Friday, 8 April 2016

இது சகஜம்




  (17-ஆம் நூற்றாண்டுப் பிரஞ்சு நகைச்சுவை நாடக ஆசிரியர் மொலிஏர் - Moliere - இயற்றிய 'வலுக்கட்டமாய் வைத்தியர்' என்ற நாடகத்தில் ஒரு காட்சி.)

    பாத்திரங்கள்:

         ஸ்கானாரேல், கணவன்
         மர்த்தீன், மனைவி;
         ரொபேர், வழிப்போக்கர்.

கணவன் --  இதோ பார்பேசவும் அதிகாரம் பண்ணவும் எனக்குத்தான் உரிமை.

மனைவி -- ஆட்சேபிக்கிறேன்; என் விருப்பப்படித்தான் நீ நடக்க வேண்டும். உன் பைத்தியக்காரத்தனத்தை சகித்துக்கொள்வதற்காக நான் உனக்கு மனைவி ஆகவில்லை.

கணவன் -- ஐயோ, கட்டினவளால் எவ்வளவு தொல்லை! பேயைவிடப் பெண்  மோசமானவள் என்று அரிஸ்டாட்டில் சொன்னது சரிதான்.

மனைவி -- போதுமே! நீயும் உன் முட்டாள் அரிஸ்டாட்டிலும்!

கணவன் -- ஏன் எனக்கென்ன குறைச்சல்? எனக்கு நிகர் எவனும் இல்லை; நான் விறகு வெட்டி என்றாலும் சிந்திக்கத் தெரிந்தவன்பிரபல வைத்தியரிடம் ஆறு ஆண்டு வேலை பார்த்தவன்.

மனைவி -- உன்னை மணந்துகொள்ள சம்மதம் என்று நான் சொன்ன நாளும்  நேரமும் என்ன நாளோ, என்ன நேரமோ?

கணவன் -- என்  அழிவுக்காக என்னைக் கையெழுத்து போடச் சொன்ன   அந்தப் பதிவாளர் நாசமாய்ப் போக!

மனைவி -- நீ எதற்கு நொந்துகொள்கிறாய்? நான் கிடைத்ததற்கு நீ எந்நேரமும் கர்த்தருக்கு நன்றி செலுத்த வேண்டும்; என்னைப் போல  ஒருத்தியை அடைய உனக்கு என்ன தகுதி?

கணவன் -- நான் புருஷனாய் வந்தது உன் பாக்கியம்.

மனைவி -- ! என்ன மாதிரி புருஷன்! என் உடைமைகளையெல்லாம்  விழுங்குகிற மனுஷன்!

கணவன் -- தப்பு தப்புஎல்லாவற்றையுமா விழுங்குகிறேன்? ஒரு பகுதியைக்  குடிக்கிறேனே!

மனைவி --  வீட்டு சாமான் ஒவ்வொன்றாய் விற்கிறாய்!

கணவன் --  அதுதான் குடியும் குடித்தனமுமாய் வாழ்வது என்பது.

மனைவி -- என்  கட்டிலைக்கூட இழந்துவிட்டேன்.

கணவன் -- அதனால்தான் முன்னேரத்தில் எழுந்திருக்க முடிகிறது!

மனைவி -- வீட்டிலே ஒரு சாமான் இல்லை.

கணவன் -- குடிபோவது சுலபம்.

மனைவி -- பொழுது விடிந்தால் குடியுஞ் சூதும்!

கணவன் -- போரடிக்கும் இல்லாவிட்டால்!

மனைவி -- நான் குடும்பம் நடத்துவது எப்படி?

கணவன் -- உன் விருப்பப்படி.

மனைவி -- என் தலையிலே நான்கு சிறு பிள்ளை!

கணவன் -- கீழே இறக்கிவிட்டால் போச்சு.

மனைவி -- சாப்பாட்டுக்கு என்ன கொடுப்பது?

கணவன் --  உதை கொடு.

மனைவி -- உன்னை வழிக்குக் கொண்டுவர எனக்குத் தெரியும்.

கணவன் -- எனக்குப் பொறுமை இல்லையென்பதும் கை நீளம் என்பதுங்கூட  உனக்குத் தெரியும்.

மனைவி -- உன்  மிரட்டலுக்கு நான் அடங்கமாட்டேன்.

கணவன் --  உடம்பு விறுவிறு என்கிறதா, வழக்கம் போல?

