ஐம்பது வயதுக்கு உட்பட்டவர்களுக்குக் கப்பல் பயண அனுபவம் பெரும்பாலும் வாய்த்திராது. எனக்கு அந்த அரிய வாய்ப்பு கிட்டிற்று.
பிரஞ்சுக் காலனியாய் இருந்த வியட்நாமில் ஓராண்டு வசித்தபின், பிரான்சுக்குப் போவதற்காக, சைகோன் (இப்போதைய பெயர் ஓச்சிமின் சிட்டி) துறைமுகத்தில், மரேஷால் ழோஃப்ர் ( Marechal
Joffre) என்ற பிரஞ்சுக் கப்பலில் 14 -07 -1948 இல் ஏறி 26 நாள் ( கிட்டத்தட்ட ஒரு மாதம்!)
பயணித்தேன்.
இலங்கையர் இருவரும் நானும் ஆக மூவரே தமிழர்
; 10, 15 வியட்நாமிய இளைஞர்: மேற்
கல்விக்காகவோ வேலை தேடியோ சென்றவர்கள்; மற்ற யாவரும் பிரஞ்சியர். மொத்தம் 200 பயணிகள் இருக்கலாம்.
சிங்கப்பூரில் கப்பல் நின்றுவிட்டுக் கொழும்பை
அடைந்ததும் இலங்கையர் இறங்கினர்.
முதல் நாள்
, மூன்று தளங்களுக்கும் போய்ச் சுற்றினேன்: முடி வெட்டும் கடை, சலவைக் கடை, பல்பொருள் விற்பனை
அகம், சாராயக் கடை
முதலியன கண்டேன். புதுச் சூழ்நிலை, புதிய இடம், அறிமுகமற்ற மனிதர்கள்: அனுபவம் புதுமை!
சில நாள் மகிழ்ச்சியாய்க் கடந்தன.
மேல் தளத்தில் அமர்ந்து, சுற்றுமுற்றும் பார்க்கையில்
, கப்பலானது கடல்
நீரை இரு புறமும் நுரை பொங்கக் கிழித்துக்கொண்டு
முன்னேறுவது கண்ணுக்கு விருந்தளித்தது; அவ்வப்போது
, சற்றுத் தொலைவில், சுறா மீன்கள் கடலுக்கு மேலே துள்ளி அரை வட்டமடித்துப் பாய்வதைக் கண்டு களிக்கலாம்; அரிதாக, ஒரு கப்பல் எங்களை நோக்கி வந்து
, மெது மெதுவாகத் தாண்டிச் செல்லும். மற்றபடி, எங்கெங்கும் நீர், நீர்,
நீர்! நீரன்றி வேறில்லை!
உலகின் முக்கிய செய்திகளைச் சுருக்கமாகத் தட்டச்சு செய்து காலையில் அறிவிப்புப் பலகையில் ஒட்டுவார்கள்; (இந்திய நிகழ்வுகள் அநேகமாக இடம் பெறா). கப்பல் எந்தத் துறைமுகத்தை எப்போது அடையும், எவ்வளவு காலம் நிற்கும், இறங்கிச் சுற்றிப் பார்க்க
அனுமதி உண்டா என்னும் விவரங்களை அதில்
வாசித்தறியலாம்; ஐந்தாறு நாளுக்கு ஒருமுறை,
"இன்றிரவு கடிகாரத்தை ஒரு மணி நேரம் தாமதப்
படுத்திக்கொள்ளுங்கள்"
என்ற யோசனை இருக்கும்.
இரவில், கப்பல் பல வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுப் பேரெழிலுடன் திகழும். அந்த விளக்கொளியில், மேல் தளத்தில்,
பொழுது போக்குக்காக
, குத்துச் சண்டை, ஓரங்க நாடகம், ஆடல் பாடல் என சிற்சில நாள்களில் கலை
நிகழ்ச்சிகளைப் பயணிகள்
நிகழ்த்தினார்கள்.
எப்போதாவது , எங்கோ வெகு தொலைவிலிருந்து, ஒரு கலங்கரை விளக்கம் தன் புள்ளி போன்ற ஒளியைச் சுழற்றும்; அப்போதெல்லாம் என் மனத்தில் ஏக்கம் பிறக்கும்: அதோ, அங்கே
, மனிதர்கள் காலாரத் தரையில் நடக்கிறார்கள்!
கொழும்பிலிருந்து ஜிபுத்திக்கான ஒருவாரப் பயணத்தின்போதுதான் துன்புற்றோம்: கப்பல் இப்படியும் அப்படியும் சாய்ந்தாடி, மேல் தளத்திலிருந்த எல்லாரையும் ஒரு பக்கத்திலிருந்து எதிர்ப்
பக்கத்துக்குத் தள்ளிப் பந்தாடியது.
பலர்க்கு மயக்கம், சிலர் வாந்தி எடுத்தனர். நல்ல வேளை! சில மணி நேரத்தில் விமோசனம்
கிட்டிற்று.
