நூல்களிலிருந்து
– 25
தாகூரும் ஒகம்போவும்
(சாகித்ய அக்காதெமி
விருது பெற்ற எஸ்.ராமகிருஷ்ணன், “உலகை வாசிப்போம்” என்ற தம் நூலில் வெளிநாடுகளில் படைப்பாளிகளுட்
சிலரையும் அவர்களுடைய நூல்களையும் அறிமுகம் செய்துள்ளார். 115 -122 பக்கங்களில் இடம்பெற்றுள்ள
மேற்படி தலைப்பிலான கட்டுரையின் முக்கிய பகுதிகளை இங்குப் பதிகிறேன்.)
லத்தீன் அமெரிக்காவில் தாகூரையும் இந்திய இலக்கியங்களையும்
தேடித்தேடி வாசிக்கிறார்கள்; தாகூருக்கு விழா எடுக்கின்றனர், கருத்தரங்குகள் நடத்துகிறார்கள்.
இதற்கான முக்கிய காரணம் தாகூர் இரண்டு மாத காலம் அர்ஜெண்டினாவில் தங்கியிருந்ததாகும்.
1924 இல் சாந்திநிகேதனை உருவாக்க நிதி திரட்டுவதற்காகத்
தாகூர் அமெரிக்கப் பயணம் மேற்கொண்டார். எதிர்பாராமல் உடல் நலமற்றுப் போகவே அர்ஜெண்டினாவில்
சிகிச்சைக்காகத் தங்க நேரிட்டது. எழுத்தாளரும் இளம் பெண்ணுமான விக்டோரியா ஒகம்போ இதைப்
பற்றி அறிந்து தாகூரும் அவரது உதவியாளர் லியோனார்டும் தங்கிக் கொள்ளத் தனி மாளிகை ஒன்றை
ஏற்பாடு செய்து தந்தார்.
20 வயதில் திருமணமான ஒகம்போ கணவருடன் ஏற்பட்ட கருத்து
வேற்றுமை காரணமாகப் பிரிந்து பெற்றோருடன் வாழ்ந்த காலத்தில் மனவேதனையும் தயரமும் நிரம்பிய
நிலைமையில் தான், அவர் கீதாஞ்சலியை வாசித்தார்; தமது மனவுணர்ச்சிகளைத் தாகூர் அப்படியே
பிரதிபலித்துள்ளதாகக் கருதினார்; ஆகவே அக்கவிதைகளைத் திரும்பத் திரும்ப வாசித்துக்
கண்ணீர் சிந்தினார்.
தாம் ஆதர்சக் கவியாகக் கருதிய தாகூருக்கு நேரில்
சேவை செய்யும் வாய்ப்புத் தம்மைத் தேடிவந்தபோது உடனே ஏற்றுக் கொண்டார். தாகூருக்குப்
பிடித்தமானது போல ஆற்றங்கரையை ஒட்டிய மாளிகையை வாடகைக்கு அமர்த்தினார். ஒகம்போவின்
பணியாளர்கள் இங்கும் வேலை செய்தார்கள். தாகூருக்கான உடை, எழுதுபொருட்கள், இசைத் தட்டுகள்
அத்தனையும் வாங்கித் தந்து உபசரித்தார். சிறப்பு நாற்காலி ஒன்றையும் வாங்கிக் கொடுத்தார்;
அதிலமர்ந்து தாகூர் எழுதினார். இந்தியாவிற்குத் திரும்பியபோது நாற்காலியைத் தம் பரிசாக
உடன் அனுப்பினார். அது தாகூரின் மியூசியத்தில் இன்றுமிருக்கிறது.
தாகூர் – ஒகம்போ நட்பு ஆழமானது. தம்மை அவர் காதலித்தார்,
தம்மை அடையும் வேட்கையும் அவருக்கிருந்தது என்று ஒகம்போ தம் சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார்;
ஆனால் தாகூரைத் தம் ஆசானைப் போலவே ஒகம்போ நடத்தினார். தாகூர் மறையும் வரையில் இருவர்க்குமிடையே
கடிதப் போக்குவரத்து நடந்தது. கடிதங்கள் யாவும் தொகுக்கப்பட்டு நூலாக வெளிவந்துள்ளன.
தாகூர் ஒகம்போவை விஜயா என இந்தியப் பெயர் சூட்டி
அழைத்தார்; அவளது அன்பையும் அழகையும் வியந்து கவிதைகள் எழுதினார்; புரபி என்ற அக்கவிதைத்
தொகுப்பை அவளுக்கே சமர்ப்பணம் செய்திருக்கிறார்.
1941 இல் தாகூர் இறந்தபோது அவருடனான தம் நட்பு குறித்து
ஒகம்போ விரிவான அஞ்சலிக் கட்டுரை எழுதி வெளியிட்டார். ஒகம்போ வழியாகத் தாகூர் லத்தீன்
அமெரிக்க எழுத்துலகில் முக்கிய எழுத்தாளராய் அறிமுகமாகிக் கொண்டாடப் பட்டார். தாகூரின்
கவிதைகளையும் சொற்பொழிவுகளையும் ஸ்பானிய மொழியில் பெயர்த்து வெளியிட்டார். தாகூரின்
அழகியலும் உணர்ச்சிப் பெருக்கும் நிரம்பிய கவிதைகள் புதுவகை அனுபவத்தை லத்தீன் அமெரிக்க
வாசகர்களுக்கு அளித்தன. தாகூரின் நாடகங்களும் மொழியாக்கம் செய்யப்பட்டன.
ஒகம்போ தாகூர் பற்றி ஒரு நூல் இயற்றியுள்ளார்; அது
வங்காள மொழியில் பெயர்க்கப்பட்டுள்ளது.
அர்ஜெண்டினாவில் தாகூர் தங்கியிருந்த மாளிகை இன்றும்
பாதுகாக்கப்பட்டு வருகிறது; வாடகைக்கு விடப்பட்ட நிலையிலும் அங்கே தாகூரின் உருவப்
படம் மாட்டிவைக்கப்பட்டிருக்கிறது என்கிறார்கள்.
&&&&&
அருமையான நூல்
ReplyDeleteவாசித்து மகிழ்ந்திருக்கிேறேன்
அப்படியா ? மகிழ்ச்சி.
Deleteதாகூருக்கும் லத்தீன் அமெரிக்காவுக்கும் உள்ள தொடர்பும், தாகூர் - ஒகம்போ இடையிலான நட்பும் புதிய தகவல்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.
ReplyDeleteபின்னூட்டத்துக்கு மிகுந்த நன்றி.
Deleteஒகம்போவுடனான தாகூரின் நட்பு பற்றிய செய்தி, எனக்குப் புதுசு. பகிர்ந்தமைக்கு நன்றி.
ReplyDelete