Sunday 21 April 2019

வரலாற்று நிகழ்வுகள் – 2





  1) ஒன்பது ஆண்டுக்காலம் தமிழக முதல்வராய் நல்லாட்சி நடத்திக் கர்மவீரர் என்றும் கறை படாத கைக்குச் சொந்தக்காரர் என்றும் கல்விக் கண் அளித்தவர் என்றும் ஏழை பங்காளர் என்றும் மக்களால் போற்றப்பட்ட காமராஜருக்கு ஒரு மறுபக்கம் உண்டு.

  ஆட்சிக் கட்டில் ஏறுவதற்கு முன்பிருந்தே அவர் தமிழகக் காங்கிரஸ் தலைவராய்ப் பணியாற்றினார். பெரும்பாலான அரசியல் தலைவர்களையும் ஆட்சியாளர்களையும் போல அவரும் தம்மை மீறி யாரும் மேலே வந்துவிடாமல் பார்த்துக்கொண்டார்.

  அப்போதெல்லாம் தேர்தலுக்கு சீட் தரும் உரிமை அந்தந்த மாநிலத் தலைவர்களிடம் இருந்தது. மாற்றுக் கருத்துக் கொண்ட காங்கிரஸ்காரர்களுக்குக் காமராஜர் வாய்ப்பு மறுத்தமையால் கட்சிப்பற்று இருந்தபோதிலும் பற்பலர் வெளியேறினர். அவர்களுள் ஒருவர் .பொ.சி. எனச் சுருக்கமாய்ச் சுட்டப்பட்ட .பொ.சிவஞானம். இவர் விடுதலைப் போரில் தீவிரமாய் ஈடுபட்டுச் சிறை சென்ற தியாகி. ஆனால் ராஜாஜி பக்தர். கட்சியிலிருந்து விலகிய இவர், “தமிழரசு கழகம்என்னுந் தனிக்கட்சி கண்டார். காரைக்குடி சா.கணேசன்சட்டை போடாத காங்கிரஸ்காரர்என்று புகழப்பட்டவர். (காந்தியடிகள் சட்டை போடாமையால் இவரும் போடுவதில்லை). இந்தத் தியாகிக்கும் சீட் கிடைக்கவில்லை; ராஜா சர் முத்தையா செட்டியாருக்குக் கிடைத்தது. இவர் நீதிக் கட்சிப் பிரமுகராய் இருந்து காங்கிரசை எதிர்த்து அரசியல் நடத்தியவர்! சா.கணேசன் விலகி ராஜாஜி தோற்றுவித்திருந்த சுதந்திரா கட்சியில் சேர்ந்தார். இவ்வாறு நீங்கியவர்களுள் மேலும் சில பிரபலங்கள்; எல்.எஸ்.கரையாளர் (காமராஜருக்கு முன்னர்த் தமிழகக் காங்கிரசின் தலைவராய்ப் பணிபுரிந்தவர்); பாகனேரி ஆர்.வி.சுவாமிநாதன் (இந்திரா காங்கிரசின் தலைவராய் ஆனார்), K.S.வெங்கடகிருஷ்ணா ரெட்டியார், V.K.ராமசாமி முதலியார் (காங்கிரஸ் சீர்திருத்தக் கமிட்டி என்ற பெயரில் தனிக்கட்சி தொடங்கினார்). இந்தக் கட்சி 1957 தேர்தலில் காங்கிரசின் அதிகார பூர்வ வேட்பாளர்களை எதிர்த்துப் போட்டியிட்டு 25 இடங்களைக் கைப்பற்றி எதிர்க்கட்சி அந்தஸ்தை அடைந்தது. ஆளுங்கட்சி காங்கிரஸ், எதிர்க்கட்சியும் காங்கிரஸ்! அத்தேர்தலில் முதன்முறையாய்ப் பங்குகொண்ட தி.மு.. 15 இடங்களில் வென்று மூன்றாம் இடத்துக்கு வந்தது.

  இப்படிக் கட்சியின் வலிமை தமிழ்நாட்டில் குறைந்துகொண்டே வந்தமைக்குக் காமராஜர் ஒரு காரணம்.

