Sunday 29 July 2018

கிரேக்கத்திலிருந்து




  மிகப் பழங்காலத்திலேயே கிரேக்க நாடுதான் அறிவியல், தத்துவம், இலக்கியம், கணிதம், சிற்பக் கலை, கட்டடக் கலை எனப் பற்பல துறைகளில் சாதனை படைத்துத் தலைசிறந்து விளங்கியது. இன்றைய வெள்ளையர்களின் பண்பாடு, நாகரிகம் முதலியவற்றுக்கு அடிப்படை அந்த நாடுதான்.

  குடியரசைத் தோற்றுவித்து உலகுக்குப் புதிய ஆட்சிமுறையை அறிமுகஞ் செய்த பெருமையும் கிரேக்கத்தைச் சாரும். பொ.யு.மு. 5-ஆம் நூற்றாண்டிலேயே அங்கு சட்டப் பேரவை, சட்ட மேலவை என இரு சபைகளுடன் கூடிய மக்களாட்சி இயங்கிற்று.

  ஒலிம்பிக் விழாக்களும் மாரத்தான் ஓட்டமும் கிரேக்கர் தொடங்கி நடத்தியவை என்பது உலகறிந்த செய்தி.

  ஐரோப்பிய நாடுகள் சிலவற்றில் நிகழும் கர்னிவல் என்னும் விழாவுக்கு மூலம் கிரேக்கர் ஆண்டுதோறும் திராட்சை அறுவடைக் காலத்தில் Bacchus என்ற சாராயக் கடவுளைப் போற்றுவதற்காக நடத்திய கொண்டாட்டம்.

  கிரேக்க ஈசாப் கதைகள் பரவாத நாடு எது? இந்திய ஆரியர் போன்றே ஏராளப் புராணக் கதைகளை கிரேக்கர் கற்பனை செய்துள்ளார்கள். அவற்றைக் கருவாய்க் கொண்டு பார்புகழ் ஓவியர்களும் சிற்பிகளும் கலைநேர்த்தி ததும்பும் மகத்தான படைப்புகளை உருவாக்கியுள்ளார்கள். அவற்றுட் பெரும்பாலானவை பாரீசின் லூவ்ரூ (Louvre) அருங்காட்சியகத்தில் இடம் பெற்றுப் பன்னாட்டுச் சுற்றுலாக்காரர்களின் கண்ணையுங் கருத்தையும் காலங் காலமாய்க் கவர்ந்து அவர்களை ஆனந்தப் பரவசத்தில் ஆழ்த்துகின்றன.

Louvre Museum

  தங்கமலை ரகசியம் படத்தில் ‘ராஜா காது கழுதைக் காது’ நினைவிருக்கிறதா? அது ஒரு கிரேக்கப் புராணக் கதையின் தழுவலே;  (மிடாஸ்) என்ற மன்னனுக்கு அப்பொல்லோ கடவுள் இட்ட சாபம் கழுதைக் காது.

  அதையவன் பெரிய தொப்பியணிந்து மறைத்திருந்தான். முடி வெட்டிய தொழிலாளி அறிந்து கொண்டான்; வெளியில் சொன்னால் மரண தண்டனையாதலால் முடிந்தவரை ரகசியங் காத்தான். இயலாத நிலைமை வந்தபோது தரையில் பள்ளந் தோண்டி சொல்லிவிட்டு மூடினான்; ஆனால் மரங்கள் பெருங்குரலில் எதிரொலித்தன!

  கிரேக்க இதிகாசங்களாகிய இலியட், ஒடிசி இரண்டும் பல்வேறு மொழிகளில் பெயர்க்கப்பட்டு வாசிக்கப்படுகின்றன.
  இலியட் – 24 தொகுதி
  ஒடிசி – 24 தொகுதி
   
Homer
  பொ.யு.மு. 9-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஹோமர் அவற்றை இயற்றினார். அவர் பார்வையற்றவர் என்று கூறப்படுகிறது; ஆனால் எழுத்துச் சான்று இல்லை.

  பொ.யு.மு. 5-ஆம் நூற்றாண்டில் 4 நாடகாசிரியர் சிறந்த நாடகங்களை இயற்றிப் புகழெய்தினர். அவற்றுட் சில பகுதிகளே கிடைத்தன. அவை:
  Aristophanes – 11 (மொத்தம் 40)
  Aeschylus   - 7  (70)
  Euripides   - 18  (92)
  Sophocles   – 7  (120)

  முதல்வர் இன்பியல் நாடகமும் மற்றவர் துன்பியல் நாடகமும் எழுதினர்.

