Wednesday, 6 November 2013

துரியோதனன்


--- மகாபாரதத்தில் வில்லன் யார்?

--- இதென்ன கேள்வி? ஐயம் இல்லாமல்  துரியோதனன் தான்.--- அப்படியானால்,

1 -- பாண்டவர், கெளரவர் என அனைவரும் மதித்துப் போற்றிய பெரியவர் பீஷ்மர், ஏன் போரில் துரியோதனனை ஆதரித்தார்? முதல் பத்து நாளும் அவனுடைய படைத் தலைவராய்ப் பாண்டவரை எதிர்த்து அல்லவா  அவர் போர் புரிந்தார்!

2 -- துரோணர் 105 பேருக்கும் குரு; அவருக்கு மிகப் பிடித்த சீடன் அருச்சுனன்; ஆனால் அவனை அவர் எதிர்த்தது ஏன்? பீஷ்மர் இறந்த பின்புதுரியோதனனின் அடுத்த தளபதியாய் அவர் செயல்பட்டாரே!
  இரு பெரியவர்களும் கடவுளாகிய கண்ணனுக்கு எதிராய், ஒரு வில்லனுக்குத் துணை போயிருப்பார்களா?

3 -- பீமனிடம் அடி வாங்கித் துரியோதனன் இறந்து வீழ்ந்ததும், தேவர்கள் வென்றவனைச் சட்டை செய்யாமல், தோற்றவனின் உடல்மீது மலர்மாரி பொழிந்தது ஏன்?

 மேல் வினாக்களை எழுப்பி, (அதாவது மாற்றி யோசித்து) விடை கண்டவர் ஒரு தமிழறிஞர்.

 அவர் ச. சோமசுந்தர பாரதியார்.
 
  அவரது முடிவு: துரியோதனன் வில்லன் அல்ல!

  1 - பாண்டவரின் அரசை அவன் சூழ்ச்சியால் கைப்பற்றினானே?

   --- பந்தயம் வைத்துத் தோற்றால் பறிபோகும் தானே!

  2 --- திரவுபதியைத் துகில் உரியச் செய்தவன் கொடியன் அல்லவா?

    --- சூதாட்டத்தில் பணயம் வைக்கப்பட்டு அவள் துரியோதனனுக்கு அடிமை ஆனாள்முன் காலத்தில் அடிமைகள் இடுப்புக்குமேல் துணி அணியக்கூடாது. ஆகையால் மேலாடையைக் களைய மறுத்தது அவள் தவறு. அதனால்தான் துகில் உரிதலை எதிர்த்துப் பாண்டவர்கள் குரல் எழுப்பவில்லை.

    நம் காலத்திலுங்கூட, வேலையாட்கள் முதலாளியைக் கண்டால் முண்டாசை அவிழ்த்துவிடுகிறார்கள்; தோள் துண்டை எடுத்து இடுப்பில் கட்டுகிறார்கள். இதேபோல், பக்தர்கள் கடவுள் சந்நதிக்குச் செல்கையில், துண்டை இடுப்புக்கு மாற்றுகிறார்கள்; திருச்செந்தூர் முதலான சில கோவில்களில் ஆண்கள் சட்டையுடன் சந்நதிக்குள் நுழையமுடியாது. பழைய காலத்து வழக்கம் ஆயிரக் கணக்கான ஆண்டுக்குப் பின்பும் தொடர்கிறது.

   சென்ற நூற்றாண்டுவரை, கேரள மகளிர் ரவிக்கை அணிய  உரிமையற்று வாழ்ந்தனர். துணிவுடன் அணிந்த சிலரின் ரவிக்கைகளைப்  பழமைவாதிகள் கிழித்தார்கள்: அது, “ரவிக்கை கிழிப்புப் போராட்டம்” எனப்படுகிறது.

  3 --- அவளைத் தன் தொடைமீது அமரச்சொன்னது தவறு தானே?

    அடிமைப் பெண்ணிடம் அவ்வாறு உத்தரவு இட எசமானுக்கு உரிமை இருந்தது.

   4 -- பாண்டவர்களைக் கொல்ல அரக்கு மாளிகையைக் கொளுத்த உத்தரவு இட்ட கொலை பாதகன் தானே துரியோதனன்?

     அது குற்றம் தான். மற்றபடி அவன் நல்ல மைந்தன், நல்ல அண்ணன், நல்ல கணவன், நல்ல நண்பன். தான் இல்லாத சமயத்திலும், தன் அந்தப்புரத்துக்குக் கர்ணன் வந்து தன் மனைவியுடன் சொக்கட்டான் ஆடும் உரிமை தந்த பண்பாடு அவனிடம் இருந்தது.

    துரியோதனன் பக்கம் நியாயம் இருந்ததால்தான் பீஷ்மர், துரோணர் முதலியோர் அவனுக்கு ஆதரவு தந்தார்கள்.

