பொ.யு.மு. முதல்நூற்றாண்டும் அதற்கடுத்ததும் லத்தீன் இலக்கிய வரலாற்றின் பொற்காலம் எனப் போற்றப்படுகிறது; செய்யுள் நடையில் பேரிலக்கியங்கள் தோன்றிய காலம் அது.
![]() |
Aeneas |
Vergilius இன் Aeneid
இதிகாசம், கிரேக்க ஹோமரது படைப்பின் கிளையெனலாம். கிரேக்கர்களுக்கும் ட்ராய் நகரத்தார்க்கும் இடையே நிகழ்ந்த போரைப் பாடுகிறது ஹோமருடைய Iliad; ட்ராய் முன்னணி வீரர்களுள் ஒருவனாகிய Aeneas, தன் நாட்டின் வீழ்ச்சியை அடுத்துப் பகைவர்க்குத் தப்பி, தன் தோழர்களுடன் கப்பல்மூலம் இத்தாலியை அடைந்து அங்கு நிலைகொண்டதை விவரிக்கிறது Aeneid. இவன்தான் தங்களின் மூதாதை என்பது ரோமானியர்களின் நம்பிக்கை. Iliad
இன் உயரத்தை எட்டவில்லை இப் படைப்பு. தமிழில் முல்லைப்பா எனப்படும் இலக்கிய வகையான Eclogues என்னும் நூல் ஆடு மேய்ப்பவர்களைப் பாட்டுடைத் தலைவர்களாய்க் கொண்டு அவர்களின் வாழ்க்கைமுறை பழக்க வழக்கங்களைச் சித்திரிக்கிறது. வேளாண்மை பற்றிய Georgics திறனிகளின் ஒட்டுமொத்தப் பாராட்டுப் பெற்றது : ஆற்றொழுக்காய் வாசகரை அழைத்தேகும் பாங்கு, உள்ளடக்கத்தை, சலிப்பு தராதவாறு, திறமையாய் அமைத்திருக்கும் நேர்த்தி, கிராமிய மணங் கமழ நாட்டுப் பற்றையும் மாந்த நேயத்தையும் நாடிநரம்பாய்க் கொண்டு இலங்கும் அந்நூல், லத்தீன் இலக்கியத்தின் கலைநயம் மிகுந்த,
விலை மதிக்க வொண்ணா மாமணியெனக் கற்றார் பாராட்டுகின்றனர். பின்னாளைய கவிஞர் யாவரும் Vergilius ஐத் தம் வழிகாட்டியாய்க் கொண்டனர்.
Horatius ( பொ.யு.மு. 68 -5 ) பாவியல் வேந்தர். இவரது முக்கிய ஆக்கம் Ars poetica - கவிதைக் கலை; பாவியல் என்றுஞ் சொல்வதுண்டு. கிரேக்க அறிஞர் அரிஸ்டாட்டில் பொ.யு.மு. 4 ஆம் நூற்றாண்டில் இயற்றிய " கவிதைக் கலை"க்கு இது வழிநூல்; அவர் பாடுபொருளையும் உருவத்தையும் பற்றி விவரித்தார்; இவர் கவிஞனைக் குறித்தும் ஆய்ந்துள்ளார். இதிகாசம், நாடகம் முதலான இலக்கிய வகைகள் பற்றிய விரிவான கருத்துகளை இதில் காணலாம்; உருவத்தாலும் உள்ளடக்கத்தாலும் சிறந்து விளங்குகிற நூல் என்பது திறனியர் கருத்து. இவர் அங்கதக் கவிதைகளும் புனைந்துள்ளார்; அவை இன்னொலி எழுப்பும் பற்பல அடிகளை உடையவை; கதையாய்க் கூறுதல், விவாதம்,
உரையாடல், முதலிய உத்திகளை மாற்றி மாற்றிப் பயன்படுத்தி சுவை சேர்த்திருக்கிறார் ஆசிரியர்.
ஐரோப்பாவில் நீண்டநெடுங் காலம் செல்வாக்கு செலுத்திய இந்த நூலிலிருந்துதான் சப் ஜுடிசே (sub judice) என்னும் சட்ட சொற்றொடர் எடுக்கப்பட்டது.
Titus Livius (பொ.யு.மு. 59 - 16 ) தலைசிறந்த வரலாற்றறிஞர். ரோம் நகரின் தோற்றத்திலிருந்து பொ.யு. 9 ஆம் நூற்றாண்டு வரைக்குமான காலக்கட்டத்தின் விரிவான வரலாற்றை 142 தொகுதி கொண்ட பிரம்மாண்ட நூலில் அவர் எழுதினார். கலை நுணுக்கஞ் செறிந்த, கற்பனை வளமும் எழுத்து வன்மையும் நிறைந்த, உரைநடை நூல் என்று மதிக்கப்படுகிற அதன் 35 தொகுதிகள் மட்டுமே கிட்டின.
