Thursday, 15 November 2018

தமிழ் சினிமா: தொடக்கக் காலம்
   திரைப்படத்தின் வருகைக்கு முன்பு, மாலைப் பொழுதுகளை இன்பமாகக் கழிப்பதற்கு நம் முன்னோர் பாரத ராமாயணக் கதை கேட்டல் (தொடர்ச்சியாகப் பல நாள்), தெருக்கூத்து, வில்லுப் பாட்டு, பொம்மலாட்டம், மேடை நாடகம், நடனம், கரகாட்டம், கதா காலட்சேபம் முதலிய நிகழ்ச்சிகளைப் பயன்படுத்தினர்.

   சில நாடகக் கம்பெனிகள் நகரம் நகரமாய்ப் போய் மாதக்கணக்கில் தங்கிப் பல்வேறு நாடகங்களை நடத்தி மக்களை மகிழ்வித்தன. அவற்றுட் சில மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி, கன்னையா கம்பெனி, நவாப் ராஜமாணிக்கம் கம்பெனி, டி.கே.எஸ். பிரதர்ஸ் (டி.கே.சண்முகம்) கம்பெனி. இவற்றுள் நடித்தவர்கள் பின்னாளில் திரையில் தோன்றினார்கள்.

   படம் வந்த புதிதில் அதை சினிமா என ஒரு சாராரும் பயாஸ்கோப் என மறு சாராரும் சுட்டினர்; பயாஸ்கோப் விரைவிலேயே வழக்கொழிந்தது.

   பெரும்பாலும் தென்னங்கீற்றுக் கொட்டகைகளில் படங் காட்டினார்கள். ஆறு மாதத்துக்கு மட்டும் அரசு உரிமந்தரும். பின்பு பிரித்துவிட வேண்டும். மக்களின் சுகாதாரத்தைக் கருத்தில் கொண்ட நடவடிக்கை. வேறிடத்தில் புதுக் கொட்டகை எழுப்பி அனுமதி வாங்கி நடத்துவர். அது touring Talkies எனப்பட்டது; பேச்சு வழக்கில் ‘’கீத்துக் கொட்டாய்‘’. உரையாடல், பாட்டு எல்லாம் அக்கம்பக்க வீடுகளுக்குத் துல்லியமாய்க் கேட்கும். தொலைவிலிருந்து சில ரசிகர் வந்து கொட்டகை யருகில் அமர்ந்து கேட்டு மகிழ்வதுண்டு. கல் கட்டடங் கட்டி நிரந்தரத் தியேட்டர் உருவாகிய பின்பு சத்தம் வெளி வரவில்லை.

   இரண்டிலும் உள்ளமைப்பு ஒன்றுதான். திரைக்கெதிரில் சுமார் ஐம்பது பேர் அமரக் கூடிய மணல் தரை; இதற்குப் பின்புறம் முறையே பெஞ்சு, பேக் பெஞ்சு, நாற்காலி. ஆண் தரைக்குப் பக்கவாட்டில் பெண் தரை. இரண்டுக்குமிடையே தடுப்புக் கட்டைச் சுவர். பெண்களுக்கு தரை மட்டுமே கதி. உயரத்தில் உட்கார அவர்களுக்கு வீட்டிலேயே அனுமதியில்லை. முஸ்லிம் பெண்களுக்கோ படம் பார்க்கவே உரிமை கிடையாது. இஸ்லாமிய ஆண் வர்க்கம் தடை விதித்திருந்தது.

