Friday 10 August 2018

செய்திகள் பலவிதம்


1.ப்ரதி என்ற வடசொல் முன்னொட்டு ஒவ்வொரு என்னும் பொருளும் எதிர் என்னும் வேறு பொருளும் உடையது:


காட்டுகள்:
ப்ரதி மாதமும் – ஒவ்வொரு மாதமும்
ப்ரதி தினமும் – ஒவ்வொரு தினமும்
ப்ரதிவாதி – எதிர்வாதஞ் செய்பவர்

ப்ரதிபலன் – ஒரு நன்மைக்கு எதிர் பலன்.

2. அமோகம் என்பதும் வடமொழிதான். மோகம் = ஆசை; மோகம் = ஆசையில்லாமை. அமோக விளைச்சல் என்றால் இன்னம் வேண்டும் என ஆசைப்படத் தேவையில்லா அளவு விளைச்சல்.

3. முருகனுக்கு வேறு பெயர் விசாகன். இந்த வடசொல்லுக்குப்பறவை மேல் பயணிப்பவன்என்று அர்த்தமாம்.


4. இந்திய மாநிலங்களுள் ஒன்று, சத்தீஸ்கர். இந்த இந்திச்சொல்அறுபது வீடுஎன்று பொருள்படும்.

5. மலையாள மொழியில் புழ என்றால் ஆறு (நதி). ஆழப்புழ, மலம்புழ, பாரத புழல கேரளத்தில் இருக்கின்றன.

6, ஒலியின் அலகு bel. தொலைபேசியை உருவாக்கிய Alexander Graham Bell–இன் நினைவைப் போற்றுவதற்காக அந்தப் பெயரைச் சூட்டியுள்ளனர்.

7. Black market என்ற சொற்றொடர் இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் புழக்கத்துக்கு வந்தது. சீனி, மண்ணெண்ணெய் முதலிய அத்தியாவசியப் பொருள்களின் விலை எக்கச்சக்கமாய் ஏறிற்று. அவற்றை வேறிடத்தில் பதுக்கிவிட்டு வணிகர்கள், ‘சீனி இல்லை, மண்ணெண்ணெய் இல்லைஎன்றெழுதிய அட்டைகளைக் கடைகளில் தொங்கவிட்டார்கள். திருமணம் முதலிய நிகழ்ச்சிகளுக்கு வாங்கித்தானே ஆகவேண்டும்? கடைக்காரரிடம் ரகசிய பேரம் பேசி விலை நிர்ணயித்து சரக்கு பெற்றனர்.


-    Black market-இல் தான் வாங்க வேண்டும்.
-    எல்லாம் black-இல் கிடைக்கிறது.

என்றெல்லாம் மக்கள் பேசிக்கொள்வது சகஜமாயிற்று.

8.   பிரான்சின் தலைநகராகிய பாரீசின் பல்கலைக் கழகங்களில் பயிலும் பிரெஞ்சு மாணவர்கள் தங்களுக்குள் உரையாட ஒரு தனிமொழியைப் பயன்படுத்துகிறார்கள். அதற்கு அர்கோ (argot) என்று பெயர். அது பிரெஞ்சிலிருந்து பெரிதும் வேறுபடுகிறது. எடுத்துக்காட்டு: வேலை: பிரெஞ்சில் தீரவாய் (travail) அர்கோவில் புலோ (boulot)
அர்கோ – பிரெஞ்சு அகராதி உண்டு.

9.   குச்சிலு என்ற தெலுங்குச் சொல் நாட்டியக்காரரைக் குறிக்கும். அவர்கள் வாழ்ந்த ஊர் குச்சேலாபுரம் விஜயவாடாவுக்கு அருகில் உள்ளது. அங்குத் தோன்றிய நடனம் குச்சிப்புடி (14-ஆம் நூற்றாண்டு)

10. தெலுங்கிலக்கியம் 11-ஆம் நூற்றாண்டில் முகிழ்த்தது. நன்னய்யா என்பவர் வடமொழி மகாபாரதத்தைத் தழுவி ஒரு பகுதி இயற்றினார். ஆதலால் அவர்ஆதிகவிஎனப் பாராட்டப் படுகிறார். 13-ஆம் நூற்றாண்டில் திக்கண்ணாவும் அடுத்த நூற்றாண்டில் எர்ரண்ணாவும் மீதியைப் பாடி முடித்தனர்.

