Tuesday 21 May 2019

பஞ்ச மா பாதகங்கள்





  ஏடுகளில் வாசிக்கிறோம், கேள்விப்படுகிறோம் பஞ்ச மா பாதகம் என்று. தமிழில் ஐம்பெருங் குற்றங்கள் எனலாம். அவை என்னென்ன?

  மனுஸ்மிருதி (X1-55) கூறுகிற பஞ்ச மா பாதகங்கள்: பார்ப்பனக் கொலை, சுராபானம் அருந்துதல், பார்ப்பனரின் பொன்னைக் கவருதல், குரு பத்தினியைப் புணர்தல், இப்பாதகங்களைச் செய்தோருடன் கூடியிருத்தல்.

  பார்ப்பனரல்லாதாரைக் கொல்லுதலும் அவர்களின் பொருளைத் திருடுதலும் பெரும் பாதகங்களாக அந்நூல் கருதவில்லை; ஆனால் மது அருந்துதல் மிகப் பெருங்குற்றம் என்கிறது. அறிவுக்கொவ்வாத கருத்துகள் இவை.

  பெரிய குற்றங்கள் ஐந்து என்று சங்க இலக்கியங்கள் வரையறுக்கவில்லை.

புறநானூறு (பா.34)

ஆன்முலை அறுத்த அறனி லோர்க்கும்
மாணிழை மகளிர்க் கருச்சிதைத் தோர்க்கும்
குரவர்த் தப்பிய கொடுமை யோர்க்கும்

ஆகிய அடிகளில் மூன்று பாதகங்களைக் குறிப்பிடுகிறது.

1. பசுக்களின் மடிகளை அறுத்த அறனற்றவர்கள்.
2. பெண்டிரின் கருவைச் சிதைத்தவர்கள்
3. பெற்றோரைத் துன்புறுத்திய கொடியவர்கள்.

ஆக்களையும் கர்ப்பிணிகளையும் பெற்றோர்களையும் கொன்ற தீயவர்களைத்தான் செய்யுள் சூசகமாகக் குறிப்பிடுவதாக உரையாசிரியர் விளக்குகிறார். இதன்படிப் பார்த்தால் கொலை என்ற ஒரு பாதகத்தை மட்டுமே புறநானூறு கூறுவதாகக் கொள்ளலாம். சரிதானே? கொலையைக் காட்டிலும் பெரிய கொடுமை வேறில்லை.

  ஆனால் சிலப்பதிகாரம் கொலையை விட்டுவிட்டு வேறு குற்றங்களைப் பற்றிக் கூறுகிறது.

(இந்திரவிழவூரெடுத்த காதை. அடி 128-131)

தவமறைந் தொழுகும் தன்மை யிலாளர்
அவமறைந் தொழுகும் அலவற் பெண்டிர்
அறைபோ கமைச்சர் பிறர்மனை நயப்போர்
பொய்க்கரி யாளர் புறங்கூற் றாளர்

பொருள்:

1. தவ வேடம் தரித்துக் கொண்டு தீயொழுக்கத்தில் ஈடுபடுவோர் (போலிச் சாமியார்)
2. ரகசியமாகத் தீய நெறியில் ஒழுகும் வேசிகள்
3. அரசனுக்குத் துரோகம் புரியும் அமைச்சர்
4. பிறரது மனைவியை நாடுவோர்
5. பொய் சாட்சி சொல்பவர்
6. புறங் கூறுவோர்

இவற்றில் எதுவும் பெரிய குற்றம் என ஏற்க முடியாது.

  ஐம்பெருங் குற்றங்கள் என்று சொல்வது பிற்காலத்தில் ஏற்பட்ட வழக்கம். அவற்றை ஒரு தனிப்பாடல் பட்டியலிடுகிறது.

காதல் கவறாடல் கள்ளுண்டல் பொய்மொழிதல்
ஈதல் மறுத்தல் இவை கண்டாய்.

இந்தப் பாட்டை ஆய்வோம்:

1. காதல் – அளவு கடந்த காமம். இதைப் பெருங் குற்றமாக யாருங் கொள்வதில்லை. நிறையப் பெண்களுடன் தொடர்பு கொள்பவர்களை சமுதாயம் இழிவாகக் கருதுவதில்லை. ஆணாதிக்க சமுதாயமல்லவோ? ஒரு நாளும் அப்படிக் கருதாது. திருக்குறள் உள்பட்ட அற நூல்களுங் கூட, பிறன்மனை நயத்தலைக் கண்டிக்கின்றவே தவிரக் கன்னியரோடு, கைம்பெண்டிருடன், தொடர்பு வைப்பதையெதிர்த்து எதுவுங் கூறவில்லை.