   கட்டணங்கள் ஓர் அணா (1/16 ரூபாய்), இரண்டணா, நான்கணா (கால் ரூபாய்), ஆறு அணா. கவுண்ட்டரில் வாங்கிய டிக்கட்டை உள்ளே கொண்டுபோய் சீட்டு கிழிப்பவரிடம் தரவேண்டும்; (ஒவ்வொரு வகுப்புக்கும் தனிக் கிழிப்பாளர்) அவர் கிழித்துப் பாதியைத் திருப்பிக் கொடுப்பார். அது சோதனைக்கு உரியதாகையால் பத்திரமாக வைத்திருக்க வேண்டும். பரிசோதகர் வந்து கேட்கும்போது அதைக் காட்டுவது அவசியம். சீட்டில், “பாதி டிக்கட் பரிசோதனைக்கு உரியது; வகுப்பு மாறி உட்கார்ந்தவரிடம் இரட்டிப்புக் கட்டணம் வசூலிக்கப்படும்” என்று அச்சடித்திருக்கும். மோசடிகளைத் தடுக்க இந்த ஏற்பாடு.

   3 வயதுக்குக் குறைந்த குழந்தைகளுக்குக் கட்டணமில்லை. நாலைந்து வயதுப் பிள்ளைகளை அம்மா, அக்கா தங்கள் இடுப்பில் தூக்கி வைத்துக்கொண்டு உட்புக முயல்வது உண்டு; விழிப்புடைய கிழிப்பாளர், கீழே இறக்கிவிட உத்தரவிட்டுச் சிறுவர்களின் உயரத்தைக் கவனித்து டிக்கட் வாங்கச் சொல்லிவிடுவார்; அதிர்ஷ்டம் இருந்தால், கும்பலில் கோவிந்தா போட்டு நுழைந்துவிடலாம்.

   ஒரே ப்ரோஜெக்டர்தான் பயன்படுத்தினர்; ஒரு ரீல் முடிந்ததும், விளக்கொன்றை ஏற்றிவிட்டு, அடுத்த ரீலை மாட்டுவர். ஐந்து நிமிடம் ஆகும். (தாமதமானால் சீட்டிகள் காதைத் துளைக்கும். “போடுடா படத்தை!” என்ற உரத்தக் குரல் கட்டளைகள் பிறக்கும்) அந்த நேரத்தில் சிறுவர்கள் முறுக்கு, பிஸ்கட், மிட்டாய், சோடா, பாட்டுப் புத்தகம் முதலியவற்றை விற்பார்கள். இடைவேளை கால் மணி நேரத்திலும் வாணிகம் நடைபெறும்.

   பெண்கள் பகுதியிலிருந்து சில சமயங்களில் கூச்சல் கிளம்பும்; சிறு சிறு தகராறுகள்; படம் ஓடிக் கொண்டிருக்கையில் கூட சண்டை நடக்கலாம். ஆண்களிடமிருந்து “சத்தம் போடாம இருங்கடி!” என்ற உரத்த கண்டனக் குரல்கள் எழுந்து அமைதியுண்டாக்கும். மற்றபடி பெரும்பாலும் பரிபூர்ண நிசப்தம்தான்.

   மக்களைக் கவர்ந்திழுப்பதற்குப் புதுப்புது வழிகளில் விளம்பரஞ் செய்தனர்;

1.     நாள்தோறும் பகல் வேளைகளில் ஒரு பார வண்டியில் அமர்ந்து பேண்டு வாத்தியம் ஒருவர் இசைக்க, முனையில் உட்கார்ந்திருப்பவர் வழங்குகிற துண்டறிக்கையைப் பெரியவர்கள் எளிதாகப் பெறுவார்கள்; சிறுவர்களோ, “அண்ணேன்! அண்ணேன்!” என்று கெஞ்சிக் கொண்டு கை நீட்டியபடிக் கொஞ்ச தொலைவு ஓடித்தான் வாங்கவேண்டும். அப்படியோடிய அனுபவம் எனக்கு உண்டு. துண்டறிக்கையில் படத்தின் பெயர், நடிகர்களின் பெயர்கள், முக்கிய பாட்டுகளின் தொடக்க அடிகளைக் குறித்துக் “கேட்கத் தவறாதீர்கள்” என்ற வாசகம் இடம் பெறும். வண்டியின் இரு புறமும் பெரிய விளம்பரத் தட்டிகள் கட்டியிருக்கும்.