மனைவி -- எனக்குப் பயமில்லை.

கணவன் --  அப்படியா? (கம்பால் அடிக்கிறான்)

ரொபேர் -- சேச்சே!  என்ன மோசமான  காரியம் இது? மனைவியை அடிக்கிறவர் மட்டமானவர் அல்லவோ?

மர்த்தீன்-- (இடுப்பில் கைகளுடன் அவனிடம் பேசிக்கொண்டு முன்னேற, அவன் கொஞ்சங் கொஞ்சமாய்ப் பின்னால் நகர்கிறான்). அவர் என்னை அடிப்பதை நான் விரும்புகிறேன்.

ரொபேர் -- அப்படியா? மனமார நான் ஏற்றுக்கொள்கிறேன்.

மர்த்தீன் -- அடி வாங்குவது எனக்குப் பிடிக்கிறது.

ரொபேர் --  சரி.

மர்த்தீன் -- மனைவிகளைக் கணவன்மார் அடிப்பதைத் தடுக்க விரும்புகிற நீங்கள் நாகரிகம் இல்லாத ஆள்.

ரொபேர் -- வாபஸ் வாங்கிக்கொள்கிறேன்.

மர்த்தீன் --  உங்களுக்கென்ன இதைப் பற்றி?

ரொபேர் -- நான் சொன்னது தவறு.

மர்த்தீன் -- இது உங்களுக்கு சம்பந்தப்பட்டதா?

ரொபேர் -- நீங்கள் கேட்பது சரிதான்

மர்த்தீன் --  இதிலே நீங்கள் தலையிட என்ன இருக்கிறது?

ரொபேர் -- ஒன்றுமில்லை.

மர்த்தீன் -நீங்கள் மூக்கை  நுழைக்க வேண்டுமா?

ரொபேர் -- இல்லையில்லை.

மர்த்தீன் -- உங்கள் வேலையைப் பார்க்க வேண்டியது தானே?

ரொபேர் -- பார்ப்பேன்.

மர்த்தீன் -- இதனால் உங்களுக்கு நஷ்டம் ஒன்றுமில்லை.

ரொபேர் -- மெய்தான்.

மர்த்தீன் -- ஜோலி இல்லாத இடத்திலே தலையிடுகிற நீங்கள் ஒரு முட்டாள்! (கன்னத்தில் அறைகிறாள்)

ரொபேர் -- (ஸ்கானாரேலிடம் போய்) அன்பரே! என் உளமார உங்களிடம் மன்னிப்பு கோருகிறேன். ஊம், உதையுங்கள், செம்மையாய் அடியுங்கள்உங்கள் மனைவியை! நீங்கள் விரும்பினால்நானும்  உதவுவேன்.

ஸ்கானாரேல் -- (இவன் முன்னேற ரொபேர் பின்வாங்குகிறான்) அடிப்பது எனக்குப் பிடிக்கவில்லை.

ரொபேர் --  ! அது வேறு விஷயம்.

ஸ்கானாரேல் -- இஷ்டப்பட்டால் அடிப்பேன்இல்லாவிட்டால் மாட்டேன்.

ரொபேர் --ரொம்ப சரி.

ஸ்கானாரேல் -- அவள் என் மனைவி, உங்கள் மனைவியல்ல.

ரொபேர் -- சந்தேகம் இல்லாமல்.

ஸ்கானாரேல் -- நீங்கள் எனக்கு உத்தரவு போட முடியாது.

ரொபேர் -- உண்மைதான்.

ஸ்கானாரேல் -- உங்கள்  உதவியும் எனக்குத்  தேவையில்லை.

ரொபேர் -- நல்லது.

ஸ்கானாரேல் -- மற்றவர் குடும்பத்தில் தலையிடுகிற நீங்கள் நாகரிகம்  தெரியாதவர்.

  (கம்பால் அடிக்க, ரொபேர் ஓட்டம் பிடிக்கிறார்)

 (மனைவியிடம்) இதையெல்லாம் மனத்திலே வைத்துக்கொள்ளக்கூடாது; குடும்பத்தில் அவ்வப்போது நடக்கிற சின்ன சின்ன சம்பவங்கள். பாசம் உடையவர்களின் மகிழ்ச்சி ஐந்தாறு அடி உதைகளால் அதிகமாகும். நான்  இப்போது காட்டுக்குப் போய் நிறைய விறகு கொண்டு வருவேன்சரியா?

