Thursday, 24 September 2015

அறிவுக் கூர்மை
     ஒரு முற்பகல் வேளையில், அரேபிய மன்னன் நகர்ச் சோதனைக்காக மாறு வேடத்தில், குதிரையூர்ந்து சென்றுகொண்டிருக்கையில், சாலையோரம் அமர்ந்திருந்த மாற்றுத் திறனாளியொருவன் அவனை நோக்கி, "ஐயா,  என்னால் நடக்க முடியாது; தயவு  செய்து என்னை ஏற்றிக் கொண்டு போய் என் வீட்டு வாயிலில் இறக்கி விடுங்கள்"  எனக் கெஞ்சுங் குரலில் வேண்டினான்.

      இலக்கை அடைந்ததும், அவன் சொன்னான்: "இனி நீங்கள் இறங்கி உங்கள் வழியே போகலாம்.

    - என்ன?  குதிரையை விட்டுவிட்டா?

    - பின்னே? நீங்கள் கேட்டுக்கொண்டதற்காகப் பரிதாபப்பட்டு ஏற்றி வந்தால் குதிரையை அபகரிக்கப்  பார்க்கிறீர்களா?

     -வல்லடியாக அல்லவா இருக்கிறது! நீதிபதியிடம் போவோம்."

    அரசன் குதிரையை ஓட்டி மன்றத்தை அடைந்தான். அங்கே சிலர் நின்றுகொண்டிருந்தனர்; விசாரணை நடந்தது.

    வாதி -- "ஐயா, நான் எண்ணெய் விற்பவன்; இந்த இரும்பு வியாபாரி என்னிடம் சில்லறை கேட்டார்; தந்தேன்; பதிலுக்குத் தொகை கொடுக்க மறுக்கிறார்."

     பிரதிவாதி --"இவர் சொல்வது பொய், ஐயா; நான் என்  நாணயங்களைத்தான் வைத்திருக்கிறேன்".

      நீதிபதி -- "அவற்றை இந்தப் பலகைமேல் வைத்துவிட்டுப் போங்கள்; நாளை தீர்ப்பளிப்பேன்".

      அடுத்த வழக்கு:

      வாதி -- "ஐயா,  நான் எழுத்தாளன்; இந்த என் அடிமைப் பெண்ணை அந்த உழவர் சூழ்ச்சியாய்த் தம்மிடம் இழுத்துக்கொண்டார். மீட்டுத் தாருங்கள்"

      பிரதிவாதி -- "இல்லை, ஐயா; இவள் நெடுங் காலமாக என் அடிமை".

       பெண் -- "ஆமாம்,  நான்  இவருடைய  அடிமைதான்."

       நீதிபதி : "இவள் இங்கு இருக்கட்டும்; இருவரும் நாளை வாருங்கள்".

      கடைசி  வழக்கு:

            மன்னன் தன் வாதத்தை முன்வைத்தான்; மாற்றுத் திறனாளி எதிர்வாதம் செய்தான். குதிரையைக் கொட்டிலில் கட்டச் செய்த நீதிபதி தீர்ப்பை மறு நாளுக்கு ஒத்திவைத்தார்.

      அந்த  நாள் வந்தது.

   சில்லறையை இரும்பு வாணிகரிடம் தந்த நீதிபதி, எண்ணெய் வியாபாரி குற்றவாளி என்றும் அவருக்குக் கசையடி தரப்படும் என்றும் கூறினார்.

       "எழுத்தாளர் தம் அடிமைப் பெண்ணை மீண்டும் பெறுவார்; மற்ற இருவரும் தண்டனை அடைவார்கள்"  என்றார்.

      வேந்தனையும் எதிராளியையும் கொட்டிலுக்கு அழைத்துச் சென்ற நீதிமான், அங்கே நின்ற ஆறு குதிரைகளுள் தம்முடையதைத் தொட்டுக் காட்ட உத்தரவிட்டார்; முதலில் அரசனும் பின்னர் மற்றவனும் அடுத்தடுத்துச் சென்று ஒரே குதிரையைக் காட்டினர்.

     மாற்றுத் திறனாளியிடம், "நீர் பொய்யர், குற்றவாளி; தக்கவாறு தண்டிப்பேன்" எனச் சொல்லிவிட்டுக் குதிரையை ஓட்டிப் போக வாதிக்கு அனுமதி வழங்கினார்.