 2.     மாலை நேரங்களில், படம் தொடங்குவதற்கு ½ மணி முன்பு கொட்டகை வாயிலில் ஒரு பெஞ்சில் உட்கார்ந்து ஒருவர் தொடர்ந்து பேண்டு கொட்டுவார். வாசலின் இரு புறங்களிலும் படத்தின் முக்கிய காட்சிகளடங்கிய பத்துப் பதினைந்து போட்டோக்கள் (Stills-cabinet size) வைக்கப்பட்டிருக்கும். அவற்றைக் கண்டு களிப்பதற்கு ஒரு கூட்டம் கூடும்; ஏற்கனவே படம் பார்த்தவர்களும் போய் போட்டோ பார்த்துத் தம் நினைவுகளை மலரச் செய்வார்கள்.


 3.     சில படங்களின் சீட்டுகளை வெடியில் வைத்து வான வீதியில் பறக்க விடுவதுண்டு. நாளும் நேரமும் முன்கூட்டியே அறிவித்துவிடுவர். டமார்! என ஒரு சத்தம் எங்கிருந்தோ கேட்கும். அண்ணாந்து விண்ணில் அங்குமிங்கும் தேடினால் சிறு பாராசூட் ஒன்று பறந்து செல்வதைக் காணலாம். அதனடியில் தொங்கும் சிறு பையில் இரு டிக்கட் வைத்திருப்பார்களாம். அது போகுந்திசை நோக்கி விரட்டிக் கொண்டு ஓடுவோம். அது பாட்டுக்கு ஜாலியாய்க் காற்றில் மிதந்தபடி அப்புறமும் இப்புறமும் அசைந்துகொண்டு பயணிக்கும். தங்கு தடையுண்டோ அதற்கு? நாமோ குறிக்கிடும் வீடுகளின் மேலேறி ஓடுகளை மிதித்து நொறுக்கிக்கொண்டு விரைய முடியுமா? பக்கத்துத் தெரு வழியாய்த் தான் ஓட வேண்டும். ஒரு கட்டத்தில் அது எட்டாக் கனி என்ற எதார்த்தத்தை உணர்ந்து, நின்றுவிட வேண்டியதுதான்.


 உண்மையாகவே அதில் டிக்கட் இருந்ததா? எத்தனை? எந்த அதிர்ஷ்டசாலியின் கையில் சிக்கியது? அல்லது எல்லார்க்கும் பே பே காட்டிவிட்டு மறைந்ததா? விளங்காத மர்மம். ஊடகங்கள், தகவல் தொடர்பு சாதனங்கள் இல்லாத காலத்தில் எந்த மர்மமும் இறுதிவரை மர்மம்தான். 

ஆக, அது ஒரு சாமர்த்தியமான விளம்பரம்.

4.     அதைக் காட்டிலும் நூதனமான, புத்திசாலித்தனமான விளம்பரமொன்றை ஒரேயொரு தடவை செய்தனர்;


ஒரு காலை நேரத்தில் சுவர்களில் பெரியதொரு அறிவிப்பு காணப்பட்டது. அதில் இடம் பெற்றிருந்த செய்தி:

என் மகளைக் கடத்திச் சென்றவனைக் கண்டுபிடித்து அவளை மீட்டுத் தருபவருக்கு ரூபாய் பத்தாயிரம் தரப்படும்.

                                                                              இப்படிக்கு,
                                                                     சிவசங்கரன் பிள்ளை.

அடேயப்பா! பத்தாயிரம்! (இன்றைய மதிப்பு 1 கோடி).

வாசித்தவர்கள் முடியைப் பிய்த்துக் கொண்டார்கள். ஓரிழவும் புரியவில்லை. இது குறித்தே எங்கும் பரபரப்பான பேச்சு!