 ---------------------------------------

 (படம் உதவி இணையம்)

11 comments:

  1. //ரொபேர் -- (ஸ்கானாரேலிடம் போய்) அன்பரே! என் உளமார உங்களிடம் மன்னிப்பு கோருகிறேன். ஊம், உதையுங்கள், செம்மையாய் அடியுங்கள், உங்கள் மனைவியை! நீங்கள் விரும்பினால், நானும் உதவுவேன்.//

    இந்த இடத்தில் நான் பலக்கச் சிரித்து விட்டேன்.

    //பாசம் உடையவர்களின் மகிழ்ச்சி ஐந்தாறு அடி உதைகளால் அதிகமாகும்.//

    ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா !

    நல்ல சுவைக்கதை. பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் நன்கு சுவைத்துப் பாராட்டியமைக்கு என் மனமார்ந்த நன்றி .

      Delete
  2. நல்ல நகைச்சுவைக் கதை... அருமை...

    ReplyDelete
    Replies
    1. பாராட்டிக் கருத்து தெரிவித்தமைக்கு என் அகமார்ந்த நன்றி

      Delete
  3. நகைச்சுவையோடு நல்லதொரு வாழ்க்கைப்பாடம். அடிப்பது கணவன் உரிமை.. அடிவாங்குவது மனைவியின் கடமை என்பதைப் போன்ற மனநிலையில் உள்ள தம்பதியருக்கிடையில் சமாதானம் செய்ய வந்தவரின் நிலை இருதலைக்கொள்ளி எறும்பாகிவிட்டதை நினைத்தால் பரிதாபமாகத்தான் உள்ளது. இப்படியான காட்சிகளை நம்மூரிலும் கூட காணமுடியும் என்பதுதான் வேடிக்கை. பிரெஞ்சு ஆக்கத்தை அருமையாக மொழிபெயர்த்து ரசிக்க வழங்கிய தங்களுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
    Replies
    1. அச்சு அசல் இதே மாதிரியான ஒரு காட்சியை என் சிறு வயதில் பார்த்துப் ' பாவம் அந்த இடையீட்டாளர் " என்று நினைத்தது உண்டு . பாராட்டுக்கு என் உள்ளமார்ந்த நன்றி .

      Delete
  4. உலகமுழுக்க அடிப்பது கணவனாயும் அடி வாங்குவது மனைவியாயும் இருப்பது தான் வேதனை தரும் விஷயம்! உதவி செய்ய வந்தவர் நிலைமை பரிதாபம்! நல்லதுக்குக் காலமில்லை!நம்மூரிலும் அடிக்கடி நடக்கும் விஷயம். கணவன் மனைவி சண்டையில் யாரும் உதவ முன்வருவதற்கு இது தான் காரணம் போலும்!

    ReplyDelete
    Replies
    1. நனிநாகரிகம் உடைய வெள்ளையரிடமும் இன்றைக்கும் இந்தப் பழக்கம் ( கொஞ்சமாக ) இருக்கிறது ; domestic violence என்கிறார்கள் . வலிமையின் ஆதிக்கத்தை எல்லா உயிரினங்களிடமும் காண்கிறோம் .பின்னூட்டத்திற்கு நெஞ்சார்ந்த நன்றி .

      Delete
  5. யாரும் உதவ முன் வராததிற்கு என்பதைத் தவறாகத் தட்டச்சு செய்து விட்டேன்.

    ReplyDelete
  6. நல்ல நகைச்சுவை; மிகவும் ரசித்தேன். வீட்டிலே ஒரு சாமானும் இல்லை என்பதற்கு குடி போவது சுலபம் என்கிறான் கணவன். அடிக்கடி வீடு மாற்றும் எனக்கு அது எவ்வளவு சத்தியமான வார்த்தை என்பதை உணர முடிகிறது. கணவன் அடிப்பது இப்போது கூட தொடர்வது வேதனையளிக்கும் உண்மை. அதில் தலையிட்டவர் இரண்டு பக்கமும் உதை வாங்குகிறார், ரொம்பவும் பாவம்.

    ReplyDelete
  7. ரசித்து கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி . இக்காலத்தில் அடிக்கடி குடி போவது என்பது பலருக்கும் தவிர்க்க முடியாத நிலைமை . அப்படிப்பட்டவர்கள் எல்லாரும் சத்திய வார்த்தை என்று ஒப்புவார்கள் .

    ReplyDelete