Saturday, 23 February 2019

ஏதேதோ – 2






  1. ஆப்பிரிக்காவில் உள்ள உலகின் மிகப்பெரிய பாலைவனம் சகாரா. அந்த அரபு சொல்லுக்குப் பாலைவனம் என்றுதான் பொருளாம்.

  2. ஊசியின் காதில் ஒட்டகம் நுழைந்தாலும் நுழையலாம், செல்வர்கள் சுவர்க்கத்தில் நுழைய முடியாதுஎன முகம்மது நபி கூறியதாய் சொல்லப்படுகிறது.

  தாம்பு கயிறு என்பதற்குப் பதிலாய் ஒட்டகம் எனத் தவறாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளதாம்.

  சரியான கூற்று;
    ஊசியின் காதில் தாம்பு கயிறு நுழைந்தாலும்
இதுவே பொருத்தமாகத் தெரிகிறது.

Sebastian Cabot

  3. 16-ஆம் நூற்றாண்டில் Sebastian Cabot என்ற இத்தாலியப் புவி ஆய்வர் (explorer) தென்னமெரிக்க ஆறுகளைப் பற்றி ஆராயப் போனபோது அவ்விட மக்கள் வெள்ளி நகைகள் அணிந்திருக்கக் கண்டு, அது அந்தத் தாதுவளம் மிக்க பிரதேசம் என நம்பி அங்கு ஓடிய ஆற்றுக்கு Rio de la Plata (வெள்ளி ஆறு) என்று பெயர் சூட்டினார். ஸ்பானிஷ் மொழியில் Rio = ஆறு; Plata = வெள்ளி. அதே நம்பிக்கையில், அந்த நாடு Argentina எனப்பட்டது. லத்தீனில் argentum என்றால் வெள்ளி.

  (வேதியியலில் வெள்ளிக்குக் குறியீடு Ag. இதற்கு மூலம் மேற்கண்ட லத்தீன் சொல்.)

  அங்கு வெள்ளியில்லை என்ற உண்மை பிற்காலத்தில் தெரிந்தபோதிலும் பெயர்களை யாரும் மாற்றவில்லை.

  சுமார் 1500 கி.மீ.க்கு அப்பாலுள்ள பெரு நாட்டில்தான் வெள்ளி கிடைத்தது.

  4. பழந்தமிழரின் இசைக் கருவிகளுள் ஒன்றாகிய குழல், சங்க இலக்கியங்களிலும் பிற்கால நூல்களாகிய திருக்குறள், சிலப்பதிகாரம் ஆகியவற்றிலும் இடம் பெற்றுள்ளது.

  மூங்கில் குழாயில் துளையிட்ட கருவி புல்லாங்குழல், வேய்ங்குழல் எனப்படுகிறது. (வேய் = மூங்கில்)

  வேறு வகைக் குழல்களும் பழக்கத்தில் இருந்துள்ளன.

  கொன்றைக் காயைப் பலரும் பார்த்திருப்பர். முருங்கைக்காய் போன்ற தோற்றம்; ஆனால் நீளம் குறைவு. அது குழலாய்ப் பயன்பட்டது:

கொன்றைக் காய்கள்

  நற்றிணை – 364, 10.
கொன்றையந் தீங்குழல்

  கலித்தொகை – 106, 3.
கொன்றைத் தீங்குழல்

  கண்ணன் கொன்றைக் குழல் ஊதியதாய்ச் சிலப்பதிகாரம் தெரிவிக்கிறது:

  ஆய்ச்சியர் குரவை:
கன்று குணிலாக் கனியுதிர்த்த மாயவன்
இன்றுநம் ஆனுள் வருமேல் அவன் வாயில்
கொன்றையந் தீங்குழல் கேளாமோ தோழி!

பொருள்: (வஞ்சத்தால் வந்து நின்ற) பசுக்கன்றைத் தடியாகக் கொண்டு (சூழ்ச்சியால் தோன்றிய விளாம்) பழங்களை உதிர்த்த கண்ணன் இன்று நம் ஆக்கூட்டத்தின் அருகில் வந்தால் அவன் ஊதுகிற கொன்றைக் குழலின் இனிய இசையைக் கேட்க மாட்டோமா, தோழி!