மறுநாள் புதிய அறிவிப்பு:

பெண்ணைக் கடத்தியவன் நானே! என்னைச் சந்திக்க இன்று மாலை அல்ஹாம்ப்ராவுக்கு வருக.

                                                                                             இப்படிக்கு,
                                                                                         மாயா மாயவன்.

பக்கத்தில் மாயா மாயவன் பட விளம்பரம்!


    வைகுண்ட ஏகாதசியின்போது பக்தர்கள் கண்விழித்துப் புண்ணியம் சம்பாதித்து நல்ல கதி அடைவதற்கு வசதியாக நான்கு காட்சிகள் காட்டப்பட்டன. தியேட்டருக்கு ஒரு படம் என மாறி மாறிப் பார்த்து இரவைக் கழித்துவிடலாம். ஆயினும் எல்லார்க்கும் இது முடிவதில்லை. மூன்றாங் காட்சியிலேயே மூத்தவளின் வசப்பட்டுவிடுவோர் நிறையப் பேர்.

   தமிழ்ப் படங்கள் போதிய எண்ணிக்கையில் உற்பத்தி ஆகாமையால் சிறிய ஊர்களிலும் பிற மொழிப் படங்கள் திரையிடப்பட்டன. நிறைய இந்திப் படங்கள் எங்கள் ஊரான காரைக்காலுக்கும் வந்தன. நினைவில் நிற்பவை: ரத்தன், அன்மோல் கடி, ஜுக்னு, ஹண்டர்வாலி, டாக்கூ கி லட்கி, கஜான்ச்சி, ஆவாரா. அவற்றின் செவிக்கினிய பாட்டுகளைத் திரையிலும் இசைத் தட்டிலுங் கேட்டு தமிழ்ச் சமுதாயம் சொக்கிப் போயிற்று. இது குறித்து எழுத்தாளர் வெங்கட் சாமிநாதன் தம் ”நினைவுகளின் சுவட்டில்” என்னும் நூலில் (பக்.76) எழுதியுள்ளதை இங்கே பதிகிறேன்:

“ரத்தன் பாட்டுகள் தமிழ்நாடு பூராவும் எதிரொலித்தன. நிறையத் தமிழ்ப் படங்களில் அந்தப் படத்தின் மெட்டுகளைக் காப்பியடித்துப் பாட்டுகள் வந்தன. அன்மோல் கடியும் பாட்டுகளுக்குப் புகழ் பெற்ற படம். இந்த இரண்டு படங்களும் தமிழ்ப் படவுலகில் ஒரு பெரிய பூகம்ப மாற்றத்தை விளைவித்தன.”

அவரது கூற்றுக்குச் சான்றாக நான் ஒரு காட்டு தருகிறேன்:

ரத்தன் – அக்யாங் மிலாக்கே
ஜியாபர் மாக்கே
ச்சலே நஹீஞ் ஜானா
ஓ! ச்சலே நஹீஞ் ஜானா
ஓ!ஓ! ச்சலே நஹீஞ் ஜானா

தமிழ் – கொஞ்சுங் கிளி சோலை
நெஞ்சை யள்ளும் வேளை
மனோகர மாரா
ஓ! மனோகர மாரா
ஓ! ஓ! மனோகர மாரா.


  அன்மோல் கடியிலும் ஜுக்னுவிலும் கதாநாயகி நூர்ஜகான்; அந்தக் கால பி. சுசீலா. அவரது இனிய குரல், கேட்டாரை மயக்கிற்று. 1947-இல் அவர் பாக்கிஸ்தானுக்குப் போய்விட்டார்.

