மழைக் காலத்தில் தோன்றி இருந்த முல்லை
அரும்புகளைக் கண்டார் சங்க காலக் கவிஞர் ஒருவர். அவற்றைப் பல்லுக்கு உவமை சொல்வது
மரபு என்பது நினைவுக்கு வந்தது; உடனே கற்பனை பிறந்தது.
பொருள் தேடுவதற்காக நம் காலத்தில் அரபு
நாடுகள் முதலிய வேற்றுத் தேசங்களுக்கு இளைஞர்கள் செல்கிறார்கள் அல்லவா? இதுபோல் பழங் காலத்தில் ஒருவன் தன் காதலியிடம், "செல்வம் சேர்த்துக்கொண்டு கார்காலத்தில் திரும்பி வருவேன்"
என்று உறுதி மொழி கூறிப் பிரிந்து போனான், அயல்
பிரதேசத்துக்கு.
அவன் சொன்ன காலம் வந்துவிட்டது,
ஆனால் அவன் வரக் காணோம். அவனது பேச்சை நம்பி
ஏமாறிய காதலியை நோக்கி, கார்காலமானது தன் பற்கள் தெரிய ஏளனமாக
நகைக்கிறது என்பது அந்த நயமான கற்பனை.
இளமை பாரார் வள நசைஇச் சென்றோர்
இவணும் வாரார் எவணரோ எனப்
பெயல் புறந்தந்த பூங்கொடி முல்லைத்
தொகுமுகை இலங்கு எயிறாக
நகுமே தோழி நறுந் தண் காரே.
( குறுந்தொகை -- 126 )
பாட்டின் விரிந்த பொருள்:
"இளமையை எண்ணிப் பார்க்காமல், பொருளை விரும்பிப் பிரிந்து சென்றவர் இங்கு வரவில்லை, எங்கு இருக்கிறாரோ" என்று முல்லை அரும்புகளைப் பளிச்சென்ற
பற்களாகக் கொண்டு கார்காலம் நகைக்கிறதே, தோழி!
(படம் : நன்றி கூகுள்)
No comments:
Post a Comment