ரோமானியரின் தாய்மொழி லத்தீன் ஒரு காலத்தில் தென் ஐரோப்பா முழுதும் பரவி செல்வாக்கு பெற்று, செவ்வியல் இலக்கியங்கள் பலவற்றை ஈன்று செம்மாந்திருந்தது. இன்று, உலகில் பெரும்பாலார் பயன்படுத்துகிற abcd முதலிய எழுத்துகள் லத்தீன் எழுத்துகளே. நெடுங்கணக்கை உருவாக்கிய ரோமானியர், கற்பனை வறட்சி காரணமாய், சிறந்த இலக்கியங்களைத் தோற்றுவிக்கும் திறனற்று வாழ்ந்தனர். அவர்கள் கிரேக்கத்தின்மீது
படையெடுத்துச் சென்று அதைக் கைப்பற்றிய பின்பு, அந்நாட்டுப் படைப்புகளை அறிந்து, கற்றுத் தேர்ந்து, அவற்றின் சுவையில் மூழ்கி மயங்கி அவற்றை முன்மாதிரியாய்க் கொண்டு நாடகம், கவிதை, இதிகாசம், வரலாறு, தத்துவம் எனப் பல வகை நூல்களை ஆக்கினர். அவற்றுள் முக்கியமானவற்றின் வரலாற்றையறிவோம்:
![]() |
Plautus |
Plautus (பொ.யு.மு.3 ஆம் நூ.) இயற்றிய 21 நாடகங்கள் கிடைத்துள்ளன. அவற்றுள் Amphitruo கதை நம் அகலிகை கதையை நினைவூட்டும்; Menaechmi-யில் ஒரே தோற்றமுடைய இருவர் ஓரூரில் வசிப்பதால் உண்டாகும் ஆள் மாறாட்டம் சுவைமிகு நிகழ்ச்சிகளை விளைவிக்கிறது. (எங்கள் வீட்டுப் பிள்ளையை நினைவு கூர்க).
![]() |
Lucilius |
Lucilius (பொ.யு.மு. 2 ஆம் நூ.) ஒரு கவிஞர்; நிறையப் பாடிய அவரின் 1400 அடிகளே கிடைத்தன. தம் காலத்து அரசியல்வாதிகளை அவர் படம் பிடித்துக் காட்டியுள்ளார்:
"இப்போதெல்லாம் சட்டப் பேரவை உறுப்பினர்கள் பகல் முழுதும் மன்றத்தில் திரிகிறார்கள்; எல்லார்க்கும் ஒரேயோர் எண்ணம்; ஒரேயொரு வேலை: தந்திரமாய்ப் பேசி ஏமாற்றல், சூழ்ச்சி புரிதல், பிறரைப் புகழ்ந்துபேசி வசப்படுத்தல், யோக்கியராகக் காட்டிக்கொள்ள முயலுதல், மற்றவர் காலை வாருதல்".
இது, மோசமான மனிதர்கள் பழங்காலத்திலும் இருந்திருக்கிறார்கள் என்பதையறிந்துகொள்ள நமக்கு உதவுகிறது.
![]() |
Cicero |
Cicero (பொ.யு.மு. 1 ஆம் நூ.) வழக்குரைஞராயும் சொல்வல்லாராயும் ஆட்சித் தலைவராயும் விளங்கிய இவரது வழக்கு மன்ற வாதங்கள், தத்துவக்
கட்டுரைகள், சொற்பொழிவுகள் நூல்களாகத் தொகுக்கப்பட்டுள்ளன; அவை மொழியின் உரைநடையை வளப்படுத்தின; அதை மேலும் செழிப்பித்தவர்கள் மூவர்:
Julius Caesar |
அ --- Julius Caesar (பொ.யு.மு. 100-44) மாவீரர் என்பது பலர்க்குத் தெரியும்; செவ்வியல் எழுத்தாளர் எனச் சிலரே அறிவர். அவருடைய இரு நூல்களான De Bello Gallico
(கோல் போர் – பிரான்சின் அப்போதைய பெயர் கோல்) De Bello
civili (உள்நாட்டுப் போர்) என்பவை அவர் படை நடத்திச் சென்று பகைவரைத் தாக்கி வென்ற போர்களை விவரிப்பவை; தலைசிறந்த வரலாற்று ஆவணங்கள் என்பதற்காகவும் கருத்துத் தெளிவு, மொழித் தூய்மை, விழுமிய நடை, சுவை ஆகிய சிறப்புகளுக்காகவும் அவை போற்றப்படுகின்றன.
![]() |
Sallustus |
ஆ -- Sallustus (பொ.யு. மு. 87-35) சீசரின் தளபதிகளுள் ஒருவராய்ப் போர்புரிந்த இவரும் இரு வரலாற்று நூல்களுக்கு ஆசிரியர்: Bellum Jugurthinum (ஜுகுர்த்தா போர்). நிகழ்ச்சிகளைக் கதை போல, சுவை சொட்ட சொட்ட வர்ணிப்பதில் கைதேர்ந்த அவர் செய்நேர்த்தி, உளவியலறிவு ஆகியவற்றுக்காகப் பாராட்டப்படுகிறார்.
கத்திலினாவை நம் கண்முன் நிறுத்துகிறார், பாருங்கள்:
"பழங்குடிமகன் கத்திலினா உடல் வலிமையும் மனத்திண்மையும் ஒருங்கே பெற்றவன்; ஆனால் தீமையில் நாட்டங் கொண்டவன். இளமையிலேயே அண்டை அயல் தகராறு, கொள்ளை, கொலை, உள்நாட்டு அமளி ஆகியவை அவனைக் கவர்ந்தன. அவனது கட்டுடல் நம்ப முடியா அளவுக்குப் பசி தாகம் குளிர் மற்றும் கண்விழிப்பை எளிதில் சமாளித்தது; அவனுடைய தீப்பண்புகள் துணிச்சல், தந்திரம், பச்சோந்தித்தனம், பாசாங்கு, பிறர்பொருள் வெளவல், உணர்ச்சித்தீவிரம் ஆகியன; உள்ளத்து நிறைவை ஒருபோதும் அறியாதவன்; எதுவாக இருந்தாலும், அது எல்லை மீறியதோ எட்டாக் கனியோ, இடைவிடாமல் நாடிக்கொண்டே இருப்பான்."
இ --- Varro -(பொ.யு.மு. 116-27) எழுதிக் குவிக்குங் கலையில் ஒப்பாரின்றி, எழுபது பொருள் குறித்து இயற்றிய 620 நூல்களுள் பெரும் பகுதி கிட்டவில்லை என்பது பேரிழப்பு. இலக்கிய விமர்சன முன்னோடி என்று பெயர் வாங்கிய அவர், ரோம் நகரில் நிறுவப்பட்ட அரசு நூலகத்துக்குத் தலைவராய் நியமிக்கப்பெற்று கெளரவமுற்றார்.
(தொடரும்)