Saturday, 14 January 2012

சில பழமொழிகளும் விளக்கங்களும்

பழமொழி என்பது பழைய சொல் எனப் பொருள்படும். தொல்காப்பியருக்கு (உத்தேசமாய்க் கி.மு. 5 ஆம் நூற்றாண்டு) முன்பிருந்தே தமிழில் பழமொழிகள் வழங்கி வருகின்றன. அவற்றை அவர் முதுமொழி (பொருளதிகாரம் - நூற்பா 479) என்கிறார். அதற்குப் பழைய சொல் என்றுதான் அர்த்தம். அதே பொருளில்தான் அகநானூறு 101- ஆம் பா "தொன்றுபடு மொழி" என்கிறது.

மக்கள் தங்கள் அனுபவங்களையும், காண்கின்ற நிகழ்ச்சிகளையும், கேட்கிற செய்திகளையும் அடிப்படையாகக் கொண்டு தங்களுக்குத் தோன்றும் கருத்துகளைச் சுருக்கமாகவும், மனதைக் கவரும் விதமாகவும் வெளியிட்டால் அவை பழமொழியாகக் கூடும். அப்படியாவதற்குப் பலராலும் அடிக்கடி பயன்படுத்தப்பட்டுப் பரவ வேண்டியது அவசியம்.

எல்லாப் பழமொழிகளும் ஏற்புடைய கருத்துகளையே கொண்டிருக்குமா? அப்படிச் சொல்வதற்கில்லை.

சில காட்டுகளைப் பார்ப்போம்:

1. நாற்பது வயதில் நாய்க்குணம்.
2. அரணை நக்கினால் உடனே மரணம்.
3. பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது.
4. கொன்றால் பாவம் தின்றால் போச்சு.

இவை உண்மையல்ல!

ஆணாதிக்கப் பழமொழிகள் இருக்கின்றன.

1. சாண் பிள்ளையானாலும் ஆண்பிள்ளை.
(அவனுக்கு முதல் ஆசிரியையாய் இருந்து அறிவூட்டி ஆளாக்கியவள் பெண்தானே!)

2. பெண்புத்தி பின்புத்தி.
(புத்தியில் ஆண், பெண் இல்லை.
"எட்டும் அறிவினில் ஆணுக்குப் பெண்ணிங்கே
இளைப்பில்லை காண்....." - பாரதியார்)

3. பெட்டைக் கோழி கூவிப் பொழுது விடியாது.
(சேவல் கூவுவதால்தான் விடிகிறதா? எது கூவினாலும், கூவாவிட்டாலும் பொழுது அன்றாடம் விடிந்தே தீரும்).

4. புகையிலை விரித்தால் போச்சு, பெண்பிள்ளை சிரித்தால் போச்சு. (சிரிக்கும் உரிமை கூடப் பெண்ணுக்கு இல்லையாம்!)

உடற்குறை உடையவரை இழிவுபடுத்தும் பழமொழிகளுக்குப் பஞ்சமில்லை.

காட்டு:

கள்ளனை நம்பினாலும் குள்ளனை நம்பக்கூடாது.

உயரம் குறைந்த ஒருவரை நம்பி ஏமாற்றம் அடைந்த யாரோ இந்தக் கருத்தை வெளியிட்டிருக்கிறார். அது பொது உண்மையல்ல. ஏமாற்றுகிறவர்களுக்கும் அவர்களின் தோற்றத்துக்கும் என்ன தொடர்பு? ஒல்லியானவர், பருமனானவர், உயரங்குறைந்தவர், நெட்டையாய் உள்ளவர், குழந்தை, முதியவர், ஆண், பெண் என எல்லாத் தரப்பினருள்ளும் ஏமாற்றுக்காரர்களும் உண்டு, நேர்மையானவர்களும் உண்டு. எனவே உருவம் கண்டு பண்பை நிர்ணயிப்பது தவறு.

இவ்வாறு பெண்கள், அங்க ஈனர், மனநிலை பிறழ்ந்தவர் ஆகியோரைப் பழிக்கும் அல்லது தாக்கும் பழமொழிகளைப் பயன்படுத்தல் பண்பாடு ஆகாது, நீதியும் அல்ல. சாதிகளைக் குறிப்பிட்டு இழிவுபடுத்துகின்றவற்றையும் தவிர்த்தல் வேண்டும்.

