இளந்தலைமுறை அறியாத வரலாற்றுத் தகவல்கள் சிலவற்றை
இங்குப் பதிகிறேன்.
காந்தி |
1. சுதந்தரப் போராட்டத்தின்போது ஆட்சியை எதிர்த்து
மக்களைத் திரட்டி சாத்வீக முறையில் கிளர்ச்சிகளைத் துணிவுடன் நடத்தி எத்தனையோ தடவை
சிறையேகி மகத்தான தியாகம் புரிந்து மகாத்மா எனவும் தேசப்பிதா எனவும் பலவாறு புகழப்பட்ட
காந்தியடிகள் நாட்டு விடுதலைக்குப் பின்பு கொஞ்சங் கொஞ்சமாய் செல்வாக்கை இழந்தார்.
“காங்கிரசைக் கலைத்துவிடுங்கள்” என்று அவரிட்ட கட்டளைக்கு
எந்தத் தலைவரும் செவிசாய்க்கவில்லை; அதனால் அவர் கட்சியிலிருந்து விலகி, “நான் செல்லாக்
காசு ஆகிவிட்டேன், இப்போது நான் காங்கிரசின் அடிப்படை உறுப்பினர் கூட அல்ல” என மனம்
நொந்து அறிக்கை வெளியிட்டார்.
2. சென்னை மாநிலத்தில் (அப்போது மதராஸ் ராஜ்யம்: தமிழ்நாடு
+ ஆந்திரா) 1952 சட்டப்பேரவைத் தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில், தி.க.,
தி.மு.க. உட்பட எட்டுக் கட்சிக் கூட்டணி காங்கிரசை எதிர்த்துக் களத்தில் நின்றது.
கூட்டணியை உருவாக்கிய சாதனையைப் புரிந்ததில் பெரும்
பங்கு பொதுவுடைமைக் கட்சித் தலைவர் ப.ஜீவானந்தத்துக்கு உண்டு. (ஜீவா எனச் சுருக்கமாக
அழைக்கப்பட்டவர்.)
ப. ஜீவானந்தம் |
ஆட்சியமைக்க யாருக்கு உரிமை? சர்ச்சை எழுந்தது.
கட்டுக்கோப்பான ஒரே கட்சி என்பதால் காங்கிரஸ்தான் ஆளத் தகுதியுடையது என்று ஒரு சாரார்
கூறினர். “காங்கிரஸ் முழுத்துணி, கூட்டணி ஒட்டுப்போட்ட துணி” என்றார்கள் அவர்கள். மறு
சாரார், “மானத்தை மறைக்க ஒட்டுப்போட்ட துணியே பெரியது” என்று சொல்லிப் பெரும்பான்மை
பலமுள்ள கூட்டணியே ஆள வேண்டும் என விவாதித்தனர்.
நடுவண் அரசு ஒரு சூழ்ச்சி செய்தது. சிறுபான்மைக்
கட்சியை வைத்துக்கொண்டு ஆட்சியமைப்பதற்கான ராஜதந்திரம், திறமை, அறிவுக்கூர்மை ராஜாஜி
ஒருவர்க்கே உண்டு என்று எண்ணி, அரசியலிலிருந்து விலகியிருந்த அவரைக் காங்கிரசின் சார்பில்
மேலவை உறுப்பினராய் நியமித்தது. (அப்போது மேலவை இருந்தது; எம்.ஜி.ஆர். ஆட்சியில் கலைக்கப்பட்டது.)
அவரை ஆளுநர் அழைத்து அரசமைக்கக் கோரி அதற்கான கால அவகாசந் தந்தார்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஒருவரை அழைத்தது ஜனநாயகப்
படுகொலை எனவும் ராஜாஜி கொல்லைப்புறமாய் நுழைந்தவர் எனவும் விமர்சனம் செய்யப்பட்டது.
ராஜாஜி |
இந்திய அரசியலில், பதவி தந்து ஆளை இழுக்கிற வேலையை
(அது ஒரு வகை லஞ்சம்) ராஜாஜிதான் தொடங்கிவைத்தார்.
ராஜாஜியை எதிர்த்துக் கிளர்ச்சிகள் நடந்தன. ராஜாஜி,
“நான் கம்யூனிஸ்டுகளுக்கு A முதல் Z வரை எதிரி” என்றும் “கழகங்களை ஈ எறும்பு போல் நசுக்குவேன்”
என்றுங் கொக்கரித்தார்; ராமசாமி படையாட்சி, “நான் ஒரு கோடி வன்னியர்க்குத் தலைவன்,
தி.மு.க.வை ஓட ஓட விரட்டுவேன்” என முழங்கினார்.
