தமிழரின் திருமண முறை காலந்தோறும் மாறிக்கொண்டே வந்துள்ளது.
அதை விளக்கமாக அறிந்துகொள்ள வரலாற்று ஆவணம் இல்லை; இலக்கியங்களின் வாயிலாகச் சிலசில
தகவல்களைத் தெரிந்துகொள்ளலாம்:
1 - அகநானூறு. பா -86.
"உளுந்து முதலிய உணவுப் பண்டங்களும் நெய்யில் மிதக்கும் களியும், சோறும் நிறைந்திருந்தன; பந்தலின் கீழே புது
மணல் பரப்பி, விளக்கேற்றி, மாலைகள் தொங்கவிட்டு,
இருள் நீங்கிய அதிகாலையில், ரோகிணி நட்சத்திரத்தன்று, நன்னீர்க் குடங்கள்
ஏந்திய முதிய பெண்கள் கொடுக்கக் கொடுக்க, அவற்றை வாங்கி, ஆண் பிள்ளை பெற்ற
நான்கு சுமங்கலிகள், "கற்புக்கரசியாகவும்
கணவன் விரும்பும் மனைவியாகவும் வாழ்வாயாக!" என வாழ்த்தி மணப் பெண்ணை நீராட்டினார்கள்.
அந்த நீரில் இருந்த பூவிதழ்களும் நெல்லும் கூந்தலில் அங்கங்குத் தங்கின; பின்பு மணம் நிகழ்ந்தது"
(இது முழுதும் பெண்கள் சடங்காகத் தெரிகிறது, பூப்பு நீராட்டு, வளைகாப்பு போல; இப்போது மூன்று சுமங்கலிகள்
அரசாணிக் கால் நடுகின்றனர்; முன்னாளில் நால்வர் செயல்பட்டுள்ளனர். ஆண் பிள்ளைக்கு ஏற்றம் தந்திருக்கிறார்கள்.)
2 - அக நானூறு -- பா - 136 - 1 ஆம் நூற்றாண்டு.
"இறைச்சிச் சோற்றைச் சுற்றத்தார்க்குப் பரிமாறி உண்பித்தனர்; ரோகிணி நாளன்று வீட்டை
அலங்கரித்து, கடவுளை வணங்கி, மணமுழவு என்ற வாத்தியமும் முரசும் ஒலிக்க, மணப் பெண்ணைப் பெண்டிர்
நீராட்டினர்; அவளுக்குப் புத்தாடை உடுப்பித்து, மலர் சூட்டி, நகைகள் அணிவித்து, மணப் பந்தலில் மாப்பிள்ளைக்குத்
தந்தனர்"
(இங்கும் பெண்கள் பற்றியே கூறப்படுகிறது. இசைக் கருவிகள் இடம் பெற்றுள்ளன;
மணத்துக்கு உகந்தது ரோகிணி என்பது இப் பாடலாலும்
அறிகிறோம்)
3 -- கலித்தொகை -- பாட்டு - 69. 6 ஆம் நூற்றாண்டு.
"மந்திரம் ஓதிய பார்ப்பனர் மணமக்களைத் தீ வலம் செய்வித்தார்"
( பார்ப்பனர் புகுந்து விட்டனர். வடமொழி மந்திரம், தீ மூட்டல் ஆகியவை
தமிழரால் ஏற்கப்பட்டன. இப் பாடல் ஓர் உவமையாகக் கூறப்பட்டுள்ளது; மண விழாவை விவரிப்பது
அல்ல.)
4 -- சிலப்பதிகாரம் -- 8 ஆம் நூற்றாண்டு.
"வைரக் கற்கள் பதித்த தூண்கள் தாங்கிய மண்டபத்தில், மேலே நீலப் பட்டுத்
துணியும் கீழே முத்து மாலைகளும் தொங்க, ரோகிணி நட்சத்திரத்தில், முதிய பார்ப்பனர்
மந்திரம் ஓத, கோவலனும் கண்ணகியும் தீ வலம் வந்தனர்"
(6 ஆம் நூற்றாண்டு வழக்கம் தொடர்கிறது; ஆண்களின் நிகழ்ச்சி ஆகிவிட்டது)
5 -- நாச்சியார் திருமொழி - 8 ஆம் நூற்றாண்டு.
"பந்தலில் பாக்குக் குலைகளும் முத்து மாலைகளும் தொங்கின; பல தீர்த்தங்களைக்
கொண்டுவந்து பார்ப்பனர்கள் மணப் பெண்ணை நீராட்டினார்கள்; மத்தளம் முழங்கிற்று; சங்கு ஊதினர்; பார்ப்பனர் மந்திரம்
ஓத, பெண்ணும் மாப்பிள்ளையும் கை பிடித்துக்கொண்டு தீ வலஞ் செய்தார்கள். பெண்ணின்
காலை மாப்பிள்ளை தூக்கி அம்மி மிதிக்க வைத்தார்."
(சடங்குகள் அதிகம் ஆயின; நம் காலத்தில் துக்கத்துக்கு ஊதும் சங்கு
முன்னாளில் திருமணத்திற்கு ஊதப்பட்டிருக்கிறது.)
இக் காலத்தில் தாலி கட்டுதலே மிக முக்கிய சடங்கு.
இது பழைய வழக்கம் அல்ல என்பது தெரிகிறது. இது 11 ஆம் நூற்றாண்டில் தொடங்கியது என டாக்டர் மா. ராசமாணிக்கனார் தமது "தமிழர்
திருமணத்தில் தாலி" என்னும் நூலில் எழுதியுள்ளார்.
-------------------------------------------
(படம்: நன்றி இணையம்)
அறியாத அரிய தொகுப்பிற்கு நன்றி ஐயா...
ReplyDeleteஉங்கள் பின்னூட்டத்துக்கு மனமார்ந்த நன்றி .
Deleteஇங்கு கன்னட வழக்கப்படி மங்கல நிகழ்ச்சிகளுக்குச் சங்கு ஊதப் படுகிறது.தகவகளுக்கு நன்றி.
ReplyDeleteபின்னூட்டத்துக்கும் கன்னட வழக்கத்தை அறிவித்தமைக்கும் அகமார்ந்த நன்றி .
Deleteவணக்கம்
ReplyDeleteஐயா.
அறிய முடியாத தொகுப்பு தங்களின் பதிவின் வழி அறிந்தேன்..... ஐயா பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-நன்றி-
உங்கள் வாழ்த்துக்கும் பின்னூட்டத்துக்கும் உள்ளமார்ந்த நன்றி .
Deleteரோகிணி நட்சத்திரத்தன்று தான் திருமணம் நடந்தது என்பதையும் தாலி கட்டும் வழக்கம் 11 ஆம் நூற்றாண்டில் தான் துவங்கியது என்பதையும் உங்கள் பதிவின் மூலம் அறிந்தேன். தகவல்களுக்கு மிக்க ந்ன்றி.
ReplyDeleteபுதிய தகவல்களை வாசகர்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பது என் நோக்கம் . அது ஓரளவு நிறைவேறுகிறது என்பது கருத்துரைகள் பலவற்றால் புரிகிறது . பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி .
Delete