பொருந்தாத கருத்துடைய இன்னொரு பழமொழி:

உண்ட களைப்பு தொண்டனுக்கும் உண்டு.

தொண்டன் என்பவன் களைப்பறியாத பலசாலியாய்த்தான் இருப்பானா? அப்படியிருந்தால்தான் தொண்டனுக்கும் என்று 'உம்' சேர்த்துச் (உம்மை கொடுத்து) சொல்லலாம். தொண்டன் நோஞ்சானாகவும், இருக்கலாம், தொண்டு மனப்பான்மைதான் முக்கியம்.

அது ஒருபுறமிருக்க, உண்பது என்ன வெட்டி முறிக்கிற வேலையா? அதிலே என்ன களைப்பு? கொண்டது, கொள்ளாதது தெரியாமல் தொண்டை வரை திணித்து அவதிப்படுகிற மிகச் சிலப் பெருந்தீனிக்காரர்களைத் தவிர மற்ற பெரும்பாலோர் களைப்பு ஏற்படும் அளவு உண்பதில்லையாதலால் தள்ள வேண்டிய பழமொழி இது!

விலக்கவேண்டிய பழமொழிகளுள் வேறொரு ரகம் உண்டு. அவை வன்செயல்களை ஊக்குவிப்பவை.

1. அடியாத மாடு படியாது.

2. அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவமாட்டான்.

3. அடிமேல் அடியடித்தால் அம்மியும் நகரும்.

4. மயிலே மயிலே என்றால் இறகு போடாது.

(சித்த மருத்துவம் பயன்படுத்தும் மருந்துச் சரக்குகளுள் மயிலிறகும் ஒன்று. இது தேவைப்படும்போது மரத்தின் மீது அமர்ந்திருக்கும் மயிலை நோக்கி, "மயிலே, மயிலே, இறகு ஒன்றைப் போடேன்" என்று கெஞ்சிக் கேட்டால், "இந்தா, எடுத்துக் கொள்" எனச் சொல்லித் தன் இறகையொடித்து அது போடுமா? போடாது. அதைத் துரத்திப் பிடித்து அமுக்கி இறகைப் பிடுங்கிக் கொள்ளவேண்டும் என்று இப்பழமொழி போதிக்கிறது. நயமாகப் பேசினால் இணங்காதவரை வன்முறையால் வழிக்குக் கொண்டு வரவேண்டும் என்பது கருத்து.)

வன்முறையை ஆதரிக்கிற பழமொழிகளைப் பரப்புவது சமுதாயத்துக்கும், நாட்டுக்கும் தீங்கு பயக்கும்.

பழமொழிக்காகவே ஒரு நூல் உண்டு என்பது உங்களுக்குத் தெரியுமா?

மூன்றுரையரையனார் இயற்றிய 'பழமொழி நானூறு' ஒவ்வொரு பாவின் இறுதியிலும் ஒரு பழமொழி கொண்டதாய் நானூறு வெண்பா உடையது.

எடுத்துக்காட்டுக்கு ஒரு பாட்டு:

மானமும் நாணமும் அறியார் மதிமயங்கி
ஞானம் அறிவார் இடைப்புக்குத் தாமிருந்து
ஞானம் வினாஅய் உரைத்தல் நகையாகும்
யானைப்பல் காண்பான் புகல்.

இதில் பயின்றுள்ள பழமொழி, "யானையைப் பல் பிடித்துப் பார்க்கப் போவது நகைப்புக்கு இடமாகும்" என்பது. இது இன்றைக்குப் புழக்கத்தில் இல்லை. இதைப் போன்றே அந்த நூலின் பெரும்பாலான பழமொழிகள் மறைந்து போக, சிற்சில மட்டும் இன்றும் மாறாமல் அல்லது மாற்றம் அடைந்து வழங்குகின்றன. இவற்றுள் சில:

முதல் இலார்க்கு ஊதியம் இல்லை.

கற்றலின் கேட்டலே நன்று.

முள்ளினால் முள் களையுமாறு.” (முள்ளை முள்ளால் எடுக்கவேண்டும்)

வெண்ணெய் மேல் வைத்து மயில் கொள்ளுமாறு.” (கொக்குத் தலையில் வெண்ணெய் வைத்துப் பிடித்தல் என்று இப்போது சொல்கிறோம்.)