  இன்னொரு காரணம் அரசியல் சட்டம் வழங்கியுள்ள கருத்துச் சுதந்தரத்தை நசுக்குவதற்குக் காங்கிரஸ் மும்முரமாய்ச் செயல்பட்டமை.

  பெரியார் பொன்மொழிகள்” என்ற நூலுக்காகப் பெரியாருக்கு ஆறு மாதச் சிறைத் தண்டனை! “ஆரிய மாயை”க்காக அண்ணாதுரைக்கு ஆறு மாதம்; “காந்தியார் சாந்தியடைய” என்னும் புத்தகம் இயற்றிய ஆசைத்தம்பிக்கு (பின்னாளில் நாடாளுமன்ற உறுப்பினராய் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்) சிறை. புலவர் குழந்தையின் “இராவண காவியம்” என்னும் காப்பியத்துக்குத் தடை; வெளியிடக்கூடாது, விற்கக்கூடாது, வைத்திருக்கக்கூடாது.

  இவ்வாறு தி.க., தி.மு.க.காரர்கள் மீது வழக்குக்கு மேல் வழக்காய்ப் போட்டு அலைக்கழித்த கட்சிக்கு மக்கள் விடைகொடுத்து அனுப்பினார்கள். அரை நூற்றாண்டுக்கு மேலாகிவிட்டது. இப்போது அதே திமுகவிடம் சில இடங்களைக் கோரிப் பெற்று அதனுடைய தயவில் தேர்தலைச் சந்திக்க வேண்டியிருக்கிறது.

 2) திருச்சி ரேஸ் கோர்ஸ் திடலில் தி.மு.க.வின் மாநில மாநாடு 1955-இல் நிகழ்ந்தபோது இரண்டு முக்கிய சம்பவங்கள் நடந்தன:

I) புதிய பொதுச்செயலாளரைத் தேர்ந்தெடுத்தமை: கட்சியின் தொடக்கம் முதல் (1949), பொதுச்செயலாளராய்ப் பதவி வகித்தவர் அண்ணாதுரை. (கட்சிக்குத் தலைவர் கிடையாது). ஜனநாயக முறையில் கட்சி இயங்கவேண்டும் என்பதற்காக, இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை, புதுப் பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்படவேண்டும் என்ற புதிய விதியின்படி இரா.நெடுஞ்செழியனைப் பதவியில் அமர்த்தினார்கள்.

  அவரை முன்மொழிந்தும் வழிமொழிந்தும் பேசிய மாவட்டச் செயலாளர்கள் ஒவ்வொருவரும் சொந்தங் கொண்டாடிய விதம் சுவையாக இருந்தது.

1.தஞ்சை மாவட்டச் செயலர்:
    எங்கள் மாவட்டத்தில் பிறந்தவர்.

2.கடலூர்:
    நாராயணசாமியாய்ப் பிறந்தவரை நெடுஞ்செழியனாய் மாற்றியது எங்கள் மாவட்டத்து அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.

3.மதுரை:
    பாண்டியன் பெயரைச் சூட்டிக் கொண்டமையால் எங்களவர்.

4.கோவை:
    எங்கள் மாவட்டத்துப் பெரியாரின் சீடர்.

5.காஞ்சிபுரம்:
    எங்கள் மாவட்டத்தின் அண்ணாவுக்குத் தம்பி.

6.சேலம்:
    எங்கள் மாவட்டத்தின் மாப்பிள்ளை.

7.சென்னை:
    எங்கள் மாவட்டத்தில் வசிப்பவர்.

  இறுதியில் வழிமொழிய அண்ணாதுரை எழுந்தபோது பந்தலை அதிரச் செய்தது கைதட்டல்.

  அவர் கூறினார்:
  “நான் அதிக நேரம் பேசவேண்டும் என்ற உங்கள் விருப்பத்தைப் பலத்த கைதட்டல் மூலம் வெளிப்படுத்தினீர்கள். நன்றி. நாளை இறுதி நிகழ்ச்சியில் விரிவாகப் பேசுவேன். இப்போது சுருக்கமாகச் சொல்கிறேன்:

  “தம்பி வா, தலைமை தாங்க வா, உன் ஆணைக்குக் கட்டுப்பட்டு நடப்போம் என உறுதி கூறுகிறேன், வா.”

