Friday, 15 December 2017

தகவல் பலகை


 பாலயோகினியில் பேபி சரோஜா
படம் உதவி - இணையம்

 1.   75 ஆண்டுக்கு முன்பு பாலயோகினி என்ற திரைப்படம் வெளிவந்தது. அதில் நடித்த சிறுமி பேபி சரோஜா தான் தமிழ் சினிமாவின் முதல் குழந்தை நட்சத்திரம். மரக்குதிரை மீது அமர்ந்து, முன்னும் பின்னும் ஆடியபடி, தன் பொம்மையைப் பார்த்து,

  கண்ணே பாப்பா மிட்டாயி வாங்கித் தருகிறேன் நானே
  சோடா கலருடன் வேண்டிய பட்சணம் வாங்கித் தருவேனே

என அவள் பாடிய காட்சி பார்த்தவர்களைப் பரவசத்திலாழ்த்தி உள்ளத்தைக் கொள்ளை கொண்டமையால் அவளது போட்டோவை வாங்கிக் கண்ணாடி, சட்டம் போட்டுச் சுவரில் மாட்டி அழகு பார்த்தார்கள்.

  அந்தக் காலக் கட்டத்திற் பிறந்த பல பெண்களுக்கு சரோஜா என்று நிறையப் பேர் பெயர் சூட்டினர்; சிலர் பேபி சரோஜா என்றே பெயர் பதிந்தனர். இந்தக் குழந்தைகள் ஒரு பேபியைப் பெற்றெடுத்த பின்பும் ‘பேபி’ சரோஜாவாகவே நீடிக்க வேண்டியிருந்தது.

  திரையுலகில் இ.வி.சரோஜா, பி.எஸ்.சரோஜா, எம்.எஸ்.சரோஜா என மூன்று நடிகைகள் சமகாலத்தில் நடித்தார்கள்.

2.   வாடியென் கப்பக் கிழங்கே!’ எனத் தொடங்கிய தமிழ்த் திரைப்படப் பாடல் நினைவிருக்கும். கப்ப என்பது மலையாளம். தமிழில் குச்சிக்கிழங்கு, மையக் கிழங்கு, மரவள்ளிக் கிழங்கு, சவாரிக் கட்டை; இந்தியில் சிம்லா ஆலு (சிம்லா உருளைக்கிழங்கு)

  லட்சக்கணக்கான ஆப்ரிக்கரின் அன்றாட உணவாக இந்தக் கிழங்கு பயன்படுகிறது. உலக உற்பத்தியில் முன்னணி நாடு நைஜீரியா.

  ஜவ்வரிசி செய்யப்படுவது இக்கிழங்கிலிருந்துதான்.

3.    கும்மியடி பெண்கள் கும்மியடி
   கொங்கை குலுங்கவே கும்மியடி

என்ற பாடலைக் கேட்டதுண்டு, பார்த்ததில்லை; இன்றுதான் கண்டேன் தொலைக்காட்சி நிகழ்ச்சியில், கொங்கை குலுங்க மங்கையர் ஆடியதை. அநாயாசமாய், ஆனந்த பரவசமாய், சுதந்திரமாய், எது பற்றியுங் கவலைப்படாமல், என்னமாய் ஆடினார்கள்!

4.   மிகச் சிறு சிலந்தியொன்று உண்டு; வலை பின்னாது; நடந்து செல்லும். சுவரில், தரையில், ஈக்கள் மிகுந்துள்ள இடங்களிற் காணலாம். மெதுவாய் நகர்ந்து, ஓர் ஈயைக் குறிவைத்து அடிமேலடி வைத்து நெருங்கி, ஒரே பாய்ச்சல்! பிடித்துவிடும். ஈயின்மேல் புலி போலப் பாய்வதால் அது ‘ஈப்புலி’ எனப்படுகிறது.

5.   புதுச்சேரித் தாவர இயல் பூங்காவைப் பிரஞ்சு ஆட்சி 1826-இல் தோற்றுவித்தது. சுமார் 11 ஹெக்டார் பரப்பளவுள்ள இதில் ஏறக்குறைய 3000 உள்நாட்டு வெளிநாட்டு மரங்கள் வாழ்கின்றன.

6.   பழந்தமிழ் இலக்கியங்களுள் இடம்பெற்றுள்ள சொல் ‘செவி’. நாம் அதைப் புறந்தள்ளிக் ‘காது’க்கு மாறிவிட்டோம். மலையாளம் செவி என்றே சொல்கிறது.

7.   நீதிபதியை ஏன் my lord என வழக்குரைஞர் விளிக்கிறார்?

  ஆங்கில ஆட்சியில் வைஸ்ராய், ஆளுநர், நீதிபதி முதலான உயர்பதவிகளில் பிரபு வம்சத்தில் பிறந்தவர்களே நியமிக்கப்பட்டார்கள். இப்போதும் லார்ட்ஸ் சபை இங்கிலாந்தில் உண்டு: மேற்பகுலத்தார் சபையாதலால் upper house எனப்படுகிறது; தமிழில் ‘மேலவை’

  நீதிபதி லார்டாய் இருந்தமையால் my lord என அழைத்தனர்; அந்த வழக்கம் இன்னமும் தொடர்கிறது. அதைக் கைவிட வேண்டும் என யாரும் சொன்னதாய்த் தெரியவில்லை. 

*********

10 comments:

 1. Replies
  1. வருக , வருக , உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி .

   Delete
 2. புதுச்சேரி தாவரவியல் பூங்காவை சுதேசிகள் கையகப்படுத்த முனைந்ததாகவும் அதற்கு மாறாக துறைமுக பாலம் கட்டித்தருவதாகவும் 35 ஆண்டுகளுக்கு முன்னர் செய்தி பரவியது ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்திற்கு பின் அந்த முயற்சி கைவிடப்பட்டதாகவும் அறிந்தேன். தகவல் பலகை அருமை அய்யா.

  ReplyDelete
  Replies
  1. உங்கள் பின்னூட்டத்துக்கும் புதுத் தகவலுக்கும் மிக்க நன்றி .

   Delete
 3. நினைவோடையில் செய்திகள் பிரமாதம்

  ReplyDelete
  Replies
  1. உங்கள் மனந் திறந்த பாராட்டுக்கு மிக்க நன்றி .

   Delete
 4. புதுச்செய்திகள் அறிந்தேன். ஈப்புலி பற்றி இப்போது தான் அறிகின்றேன். அந்தச் சிலந்தியை இதுவரை கவனித்ததில்லை. புதுவை தாவரவியல் பூங்காவில் இருந்த பழமையான மரங்கள் பல, தானே புயலில் வீழ்ந்துவிட்டனவாம். பேபி சரோஜா பற்றிய செய்தியையும் இன்று தான் தெரிந்து கொண்டேன். தக்வல் பலகைக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி .

   Delete
 5. Replies
  1. உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி .

   Delete