கொக்கைப் பிடிக்க எளியவழி எது என்று ஒருவர் கேட்டாராம். அதற்குக் கிடைத்த பதில்:

"வெண்ணெயைக் கொண்டுபோய்க் கொக்கின் தலையில் வைத்துவிட்டால் வெயிலில் உருகி வழிந்து அதன் பார்வையை மறைத்துவிடும். பின்பு பிடித்துவிடலாம்" என்பது.

காரிய வெற்றி பெறுவதற்குக் கூறப்படுகிற முட்டாள்தனமான யோசனையைக் குறிக்க இந்தப் பழமொழி உதவுகிறது.

மக்களின் மனப்பான்மை, பழக்க வழக்கம், வாழ்க்கை முறை முதலியவை மாற மாறக் காலப்போக்கில் பல பழமொழிகள் இறந்துதான் போகும்.

உதாரணங்கள்:

1.  ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை.
(இக்காலத்தில் எந்த ஊரிலும் சர்க்கரை கிடைக்கிறது.)

2. ஊரிலே கல்யாணம் மாரிலே சந்தனம்

(முன் காலத் திருமணங்களின் போது, பெரிய பெரிய கிண்ணங்களில் (சந்தனப்பேலா என்று பெயர்) குழம்பு போன்று சந்தனம் தயாரித்து நிறைத்திருந்தார்கள். வருகிற முதியவர்களுள் பெரும்பாலோர் சட்டையணிந்திருப்பதில்லை. குளிர்ச்சி பெறவும், வியர்வை நாற்றம் போகவும் சந்தனக் குழம்பை அள்ளி மார்பு முழுவதும் அவர்கள் பூசிக்கொண்டார்கள். அந்த வழக்கம் நீங்கிவிட்டதால் பழமொழிக்கும் வேலையில்லாமல் போய்விட்டது.)

3. பந்திக்கு முந்து, படைக்குப் பிந்து.

(திருமணங்கள் வீடுகளில் நிகழ்ந்த காலத்தில் அக்கம்பக்க வீடொன்றில் உணவு பரிமாறப்பட்டது. அதிகபட்சம் 50 பேர் மட்டும் அமர்ந்து உண்ணலாம். வரிசையில் நின்று உள்ளே போகவேண்டும். வீடு நிறைந்ததும் கதவு மூடப்படும். இடம் பிடித்தவர்கள் முதல் பந்திக்காரர்கள். மற்றவர்கள் அடுத்த பந்திக்காகக் காத்திருக்க வேண்டும். அப்போது இந்தப் பழமொழி காதில் விழாமலிருக்காது. பின் பந்திகளில் உணவு ஆறிப்போவதோடு அளவும் குறைந்து கொண்டே வரும். தீர்ந்தும் விடலாம். தற்காலத்தில் மண்டபங்கள் ஒரே சமயத்தில் எல்லாரும் சாப்பிட இடந்தருவதால் பழமொழி சொல்ல வாய்ப்பில்லை.)

'பழையன கழிதலும், புதியன புகுதலும்' என்று நன்னூல் கூறுவது போலப் பழைய பழமொழிகள் அழியும். புதியவை தோன்றும். ஆங்கிலத்திலிருந்து சிலவற்றைப் பெற்றுள்ளோம்:

காலம் பொன் போன்றது.

மின்னுவதெல்லாம் பொன்னல்ல.

பூனைக்கு யார் மணி கட்டுவது?”

தவறுதல் மனித இயல்பு.

இருக்கிறதை விட்டு பறக்கிறதுக்கு ஆசைப்படாதே.

பிரெஞ்சு தந்த புதுமொழி: உனக்கும் பெப்பே, உங்கப்பனுக்கும் பெப்பே!

மக்கள் குரலே மகேசன் குரல்என்பதற்கு மூலம் லத்தீன்.

சில பழமொழிகள் இன்றைய இளைஞர்களுக்குப் புரியாமல் இருக்கலாம். அவற்றை விளக்குகிறேன்.

1. தூங்கினவன் தொடையில் திரித்தவரை லாபம்.

