![]() |
Homer |
தொல்பழங்காலக் கிரேக்க நாகரிகத்தை அறியப் பெரிதுங் கைகொடுப்பவை இலியட், ஒடிசி என்னும் இதிகாசங்கள்; அவற்றை இயற்றியதாக நம்பப்படும் ஹோமரைப் பற்றிய விவரங்கள் கிட்டத்தட்ட ஒன்றுமில்லையெனலாம்.
அவர் பிறந்த ஊர் எது என்பது மர்மம்: ரோட்ஸ், சலாமிஸ், ஏதென்ஸ் எனப் பல நகரங்கள் சொந்தங்கொண்டாடின; புகழ் மிகுந்த கவிஞரொருவரைப் பெற்றெடுத்த பெருமையை அடைவதற்கான போட்டி.
இதிகாசங்களின் நடையை ஆராய்ந்தவர்கள், அவர் பொ.யு.மு. 850-800 காலக்கட்டத்தில் வாழ்ந்திருக்க வேண்டும் என்னும் முடிவுக்கு வந்தனர்; அவர் பார்வையற்றவர் எனப்படுகிறது; இதுவும் ஐயத்துக்கு உரியதே. எல்லாவற்றுக்கும் மேலாக அந்தப் படைப்புகள் ஹோமருடையவைதானா என்பதே வினாக்குறியாக இருக்கிறது.
உலகின் பிற நாடுகளில் போலவே, கிரேக்கத்திலும் பழங்காலத்தில் வாய்மொழிப் படைப்புகள்தான் தோன்றின; இலியடும் ஒடிசியும் கதைப் பாடல்களாகப் (தேசிங்குராஜன் கதை போல்) பிறந்து சில நூறாண்டுக்காலம் தலைமுறை தலைமுறையாய்ப் பாடப்பட்டு வந்தன என்றும் அவ்வப்போது மாற்றங்களை அடைந்துள்ளன எனவும் அவற்றைச் செய்யுள் வடிவ இதிகாசமாக்கியவர் ஹோமர் என்றும் திறனிகள் கூறுகிறார்கள்;
இலியட் சுருக்கம்
ஸ்பார்ட்டா மன்னர் அகமெம்னோன்; அவரது தம்பி மெனெலாசின் மனைவி ஹெலென் நிகரற்ற பேரழகி. அவளை ட்ராய் (Troy) இளவரசன் பாரிஸ் என்பவன், அழைத்துச் சென்றுவிட்டான். மீட்பதற்காக அகமெம்னோன் தலைமையில் கிரேக்கத்தின் பெரும்பாலான ராஜ்யங்கள் திரண்டன. கப்பல்கள் தயார்; சாதகமாய் வீசாத காற்றைத் திசை திருப்புவதற்காக, அருள்வாக்காளர் ஒருவர் சொன்ன யோசனைப்படி, தலைவரின் மகள் இஃபிழெனியாவைத் தெய்வத்துக்குப் பலியிட்டனர். அனுகூல நிலை ஏற்படவே, கப்பற்படை ட்ராய் நோக்கிக் கிளம்பிற்று. பத்தாண்டுக் காலம் போர் நீடித்தது.
வெற்றி தோல்வி நிர்ணயிக்க இயலாத நிலையில், கிரேக்கப் பெரு மறவன் அக்கிலஸ், ட்ராய் மாவீரன் ஹெக்டோருடன் பொருது வென்று கொன்று வீழ்த்தினான்; ஹெக்டோரின் ஈமச்சடங்குடன் இதிகாசம் முற்றுகிறது.
24 தொகுதிகள் கொண்ட இலியட், போரின் தொடக்கத்தையும் முடிவையும் சொல்லவில்லை; இறுதியாண்டு நிகழ்ச்சிகளைக்கூட முழுமையாய் விவரிக்காமல் ஒரு பகுதியை மாத்திரம் பாடுகிறது.
அகழாய்வு தெரிவிக்கிறது, போர் நிகழ்ந்தது உண்மையே எனவும் அக்கால வணிகர்கள் போய் வந்த முக்கிய பாதையை ட்ராயிடமிருந்து
கைப்பற்றுவதற்கே கிரேக்கர் படையெடுத்தனர் எனவும்; ஆனால் உண்மைக் காரணத்தை மறைத்துக் கற்பனைப் புராண நிகழ்ச்சிகளை நுழைத்துள்ளனர்.
ஒடிசியும் 24 தொகுதிகள் உடையது. கிரேக்க மன்னன் ஒடிசியுஸ், ட்ராய் போர் முடிந்த பின்பு, தன் நாடாகிய இத்தாக்காவுக்குக் கப்பலில் திரும்பிச் செல்கையில் எதிர்ப்பட்ட இடுக்கண்களை சமாளித்து வெற்றிகரமாய்ப் பயணத்தை முடித்தான்; அதற்குப் பத்தாண்டு ஆயிற்று.
அவன் திரும்பி வரமாட்டான் என நம்பிய சிலர், அரண்மனையை ஆக்கிரமித்து அட்டகாசம் புரிந்துகொண்டிருந்தனர். ஒடிசியுஸ் அவர்களை எதிர்த்து சமர் செய்து கொன்றொழிக்க வேண்டியிருந்தது. பின்னரே
மனைவியுடனும் மகனுடனும் இணைந்தான்.
இரண்டு இதிகாசங்களிலும் மொத்தம் 27583 அடிகள் உள்ளனவாம்.
&&&&&
அறியாத பல வரலாறுகள் அறிய முடிந்தது. பகிர்வுக்கு நன்றிகள், ஐயா.
ReplyDeleteஉங்கள் பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி .
Deleteகிரேக்க இதிகாசங்களைப் பற்றிய விபரங்களையும் கதை சுருக்கத்தையும் அறிய உதவிய பதிவுக்கு மிகவும் நன்றி.
ReplyDeleteபின்னூட்டத்துக்கு மிக்க நன்றி .
Deleteஅருமை http://ethilumpudhumai.blogspot.in/
ReplyDeleteவருக , வருக . உங்கள் பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி .வலை முகவரி குறித்துக்கொண்டேன் .
Delete