Monday 27 November 2017

கலப்பு மணத்திற்கு ஆதரவாக ஒரு காவியம்

நூல்களிலிருந்து – 16

   (அருணன் இயற்றிய “தமிழ் இலக்கிய (வழி) வரலாறு” என்ற நூலிலிருந்து (2009) ‘கலப்பு மணத்திற்கு ஆதரவாக ஒரு காவியம்’ என்னுங் கட்டுரையின் முன் பகுதியை இங்கே பதிகிறேன்).



   கலப்பு மணத்தைக் கருவாக வைத்து ஒரு காவியம் எழுந்திருக்கிறது; அதுதான் வளையாபதி. கி.பி. 10-ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட இந்த நூல் முழுமையாகக் கிடைக்கவில்லை. காலமென்னுங் கறையான் அரித்தது போக மிஞ்சியிருப்பவை 66 செய்யுள்களே.

   இதன் கதை வைசீய புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது. அந்தப் புராணத்தில் இது இடம்பெற்றிருப்பதில் மிகுந்த அர்த்தம் உண்டு. கதையின் நாயகன் வளையாபதி ஒரு வைசியன். சமண மதத்தின் புரவலர்களாய் வைசியர்கள் இருந்தார்கள் என்பதை நிரூபிக்கும் வகையில் இந்தக் காவியம் அந்த மதத்தின் பெருமைகளைப் பேசுகிறது.

   கதைச் சுருக்கம் இதுதான்; மகப்பேறு இல்லாத வளையாபதி, பத்தினி என்ற வேளாளர் குலப் பெண்ணை இரண்டாந் தாரமாய் மணக்கிறான். பின்னர், எங்கே தன்னைச் சாதிநீக்கம் செய்துவிடுவார்களோ என்று பயந்து அவளை விரட்டிவிடுகிறான். அப்போது அவள் இவனது கருவைச் சுமந்துகொண்டிருந்தாள். ஆண் குழந்தை பிறந்து உத்தமன் எனப் பெயர் சூட்டப்பட்டு வளர்ந்து பெரியவனாகிறான். இங்கோ, மூத்தாள் ஒரு தாசியின் பிள்ளையைத் தன் பிள்ளை எனச் சொல்லி வளையாபதியை வஞ்சிக்கிறாள். முடிவில் சூழ்ச்சி அம்பலமாகிறது. மகப்பேற்றுக்காகத் தாழ்ந்த குலப் பெண்ணை மணந்தது தவறல்ல என்று வைசிய சாதிப் பெரியோர் கூறி, உத்தமனே வளையாபதியின் வாரிசு எனத் தீர்ப்பளிக்கிறார்கள்; எனினும் அவனுடன் பத்தினி சேர்ந்து வாழவில்லை; துறவி ஆகிவிடுகிறாள்.

   கறாரான வைதிக அடுக்கில் சமணம் ஒரு நெகிழ்ச்சித் தன்மையை வேண்டியிருக்கிறது என்பதன் இலக்கிய வெளிப்பாடாய் இந்தக் காப்பியம் திகழ்கிறது. நம் காலத்திலேயே சாதி விட்டுத் திருமணஞ் செய்வது அபூர்வமாய் இருக்கும்போது அந்தக் காலத்தில் சொல்ல வேண்டியதில்லை; ஆனால் அன்றே இப்படியோர் இலக்கியம் பிறந்தது, எவ்வளவுதான் கட்டிப்போட்டாலும் சமத்துவச் சிந்தனையானது அவ்வப்போது திமிறிக் கொண்டு எழும் என்பதை உணர்த்துகிறது. நல் பெயர்களைச் சூட்டுவதிலிருந்தே நல்ல கதா பாத்திரங்களை அடையாளங் காட்டும் உத்தியை “பத்தினி, உத்தமன்” என்கிற பெயர்களிலிருந்து காணலாம்.


   பணம் படைத்த வைசியர்களுக்குத் தம் செல்வத்தை விட்டுச் செல்ல வாரிசு அவசியம். எவருமே மக்கட்பேற்றை விரும்பத்தான் செய்வர்; அந்த இயல்பான விருப்பத்துடன் சொத்தைக் கட்டியாள மகன் வேண்டும் என்கிற எண்ணமுஞ் சேர்ந்துகொள்கிறது.

&&&& 

4 comments:

  1. ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றானதுதானே வளையாபதி

    ReplyDelete
  2. ஆமாம் . உடல்நலக் குறைவால் பதில் தரத்தாமதமாய்ற்று பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி .

    ReplyDelete
  3. வளையாபதி கதைச்சுருக்கம் இன்று தான் தெரிந்து கொண்டேன். கலப்பு மணத்துக்கு அப்போதே ஒரு காப்பியம் எழுதப்பட்டிருக்கின்றது என்பதையறிந்து வியந்தேன். இந்த 21 ஆம் நூற்றாண்டிலும் சாதிக்காக ஆணவக்கொலை நடைபெறும்போது அக்காலத்திலேயே இப்படி ஒரு காப்பியமா? நீங்கள் சொல்வது போல் எவ்வளவு தான் கட்டுப்படுத்தினாலும் சமத்துவ சிந்தனை எல்லாவற்றையும் எதிர்த்துக் கிளம்பவே செய்யும் என்பதற்கு இக்காப்பியம் ஒரு சான்று. வியப்பான ஒரு செய்தியைத் தெரிவித்தமைக்கு மிகவும் நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வெள்ளையராட்சி ஏற்பட்ட பின்புதான் இந்தியர் தாய்நாடு , சுதந்தரம் , சமத்துவம் , சமுதாயம் முதலான புதிய சிந்தனைகளை அவர்களிடமிருந்து கற்றுச் சாதி யாதிக்கத்தை எதிர்த்துப் பரப்புரை , கிளர்ச்சி என்ற வழிகளைக் கையாண்டார்கள் ; சொல்லிக்கொள்ளும்படி வெற்றி கிட்டவில்லை ; இன்றைய நிலைமையே இப்படி யிருக்கையில் பல நூற்றாண்டுக்குமுன் கருத்துப் புரட்சியைக் கருவாய்க் கொண்ட ஒரு காப்பியம் தோன்றியது பெரு விந்தையே !

      Delete