ஜிபுத்தியில் எங்களுக்கு முன்னரே சில கலங்கள் நங்கூரமிட்டுக் காத்திருந்தன; சூயஸ் கால்வாயைக் கடந்து நடுநிலக் கடலை அடைய வேண்டும்; ஒரு சமயத்தில் ஒரு கப்பல் மட்டுமே செல்ல முடியும். மனிதன் வெட்டிய கால்வாய் அல்லவோ? அகலம் அதிகமில்லை.
வடக்கிலிருந்து ஒவ்வொரு கப்பலாய், இடைவெளி
விட்டு, வந்துகொண்டிருந்தது; அது முடிந்தபின், இங்கிருந்த கப்பல்களை வரிசைப்படி அனுப்பினார்கள்.
பிரான்சின் மிகப் பெரிய துறைமுகமாகிய மர்சேயை ( Marseiille ) 10-08-1948 இல், நல்ல வண்ணம் அடைந்து யாவரும் இறங்கினோம்.
அப்பாடா!
கடற்பயணம் படுபோர்! இதைக்காட்டிலும்
போர், வான்
பயணம்; ஆனால் விரைவாய் முடிந்துவிடும்.
------------------------------------------------------------------
வணக்கம்
ReplyDeleteஐயா
தங்களின் பயண அனுபவத்தை மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் த.ம1
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
உங்கள் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் என் மனமுவந்த நன்றி
Deleteகப்பல் பயணம் செய்ய வேண்டும் என்ற தீராத ஆவல் என்னிடம் எப்போதும் உண்டு. அந்த ஆவலை மேலும் தூண்டிவிட்டது உங்கள் பதிவு. கூடிய விரைவில் சென்னை டூ அந்தமான் அல்லது கொச்சின் டூ லட்சத்தீவு சென்று வருவேன்.
ReplyDeleteபின்னூட்டத்திற்கு என் அகமார்ந்த நன்றி . உங்கள் ஆவல் விரைவிலும் நல்லவண்ணமும் நிறைவேற என் வாழ்த்து .
Deleteசிரமத்தை அறிந்தேன் ஐயா... நன்றி...
ReplyDeleteபின்னூட்டத்துக்கு என் உள்ளமார்ந்த நன்றி . சிரமந்தான் , தவிர்க்க இயலாத சிரமம் .
Deleteகப்பலிலேயே 26 நாட்கள் தொடர் பயணமா? அதுவும் 1948ல் [அடியேன் பிறப்பதற்கு 2 ஆண்டுகள் முன்பே] மிகவும் ஆச்சர்யமாக உள்ளது, ஐயா.
ReplyDeleteஎன் 25-26 வயதில் [1975-76] பம்பாய் துறைமுகத்திலிருந்து கோவா தலைநகர் பனாஜி வரை கப்பலில் ஒரே ஒரு முறை மட்டும் 4-5 அலுவக நண்பர்களுடன் சென்றுள்ளேன்.
24 மணி நேரப்பயணம். ரூ.30 Second Class Ticket. மொட்டை மாடி போன்ற மேல் தளத்தில் இருக்கை. மார்கழி மாதக் குளிர் தாங்கவே முடியவில்லை. அதுவே படு போராகிவிட்டது எனக்கு. எப்போ இறங்குவோம் என்று ஆகிவிட்டது.
முதல் நாள் காலை 9 மணிக்குக் கிளம்பிய கப்பல், மறுநாள் காலை 9 மணிக்கு பனாஜியை [கோவா] அடைந்தது. நடுக்கடலில் அதிலிருந்து லக்கேஜ்களுடன் இறங்கி ஒரு சிறிய படகில் குதிக்க வேண்டியிருந்தபோது ஆட்டமான ஆட்டம். முதல் அனுபவம். என்னை சற்றே தடுமாற வைத்தது.
அருமையான தகவல்களுடன் கூடிய அனுபவப்பகிர்வுக்கு நன்றிகள், ஐயா.
உங்கள் பாராட்டுக்கு என் மனமார்ந்த நன்றி . உங்களுக்குப் பயண அனுபவம் கிடைத்தமைக்கு மகிழ்கிறேன் . உங்கள் வலைத்தளங் கண்டேன் : அட்டகாசப் பதிவுகள் ! தொழில் நுட்பம் , படங்கள் ! பாராட்டுகிறேன் . நான் சாதாரணமானவன் என்று சொல்லிக்கொள்ளப் பண்பட்ட மனம் வேண்டும்
Deleteஎன் 25-26 வயதில் [1975-76] பம்பாய் துறைமுகத்திலிருந்து கோவா தலைநகர் பனாஜி வரை கப்பலில் ஒரே ஒரு முறை மட்டும் 4-5 அலுவக நண்பர்களுடன் சென்றுள்ளேன்.
