Thursday, 14 November 2019

பழையன கழிதலும் புதியன புகுதலும்
  மொழி வழக்குகளில் மட்டுந்தான் பழையன கழிந்து புதியன புகும் என்பதில்லை; தெய்வங்கள் வழிபாட்டு முறைகளிற்கூட இவை நிகழ்கின்றன.

  பண்டைக் காலத்தில் பபிலோனியர், எகிப்தியர், கிரேக்கர், ரோமானியர் முதலியோர் எத்தனையோ ஆண் பெண் கடவுள்களை சர்வ சக்தியுள்ளவை என நம்பி வணங்கியும் கோயில்கள் எழுப்பித் தொழுதும் வந்தார்கள். கிறித்துவம் பரவிய பின்பு அவை மாஜி கடவுள்களாகிவிட்டன.

  நம் நாட்டில் ஆரியர்கள் மத்திய ஆசியாவில் மாடு மேய்த்தபோது நிரம்பப் புல் தேவைப்பட்டமையால் மழைத் தெய்வமான வருணனை மிக மேலான கடவுளாய்க் கருதி வணங்கினார்கள். இந்தியாவுக்குள் புகுந்து தங்கியபோது நீருக்குப் பஞ்சமில்லாமையால் வருண வழிபாட்டைக் கைவிட்டார்கள்; உள்நாட்டு மக்களை  யெதிர்த்துப் போரிட்டுத் தங்களை நிலைநிறுத்திக் கொள்வதற்காக இந்திரனை தேவர் தலைவன் எனப் போற்றித் தங்களுக்குப் போர்களில் வெற்றி யருளும்படி துதித்தார்கள்; தங்கள் ஆதிக்கத்தை நிலை நாட்டிய பின்பு இந்திரனுக்கு விடை கொடுத்துவிட்டுத் திருமால் சிவன் பிரம்மா ஆகியோரை முழு முதற் கடவுள்களாக்கி மும்மூர்த்திகள் என்று சிறப்புப் பெயரிட்டு வழிபட்டார்கள்.

  பிரம்மா படைப்புக் கடவுள் எனவும் மக்களின் தலைகளில் அவர்தான் விதியை எழுதுகிறார் எனவும் கூறி அவரைப் போற்றினார்கள்; புராணங்களில் அவருக்கு முக்கியம் தந்தார்கள்; தேவலோகத்தில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் தேவர்கள் அவரிடந்தான் முறையிட்டார்கள். அவ்வாறு உயர் பீடத்தில் வீற்றிருந்த பிரம்மா காலப்போக்கில் பதவி இழந்து காணாமற் போனார்; அவருக்கான கோயில் இப்போது எங்குமிருப்பதாய்த் தெரியவில்லை.

  ஆதிநாளில் சிறு தெய்வங்களாய் இருந்து பின்பு மேல்நிலை  யடைந்த சிவனும் திருமாலும் தனித் தனி மதங்களுக்குத் தலைவர்களாகி இன்று வரை செல்வாக்கு குன்றாமல் அருள் பாலித்து வருகிறார்கள்.

  பிள்ளையார் புதுக் கடவுளாய் ஏழாம் நூற்றாண்டில் தமிழகத்துள் நுழைந்து காணாபத்யம் என்ற மதத்தின் முழுமுதல் தெய்வமாகிவிட்டார்; விநாயகர் எனப் பெயர் பெற்றிருக்கிறார்; வி + நாயகர் = தமக்கு மேம்பட்ட தலைவர் இல்லாதவர். வினைகளைப் போக்க அவரே வல்லவர்; ஆகையால் எந்த முக்கிய நிகழ்ச்சியும் இடையூறு எதுவுமின்றி நல்லவண்ணம் நடந்து முடிவதற்காகக் கணபதி ஹோமம் நடத்தவேண்டும். கடிதம் எழுதுவதற்குக் கூடப் பிள்ளையார் சுழி போடுவது அவசியம்.