  இப்போது கைதட்டல் முன்னதை மிஞ்சிற்று.

  ஈராண்டுக்குப் பின்பு வேறு பொதுச்செயலரைத் தேர்வது எளிதாக இல்லை. ஏற்பட்ட மிகக் கடுமையான போட்டி கட்சியைப் பிளவுபடுத்திவிடும் எனத் தோன்றியமையால், “நானே இருக்கிறேன்” என்று அண்ணாதுரை சொல்லிப் போட்டியைத் தவிர்த்தார். கடைசிக்காலம் வரை அப்பதவியில் நீடித்தார்.

  ஜனநாயக முயற்சி அற்ப ஆயுளில் மாண்டது.

II) 1957-இல் நடைபெறவிருந்த நாடாளுமன்ற, சட்டசபைத் தேர்தல்களில் கட்சி போட்டியிடலாமா கூடாதா என்பதை முடிவு செய்வதற்கான வாக்கெடுப்பு.

  ஒன்றரை மீட்டர் உயரமுள்ள இரண்டு அட்டைப் பெட்டிகள் நிறுத்தப்பட்டன. போட்டியிட வேண்டும் என்பதற்கான சீட்டை ஒன்றிலும் வேண்டாம் எனத் தெரிவிப்பதற்கான சீட்டை மற்றதிலும் போடவேண்டும். எல்லார்க்கும் தரப்பட்ட சீட்டுகளை விரும்பிய பெட்டியில் பகிரங்கமாய்ப் போட்டனர். வேண்டும் என வாக்களித்தவர்களே மிகுதி.

  கழகம் நாடாளுமன்றத்துக்கு இருவரையும் சட்டசபைக்கு 15 பேரையும் அனுப்பிற்று. முக்கியமானவர்களுள் சம்பத், தில்லிக்கு; அண்ணாதுரை, அன்பழகன், கருணாநிதி சென்னைக்கு.

  1962-இல் சட்டசபைக்கு 50 பேர் போனார்கள். அண்ணாதுரையும் அன்பழகனும் தோற்கக் கருணாநிதி வென்று இறுதிக்காலம் வரை எல்லாத் தேர்தல்களிலும் வெற்றிவாகை சூடியவர் என்னுந் தனிப்பெருமையைப் பெற்றார்.

  1967-இல் ஆட்சியைக் கைப்பற்றி அண்ணாதுரை முதலமைச்சரானார்.

&&&&&&


8 comments:

  1. சுருக்கமாக இருந்தாலும், அருமை அருமை ஐயா... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. உங்கள் பாராட்டுக்கு மிகுந்த நன்றி .

      Delete
  2. சிலர் மீது நல்லெண்ணம் ஏற்பட்டு விட்டால் அவர் பற்றி தவறாக ஏதும் கூறக் கூடாது உண்மையாக இருந்தாலும்

    ReplyDelete
  3. உங்கள் பாராட்டுக்கு மிகுந்த நன்றி .

    ReplyDelete
  4. உங்கள் பின்னூட்டத்துக்கு மிகுந்த நன்றி . தவற்றை மறைப்பது நடுவுநிலைமை யாகாது ;
    குண நாடிக் குற்றமும் நாடி யவற்றுள் மிகை நாடி மிக்க கொளல்

    ReplyDelete
  5. அந்நாளைய அரசியல் காய் நகர்த்தல்களை எவ்வித விருப்பு வெறுப்புமின்றி நடுநிலையோடு ஆவணப்படுத்தியுள்ளீர்கள். பல அறியாத தகவல்களை அறிந்துகொண்டேன். மிக்க நன்றி.

    ReplyDelete
  6. பின்னூட்டத்திற்கு நன்றி வரலாற்று நிகழ்வுகளை நடந்தபடிய கூறவேண்டும் .

    ReplyDelete
  7. இந்த அளவு நினைவு வைத்து வரலாற்று நிகழ்வுகளை எழுதியது வியப்புத் தருகிறது. பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete