Thursday 9 August 2012

விளம்பர சாமர்த்தியம்

 

எழுபது ஆண்டுக்கு முன் ஒரு காலை வேளை. 

பள்ளிக்கூடத்துக்கு நான் செல்கையில், சிறு கூட்டம் ஒன்று, ஓரிடம் நின்று, அண்ணாந்து சுவரை நோக்கிக் கொண்டிருக்கக் கண்டு, வியப்பு மேலிட, விரைந்து சென்று பார்த்தேன்: 

ஒரு சுவரொட்டியில் பெரிய எழுத்தில் அச்சடிக்கப்பட்டிருந்தது செய்தி யொன்று:

"காணாமற் போன என் மகளைக் கண்டுபிடித்துக் கொடுப்பவர்க்கு ரூபாய் பத்தாயிரம் இனாம்.
இப்படிக்கு,
சிவசங்கரன் பிள்ளை."



புதிரையொத்த அந்த அறிவிப்பைப் பற்றி யோசித்தபடி நடை தொடர்ந்தேன். 

அங்கங்கு அதே மாதிரி சுவரொட்டியும் கும்பலும். 

பள்ளியில் அது குறித்துத் தான் பேச்சு, ஊரிலுந்தான். எல்லாரும் கேட்ட ஒரே வினா: விவரம் எதுவும் இல்லாமல் கண்டுபிடிப்பது எப்படி? விவரங்கள் தெரிந்தால் நிறையப் பேர் முழு மூச்சாகத் துப்பறிய முனைந்திருப்பார்களோ? 10,000 ரூ. ஆயிற்றே! இக்கால மதிப்பு: 10 கோடி!


மறு நாள் காலை. அதே இடத்தில் அதே காட்சி. பழைய சுவரொட்டியின் அருகில் தோன்றியிருந்த இரு சுவரொட்டிகளுள் ஒன்று தெரிவித்த தகவல்:


"உம் மகளைக் கடத்திச் சென்றவன் நானே! என்னை இன்று மாலை அல்ஹாம்ப்ரா டாக்கீசில் சந்திக்கலாம்.
இப்படிக்கு,
மாயா மாயவன்."


இரண்டாவது - திரைப்பட விளம்பரம். 

அப்போதுதான் விளங்கியது மர்மம். சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்து வெளியிட்ட மாயா மாயவன் என்ற அந்தப் படத்தின் விளம்பரம் போன்ற சுவைமிக்க, புதுமையான, வேறொன்று மற்றெந்தப் படத்துக்கும் செய்யப்படவில்லை. 

கோவில் விழாக் கூட்டமென மக்கள் திரண்டு போய்ப் பார்த்தார்கள் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ? 

அதில் இடம் பெற்றிருந்தது யாவரையும் குழப்பிய இலவச அறிவிப்புச் சுவரொட்டி! 

(அண்மைக் காலத்தில் தமிழகத்தைப் பரபரப்புக்குள்ளாக்கிய "புள்ளி ராஜாவுக்கு எயிட்ஸ் வருமா?" என்ற விளம்பரம் நினைவுக்கு வருகிறது; ஆனால் அது திரைத் துறைத் தொடர்பில்லாதது.)

5 comments:

  1. அந்த காலத்திலேயே பெயரிலேயே புதுமையைக் கொண்டவர்கள் அல்லவா ‘’மாடர்ன் தியேட்டேர்ஸ்’ அதனால்தான் விளம்பரத்திலும் புதுமையை புகுத்தி இருக்கிறார்கள் போலும். பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  2. அந்தக்காலத்திலேயே புதுமை புகுத்தியிருக்கிறார்களே திரை விளம்பரத்தில். ஆச்சர்யம்தான். எழுபது வருடங்களுக்கு முந்தைய நிகழ்வையும் இந்தநாளில் நினைவு கூர்ந்து எங்களோடு பகிர்ந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  3. பதிவுலகில் நீங்கள்தான் மூத்த பதிவராக இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். பாராட்டுக்கள். ( உங்களுடன் ஒப்பிட்டால் நான் சின்னப்பையன் - பிறந்த தேதி 15-6-1934)

    ReplyDelete
  4. அறியாதவை... சுவாரஸ்யமாக இருந்தது...

    வாழ்த்துக்கள்... நன்றி… (TM 2)

    ReplyDelete
    Replies
    1. விளம்பர சாமர்த்தியம் தான் .......

      Delete