நன்னய்யா
11. நச்சுப் பாம்பை நல்ல பாம்பு என்பது சரியா? சரிதான். நல்ல என்பதற்குக் கொடிய, கடுமையான முதலிய வேறு பொருளும் உண்டு.

நல்ல மழைபலத்த மழை
நல்ல பசிதீவிரப் பசி
நல்ல உதைசெமத்தியான உதை
நல்ல பாம்புகொடிய பாம்பு

இது போன்றே நல்லா என்ற வினையெச்சமும் பல பொருள் தரும்.

ஒடம்பு நல்லா காயுது.
நல்லா வருது வாயிலே.

12. தமிழில் சிற்றிலக்கியங்கள் 96 வகைப்படும் என்று எண்ணிச் சொன்ன முதலறிஞர் யார்? யாராவது ஒரு தமிழராய்த் தான் இருப்பார் என்று நினைக்கிறீர்களா? அது தவறு. அவர் ஓர் இத்தாலியர், பெயர் வீரமாமுனிவர். தம் இலக்கண நூலாகிய தொன்னூல் விளக்கத்தில் எழுதியுள்ளார்.

வீரமாமுனிவர்
13. வியப்பு மேலீட்டால் மூக்கில் விரல் வைப்பது நம் காலத்தில் இருக்கிறது. இந்த வழக்கம் தலைமுறை தலைமுறையாக, நீண்ட நெடுங்காலமாகத் தொடர்ந்து வருகிறது என்பதை நற்றிணையால் அறிகிறோம்.

தலைவிக்கும் தலைவனுக்கும் இடையே ஏற்பட்ட ரகசியத் தொடர்பு ஊருக்கு அம்பலமாகிறது. பெண்கள் சிலர் கூடி இது பற்றி மூக்கில் விரல் வைத்துக் கருத்து பரிமாறிக் கொள்கிறார்கள்.

பா. 149. அடி 2
மூக்கின் உச்சிச் சுட்டுவிரல் சேர்த்தி

14. எங்கள் ஊராகிய காரைக்காலுக்கு 1940-க்குப் பின்புதான் பேருந்து வந்தது. ராமலிங்கம் என்ற பெயரைத் தாங்கிய ஒரு வண்டி காரைக்காலையும் நாகூரையும் (தெற்கே ஏழு மைல்) இணைத்தது. அதற்கு முன்பு நடந்துதான் போய்வந்தனர்
மூவர்நால்வராய் இருந்தால் வாடகைக் குதிரை வண்டியில் பயணித்தனர்.

15. காரைக்காலில் எண்பத்தைந்து ஆண்டுக்கு முன்பு அரசு மகப்பேறு மருத்துவமனை இயங்கத் தொடங்கிற்று. ஒரு கர்ப்பிணி கூட வராமல் ஈயோட்டிக் கொண்டிருந்தனர். வீட்டிலேயே மருத்துவச்சியின் உதவியால் குழவியீன்ற காலம். ஆண் டாக்டர்களிடம் மருத்துவம் பார்த்துக்கொள்ளப் பெண்கள் விரும்பவில்லைஇங்கு வந்து பிரசவம்  பார்த்துக் கொள்கிறவர்களுக்கு ஒரு சேலை இனாம் என்ற அறிவிப்பு உடனடியாய்ப் பலன் தரவில்லை.


(படங்கள் உதவி - இணையம்)

8 comments:

  1. பலவற்றிற்கு விளக்கங்களை அறிந்து கொள்ள முடிந்தது... நன்றி ஐயா...

    ReplyDelete
    Replies
    1. உங்கள் பின்னூட்டத்துக்கு மிகுந்த நன்றி .

      Delete
  2. செய்திகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்

    ReplyDelete
    Replies
    1. உங்கள் பின்னூட்டத்துக்கு மிகுந்த நன்றி .

      Delete
  3. அறியாதச் செய்திகள் ஐயா
    நன்றி

    ReplyDelete
    Replies
    1. உங்கள் பின்னூட்டத்துக்கு மிகுந்த நன்றி .

      Delete
  4. மூக்கின் மேல் விரல் வைக்கும் பழக்கம் பன்னெடுங்காலமாகத் தொடர்கிறது என்றறிய மிகவும் வியப்பு. பல்வேறு புதிய செய்திகளை அறியச் செய்தமைக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. பின்னூட்டத்துக்கு மிகுந்த நன்றி .

      Delete