Monday, 16 July 2018

மயிலு


நூல்களிலிருந்து – 19
(கோவை சதாசிவம் 2014-இல் வெளியிட்ட 
'மயிலு' என்ற சிறு நூலிலிருந்து 
சில தகவல்களைப் பதிகிறேன்.)
1.  வடகிழக்குப் பருவ மழை தொடங்குங் காலத்தில் மயில்கள் இனச் சேர்க்கைக்கு ஆயத்தமாகின்றன. மழைப் பொழிவிற்குப் பிறகுதான் புற்களும் செடிகளும் முளைக்கின்றன; அவற்றால் புதர்கள் உருவாகும். முட்டையிடவும் பாதுகாக்கவும் புதர்கள் அரண் போல் உதவும். புற்களையும் செடிகளையும் மொய்க்கும் புழு பூச்சிகள் குஞ்சுகளுக்கு உணவாகும்.

  இனப் பெருக்கக் காலத்தில்தான் ஆணுக்கு நீண்ட தோகை வளரும். பெட்டைகளைக் கவரத் தோகை விளம்பரம் அவசியம். நான்கைந்து பெண் மயில்கள் மேயுமிடத்தில், தோகை விரித்தபடி அசைந்து கொண்டிருக்கும் ஆண், பெண்கள் பார்க்கும்வரை, தோகையை மூடாமல் முன்னும் பின்னுமாய்ச் சுற்றும். உடல் எடையைச் சமன்படுத்திக்கொள்ள அடிக்கடி தோகையைச் சிலிர்க்கும். கால்களை அங்குமிங்கும் மாற்றியபடி நகரும்.

   சில நேரங்களில், அரிதாக, மூன்று நான்கு ஆண் மயில்கள் தோகை விரிக்கும்; அப்போது ஒன்றோடு ஒன்று மோதிக் கொள்ளும். வலக்காலில்தான் பலம் உள்ளது. அந்தக் காலால் கடுமையாய் உதைபட்ட மயில் பின்வாங்கிவிடும்; வென்ற ஆண் களிப்பில் பெருங்குரலில் அகவியவாறு தன் தொண்டைப் பகுதியைக் கொத்திக் கொள்வதும் உண்டு.

  எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்த பெட்டை அதனருகில் செல்லும்.

   இனச் சேர்க்கைக் காலம் முடிந்ததும் ஆண் மயில்கள் வால் பகுதியின் மேலடுக்குகளில் வளரும் தோகையை ஐப்பசி கார்த்திகை மாதங்களில் உதிர்த்துவிடும். சிறகுத் தொகுதியைத் தூக்கிக் கொண்டு ஆண்டுமுழுவதும் வாழ்வது சிரமம். பறப்பதற்குப் பெருந்தடையாய் உள்ள தோகையைத் தம் அலகால் கொத்திப் பிடுங்கி எறியும். அங்கொன்றும் இங்கொன்றுமாய்ச் சிதறிக் கிடக்கும் தோகைகளைச் சேகரிப்பவர்கள் அவற்றை விற்கிறார்கள்.

   பெண் மயில் முட்டையிட்டு 28 நாள் அடைகாக்கும். வெளிவருங் குஞ்சுகள் 2 மணி நேரத்தில் நடக்கவும் 9 நாளில் பறக்கவும் கற்றுக் கொள்கின்றன. ஆணா பெண்ணா என்பது இரண்டாண்டுவரை தெரியாது. குஞ்சுகள் உள்ள இடத்தில் பாம்பைக் கண்டால் மயில்கள் கூட்டாகச் சேர்ந்து விரட்டும். குஞ்சுப் பாதுகாப்புக்காகத் தான் மயிலுக்கும் பாம்புக்கும் பகையுணர்வு உண்டாகிறது. பாம்பைக் கொன்று மயில் உண்பது இல்லை, குஞ்சுகளுக்கு ஊட்டுவதுமில்லை.


2.   மயிலின் நடனத்தைக் குளிருக்கு நடுங்குவதாகப் பேகன் புரிந்துகொண்டார் என்பது அபத்தம். போர்வையை இழக்க வேண்டிய அவசியம் ஒருபோதும் பேகனுக்கு நிகழ்ந்திருக்காது. மிகக் கூச்சமுள்ள பறவைகளுள் மயிலும் ஒன்று. மனிதனின் அண்மையை அது விரும்புவதில்லை; ஆடும் மயிலுக்கு அருகில் போக முடியாது. இயற்கைச் சூழலில் மயில்கள் நடனத்தைப் பதிவு செய்ய முடியாமல் உயிரியல் பூங்காவில் படமாக்கவேண்டிய நிர்ப்பந்தம் எனக்கேற்பட்டது. பேகனும் போர்வையும் அக்காலப் புலவன் பாடிப் பரிசில் பெறக் கலந்தடித்த மிகையான கற்பனைதான்.