  யூரிப்பிடீசும் சொஃபுக்ளீசும் எலக்த்ரா என்னுந் தலைப்பில் ஒரே கதையை நாடகமாக்கினர்; ஏழாண்டு பிந்தியது சொஃபுக்ளீசின் நூல். இலியட் தான் எலக்த்ராவுக்கு ஆதாரம்.

  கிரேக்கத் துன்பியல் நாடகங்கள் மனிதரின் உச்சக் கட்டச் சாதனைகள் என்று திறனிகள் மதிப்பிடுகிறார்கள்.

Aristotle

  அரிஸ்டாட்டில் பழங்கால மேதைகளுள் குறிப்பிடத் தக்கவர். (பொ.யு.மு. 384 – 322) அவர் 16-ஆம் நூற்றாண்டு வரை ஐரோப்பிய அறிஞர்களால் உச்சிமீது வைத்து மெச்சப்பட்டார். மாவீரர் அலக்சாந்தரின் குருவாய் விளங்கிய அவர், இயற்பியல் உயிரியல் விலங்கியல் முதலான அறிவியல் துறைகளில் மட்டுமன்றிக் கவிதை, தத்துவம், இசை ஆகிய வேறு களங்களிலும் ஆழங்கால்பட்டு அவை குறித்து நூல்கள் இயற்றியவர். “பூமியைக் காட்டிலும் சூரியன் பெரியது” என்பது முதலிய பற்பல உண்மைகளை அறிவு ஆராய்ச்சிகளால் கண்டுபிடித்து எழுதியவர். ஆகவே பிற்கால அறிவுஜீவிகளுக்கு எதைப் பற்றி ஐயந்தோன்றினாலும், தாமே ஆய்ந்து பார்க்க எண்ணாமல் அரிஸ்டாடிலின் கருத்து என்ன என்பதையறிந்து அதை வேத வாக்காய்க் கொண்டு, அப்போதைய அறிவுலகின் பொது மொழியாய்த் திகழ்ந்த லத்தீனில் Aristoteles dixit என்று சொல்லிச் சந்தேகந் தீர்த்துக் கொள்வது வழக்கமாய் இருந்தது. அந்தச் சொற்றொடருக்கு, “அரிஸ்டாட்டில் சொல்லியிருக்கிறார்” என்பது பொருள்.

  அந்த மாமேதை சில பிழைக்கருத்துகளையும் வெளியிட்டுள்ளார். காட்டு: “ஆண்களை விடப் பெண்களுக்குப் பல் எண்ணிக்கை குறைவு.”
  ஆனைக்கும் அடி சறுக்கும்!

Polybius

   Polybius பொ.யு.மு. 2-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்கர். உலகத்தின் முதல் வரலாற்றறிஞர் எனப் போற்றப்படுகின்ற அவரது நூல் “வரலாறு” என்னுந் தலைப்பில் 40 தொகுதி கொண்ட பிரம்மாண்ட படைப்பு. இதன் பெரும்பகுதி ரோமானியரின் வரலாற்றை விவரிக்கிறது.

  முதலைந்து தொகுதிகள் முழுமையாய்க் கிடைத்தன; 17,19, 37, 40 அடியோடு அழிந்தன; எஞ்சியவை அரைகுறையாய் மிஞ்சின.

Strabo

  உலகின் முதல் புவியியலறிஞரும் கிரேக்கரே. பெயர் Strabo (பொ.யு.மு. முதல் நூ.) 17 தொகுதிகளாய் விரிந்த புவியியல் நூலுக்கு அவர் ஆசிரியர்.

  தொகுதி 1, 2 : பொதுத் தகவல்கள்
         3 – 10 : ஐரோப்பா
         11 – 16 : ஆசியா, இந்திய சாமியார்கள் பற்றியும் எழுதியுள்ளாராம்.
            17  : ஆப்பிரிக்கா

  உலகம் உருண்டை என்று தெரிவித்த மேதை Strabo.

  ஊர்தி வசதிகளும் தகவல் தொடர்பு வசதிகளும் இல்லாத காலத்தில் இத்தகைய நூல்களை இயற்றுவதற்கு எவ்வளவு கடின உழைப்பு தேவைப்பட்டிருக்கும்!
 