2. கவறாடல் – சூதாடுதல். 
3. கள்ளுண்டல்.
இவையிரண்டும் தனி மனிதர்களையும் அவர்களைச் சார்ந்தோரையும் மட்டுமே பாதிக்கும். மற்றவர்க்குக் கேடில்லை யாதலால் பாதகங்கள் என இவற்றைச் சொல்வதற்கில்லை.

4. பொய் மொழிதல் – இது எல்லோரும் செய்கிற காரியம். அன்றாடம் விளம்பரங்களில் புளுகுகளை அச்சிடுபவர்களையும் தொலைக்காட்சியில் வாய் கூசாமல் பொய்களைப் பரப்புபவர்களையும் பாதகர்கள் என்று சொல்லுதல் பொருந்துமா?
சில சமயம் பொய் தேவைப்படுகிறது. “புரை தீர்த்த நன்மை பயக்கிற” பொய்யை மெய்யாகக் கருதலாம் என்று குறள் கூறுகிறது.

5. ஈதல் மறுத்தல் – ஒருவர் பிறர்க்கு எதையாவது தரும்போது அதைத் தடுத்தல்.

இது எப்போதோ அரிதாக நிகழ்வது. இதனால் இரண்டொருவரோ மிகச் சிறுபான்மையினரோ இழப்படைவர். ஆதலால் இதைப் பெரும் பாதகம் எனல் தகாது.

  மிகப் பெருங் கொடுமையாகிய கொலையை விட்டுவிட்டு சாதாரணக் குற்றங்களைப் பூதாகாரமாக்கிக் காட்டுகிற இந்தப் பாடல், சிந்திக்காமல் கை போன போக்கிலே, இயற்றப்பட்டுள்ள பற்பல தமிழ்ப் பாட்டுகளுக்கு ஓர் எடுத்துக்காடு.

  சிறுபஞ்சமூலம் என்னும் அறநூல் வேறு பட்டியலைக் காட்டுகிறது:

பொய்யாமை பொன்பெறினும் கள்ளாமை மெல்லியலார்
வையாமை வார்குழலார் நச்சினும் – நையாமை
ஓர்த்துடம்பு பேருமென்று ஊன்வாய் உண்ணானேல்
பேர்த்துடம்பு கோடல் அரிது.

பாட்டுக்கு சிறு விளக்கம்:

மெல்லியலார் வையாமை – நம்மை விட அறிவு, கல்வி, உடல்வலிமை, செல்வம், செல்வாக்கு முதலானவற்றில் தாழ்ந்திருப்பவரைத் திட்டாமை.

வார்குழலார் நச்சினும் நையாமை – பெண்கள் தாமே விரும்பி நம்மை நாடினாலும் உடன்படாமை.

இப்பாடலின்படி ஐம்பெரும் பாதகங்களாவன:

1. பொய் சொல்லல்
2. கள் உண்ணல்
3. தாழ்ந்தவரை ஏசுதல்
4. பெண்ணாசை
5. ஊன் உண்ணல்

இங்கும் கொலை இடம் பெறாமை விசித்திரந்தான். புதியனவாய்ச் சொல்லப்பட்டவை திட்டுதலும் ஊன் உண்ணுதலும்.

1. திட்டுதல் – சாதாரண நிகழ்ச்சி. எப்போதாவது நிகழ்கிற மிகச் சிறு குற்றம். ஆகையால் கணக்கில் எடுத்துக் கொள்ளத் தக்கதல்ல.

2. ஊன் உணவு – உலக மக்களுள் மிகப் பெரும்பாலோர் ஊன் உண்ணுகின்றனர். இந்து மதம், யூதம், கிறித்துவம், இஸ்லாம் ஆகிய பெரிய சமயங்களுள் எதுவும் ஊனுணவை எதிர்க்கவில்லை, குற்றமாகக் கருதவில்லை. பற்பல உயிர்கள் பிறவற்றின் ஊனை உண்டுதான் வாழ்கின்றன. இதுவே இயற்கை நியதி.

ஆதலால் சிறுபஞ்சமூலம் உரைப்பதும் ஏற்புடையதல்ல.

அடுத்துக் கம்பராமாயணம்;

ஆரண்ய காண்டம் – கவந்தன் படலம்.