Ovidius ( பொ.யு.மு. 43 - பொ.யு.18 ) elegy என்ற இலக்கிய வகையைப் பயன்படுத்தி எழுதியுள்ள 21 பாக்களில் காதலுணர்வினை மிக நுணுகி ஆய்ந்திருக்கிறார்; உயர் நடையால் இயன்ற அந்த நூலின் பலப்பல அடிகள் மனங்கவர்பவை. அவருடைய மாபெரும் படைப்பு 15 தொகுதிகளாய் விரிந்த ' உரு மாற்றங்கள் ' (Metamorphosis); பலதரப்பட்ட பாடுபொருள் அடங்கிய அந்தச் செய்யுள் நூலில் நிறையும் உண்டு; குறையும் உண்டு. அவருக்குப் பின்னர் இலக்கிய ஆக்கத்தில் அயல்மொழியினர் முன்னின்றனர்.
அ) Seneca ( பொ.யு.மு. 4 - பொ.யு. 65 ) ஒரு ஸ்பானியர். கவிதை, கட்டுரை,
நாடகம் எனப் பற்பல பொருள் குறித்து அவர் இயற்றிய ஆக்கங்களில் சிதைந்துபோனவை போகக் கிடைத்தவற்றுள் முக்கியமானது ஓர் அறிவியல் நூல் : Questionum
naturalium ( இயற்கைப் பிரச்சினைகள் ) என்பது தலைப்பு;
நிலநடுக்கம், மின்னல், காற்று, வெள்ளம் முதலான இயற்கை நிகழ்வுகளை அது ஆராய்கிறது. கலிலியோவுக்கு இவர் முன்னோடி.
ஆ) அவருடைய தம்பிமகன் Lucanus ( பொ.யு. 39- 65 ) இதிகாசம் ஒன்றை இயற்றினார் : De Bello Civili என்னும் தலைப்புடைய அந்தக் கவிதை நூல் 10 தொகுதிகள் உடையது; இதிலும் நிறை குறை உள்ளன.
இ) Phaednus ( பொ.யு.மு. 30 - பொ.யு. 44 ) ஈசாப்பின் உரைநடைக் கதைகளுக்கு செய்யுள் வடிவம் தந்த இவர் கிரேக்கர்; கதை சொல் திறமையும்,
கலைநேர்த்தியும், உயிரோட்டமிகு உரையாடல்களும் அந் நூலின் சிறப்புகள்.
பொ.யு. 2 ஆம் நூற்றாண்டில் லத்தீன் இலக்கியம் சரியத் தொடங்கி 5 ஆம் நூற்றாண்டில் வீழ்ச்சியுற்றது. அந்தக் காலக்கட்டத்தில் குறிப்பிடத் தக்க படைப்பாளிகளாய் மிளிர்ந்தவர் மூவர்:
1 - Tacitus (பொ.யு. 55 -120 )
Historiae என்ற வரலாற்று நூலின் ஆசிரியர்; பல ரோமானிய மன்னர்களின் வரலாற்றைக் கூறுவதும், 50 தொகுதிகளைக் கொண்டதும், கவித்துவம் ஆர்ந்த நடையில் செய்நேர்த்தியுடன் எழுதப்பட்டதுமாகிய அதன்சிறு பகுதியே கிட்டியது.
2 --Suetonius ( பொ.யு.70 - ?) - பன்னிரு ரோமானிய ஆட்சியாளர்களின் வரலாற்று நிகழ்வுகளை Duodenim Caesarum Vitae என்னும் தலைப்பில்,
உணர்ச்சியைத் தூண்டும் விதமாய் வர்ணித்துப் புகழடைந்த இவரும் வரலாற்றாசிரியர்.
3 -- Juvenalis ( பொ.யு. 60 - 129 ) பதினாறு அங்கதக் கதைகளை எழுதினார். தம் காலத்தில் தலை விரித்தாடிய ஆடம்பரம்,
ஊழல், மூட நம்பிக்கைகள் முதலியவற்றை எதிர்த்து ஆணித்தரமாயும் ரத்தினச் சுருக்கமாயும் கருத்து தெரிவித்துள்ளார்.
பிரஞ்சு,
இத்தாலியம், ஸ்பானியம் , ருமேனியம் ஆகிய மொழிகளின் தாயாகவும் திகழ்ந்த லத்தீன், எல்லை கடந்த பிறமொழிக் கலப்பால் தூய்மை குன்றி, சிறிதுசிறிதாய்ச் சிதைந்து,
பேச்சு வழக்கை இழந்தமை வருந்துதற்கு உரியது.
+++++++++++++++++++++++++++++++++