         மறு நாள் மாலை. நீதிபதியை அழைத்து வரச் செய்த மன்னன் அன்புடனும் மரியாதையுடனும் வரவேற்றான்.

        "உங்களை எதற்காக வரவழைத்தேன் என்பதைச் சொல்கிறேன். நேற்றுக் குதிரை வழக்கின் வாதி நான்தான்; மாறு வேடத்தில் இருந்தேன். சிக்கலான அந்த வழக்குகளை எப்படி ஆராய்ந்து உண்மை கண்டுபிடித்தீர்கள்  என்பதை அறிய ஆவலாக இருக்கிறேன், அந்த ஆவலைத் தணிக்கக் கோருகிறேன்." என்றான்.

       நீதிபதி,  "நீங்கள் என்னைப் பொருட்படுத்தி இவ்வாறு கேட்டதற்குப் பெருமை அடைகிறேன், அரசே" எனச் சொல்லிவிட்டு விளக்கினார்:

      "ஒரு கிண்ணத்தில் போதிய நீர் ஊற்றி நாணயங்களை அதில்  போட்டு வைத்தேன்; அதிக நேரம் ஆகியும் துளிக்கூட எண்ணெய் மிதக்கவில்லை; ஆகவே எண்ணெய்  வியாபாரியின் பணமல்ல என முடிவு செய்தேன்.

       ஒரு பெரிய மைப்புட்டியிலிருந்து  சிறியதொரு புட்டியில் மை ஊற்றி நிரப்பும்படி அந்தப் பெண்ணிடம் சொன்னேன்; அவள் தடுமாறாமல், சிந்தாமல், சிதறாமல் ஊற்றவே, அந்த வேலையை அவள் நெடுநாள் செய்து பழகியிருக்கிறாள் எனவும் எழுத்தாளரின் அடிமைதான் எனவும் கண்டுகொண்டேன்.

    பிரதிவாதி அடையாளம் காட்டியபோது குதிரையிடம் சலனம்  எதுவுமில்லை; நீங்கள் நெருங்கியதும் தலையையும் வாலையும் ஆட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்திற்று. உண்மை விளங்கியது."

      அரசன், "ஆகா! எவ்வளவு அறிவுக் கூர்மை! உங்களை நீதிபதியாக அடைந்ததில் பெருமிதம் கொள்கிறேன்"  என்று பாராட்டித் தக்க சன்மானம் வழங்கினான்.
    


                                           *****************
(படம்: நன்றி இணையம்)

4 comments:

 1. கதையை வாசித்துக்கொண்டிருக்கையிலேயே, நீதிபதி எப்படி குற்றவாளிகளை மிகச்சரியாகக் கண்டறிந்தார் என்று அறிந்துகொள்ள, அரசனைப் போலவே ஆவல் அதிகரிக்கிறது. நீதிபதியின் நிதானமும் புத்திக்கூர்மையும் உண்மையிலேயே வியக்கவைக்கின்றன. இதுவரை அறியாத கதைப்பகிர்வுக்கு மிகவும் நன்றி.

  ReplyDelete
 2. பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி . மெய்தான் . புதிர்க் கதையாய்த்தான் இருக்கிறது .

  ReplyDelete
 3. மூளைக்கு வேலை கொடுக்கும் கதை. இதனை நினைவில் வைத்துப் பகிர்ந்தமைக்கு மிகவும் நன்றி. இதுவரைக் கேட்ட, படித்த கதைகள் எல்லாவற்றிலுமே அரசன் தான் நீதிபதியாயிருப்பான். அதாவது நிர்வாகமும், நீதித்துறையும் ஒருவன் கையில் இருந்தது. இ்ந்தக்கதையில் தற்காலம் போல நீதிபதி அரசன் அல்லாத வேறொருவன். இதுவே புதுமை! ஒவ்வொரு பிரச்சினையையும் அவன் அலசி புத்திசாலித்தனமாக யோசித்துத் தீர்ப்பு சொன்ன விதம் சுவையாயிருக்கிறது! நன்றி!

  ReplyDelete
 4. விமர்சனத்துடன் பின்னூட்டம் எழுதியமைக்கு மிக்க நன்றி .

  ReplyDelete