இராம இலக்குவர் கவந்தனைப் பார்க்கின்றனர். அவன் பெரிய பாதகன். அவர்கள் அவனைப் பற்றி என்ன எண்ணுகிறார்கள்?

வேதநூல் வரன்முறை விதிக்கும் ஐம்பெரும்
பாதகம் திரண்டுயிர் படைத்த பண்பிலான்.

பொருள் – வேதமானது வரிசையாய்க் கூறுகிற பஞ்ச மா பாதகங்களும் ஒன்றாய்ச் சேர்ந்து உயிர்பெற்று வந்தது போன்ற கொடியவன்.

அந்தப் பாதகங்கள் என்னென்ன என்பதைக் கம்பர் விரித்துரைக்கவில்லை. உரைகாரரின் கருத்துப்படி அவை: கள்ளுண்ணல், களவு செய்தல், கொல்லுதல், பொய்யுரைத்தல், பிறர்மனை நயத்தல்.

  பரவாயில்லை, இவர் கொலையைச் சேர்த்திருக்கிறார். இதை மட்டுமே பெரும் பாதகம் என ஏற்கலாம். பிறன்மனை நயத்தல் தீயொழுக்கமே தவிரப் பாதகமாகக் கருத முடியாது. மற்றவையுந்தான்.

  நம் வலைச்சித்தர் திண்டுக்கல் தனபாலன் தம் வலைத்தளத்தில் கொலை, பொய், களவு, மது அருந்துதல், குரு நிந்தை ஆகியவை பாதகங்கள் எனக் குறித்துள்ளார். (பதிவுத் தேதி 26-7-18. தோன்றிற் புகழொடு…)

கொலையைப் பட்டியலிற் சேர்த்தது சரியானது.

முடிவுரை – ஐம்பெருங் குற்றங்கள் எவையெவை என்பதில் ஒத்தக் கருத்தில்லை. பழங்கால சமுதாயத்தில் நிகழ்ந்த (இப்போதும் நிகழ்கிற) குற்றங்களுள் ஐந்தை, அவரவர் தத்தம் கொள்கை, நம்பிக்கைக்கேற்ப தேர்ந்தெடுத்துப் பட்டியலிட்டிருக்கிறார்கள். நம் காலத்தில் மிக மோசமான, சமுதாயம் முழுதையுமே பாதிக்கக்கூடிய பாதகங்கள் நடக்கின்றன.

  ஐம்பெரும் பாதகங்களாக நான் கருதுவது;

               1. கொலை (தனி மனிதர்)
               2. பயங்கரவாதம் (terrorism – கும்பல் கொலை)
               3. கடத்தல் (பெண்கள், போதை மருந்து)
               4. மோசடி (போலி ஆவணம்)
               5. பாலியல் வன்கொடுமை

1. ஒருவரை சொத்துத் தகராறு, சாதி மதக் கட்சிப் பகைமை, பழிக்குப் பழி, கள்ளக் காதல், குடும்பப் பிணக்கு முதலியவை காரணமாகக் கொல்கிறார்கள். காரணமின்றியே கூட மனவெறியர் (psycho) கொலை செய்கின்றனர்.

2. Taliban, IS முதலான அமைப்புகள் பொதுமக்களை, மாணவர்களைப் படுகொலை புரிகின்றன.

3. பெண்களைக் கடத்தி விற்கிறார்கள். விபச்சாரத்தில் தள்ளுகிறார்கள். பற்பலரைப் போதையில் ஆழ்த்தி அவர்களின் வாழ்வைப் பாழாக்குகிற மருந்து, கஞ்சா ஆகியவற்றை நாடு விட்டு நாடு கடத்தி உலக சமுதாயத்தைக் கெடுக்கிறார்கள்.

4. மனைப் பத்திரம், சான்றிதழ், மதிப்பெண் பட்டியல், ரேஷன் கார்டு, ATM அட்டை ஆகியவற்றைப் போலியாய்த் தயாரித்து ஏமாற்றுகின்றனர். வேலை வாங்கித் தருவதாக, வெளிநாட்டுக்கு அனுப்புவதாகப் போலி வாக்குறுதி தந்து ஏமாற்றுதலும் இதிலடங்கும்.

5. குழந்தைகள், சிறுமிகள் என்று கூடப் பார்க்காமல், வன்புணர்ச்சிக்குப் பலியாக்குகிறார்கள். Gang rape என்ற கொடுமைக்கும் பஞ்சமில்லை.  

