமாக கிரீடமும் sceptre என்னும் கோலும் இருந்ததாக அறிகிறேன். ஒருவேளை அதைத்தான் செங்கோல் என்று தமிழில் குறிக்கிறோமோ என்ற என் ஐயப்பாட்டை விளக்குமாறு வேண்டுகிறேன். நன்றி.
ReplyDeleteகருத்துரைக்கு மிக்க நன்றி . Sceptre வேறு , நம் கோல் வேறு . அது அதிகாரத்தின் அறிகுறியாகக் கையில் பற்றியிருந்த உண்மையான கம்பு . இது உருவகம் மட்டுமே . " குடிபழி தூற்றும் கோலேன் ஆகுக ! " என்று புறம் 72 ஆம் பாட்டில் வருகிறது ; இதன் பொருள் : என் குடிமக்கள் என்மீது பழி கூறும் அளவுக்கு நான் கொடுங்கோலன் எனப் பெயரெடுப்பேனாகுக ! சங்க காலத்திலேயே உருவகம் தோன்றிவிட்டது என்பது இதனால் தெரிகிறது .
Deleteதங்கள் விளக்கத்தால் தெளிவுபெற்றேன். மிக்க நன்றி.
Deleteகொடுங்கோல் என்றால் கொடுமையான அதாவது மோசமான ஆட்சி என்று யூகித்திருந்தேன். ஆனால் கொடுமை என்பதற்கு வளைந்த என்ற பொருள் இருப்பதும் கோலை ஓர் உருவகமாகப் பயன்படுத்தியிருக்கின்றனர் என்பதும் இன்று தான் தெரிந்தது. விளக்கத்திற்கு மிக்க நன்றி!
ReplyDeleteகருத்துரைக்கு மிக்க நன்றி .
Delete