Wednesday, 27 April 2016

ஆளும் வளரணும் அறிவும் வளரணும்





"ஆளும் வளரணும், அறிவும் வளரணும்
அதுதாண்டா வளர்ச்சி"

  'ஆத்மா என ஒன்றுண்டு, அது அழிவற்றது' என்று கீதையில் பகவான் கண்ணன் சொன்னார் என்பது வைணவர்களின் கூற்றுஆனால்எல்லா நூல்களும் மனிதரின் படைப்பே. இயற்றியவரின் பெயர் தெரியாமற் போகவே, முக்கிய பாத்திரமாகிய கிருஷ்ணனே ஆசிரியர் எனத் தவறாகவோ வேண்டுமென்றோ பரப்பப்பட்டுள்ளது; அல்லது அப்பெயர் தாங்கிய யாரோ ஒருவர் அதை இயற்றியிருக்க, காலப்போக்கில், பகவானே போதித்தான் என்று நம்பப்பட்டிருக்கலாம்; இறையனார் என்னும் புலவர் பாடிய 'கொங்குதேர் வாழ்க்கை'யை இறைவன் பாடித் தருமிக்குத் தந்ததாய்த் திருவிளையாடல் கதை கட்டப்பட்டதல்லவா?


  ஆத்மா பற்றிய கருத்துகள் கீதையில் புதியனவாய்க் கூறப்படவில்லை; அவை பழங்காலத்தில் பல நாடுகளில் பரவலாய்  நம்பப்பட்டவைதான்.


 கிரேக்க அறிஞர்கள் சாக்ரட்டீஸ், ப்ளேட்டோ, ரோமானியப் பிரபல  வழக்குரைஞர் சிசரோ முதலியோர் அக்கருத்துகளைப் பரப்பிய சிலர்.


  இறந்தோரின் ஆத்மாக்கள் பூமிக்கடியில் தொடர்ந்து வாழ்வதாய் நம்பிய ரோமானியர் அவற்றை வழிபடவும் செய்தனர். செத்தவர் தெய்வமாகிறார்  என்பது இந்துக்களுக்கு மட்டுமே உள்ள நம்பிக்கையன்றுஇறப்புக்குப் பின்னும் வாழ்வுண்டு என்று நம்பித்தான் எகிப்தியர் பிணங்களைப் பத்திரப்படுத்தினர்.


  'ஒருவர் இறுதி மூச்சை விடுகையில், உயிர் பிரிகிறது, பின்னர் உடல் அழிகிறது; ஆயினும், கனவுகளில் அவ்வப்போது வருகிறாரே! செயல்படுகிறாரே! யோசனை சொல்கிறாரே! ஆகவே அவர் எங்கோ வாழ்கிறார், ஆத்மா வடிவில்; எனவே ஆத்மா அழிவற்றது' இதுவே தொல்கால மாந்தரது சிந்தனையின் விளைவு.


 ஆத்மா குறித்த கருத்துகளைப் பழங்கால அறிஞர் சிலர் எதிர்த்தும் உள்ளனர்; ஆத்மா அழியக்கூடியதுதான் என்று கூறியவர்களுள் முக்கியமானவர்கள் கிரேக்க அறிஞர் எப்பிக்கியூரஸ் (பொ.யு.மு. 341 -270), ரோமானிய மாவீரர் ஜூலியஸ் சீசர் (101-44), லத்தீன் எழுத்தாளர் லுக்ரியஸ் (99-55).


  சாவுக்குப் பின்பு ஆத்மா கடவுளோடு ஒன்றிவிடும் என்று கருதியோரும் இருந்தனர்; ரோமானிய எழுத்தாளர் செனேக்கா (பொ.யு4 - 65) இக்கொள்கையினர்.


  உயிர் ஓர் உடலிலிருந்து வேறு  உடம்பில் புகும் என்ற நம்பிக்கை (கூடு விட்டுக் கூடு பாய்தல்) எகிப்தில் நிலவிற்று. இதைக் கிரேக்கத்தில் பரப்புரை செய்தவர் கணித மேதை பித்தகோரஸ் (பொ.யு.மு. 6 ஆம்  நூ.) ஆங்கிலத்தில்  இது மெட்டம்சைக்கோசிஸ் (metempsychosis) எனப்படுகிறது; (இரு கிரேக்க சொற்களின் கூட்டு: meta - மாற்றம்; psucke -உயிர்).


   'எல்லாம் விதிப்படி நடக்கும்' என்னும் தலைவிதித் தத்துவம் கிரேக்கத்தில் ஆழமாய் வேரூன்றியிருந்தது; அதை அவர்கள் மொய்ரா (moira) என்றனர்.