K.L. சைகால்
   இந்தியில் பிரமாதமாய்ப் பாடுகிற ஒருவரின் பெயர் சைகால் என்று கேள்விப்பட்டிருந்தேன். தென்னிந்திய சைகால் P.G. வெங்கடேசன் என்ற விளம்பரத்துடன் தமிழ்ப் படங்கள் திரையிடப்பட்டன. இவர் நடித்த ‘தக்ஷ யக்ஞம்’ பார்த்தேன். அதில் ஒரு பாடல் பாடினார். சில அடிகள் இன்னம் மறந்துபோகவில்லை.

பவானியை சதியெனவே நீயறிந்திடாயோ மூடா?
பண்ணின உன் பாபமதின் பலனறிகு வாயோடா?
ஈசனே உன் கோபம் இவ்வுலகம் அறியாதா?
ஈசனுக்குக் கோபம் வந்தால் ஏழ்கடலுந் தீயாதா?

   சுமார்தான். அவரைக் காட்டிலும் மேன்மையாய் பாகவதரும் மகாலிங்கமும் பாடினார்கள். இந்தி சைகால் மெய்யாகவே தலைசிறந்த பாடகர் என்று பின்னாளில் தெரிந்துகொண்டேன். அவரது பாட்டைக் கேட்டு மகிழும் பேறு எனக்குக் கிட்டவில்லை. எழுத்தாளர் கி.ராஜ நாராயணனுக்குக் கிடைத்திருக்கிறது. அவர், சைகால் என்று ஒரு படுபாவி பாடுவாம் பாருங்கள்; அய்யோ! கொள்ளை கொண்டவன் என்னை என்று சொல்லி வியந்தாராம். (கழனியூரான் நூல்: கி.ரா. சங்கீத நினைவலைகள்)

   அப்போதே இந்திப் படங்களில் விலங்குகளை நடிக்க வைத்தனர்; டைகர் நாயும் பகதூர் குதிரையும் பிரசித்தம்.

   தெலுங்குப் படங்களும் தமிழர்களை மகிழ்வித்தன: தல்லி பிரேமா, கொல்லபாமா, பானுமதி அறிமுகமான ஸ்வர்க்கசீமா. இதில் அவர் பாடிய ’பாவுரமா’ ரொம்ப ஹிட்.

   டார்ஜான் என்கிற ஆங்கிலப் படம் புகழ்பெற்றது; இதை முன்னோடியாய்க் கொண்ட வனராஜா கார்ஜான் தமிழில் தயாரானது.

   டப்பிங் தோன்றாத காலம். மொழி புரியவில்லையென மக்கள் எதையும் புறக்கணிக்கவில்லை.

   தமிழில் சண்டைப் படங்களும் எடுக்கப்பட்டன. பேர் பெற்ற ஸ்டண்ட் நடிகைகள் K.T. ருக்மணியும் R.B. லட்சுமி தேவியும்.

     
  சூப்பர் ஸ்டார்களாகத் திகழ்ந்தவர்கள் M.K. தியாகராஜ பாகவதரும் T.P. ராஜலெட்சுமியும். இவர் ஏராளப் படங்களின் கதாநாயகி; கோவலன், சாவித்ரி – சத்யவான், ஹரிச்சந்திரா, நந்தகுமார், மிஸ். கமலா. ஆயினும் நடிகர்களுக்கு சமுதாயம் மதிப்பு தரவில்லை. “கூத்தாடிகள்” என்ற உதாசீனப் பெயர்தான் அவர்களுக்குக் கிடைத்தது.

   T.P. ராஜலெட்சுமி முதல் பெண் இயக்குநர் என்ற பெருமைக்கு உரியவர். மிஸ். கமலாவை அவரே இயக்கினார்.

   நாட்டிய தாரகை பத்மா சுப்ரமண்யத்தின் தந்தை K. சுப்ரமண்யம் பேர் பெற்ற தமிழ் இயக்குநர். பவளக்கொடி (பாகவதர் அறிமுகம், 55 பாட்டு!), சேவா சதனம் (அறிமுகம் எம்.எஸ். சுப்புலெட்சுமி), முதல் பெண் குழந்தை நட்சத்திரம் இடம்பெற்ற பால யோகினி, S.D. சுப்புலெட்சுமி நடித்த சதாரம், அனந்த சயனம் எனப் பற்பல படங்களை இயக்கியவர் அவர்.