ReplyDeleteஅலுவக நண்பர்களுடன் = அலுவலக நண்பர்களுடன் [Office Friends]
என் அண்ணா இந்தியன் நேவியில் பணி புரிந்தவர்/ கப்பல் பயணம் பற்றிக் கூறுவார். அவர் தயவில் ஒரு முறை இந்தியப் போர்க்கப்பல் INS TIR உள்ளே எல்லாம் சென்று வந்திருக்கிறேன் மற்றபடிக் கப்பல் பயண அனுபவம் இல்லை.
ReplyDeleteபின்னூட்டத்திற்கு என் அகம்நிறை நன்றி .கப்பலின் உள்ளே சென்று பார்க்க முடிந்தது நல்வாய்ப்புதான்
Deleteகப்பல் பயண அனுபவப் பகிர்வு ரசிக்கும்படியாக இருந்தது. கிட்டத்தட்ட ஒரு மாதம் கப்பலில் போவது படு போர் தான். எப்போது இறங்குவோம் என்ற உங்கள் மனநிலையை அருமையாக விளக்கியிருக்கிறீர்கள். இத்தனை காலங்கழித்துக் கப்பலின் பெயரை நினைவு வைத்து எழுதியிருப்பது வியப்பை ஏற்படுத்துகிறது. அக்காலக் கப்பல் பயணம் பற்றி இக்காலத்தில் தெரிந்து கொள்ள உதவிய பதிவுக்கு நன்றி!
ReplyDeleteபாராட்டிப் பின்னூட்டம் எழுதியமைக்கு உள்ளம் நிறை நன்றி
Deleteகப்பல் பயணம் எனக்கு நிறைய உண்டு.1970 முதல் தொடங்கியது.மலேசியாவில் போர்ட் கிள்ளான் துறைமுகத்தில் ரஜூலா என்ற கப்பலில் 8 நாட்கள் பயணித்து நாகபட்டினம் அடைந்தோம்.அதே வழியில் தொடர்ந்து 12 பயணம் 1982 வரை.. ரஜூலா.,ஸ்டேட் ஆப் மதராஸ்,ஈஸ்டன் குயின்,சிதம்பரம்.
ReplyDelete- .
Deleteபின்னூட்டத்திற்கு என் மனம் நிறைந்த நன்றி . எக்கச் சக்கப் பயணம் செய்திருக்கிறீர்கள் . நிறைய அனுபவம் ஏற்பட்டிருக்கும் . ரஜூலா பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன் , அந்தக் கப்பலுடன் ரோனா என்ற கப்பலும் 1940 வாக்கில் நாகை - மலேசியா பாதையில் பயணித்தது . .
அடேயப்பா... எவ்வளவு தகவல்கள்... கிட்டத்தட்ட 67 ஆண்டுகளுக்கு முன்பு சென்று வந்த பயண அனுபவத்தை நேற்று நடந்தது போல தேதி முதற்கொண்டு எவ்வளவு துல்லியமாகத் தெரிவித்துள்ளீர்கள்!
ReplyDeleteகப்பல் பயணம் போர் மட்டுமன்றி அது ஒவ்வாமையையும் உண்டாக்கும் என்று அறிந்திருக்கிறேன். அதையும் தங்கள் வரிகளில் காண்கிறேன்.
கொழும்பின் தெருக்களில் இறங்கி நடக்கும்போது வானொலியில் ஒலித்துக்கொண்டிருந்த 'அமைதியில்லாத என் மனமே' பாடல் தங்கள் அமைதியற்ற மனநிலையைப் பிரதிபலிப்பதாய் இருந்தது என்று ஒருமுறை சொல்லக் கேட்டிருக்கிறேன்.
இன்றைய தலைமுறையில் பலருக்கும் கிட்டியிராத கடற்பயண அனுபவத்தை அந்நாளைய நினைவுகளோடு பகிர்ந்துகொண்டதற்கு மிக்க நன்றி.
பின்னூட்டத்திற்கு என் மனமுவந்த நன்றி . அந்தப் பயணத்தின்போது கொழும்பு, ஜிபுத்தி ஓரான் என்ற மூன்று ஊர்களில் மட்டும் பகற்பொழுது முழுவதும் சுற்றிப் பார்க்க அனுமதி கிட்டிற்று . அமைதியில்லாதென் மனமே என்ற பாதாள பைரவி படப் பாடல் மூன்றரை ஆண்டுக்குப்பின் நான் கேட்க நேர்ந்த முதல் தமிழ்ப் பாடல் . அது 1952 இல் நான் ஆந்த்ரெ லெபோன். என்னும் பிரஞ்சுக் கப்பலில் பிரான்சிலிருந்து திரும்பிக் கொழும்பில் இறங்கித் தெருவில் நடந்தபோது நிகழ்ந்தது . இதை நினைவில் வைத்திருப்பது பாராட்டுக்குரியது.
Deleteஅன்புடையீர்! வணக்கம்!
ReplyDeleteஅன்பின் அய்யா திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (25/06/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை அவரது வலைத் தளத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.
இணைப்பு: http://gopu1949.blogspot.in/
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com
FRANCE