(படங்கள் உதவி - இணையம்)

12 comments:

  1. வியப்பாக இருக்கிறது ஐயா

    ReplyDelete
    Replies
    1. உங்கள் பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி . நீங்கள் சொல்வதுபோல் வியப்பாகத்தான் இருக்கிறது . ஒரு சின்னஞ் சிறிய பிரதேசம் இக்
      கட்டுரையில் விவரிக்காத அலெக்சாண்டர் , சாக்ரட்டீஸ் , ப்ளேட்டொ , ஆர்க்கிமீடீஸ் , பித்தகோரஸ் , முதலானவர்களையும் ஈன்று பெருமையுற்றது என்பதை எண்ணும்போது !

      Delete
  2. எப்படிப்பட்ட அறிஞர்களும் கலைஞர்களும் வாழ்ந்திருந்த நாடு. சில வருடங்களுக்கு முன்பு வேலையில்லாத் திண்டாட்டம், பொருளாதார நலிவு என பலவகையிலும் பாதிக்கப்பட்டிருந்தது. சமீபத்தில் ஏதென்சில் உயிர்களையும் உடமைகளையும் காவுகொண்ட தீவிபத்து குறித்த செய்திகளையும் படங்களையும் பார்க்கும்போதெல்லாம் எப்படியிருந்த நாடு என்ற வியப்பும் மலைப்பும் வேதனையும் உருவாவதைத் தடுக்க முடியவில்லை. இங்கு தங்கள் பதிவு வாசித்து அவ்வுணர்வு இன்னும் மேலோங்குகிறது.

    ReplyDelete
    Replies
    1. பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி . உண்மைதான் . திவாலாகிற நிலைமைக்கு அந் நாடு வந்துவிட்டது என்ற செய்தி வருத்தந் தந்தது . இயற்கைப் பேரிடரும் அலைக்கழித்தது .வாழ்வு தாழ்வு மக்களுக்கு மட்டுமல்ல நாடுகளுக்கும் மொழிகளுக்குங்கூட உண்டு .

      Delete
  3. பொ . யு . மு என்று பதிவுகளில் குறிப்பிடுகிறீர்களே அதன் முழு வடிவம் என்னவென்று தயவு செய்து தெரிவிப்பீர்களா ?

    ReplyDelete
    Replies
    1. கட்டுரையை வாசித்தமைக்கு மிக்க நன்றி . வரலாற்றுக் காலத்தை ஆங்கிலத்தில் Before Christ , Anno Domini ( B.C ., A.D.) எனக் குறிப்பது மரபு ; தமிழில் கிறித்துவுக்கு முன் , கிறித்துவுக்குப் பின் ( கி.மு . , கி. பி .) . இது மதஞ் சார்ந்ததாக இருப்பதால் இதற்குப் பதிலாய் , Before Common Era ( B.C.E. ) Common Era ( C.E. ) என்னும் புது வழக்கம் பத்து ஆண்டுகளுக்கு முன்பு கைக்கொள்ளப்பட்டது .இதனை நம் மொழியில் பொது யுகத்துக்கு முன் , பொது யுகத்தில் ( பொ.யு. மு . , பொ. யு . ) என்கிறார்கள் .

      Delete
  4. பொ யு மு எனக்கும் தெரியவில்லை தெரியாதவற்றுக்கு க்ரீக் அண்ட் லாட்டின் எனக்கூறு வார்கள் ராஜாவுக்கு கழுதைக்காது கதையின் மூலம்கிரேக்கம் என்பது இதுவரை அறியாதது பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி . பொ.யு.மு . , பொ. யு . பற்றி மேல் விடையில் எழுதியிருக்கிறேன் .தயவு செய்து அதைக் காண்க . தமிழ் வரலாற்று நூல்களில் இந்தப் புதிய முறையை அமல்படுத்த சென்னை அரசு இரு மாதங்களுக்கு முன்பு விரும்பிற்று . ஒரு சாராரின் எதிர்ப்பால் கைவிட்டது .

      Delete
  5. தகவல் ஒவ்வொன்றும் முத்துக்கள்...

    நன்றி ஐயா...

    ReplyDelete
    Replies
    1. உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி .

      Delete
  6. பல சாதனைகளுக்கு முன்னோடியாக விளங்கிய கிரேக்கத்தைப் பற்றிய பல விபரங்கள் அறிந்தேன். தகவல்களுக்கு மிகவும் நன்றி.

    ReplyDelete
  7. பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி .

    ReplyDelete