   தமிழரல்லாத இயக்குநர்களும் நல்ல தமிழ்ப் படங்கள் உருவாகக் காரண கர்த்தாக்கள்:

எல்லிஸ் டங்கன் படப்பிடிப்புத் தளத்தில்
எல்லிஸ் R. டங்கன் (Dungan) என்னும் அமெரிக்கர்: அம்பிகாபதி, சகுந்தலை, மீரா, மந்திரிகுமாரி.

    
ஆங்கிலேயர் எம்.எல். டாண்டன் (Tandon):  யயாதி, தேவதாசி.

Y.V. ராவ்
நடிகை லெட்சுமியின் தகப்பனார் Y.V. ராவ் (தெலுங்கர்): சிந்தாமணி, சாவித்திரி.

வேறொரு தெலுங்கர் B.R. பந்துலு: நாமிருவர், கர்ணன், வீர பாண்டியக் கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன், ஆயிரத்தில் ஒருவன்.

   உலகப் போரின் போது பிலிம் பற்றாக்குறை காரணமாக 14,000 அடிக்குள் படம் முடியவேண்டும் என அரசு உத்தரவு பிறப்பித்தது. களிப்பு நேரக் குறைப்பால் ரசிகர்கள் பெரிதும் அதிருப்தியுற்றார்கள். ஆனால் வெளிக்காட்ட இயலவில்லை. நம் அரசாய் இருந்தால் ஆர்ப்பாட்டம், கிளர்ச்சி, தியேட்டர் முற்றுகை, சாலை மறியல், கொடும்பாவி கொளுத்தல், பேருந்து நொறுக்கல், ஊர்தி எரிப்பு, பொதுச்சொத்து சூறை என அடேயப்பா! எத்தனை யெத்தனை வழிகளில் எதிர்ப்பைக் காட்டலாம். வெள்ளைக்காரப் பாவி இந்த சுதந்தரங்களைத் தரவில்லையே!

படங்கள் உதவி - இணையம்

12 comments:

 1. இன்று பொழுதுபோக்கு என்றாலே சினிமாவும் தொலைக்காட்சியும்தான் என்றாகிவிட்ட நிலையில் முற்காலத்தில் எப்படியெல்லாம் விதவிதமான நிகழ்வுகளில் பொழுதைப் போக்கியிருக்கிறார்கள் என்று அறிந்து வியப்பாக உள்ளது.
  கொட்டகையை ஆறு மாதத்துக்கு ஒருமுறை இடம் மாற்றுவதும் அதற்கான காரணமும் மக்களின் சுகாதாரம் மீதான அன்றைய அரசின் அக்கறையை உணர்த்துகிறது. டூரிங் டாக்கீஸ் என்பதன் அதன் உண்மையான பொருளை இன்றுதான் விளங்கிக்கொண்டேன்.
  எத்தனை அரிய தகவல்களை அள்ளி வழங்கியிருக்கிறீர்கள். எல்லாவற்றையும் விட ஆச்சர்யம் திரைப்படங்களின் பெயர்கள், ஆண்டு, பாடல் வரிகள், இயக்குநர்கள், பாடகர்கள், நடிக நடிகையர் பெயர்கள் என பல விவரங்களையும் இவ்வளவு காலம் கழித்தும் நினைவில் வைத்திருக்கிறீர்களே அதுதான்.
  அனுபவம் தோய்ந்த அந்நாளைய திரைப்படங்கள் சார்ந்த தங்கள் பதிவு வாசிக்க வாசிக்க வியப்பும் பிரமிப்பும் தருகிறது. தங்கள் நினைவாற்றலைப் போற்றிப் பாராட்டுகிறேன். பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி.