  அதற்கடுத்த இரு பாட்டுகள் ஆம்பலந் தீங்குழல், முல்லையந் தீங்குழல் என்ற வேறு வகைக் குழல்கள் பற்றிக் கூறுகின்றன. அவை பற்றிய விவரம் எனக்கு விளங்கவில்லை.

  வேய்ங்குழலைச் சிலப்பதிகாரம் கூறாமை கவனித்தற்குரியது. அது ஏன் என்பதும் தெரியவில்லை.

  5. சுப்பிரமணிய பாரதியார் தொடக்கத்தில் சாதி, பெண் முதலானவை குறித்துப் பாரம்பரியமான கருத்துகளையே வெளியிட்டார்:



  ) முரசு:
  ஒற்றைக் குடும்பந் தனிலேபொருள்
    ஓங்க வளர்ப்பவன் தந்தை
  மற்றைக் கருமங்கள் செய்தேமனை
    வாழ்ந்திடச் செய்பவள் அன்னை.

(கருத்து: கணவன் புறத்தே சென்று சம்பாதித்துப் பொருள் கொண்டுவர வேண்டும்; மனைவி அகத்திருந்து வீட்டு வேலைகளைச் செய்ய வேண்டும்.)

  ) மனைத் தலைவிக்கு வாழ்த்து

  வாழ்க மனைவியாம் கவிதைத் தலைவி!
  ------------------------------------------------------------------------------
  மாயா சக்தியின் மகளே மனைக்கண்
  வாழ்வினை வகுப்பாய் வருடம் பலவினும்
  ஓர்நாள் போலமற் றோர்நாள் தோன்றாது
  பலவித வண்ணம் வீட்டிடைப் பரவ
  நடத்திடுஞ் சக்தி நிலையமே! நன்மனைத்
  தலைவி! ……

(கருத்து: பெண்ணானவள் இல்லத்தரசி. வீட்டில் தங்கிக் குடும்பத்தார்க்கு bore ஏற்படாமல் அன்றாடம் புதுப்புது உணவு சமைத்து, மனையைப் புதிய விதமாய் அலங்கரித்து வாழ்க்கையை இனிதாக்க வேண்டும்.)

  ) வந்தே மாதரம்
  ஜாதி மதங்களைப் பாரோம்உயர்
    ஜன்மமித் தேசத்தில் எய்தின ராயின்
  வேதிய ராயினும் ஒன்றேஅன்றி
    வேறு குலத்தின ராயினும் ஒன்றே.

(கருத்துஜாதிகள் உண்டு; ஆனால் அவற்றைப் பொருட்படுத்தக் கூடாது. யாவரும் சமம்.)

  ) முரசு
 நாலு வகுப்புமிங் கொன்றேஇந்த
  நான்கினுள் ஒன்று குறைந்தால்
வேலை தவறிச் சிதைந்தேசெத்து
  வீழ்ந்திடும் மானிடச் சாதி.

(கருத்துபிராமணர் முதலிய நான்கு வகுப்பு உண்டு; அவை சமம். நான்கும் தேவை.)

  ) முரசு
வேதம் அறிந்தவன் பார்ப்பான்பல
வித்தை தெரிந்தவன் பார்ப்பான்.

(கருத்துவேதம் மட்டும் அல்லாமல் பற்பல கலைகளும் பார்ப்பனர்களுக்குத் தெரியும்.)

  மேற்கண்ட கருத்துகளைப் பிற்காலத்தில் மாற்றிக்கொண்ட பாரதியார் புரட்சிகரமான கருத்துகளைக் காரசாரமாய் வெளிப்படுத்தினார்.

  ) பெண்கள் விடுதலைக் கும்மி 
வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டிவைப்போம் என்ற
விந்தை மனிதர் தலைகவிழ்ந் தார்

பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினிற் பெண்கள் நடத்த வந்தோம்

(கருத்துஆண்களைப் போன்றே பெண்களும் பொதுவாழ்விற் பங்கு பெற வேண்டும்.)

  ) பாப்பாப் பாட்டு
சாதிகள் இல்லையடி பாப்பா!

  ) இந்நாளிலே பொய்ம்மைப் பார்ப்பார்இவர்
    ஏதுசெய்துங் காசுபெறப் பார்ப்பார்.