எதேச்சாதிகாரமாய் ஆட்சி நடத்திய ராஜாஜிக்கு எதிராய்க்
காங்கிரசிலேயே கலகக் குரல் கேட்கத் தொடங்கிற்று. எம்.எல்.ஏ.க்கள் தங்களை அவர் எதிலும்
கலந்தாலோசிப்பதில்லை எனப் புகார் செய்தனர். அவர், “ஏசுவும் புத்தரும் யாரைக் கேட்டுக்கொண்டு
செய்தார்கள்?” என வினவினார்.
ஏசுவுக்கும் புத்தருக்கும் தாம் சமமானவர் என்று
அவர் மதிப்பிட்டிருந்தார். அவர்கள் சுதந்தர மனிதர்கள்; ஆனால் தாம் மக்களுக்கும் சட்டசபைக்கும்
பதில் சொல்ல வேண்டியவர் என்னும் வேறுபாடு அந்த மூதறிஞர்க்குத் தோன்றவில்லை; அந்த அளவுக்கு
ஆத்திரம்.
புதிய கல்வித் திட்டம் ஒன்றை அவர் அமல்படுத்தினார்.
அதன்படி மாணவர்கள் அரை நாள் மட்டும் பள்ளிக்கு வந்தால் போதும், மற்ற நேரங்களில் அவரவரது
குலத் தொழிலைப் பெற்றோரிடம் கற்கலாம் என்று அத்திட்டம் கூறியது.
பலத்த எதிர்ப்பு உள்ளும் புறமும் எழுந்தது. “குலக்
கல்வித் திட்டம்” என்று அதற்குப் பெயர் சூட்டி எதிர்க்கட்சிகள் போராட்டங்களை நடத்தின.
இரு பக்கத் தாக்குதல்களையும் சமாளிக்க இயலாமல் ராஜாஜி பதவி விலக, காமராஜர் (1954) முதல்வரானார்.
அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டது. ராமசாமி படையாட்சியும் மாணிக்கவேலரும் அமைச்சர்களாய்த்
தொடர்ந்தார்கள்.
காமராஜர் |
***********
அருமை ஐயா... அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய தொடர்...
ReplyDeleteபாராட்டிப் பின்னூட்டம் தந்தமைக்கு மிக்க நன்றி .
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteசுதந்தர காலத்துக்குப் பிறகான அரசியல் வரலாற்றுத் தகவல்கள் சுவாரசியமாக உள்ளன. அரைகுறையாய் அறிந்திருந்த பல தகவல்களின் முழு வடிவத்தை தங்கள் பதிவின் வாயிலாய் அறிந்துகொண்டேன். வருடம் முதற்கொண்டு நிகழ்வுகளை நினைவிலிருந்து மீட்டு எழுதும் தங்கள் நினைவாற்றலுக்குப் பாராட்டு. இளந்தலைமுறைக்கு மட்டுமல்ல, இனி வரும் அனைத்துத் தலைமுறைக்கும் ஆவணப்பதிவாக இவை இருக்கும். தொடரட்டும் நாங்கள் அறிந்திராத வரலாற்று நிகழ்வுகளின் பதிவுகள்.
ReplyDeleteபின்னூட்டத்துக்கு மிக்க நன்றி .மெய்தான் , ஆவணமாகப் பயன்தரும்
Deleteராஜாஜொயஒ ஒரு சாணக்கியர் என்று பெருமையுடன் கூறுபவர்களும் உண்டு மனிதர்களி பதவி ஆசையில்குளிர் காய்ந்தார் ராஜாஜி என்று நினக்கிறேன்
ReplyDeleteராஜாஜி சாணக்கியர்தான் , மூதறிஞர் தான் .பாக்கிஸ்தானைத் தந்துவிடல் நன்று என 1945 இலேயே தொலைநோக்குடன் தெரிவித்த அறிவாளி .ஆனால் நால்வருணம் சாஸ்திரம் போற்றியவர் .உங்கள் பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி .
Deleteராஜாஜி குலக்கல்வித் திட்டம் கொண்டு வந்தது மட்டும் தெரியும்; குதிரை பேரம் அவர் தாம் துவக்கி வைத்தார் என்பது எனக்குப் புதுச்செய்தி. வரலாற்று நிகழ்வுகள் சுவாரசியமாய் இருக்கின்றன. மிகவும் நன்றி!
ReplyDelete