  ReplyDelete
  Replies
  1. விரிவான விமர்சனத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி . ஏதோ நினைவில் இன்னம் நிற்பதைப் பதிந்திருக்கிறேன் .மறந்து போனவை எவ்வளவோ !

   Delete
 2. Replies
  1. வருக ! உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி .

   Delete
 3. இனிய பல நினைவுகள் மனத்தில் வந்து போயின...

  மறக்கவே முடியாத பொற்காலம் அது...

  ReplyDelete
  Replies
  1. பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி . நினைவுகள் உங்கள் மனத்தில் எழக் காரணமாய் நான் இருந்தமைக்கு மகிழ்கிறேன் .

   Delete
 4. இந்த சினிமா நிகழ்வுகளை நான் என் அரக்கோணம் நாட்கள் என்னும்பதிவில்பகிர்ந்திருக்கிறேன்

  ReplyDelete
  Replies
  1. அப்படியா ? மகிழ்ச்சி .தேடிப் பார்த்து வாசிப்பேன் .பின்னுட்டத்துக்கு மிக்க நன்றி .

   Delete
 5. திரையரங்கில் மணல் தரையில் அமர்ந்து படம் பார்த்த நினைவுகள் மனதில் வலம் வந்து போகின்றன ஐயா

  ReplyDelete
  Replies
  1. பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி . பழைய நிகழ்வுகளை நினைத்துப் பார்ப்பதில் ஒரு சுகம் உண்டு .

   Delete
 6. தமிழ்த் திரைப்படங்களின் தொடக்க கால வரலாறு சுவாரசியமாய் இருந்தது. முஸ்லீம் பெண்களுக்குத் திரைப்படம் பார்க்க அனுமதியில்லை என்பது புதுச் செய்தி. பின் எப்போதிலிருந்து அவர்களுக்கு அனுமதி கிடைத்தது எனத் தெரிந்து கொள்ள் ஆவல். கூகுளில் தேடினேன். பதில் கிடைக்கவில்லை. மண்ணில் அமர்ந்து சினிமா பார்த்த நினைவு இருக்கின்றது. ஆரம்ப கால இந்தி பாடல்களைக் கூட நினைவிலிருப்பது வியப்புத் தான். சுவாரசியமான பதிவு. ஆவணப்பதிவும் கூட.

  ReplyDelete
  Replies
  1. பாராட்டிப் பின்னூட்டம் தந்தமைக்கு மிக்க நன்றி . முஸ்லிம் பெண்கள் எப்போதிலிருந்து
   படம் பார்க்கத் தொடங்கினார்கள் என்பது தெரியவில்லை .தமிழர்களுக்கு வரலாற்றுச் சிந்தனை இல்லாமையால் முக்கிய பண்டைய நிகழ்ச்சிகளின் காலம் அறியமுடியவில்லை . ஆவணமாகப் பயன்படக்கூடும் என நம்பித்தான் எனக்குத் தெரிந்த சில பழைய நிகழ்ச்சிகளையும் என் அனுபவங்களையும் பதிகிறேன் . எப்படியோ அந் நாளைய பாடல்களின் சில அடிகள் என் நினைவில் நங்கூரமிட்டிருக்கின்றன . அன்மோல்கடியில் நூர்ஜஹான் பாடிய ஒரு பாட்டு கிட்டத்தட்ட முழுதும் நினைவிருக்கிறது :
   ஆஜா ஆ ஜா ஆ ஜாமேரிபர் பாதி மோஹப்பத் சஹாரே ஹைக்கோன் ஜோபிக்டீ ஹுயீ தக்தீர் சவாரே ...................அன்ஜாம்மேன் மோஹப்பத் ஹமேன்மா லும்ஹை லேக்கின் ஹமேன் மாலும்ஹை .

   Delete