   காற்று முதலான இயற்கையாற்றல்கள், விண்மீன், கோள், விலங்குபறவை, மரம், மட்டை என சகட்டுமேனிக்கு, வரையறை எதுவுமில்லாமல், கண்டது காணாததையெல்லாம் வழிபட்டனர்எகிப்தியர், கிரேக்கர், ரோமானியர்ஆப்ரிக்கர் உள்ளிட்ட தொல்மாந்தர். நல்ல நாள், கெட்ட நாள், சகுனம், பூசாரி, மந்திரம், சடங்கு முதலியவையும் உலக முழுதும் பரவி இருந்தவையே.


  4000 ஆண்டுக்குமுன்பு, கோள்களையும் ராசிகளையும் நோக்கி அவற்றுக்குப் பெயரிட்டவர்கள் சுமேரியர்கள்கிரகணங்களை முன்கூட்டி அறிவிக்கும் அளவுக்கு வானூலில் தேர்ச்சி பெற்றிருந்த அவர்கள் உலகுக்கு அளித்த கொடை மணி, நிமிடம், நொடி ஆகிய காலக் கணக்குகள். கோள்களில் கடவுள்கள் உறைவதாய் அவர்கள் நம்பினார்கள்; ஒரு குழந்தை பிறக்கிற நேரத்தில் கோள்கள் இருக்கிற இடத்துக்கு ஏற்பவும் விண்மீனைப் பொருத்தும் அந்தக் குழவியின் வாழ்க்கைப் போக்கு நிர்ணயிக்கப்படுவதாய்  எண்ணி அவர்கள் தோற்றுவித்ததுதான் சோதிடம்.


  பழங்கால மக்கள், பின்னாளில், பெரும்பாலும் கிறித்துவத்தையோ  இசுலாத்தையோ தழுவி விட்டமையால், அவர்களின் முந்தைய மடக் கருத்துகளும் பழக்க வழக்கங்களும் பெரிதும் ஒழிந்தனகண்கண்ட கடவுள்கள் என அவர்கள் போற்றி வழிபட்டவையெல்லாம் கண்காணாமற் போயின அல்லது காட்சிப் பொருள் ஆயின.


  ஒரு காலத்தில் மெய் என்று நம்பப்பட்டவை, அறிவியல் கண்டுபிடிப்புகளால், கற்பனை எனத் தெரிய வரும்போது, நாம் நம் மூளையை இறுகக் கப்பிக்கொண்டிருந்த தவறான கருத்துகளைக் கைகழுவவேண்டும்; இல்லாவிடில்,  ஆள் மட்டுமே வளர்ந்ததாகும்.


                                "கலை உரைத்த கற்பனையை நிலையெனக் கொண்டாடும்
                                  கண்மூடி வழக்க மெல்லாம் மண்மூடிப் போக!"
                                                                                              -- ராமலிங்கர்.
       
                                                         --------------------------------------.
 (படம் உதவி - இணையம்)

4 comments:

  1. இறப்புக்குப் பின் உயிர் என்னாகிறது என்ற கேள்விக்கு விடை தெரியாதபோது இப்படி இருக்கலாம் அப்படி இருக்கலாம் என்ற ஊகங்களே நம்பிக்கைகளாய் மாறியிருப்பது புரிகிறது. இது நம்மிடத்தில் மட்டுமல்லாது, உலகின் பல நாடுகளிலும், மக்களுடைய வழக்கத்தில் இருந்திருப்பது இக்கட்டுரையின் வாயிலாய் அறியமுடிகிறது. கருத்துக்கு பலம் சேர்க்கின்றன பட்டுக்கோட்டையாரின் வரிகளும் ராமலிங்கரின் வரிகளும். அறிவுபூர்வமானதொரு கருத்துப்பகிர்வுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுக்கு மிக்க நன்றி . உயிர் என ஒன்றிருக்கிறதா என்பதே வினாக்குறி .

      Delete
  2. 4000 ஆண்டுகளுக்கு முன்பே சுமேரியர்கள் வானியலில் தேர்ச்சி பெற்றிருந்தார்கள் என்பதையும் ஜாதகத்தின் பிறப்பிடம் சுமேரியா என்பதையும் அறிந்தேன். அறிவியல் கண்டுபிடிப்புகளுக்குப் பின்னர் நம் நம்பிக்கை தவறு என்று தெரியவரும் போது மாற்றிக் கொள்ளத்தான் வேண்டும். அது தான் நம் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்பது மிகவும் சரி.ஆத்மா பற்றிய கருத்துக்களைக் கிரேக்க அறிஞர்கள் சொல்லியிருக்கிறார்கள் என்பது எனக்குப் புதிய செய்தி. மிகவும் நன்றி.

    ReplyDelete
    Replies
    1. விவரமான பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி .

      Delete