  நீண்ட நெடுங்காலம் ஆரவாரம் இல்லாமல் வீட்டுக்குள் கொண்டாடப்பட்டுவந்த விநாயகர் சதுர்த்தி எப்படிப் பரிணமித்துவிட்டது! சில ஆண்டுகளாகப் புது வழக்கம் புகுந்து நிலைபெற்றது: பெரும் பெரும் விநாயகர் சிலைகளை எழுப்பி சில நாள் வைத்திருந்து பின்பு நீரிற் கரைக்கிறார்கள்.

  என் சிறு வயதில் பண்டரிநாதன் பாண்டுரங்கன் விட்டல் என்று முப்பெயரால் அழைக்கப்பட்ட ஒரு மராட்டியக் கடவுள் ஏராளத் தமிழ் பக்தர்களைக் கவர்ந்திருந்தார். மகாராட்டிரத்தில் உள்ள பந்தரீபூர் என்னும் ஊரைத் தமிழ்ப்படுத்திப் பண்டரிபுரம் என்றனர். பாத யாத்திரையாய் அங்கே போய் வணங்கி வருகிற வழக்கம் இருந்தது. அதற்கான பாடல்களும் இயற்றப்பட்டன.

  ஒரு பக்தர் பாத யாத்திரையின் போது பாடுகிறார்:

“எத்தனை தூரமோ அறியேன் பண்டரிபுரம்
அறியேன் பண்டரிபுரம் தெரியேன் பண்டரிநாதா!”

சிலர் கூட்டமாகப் போகிறார்கள்:

“பண்டரிபுரம் செல்வோம் இனி நாமே
பண்டரிபுரம் செல்வோம்
பாழாம் பூமியில் மானிட ஜென்மம்
விழலுக் கிறைத்த ஜலம் போலாச்சே
இனிமேலே
பண்டரிபுரம் செல்வோம்.”

“ஜெய ஜெய விட்டலா
பாண்டுரங்க விட்டலா!”
எனவும்

“பாண்டுரங்கா விட்டலா
பண்டரிநாதா விட்டலா!”
எனவும் முழங்கியவாறு நடந்தார்கள்.

  பண்டரிநாதன் பாண்டுரங்கன் விட்டல் விட்டலானந்தம் விட்டல்நாதன் என்றெல்லாம் மக்கள் பெயர் சூட்டிக் கொண்டார்கள்.

  நாளடைவில் அந்த வழிபாடு கைவிடப்பட்டு சபரிமலைப் பயணம் தொடங்கிற்று.  “சாமியே, சரணம் ஐயப்பா” என்ற கோஷம் பலமாக ஒலிக்கக் கேட்கிறோம். பாடல்கள் வீரமணி என்பவரால் பரப்பப்பட்டுள்ளன: ஐயப்பன் மணிகண்டன் எனப் பெயரிடும் வழக்கம் தோன்றிற்று.

  வடலூர் ஜோதி தரிசனம் புதிதாய்ப் புகுந்தது: அதைக் காட்டிலும் புதியது கிரிவலம். முன்னெல்லாம் தீபத்துக்கு மட்டுந்தான் திருவண்ணாமலையில் பக்தர்கள் கூடி “அண்ணாமலைக்கு அரோகரா!” என்று முழங்கினார்கள்; இப்போது மாதந்தோறும் திரள்கிறார்கள்.

  வருங்காலத்தில் எத்தனையோ மாறுதல்கள் உண்டாகும் என்பது உறுதி.

 

11 comments:

 1. உண்மை
  பழைய கடவுள்கள காணாமல்தான் போய் விட்டனர்

  ReplyDelete
  Replies
  1. உங்கள் கருத்துரைக்கு என் நெஞ்சுநிறை நன்றி .

   Delete
 2. வெகுஜன நம்பிக்கைகள் மாறியே ஆக வேண்டும் அப்போது மாற்றம் ஒன்றே மாறாதது என்று சமாதானம்செய்து கொள்வார்கள்

  ReplyDelete
  Replies
  1. மெய்தான் . உங்கள் கருத்துரைக்கு என் அகமலி நன்றி .