3.   மூதுரையில், “கான மயிலாடஎன்று குறிப்பிடும் பறவை மயிலினமன்று. இந்தியாவில் மட்டும் வாழ்ந்த கானமயிலும் பெண் பறவையைக் கவர வாலை விசிறி போல் விரித்து இறக்கைகளைப் பரப்பிக்கொண்டு ஆடும்; ஆனால் மயிலாட்டத்தோடு ஒப்பிட முடியாது. கானமயில் முற்றிலும் அழிந்துபோய்விட்டது.


4.  அலெக்சாண்டர் இந்தியாவை ஆக்ரமித்தபோது மயில்களின் அழகில் மனத்தைப் பறிகொடுத்தார். நாடு திரும்புகையில் அகப்பட்ட மயில்களைக் கூண்டில் அடைத்து கிரீசுக்குக் கொண்டுபோனார். அவரால்தான் ஐரோப்பாவில் மயில்கள் பரவின.

10 comments:

 1. பல தகவல்களை அறிந்து கொண்டேன்... நன்றி...

  ReplyDelete
  Replies
  1. உங்கள் பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி .

   Delete
 2. நல்ல தகவல்கள் ஐயா..அருமை

  ReplyDelete
 3. உங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி .

  ReplyDelete
 4. நன்கு பறக்க முடியாத மயில் மேல் ஏறி ஞாலம் வலம் வந்த முருகனிடம் நீ அப்பாவியா என்று கேட்டது நினைவுக்கு வந்தது

  ReplyDelete
  Replies
  1. உங்கள் பின்னூட்டத்திற்கு மிகுந்த நன்றி .

   Delete
 5. மயில் பற்றிய பல தகவல்களை இப்பதிவின் வாயிலாய் அறிந்துகொள்ள முடிந்தது. சிட்னியிலுள்ள வனப்பூங்கா ஒன்றில்தான் மயில்களை மிக அருகில் பார்த்தேன். கோழிகளைப் போல மனிதர் குறித்த பயமற்று அருகில் உலவித் திரிகின்றன. பெண்மயிலும் தோகை விரித்தாடும் என்று அறிந்திருந்தாலும் நேரில் காணும் வாய்ப்பும் இங்கு கிடைத்தது.

  ஆண் மயிலின் கண்ணீர்த்துளிகளை உண்டு பெண் மயில் கர்ப்பம் தரிக்கும் என்று சொன்ன அரசியல்வாதியின் அறியாமையும் நினைவுக்கு வருகிறது. நல்லதொரு நூலறிமுகத்துக்கு மிக்க நன்றி.

  ReplyDelete
  Replies
  1. பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி . நானும் தமிழகத்தின் ஏதொவோருரில் எத்தனையோ ஆண்டுகளுக்குமுன் மயில்களை அருகில் பார்த்ததுண்டு , அகவலைக் கேட்டிருக்கிறேன் . அச்சமின்றி அவை உலவின .தோகை விரித்த நிலையில் கண்டதில்லை .

   Delete
 6. மயில் பற்றிய பல விபரங்களை அறிந்தேன். குஞ்சுகளைக் காக்கத் தான் பாம்பைக் கொல்கிறது என்ற செய்தி எனக்குப் புதிது. கான மயில் என்ற ஒரு பறவையிருந்து அழிந்து போய்விட்டது என்பதும் கூட. மயில் தோகை விரித்து ஆடியதை நேரில் பார்த்ததில்லை. இப்போது இணையத்தின் உதவியால் பார்த்தேன். நம் நாட்டின் தேசிய பறவையாய் மயில் இருந்தும் கூட, நெல்லில் விஷம் கலந்து வைத்து 42 மயில்களைக் கொன்றிருக்கின்றனர் என்ற செய்தியை அண்மையில் பத்திரிக்கையில் வாசித்து வேதனையாக இருந்தது. பதிவுக்கு மிகவும் நன்றி.

  ReplyDelete
 7. பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி . கான மயிலை மக்கள் காட்டுமயில் என்பர் . கடலூர் மாவட்டத்தில் காட்டுமயிலூர் எனவொரு சிற்றூர் உண்டு .

  ReplyDelete