**********

12 comments:

  1. ஒவ்வொன்றைப் பற்றிய விளக்கம் சிறப்பு...

    தங்களுடைய கருத்தும் அருமை ஐயா...

    ReplyDelete
    Replies
    1. வழக்கம்போல் பாராட்டிப் பின்னூட்டம் அளித்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி .

      Delete
    2. 1 இறைவனுக்கு யாரையும்.
      ஒப்பாக்க கூடாது
      2 தாய் தந்தையை துன்பப்படும் வார்த்தை பிரயோகம் கூடாது
      3 கொலை கூடாது
      4 பெண் குழந்தைகளை கொலை செய்ய கூடாது
      5 விபசாரம் அனுமதிக்க கூடாது
      பார்க்க அல் குரான் 6: 151 ,152,153

      Delete
  2. பஞ்சமா பாதகங்கள் என்று நீங்கள் எதை நினைக்கிறீர்கள்

    ReplyDelete
    Replies
    1. நான் நினைப்பதைக் கட்டுரையின் இறுதியில் பட்டியலிட்டிருக்கிறேன் .உங்கள் பின்னூட்டத்துக்கு என் நெஞ்சார்ந்த நன்றி .

      Delete
  3. Replies
    1. பாராட்டிக் கருத்து தெரிவித்தமைக்கு என் அகமார்ந்த நன்றி .

      Delete
  4. ஐம்பெருக் குற்றங்கள் குறித்த தங்கள் பார்வை மிகவும் சரியே. பயங்கரவாதம், வன்புணர்வு, கொலை இவற்றோடெல்லாம் ஒப்பிடும்போது பொய் சொல்லுதல், புறங்கூறுதல், கள்ளுண்ணல் போன்றவையெல்லாம் மிகச் சாதாரணம். இலக்கியங்கள் காட்டும் பஞ்ச மா பாதகங்களைப் பட்டியலிட்டு அறியத் தந்தமைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
    Replies
    1. பாராட்டிக் கருத்து தெரிவித்தமைக்கு என் உள்ளமார்ந்த நன்றி .

      Delete
  5. பொய்,களவு,சூது, கற்பழிப்பு,கொலை என்ற அய்ந்து செயல்கள்.

    ReplyDelete
  6. பிறன்மனை நயத்தல் தீயொழுக்கமே தவிரப் பாதகமாகக் கருத முடியாது.

    பாதகச்செயலே அதனால் வரும் கேடுகள் சமூகத்தாருக்கும் அசுத்தமான எண்ணங்களை விதைக்கும் - நாகபாம்பின் தலையை நாக்கால் நக்குவது போன்றதே பிறன்மனைவியை நயத்தல்
    என்கிறது நாலடியார் பாடல்.

    அம்பல் அயலெடுப்ப அஞ்சித் தமர்பரீ
    வம்பலன் பெண்மரீ மைந்துற்ற - நம்பும்
    நிலைமையில் நெஞ்சத்தான் துப்புரவு
    பாம்பின் தலை நக்கி அன்னதுடைத்து

    ReplyDelete
  7. தனக்கும், உங்களுக்கும், மற்றவர் யாவருக்கும் கேடு விளைவிக்கும் எப்பொருளாயினும் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு மனிதர்களுக்கும் சமுதாயத்திற்கும் தீங்கிழைப்வர்கள் பஞசமாபாதகர்களே ஆவர். தீய செயல்கள் எதுவும் சிறியது பெரியது என்று வகைப்படுத்துதல் அறிவார்ந்த செயல் அன்று. சிறு சிறு தீங்குகளும் குற்ற செயல்களும் தொடக்கத்திலேயே களையப்படாததின் விளைவே இன்று நம் சமுதாயத்தில் கொலைகள், பிறன்மனைகவர்தல், காதல் போர்வையில் கற்பழிப்புகள், கொள்ளைகள், பெற்றோர்களை முதிய வயதில் பராமரிக்க மறுப்பது மற்றும் சொத்துக்களாக கொடுமைப்படுத்துவது, கடமையுணர்வில்லாது போதைக்கும் மது விற்கும் அடிமையாவது செயல்கள் பெருக்க காரணமாய் அமைந்து விட்டது என்பதை நாம் உணரவேண்டும். எனவே அனைத்து தீயசெயல்களுமே மாபாதகச்செயல்களே ஆகும். நன்றி.

    ReplyDelete