   இனிப் பாண்டவரின் சங்கதியைப் பார்ப்போம்:

 1 -- எந்த நாட்டிலும், எக்காலத்திலும், ஓர் அரசனுக்குப் பின்  அவனது  மூத்த மகன்தான் ஆள உரிமையுடையவன் என்பது பொது விதி. அதன்படி, திருதராட்டிரனை அடுத்து, மூத்த புதல்வன் துரியோதனன் மாத்திரமே மன்னன்அவனுடைய 99  சொந்தத் தம்பிகளுக்கே  நாட்டில் பங்கு கிடையாது.  அப்படியிருக்க, அவனது சிறிய தந்தை பாண்டுவின் மக்களாகிய பாண்டவர்களுக்கு ஏது உரிமை? இவர்கள் திருதராட்டிரனின் கருணைக்குப் பாத்திரர் ஆகித் தனி நாடு பெற்றார்கள். தன் தேசத்தின் ஒரு பகுதியைப் பாண்டவர்கள் வசப்படுத்திக்கொண்டமையால், சூதாட்டத்தின் மூலம் அதை மீட்டுக்கொண்டான் துரியோதனன்.

  2 -- சூதாட்டத்தில் தன்னையும் தம்பிமாரையும் மனைவியையும்கூடப் பந்தயம் வைத்தமை தருமனின் பெருந்தவறு.

  3 -- துரோணர், தளபதியாய்ப் போர் புரிந்துகொண்டிருந்தபோது, அவரை வீரத்தால் வெல்ல முடியாது என்பது தெரியவர, அவரது மகனைப் பீமன் கொன்றுவிட்டான் என்று அர்த்தப்படும்படி, இரட்டைப் பொருள் உடைய  ஒரு வசனத்தை அவரிடம் தருமன் சொன்னான். அது கேட்டுபுத்திர சோகத்தில் அவர் ஆழ்ந்திருந்த சமயத்தில், அவரைக் கொன்றனர். குருவைச் சூழ்ச்சியால் கொன்ற பெரும் பாதகர் பாண்டவர்.

  4 -- கதாயுதத்தால் எதிரியை இடுப்புக்குக் கீழே தாக்கக்கூடாது என்பது போர்முறை. அதை மீறி, துரியோதனனைத் தொடையில் அடித்து வீழ்த்தினான் பீமன். (foul) ஆகையால்தான், தேவர்கள் அவனைப் புறக்கணித்துவிட்டு, விதி பிறழாமல் போரிட்ட துரியோதனன்மேல் மலர் தூவினார்கள்.

   மேலே விவரிக்கப்பட்டவை எல்லாம் ச. சோமசுந்தர பாரதியாரின் கருத்துகள். அவற்றை வெளியிட்ட அவர், மறுப்புரைகளை வரவேற்பதாய்த் தெரிவித்தார்எவரும் மறுக்கவில்லை.

           --------------------------------------------------

படம் உதவி; இணையம்.

6 comments:

 1. ஐயா வணக்கம். மகாபாரதம் ஒரு கற்பனைக் கதை. அதில் புனையப்பட்ட கதாமாந்தர்களை நம் விருப்பத்துக்கு வளைக்கலாம் நானே ஒரு பதிவு எழுதி இருந்தேன்.முரணான பாத்திர அமைப்பு என்னை எழுத வைத்தது. சாந்தனுவின் சந்ததிகள் என்னும் தலைப்பில் எழுதியது. மூலக்கதை எழுதியவர் இல்லாத போது மறுத்துக் கூறும் கருத்துக்கள் மதிப்பில்லாமல் போய் விடும். ஒரு நாணயத்துக்கு இரு பக்கங்கள் போல எதிரும் புதிருமான கருத்துக்களும் இருக்கும். கதையைக் கதையாய் அணுகினால் எல்லாம் ஏற்புடையதே. என் பதிவின் சுட்டி இதோ. படித்துக் கருத்துக் கூறுங்கள். gmbat1649.blpgspot.in/2012/12/blog-post_16.html நன்றி.

  ReplyDelete
  Replies
  1. ஐயா , வணக்கம் உங்கள் கருத்துரைக்கு நன்றி . எதிர் புதிர் கருத்து இருக்கும் என நீங்கள் கூறுவது சரிதான் . இப்படியும் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது என்பதை அறிவிப்பது என் நோக்கம் . உங்கள் சுட்டியை வாசிப்பேன் .

   Delete
  2. இதிகாசங்கள் இரண்டினதும் வில்லன்களின் உள்ளக்குமுறல்களை இங்கே பார்வையிடலாம்
   "இலங்கை வேந்தன் எதிர் அஸ்தினாபுரி அரசன்" படங்களாக இணைக்கப்பட்டிருக்கிறது
   http://www.chummaah.blogspot.ca/2010/06/blog-post_28.html

   Delete
 2. வணக்கம் அய்யா.
  மாறுபட்ட சிந்தனை அருமை. பாலா அய்யா சொன்னது போல் கதையைக் கதையாய் அணுகி விடுவதே உத்தமம். இருப்பினும் முரணான இலக்கியத் தகவல்களை இளைய தலைமுறைக்கு வெளிச்சமாய் காட்டும் தங்கள் பணிக்கு நன்றிகள். தொடருங்கள் அய்யா.

  ReplyDelete
  Replies
  1. உங்கள் கருத்துரைக்கு மிகுந்த நன்றி . சரியாய்ச் சொன்னீர்கள் இளைஞர்க்குப் பல்வேறுபட்ட இலக்கியத் தகவல்களைத் தருவது தேவை என்று .

   Delete
 3. This comment has been removed by the author.

  ReplyDelete