தனித்தனியாய் உள்ள தேங்காய் நாரைத் தொடையில் வைத்துத் திரித்தால் அது ஒன்றாகச் சேர்ந்து கயிறு ஆகும். தரையில் அமர்ந்து வலக்காலை நீட்டிக் கொண்டு வெற்றுத் தொடை மேல் நாரை வைத்து இடுப்புப் பக்கமிருந்து முழங்கால் பக்கமாகக் கையால் உருட்டவேண்டும். அதற்குப் பெயர்தான் திரித்தல். திரிக்கும்போது நார் உறுத்தும், சிராய்ப்பு உண்டாகலாம். கஷ்டந்தான். பக்கத்தில் ஒருவன் காலை நீட்டித் தூங்குகிறான் என்று வைத்துக்கொள்ளுங்கள், அவனுடைய தொடையில் திரிக்கலாம் அல்லவா? விழித்துக்கொண்டான் என்றால் எதிர்ப்பான், திட்டுவான், மொத்தவும் கூடும். இருப்பினும் திரித்தவரை லாபந்தானே?

முடிந்தவரைக்கும் பிறரை ஏமாற்றிக் காரியம் சாதிக்கலாம் என்று எண்ணுகிற எத்தர்கள் பயன்படுத்தும் பழமொழியிது!

2. காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்.

இங்கே தூற்றுதல் என்பதற்கு நெல்லையும், பதரையும் பிரித்தல் என்பது பொருள். பதர் என்பது கருக்காய். இது நெல் போலவே தோன்றும், ஆனால் உள்ளே அரிசியிருக்காது; ஆதலால் லேசாக இருக்கும்.

அறுவடைக்குப் பின்பு களத்துமேட்டில் கொட்டியுள்ள நெல்லைத் தொழிலாளர்கள் முறங்களில் அள்ளித் தலைக்கு மேலே தூக்கி முறத்தைச் சாய்த்துக் குலுக்கக் குலுக்கக் கனமான நெல் காலடியில் குவியும்; பதரோ காற்றில் பறந்து தொலைவில் போய் விழும். இப்படி நெல் ஓரிடத்திலும் பதர் வேறிடத்திலுமாகப் பிரிந்துவிடும்.

காற்று வீசவில்லை என்றால் காரியம் நடக்காது. ஆகையால் அது வீசும்போதே வேலையைச் செய்துவிடவேண்டும்.

வாய்ப்பு நேரும்போது நழுவவிட்டுவிடாமல் பயன்படுத்திக் கொண்டு காரிய சித்தி பெறவேண்டும் என்பது பொதுக் கருத்து.

3. எங்கப்பன் குதிருக்குள்ளே இல்லை.

குதிர் என்பது நெல்லைச் சேமிப்பதற்காகக் களிமண்ணால் செய்த பெரிய கூடு. மரப்பத்தாயம் போன்றது. ஆனால் உருளை வடிவம். அதனுள் ஓர் ஆள் இறங்கி நிற்க இயலும்.

கடன் தந்தவர் வருவதைக் கண்ட ஒருவர், தாம் ஒளிந்திருப்பதைச் சொல்ல வேண்டாம் என்று தம்முடைய குழந்தையிடம் எச்சரித்துவிட்டுக் குதிருக்குள் பதுங்கிக் கொண்டாராம். அந்தப் பிள்ளையோ, வந்தவர் எதுவும் கேட்பதற்கு முன்பே புத்திசாலித்தனமாய் பேசுவதாய் எண்ணி, "எங்கப்பா குதிருக்குள்ளே இல்லே!" என்றதாம். இதைக் கேட்டவுடனே உண்மையைப் புரிந்து கொண்டுவிட்டார் வந்தவர்.

ஒரு விஷயத்தைச் சாமர்த்தியமாக மறைப்பதாய்க் கருதித் தன்னையறியாமலே போட்டு உடைத்துவிடுகிற அப்பாவித்தனத்தைக் குறிக்க இப்பழமொழி உதவுகிறது.

4. போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து.

16, 17ஆம் நூற்றாண்டுகளில் செம்பு, இரும்பு முதலிய உலோகங்களை விலையுயர்ந்த பொன்னாக மாற்றுவதற்கு மேல் நாட்டு அறிவியலாளர் சிலர் முயன்றனர். அவர்களுக்கு ஆங்கிலத்தில் ஏல்க்கெமிட்ஸ் (alchemists) என்று பெயர். பாதரசம், பலவகை அமிலங்கள் முதலியவற்றைப் பயன்படுத்தி ஏராளச் சோதனைகளை மேற்கொண்ட அவர்கள், குறிக்கோளை எட்டவில்லையாயினும், வேதியியல் என்னும் அறிவியல் துறை தோன்றவும், வளரவும் காரணகர்த்தா ஆயினர்.