   Delete
 3. அருமை... உண்மையும்கூட...

  நன்றி ஐயா...

  ReplyDelete
  Replies
  1. உங்கள் பாராட்டுக்கு என் அகங் கனிந்த நன்றி

   Delete
 4. காலத்துக்கேற்றபடி கடவுளர்களுக்கும் மவுசு மாறிக்கொண்டே வந்திருப்பது வியப்பளிக்கிறது. சாந்த சக்குபாய் போன்ற பழைய திரைப்படங்களில் இந்த பாண்டுரங்கா பண்டரிநாதா என்று பக்திப்பரவசத்துடன் பாடல்கள் பாடக் கேட்டிருக்கிறேன். அதன் பூர்வீகம் இப்பதிவின் வாயிலாகவே அறிகிறேன். தற்போது ஷீரடி சாய்பாபா கோவில்கள் மிகப் பிரசித்தம். எனக்குத் தெரிந்த பலபேர் பாபாவின் புதிய பக்தர் பக்தைகளாகி இருக்கிறார்கள்.

  ReplyDelete
  Replies
  1. சக்குபாய் படம் நானும் பார்த்திருக்கிறேன் .ஷீரடி சாய்பாபா 1944 ஆண்டும் அதை யடுத்த காலங்களிலும் மிகப் பிரசித்தம் ; நானிருக்கப் பயமேன் என்னுஞ் சொற்களுடன் கூடிய அவரது படந் தாங்கிய பதக்கத்தைப் பலரும் சட்டைப் பையில் குண்டூசி கொண்டு குத்தியிருந்தனர். புட்டபர்த்தி தோன்றி ஷீரடியை விரட்டியிருந்தது ; இப்போது திரும்பி வந்திருக்கிறது போலும் .பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி .


   மெடல் போன்ற


   ....டல் போன்ற

   Delete
 5. பண்டரிநாதன் என்ற மராட்டியக் கடவுள் பற்றி இன்று தான் தெரிந்து கொண்டேன். கீதா சொல்லியிருப்பது போல் இப்போது ஷீரடி சாய்பாபா இப்போது பிரபலம். தமிழர்கள் என்றுமே தமிழ்நாட்டில் உள்ள கடவுள்களைப் பிரபலமாகக் கொண்டாடுவதில்லை என்பது இதிலிருந்து தெரிகிறது. ஆந்திரா திருப்பதிக்குப் போய்க் கொட்டுகிறார்கள். கேரளாவில் சபரிமலை; ஷீரடி சாய்பாபா. தமிழ்நாட்டுக் கடவுள்களுக்கு என்று தான் மவுஸ் வருமோ தெரியவில்லை.
  கணபதியும் வாதாபியிலிருந்து இறக்குமதி ஆனவர் தாம். என் சின்ன வயதில் களிமண் பிள்ளையார் சிலைகளை வைத்துக் கும்பிட்டுவிட்டு ஆற்றிலோ குளத்திலோ கரைப்பார்கள். சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைக்காமலிருந்தது. இப்போது வண்ணங்கள் பூசப்பட்ட பிளாஸ்டர் ஆப் பாரிசால் செய்யப்பட்ட பெரிய பெரிய சிலைகள் கடலில் போடுவதால் நீர் நஞ்சாகிறது. பக்தி என்ற் பெயரில் சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதை என்று நிறுத்துவார்களோ தெரியவில்லை.

  ReplyDelete
  Replies
  1. தமிழர்கள் கன்னடியர்களுக்கும் தெலுங்கர்களுக்கும் மராட்டியர்களுக்கும் பல நூற்றாண்டுகள் அடிமைப்பட்டுக் கிடந்தமையால் அடிமை மனப்பான்மைக்கு ஆளாகி,பிற கடவள்களைத் தொழுகிறார்கள்.

   Delete