  6. முருகனை முழுமுதற் கடவுளாகக் கருதுகிற மதம் கௌமாரம் எனப்படும். இராமலிங்க அடிகள் தொடக்கத்தில் அம்மதத்தைக் கடைப்பிடித்து சண்முகத் தெய்வமணியே!” என முடிகிற பாடல்களைப் பாடினார்.

  ஒருமையுடன் நினது திருவடி …. “ என்று ஆரம்பிக்கும் பாட்டில், “உனை மறவாதிருக்க வேண்டும்என்று வேண்டினார்: ஆனால் பின்பு முருகனை மறந்து சிவ பக்தரானார்.

வள்ளலார்

    அம்பலப் பாட்டே அருட்பாட்டு
    அல்லாத பாட்டெல்லாம் வெறும்பாட்டு

என்ற பாவின் மூலம் சிவனைப் பாடாமல் முருகனைப் பாடிய தம் பாட்டுகள் வெறும் பாட்டுகள் என்று தெரிவித்தார்.

  காலப் போக்கில் அவர் சிவனையுங் கைவிட்டார். திருநீறு பூசுவதைத் தவிர்த்தார். சோதிதான் உண்மையான கடவுள் என்று போதித்தார்.

 சாதி சமயச் சழக்கைவிட் டேனருட்
 சோதியைக் கண்டேனடி

  என்னும் பாட்டின் மூலம், தாம் சைவ சமயம் உள்ளிட்ட எல்லாச் சமயங்களையும் உதறிவிட்டுச் சோதியென்னுங் கடவுளைக் கண்டுகொண்டதாக அறிவித்தார்.

  அருட் பெருஞ் சோதி! அருட் பெருஞ் சோதி!” 
என்று அந்தச் சோதியைப் போற்றினார்.

தைப்பூச தரிசனத்துக்கு ஆர்வத்துடனும் பக்தியுடனும் கூடுகிற ஆயிரக் கணக்கானவர்கள் தம் சமயத்தையும் விடவில்லை, தெய்வத்தையுந் துறக்கவில்லை. தாம் வணங்குகிற மற்ற கடவுள்களோடு சோதியையும் ஒரு கடவுளாய்ச் சேர்த்துக் கொண்டவர்களே. இது வள்ளலாரின் போதனைக்கு ஒவ்வாது.

&&&&&
(படங்கள் உதவி - இணையம்)

மார்ச் மாதம் முழுவதும் இலக்கியச்சாரலுக்கு விடுமுறை. 
ஏப்ரல் முதல் பதிவுகள் தொடரும். 
🙏

8 comments:

  1. வாழ்வியலைச் சற்று கூர்ந்து கவனித்து தனதுகருத்துகளைமாற்றிக் கொண்டிருக்கலாம் அவரது செயல்கள் சில வெறும் tokenism ஆகத்தோன்று வதுண்டு உ-ம் கனக சுப்பு ரத்தினத்துக்கு பூணூல் அணிவித்தது

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்து சரிதான் . பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி .

      Delete
  2. யப்பப்பா...! ஒவ்வொரு விளக்கமும் அசர வைக்கிறது ஐயா...!!

    ReplyDelete
    Replies
    1. பாராட்டிப் பின்னூட்டம் தந்தமைக்கு மிக்க நன்றி .

      Delete
  3. ஒவ்வொரு விளக்கமும் அருமை
    விடுமுறை முடிந்து வலைக்கு வாருங்கள்

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுக்கு மிக்க நன்றி . வருவேன் . பேரனுக்குத் திருமணம் மற்றும் வரவேற்புப் பணிகள் உள்ளன .

      Delete
  4. பல புதிய தகவல்களை அறிந்துகொள்ள முடிந்தது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    ஆம்பற்குழல் என்பது ஆம்பல் கொடியின் தண்டினைக் கொண்டு செய்யப்படும் இசைக்கருவி என்று முன்பு வாசித்த நினைவு.

    ReplyDelete
    Replies
    1. பீன்னூட்டத்துக்கு மிக்க நன்றி .நினைவு சரிதான் ; ஆனால் எவ்வாறு செய்யப்பட்டது என்பதைப் பழைய உரையாசிரியர் விளக்குவது எனக்குப் புரியவில்லை .

      Delete