தமிழகத்திலும் அந்த முயற்சி நடைபெற்றது. அதில் ஈடுபட்டவர்கள் ரசவாதிகள் என்று அழைக்கப்பட்டனர். பொன் செய்யும் மருந்தை கண்டுபிடிக்கமுடியும் என அவர்கள் நம்பியது போலவே துறவி தாயுமானவரும் (அவர் ரசவாதியல்ல ஆயினும்) நம்பினார்.

வெந்தழலில் இரதம்வைத்து ஐந்துஉலோகத்தையும்
வேதித்து விற்றுண்ணலாம்

என்று அவர் பாடியுள்ளார்.

இதன் பொருள் : தழலில் - தீயில். இரதம் வைத்து - இரசம் வைத்து (அதாவது பாதரசம் பயன்படுத்தி). ஐந்து உலோகத்தையும் - ஐம்பொன் எனப்படுகிற செம்பு, இரும்பு, ஈயம், வெள்ளி, (சிறுஅளவில்) தங்கமாகிய ஐந்து உலோகங்களையும். வேதித்து - வேதியியல் முறைப்படிப் பொன்னாக மாற்றி. விற்றுண்ணலாம்- விற்றுச் செல்வம் சேர்க்கலாம்.

சிறிய அளவில் பொன், பெரிய அளவில் மற்ற உலோகங்கள் சேர்த்து எல்லாவற்றையும் தங்கமாக்க எண்ணுவது பேராசை அல்லவா?

ரசவாதிகளை நோக்கி யாரோ ஓர் அறிவாளி கூறிய உபதேசந்தான் இந்தப் பழமொழி.

"பொன் செய்யும் மருந்து தேடிப் படாத பாடுபடுகிறீர்களே! நீங்கள் வெற்றி பெற்றாலும் உங்கள் பேராசை மேன்மேலும் பொன் வேண்டும் என்று தூண்டுமாதலால் மன நிறைவு ஒருக்காலும் ஏற்படாது. போதும் என்ற மனத்தைப் பெறுங்கள். உள்ளதை வைத்துக்கொண்டு திருப்தியாக வாழலாம்" என்ற அவரது புத்திமதி ரசவாதிகளுக்கு மட்டுமல்ல, எல்லாருக்குமே எக்காலத்தும் பொருந்துகிற பொன்னுரையாகும்.

சில பழமொழிகள் தவறாக உருமாறிப் பிழைப்பொருள் தருகின்றன. அப்படிப்பட்ட இரண்டைப் பார்ப்போம்.

1. ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன்.

நோயாளியின் உயிரைக் காப்பாற்ற முயல்பவரே வைத்தியர். அவரை கொலைகாரராகச் சித்திரிக்கிறதே இது! இதன் திருத்தமான வடிவம் எது?

சிலருடைய கருத்து, 'ஆயிரம் வேரைக் கண்டவன் அரை வைத்தியன்' என்பது. வேரைக் கண்டால் வைத்தியரா?

ஆயிரம் வேரைக் கொன்றவன் அரை வைத்தியன்என்பதே சரி.

மூலிகை, மரப்பட்டை, இலை, வேர் முதலியவற்றைச் சித்த மருத்துவர் மருந்தாகப் பயன்படுத்துகிறார். வேரைக் கொன்றவர் என்பது வேரைப் பிடுங்கிப் பயன்படுத்தியவர் என்று பொருள்படும். ஆயிரம் வேரைப் பயன்படுத்தினாலும் அரை வைத்தியர்தான். முழுமையடைவதற்கு மேன்மேலும் புதுப்புது வேர்களைப் பயன்படுத்தவேண்டுமென்று, மருத்துவத்தில் முன்னேற ஊக்குவிக்கிற பழமொழி இது.

வேரைக் கொல்லுதல் என்பது பொருந்துமா என்றால் பொருந்தும். "இளைதாக முள்மரம் கொல்க" என்ற குறளில் 'மரம் கொல்லுதல்' என்ற தொடரைக் காண்கிறோம்.

2. தாயைப் பழித்தாலும், தண்ணீரைப் பழிக்கக் கூடாது.

இதன் சரியான பொருளைக் கண்டறிய நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் முயன்றிருக்கிறார். ஊருணியொன்றின் கரையில் இருந்த கல்லில், "தாயைப் பிழைத்தாலும் தண்ணீரைப் பிழைக்கக்கூடாது" எனச் செதுக்கியிருந்ததைப் படித்துத் தம் நோக்கத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

பிழைத்தல் என்பதற்குப் பிழை செய்தல், கெடுத்தல் என்பது பழைய பொருள்.தாய்க்குக் கெடுதல் செய்தாலும் தண்ணீரின் தூய்மையைக் கெடுக்கக்கூடாது என்று பழமொழி அறிவுரை கூறுகிறது.

இந்த விவரங்களைத் 'தாயார் கொடுத்த தனம்' என்ற தம் நூலில் கவிஞர் தெரிவித்திருக்கிறார்.

பழமொழியும், சொலவடையும் ஒன்றுதானா? இல்லை என்பார் சிலர். கிண்டல் தொணிக்கும் பழமொழியே சொலவடை என்று கூறுகிற அவர்கள்,

கழுதை கெட்டால் குட்டிச்சுவர்.

துடைப்பக் கட்டைக்குப் பட்டுக் குஞ்சம்.

அறுக்க மாட்டாதவன் இடுப்பைச் சுற்றி ஆயிரம் கருக்கரிவாள்.

என்று உதாரணங்கள் சொல்வார்கள். ஆனால் இப்படிப்பட்ட பழமொழிகள் மிக மிகக் குறைவு. ஆகையால் அவற்றுக்குத் தனிப்பெயர் தேவையில்லை.

சொலவடை என்பது நெல்லை மாவட்ட வழக்கு, பழமொழி பொதுவழக்கு எனக் கொள்ளலாம்.

மற்ற மொழிகளைவிடத் தமிழில்தான் பெரும்பாலான பழமொழிகள் எதுகை மோனை பெற்றுச் செவிக்கு விருந்தளிக்கின்றன என்பதை எண்ணி நாம் பெருமிதங்கொள்ளலாம்.

7 comments:

 1. வணக்கம்
  இன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் சென்று பார்வையிட http://blogintamil.blogspot.com/2014/01/blog-post_21.html?showComment=1390260727952#c4402202584474342055

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 2. வலைச்சரம் மூலம் வந்தேன்..
  நல்ல விளக்கங்களுடன் பழமொழிகள், நன்றி!

  ReplyDelete
 3. வணக்கம் சகோதரரே!
  அழகாக எல்லாம் விளக்கியுள்ளீர்கள் உண்மை தான் புரியவைத்தமைக்கு மிக்க நன்றி!
  தொடர வாழ்த்துக்கள் ....! தொடர்கிறேன் இனி.

  ReplyDelete
 4. அய்யா!
  "உண்ட களைப்பு தொண்டனுக்கும் உண்டு." என்ற பழமொழியில் தவறேதும் இல்லை! உண்மையான தொண்டு செய்பவன் ஓய்வின்றி உழைப்பவன்! இது இன்றைய கட்சித்தொண்டர்களுக்கும் கூடச்சரியாகவே பொருந்துகிறது! “உண்பது என்பது பெரிய வெட்டி முறிக்கும் வேலையா?” என்கிறீர்கள்! களைப்பு, உண்பதால் வருவதல்ல! உண்ட உடனே உணவை ஜீரணம் செய்ய உடலின் மற்ற பாகங்களுக்குச்செல்ல வேண்டிய இரத்தம் இரைப்பை மற்றும் அதனைச் சுற்றியுள்ள தசை களுக்குச்சென்று விடுவதால், உடலுக்குக் களைப்பு ஏற்படுகிறது! இதைத்தான் அப்பழமொழி விளக்குகிறது!

  ReplyDelete
 5. Replies
  1. உங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி.

   Delete
 6. உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி . நான் சில ஆண்டுகள் பிரான்சில் வாழ்ந்திருக்கிறேன் . மதிய உணவை உண்டவுடனே அவர்கள் பணியைத் தொடர்வார்கள் . நம்மைப்போல் படுத்துக் கலைப்பாறுவதில்லை .

  ReplyDelete