Saturday 3 December 2016

அச்சம்


 (இதுவும் மொப்பசானின் கதை; என் மொழிபெயர்ப்பு; ஏப்ரல் 1998 மஞ்சரியில் வந்தது)

ஒரு குளிர்கால மாலையில்,  வடகிழக்குக் காட்டிலே பயணித்தேன்; வேட்டையாடுவது என் நோக்கம். வானம் மூடியிருந்தமையால்,  இருமணி நேரத்திற்கு முன்னதாகவே இரவு வந்துவிட்டது; வழிகாட்டியாய் ஒரு கிராமவாசி வந்தார்; ஊசியிலை மரங்களின் கீழே,  சிறு பாதையில் நடந்து சென்றோம். பலத்த காற்று அவற்றை அலறச் செய்தது; கிளைகளுக்கு இடையே தெரிந்த வானில்,  மேகங்கள் கலைந்து, பேரச்சத்துடன் ஓடியதைக் கண்டேன்; சூறைக் காற்றின் விளைவாய்,  எல்லா மரங்களும் எதிர்ப் பக்கமாய்ச் சாய்ந்து துன்பம் தாங்காமல் முனகின. கம்பளி உடையையும் விரைவான நடையையும் மீறிக் குளிர் என்னை நடுக்கிற்று.

  வனப் பாதுகாவலரொருவரின் வீட்டில் நாங்கள் இரவு சாப்பிட்டுத் தங்க வேண்டும். அவரைப் பற்றிய தகவல்களை வழிகாட்டி கூறினார்: இரண்டு ஆண்டுக்கு முன்பு,  திருட்டுத்தனமாய் மரம் வெட்டிய ஒருவனை அவர் கொன்றார்; அதிலிருந்து,  அந்த நினைவால் பாதிக்கப்பட்டவர்போல,  கலகலப்பை இழந்துவிட்டார்; புதல்வர் இருவரும் மணமாகி அவருடனேயே வசிக்கிறார்கள்.

 வீட்டை அடைந்தோம்; வழிகாட்டி கதவைத் தட்டினார்; பெண்களின் அலறல்கள் ஒலித்தன; கம்மிய ஆண்குரல் ஒன்று,  "யாரது?" எனக் கேட்டது; தம் பெயரை வழிகாட்டி சொன்னார்.

 கதவு திறந்ததும் நுழைந்தோம்.

 அங்கே நான் கண்டது மறக்கமுடியாத காட்சி: ஒரு முதியவர்,  நரைத்த தலையும் ஒளி உமிழும் கண்ணுமாய்,  கையில் வேட்டைத் துப்பாக்கியுடன்,  ஹாலின் நடுவே நின்றிருக்க,  இரு கட்டுமஸ்தான இளைஞர்கள்,  கோடரிகள் ஏந்தி,  கதவுக்குக் காவல் இருந்தார்கள்; இருள் படர்ந்த ஒரு மூலையில் பெண்கள் இருவர்,  முழங்காலிட்டு சுவரில் முகம் புதைத்திருந்தனர்.

 வழிகாட்டியின் விளக்கத்தை செவிமடுத்த பெரியவர்,  ஆயுதத்தை சுவரில் மாட்டிவிட்டு எனக்கு ஓர் அறையைத் தயார் செய்யக் கட்டளையிட்டார். சுற்றி வளைக்காமல் என்னிடம் பேசினார்: "நான் இரண்டு ஆண்டுக்கு முந்தி,  இதே தேதியில் இரவில் ஒரு திருடனைக் கொன்றேன்; போன ஆண்டு அவன் வந்து என்னைக் கூப்பிட்டான்; இன்றிரவும் வருவான் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்."

 இவ்வாறு சொல்லிவிட்டு,  " ஆகையால் நாங்கள் அமைதியாக இருக்க முடியவில்லை" என்று அவர் முடித்தபோது,  அவரது குரலில் இருந்த நடுக்கம் என்னைப் புன்முறுவல் பூக்க வைத்தது.

 என்னால் முடிந்த அளவு அவரைத் தைரியப்படுத்தினேன்; சரியாய் அந்த சமயம் பார்த்து அங்கே போய் மூடநம்பிக்கை விளைவித்த அச்சச் சூழ்நிலையைக் காணும் வாய்ப்பு கிட்டியதில் எனக்கு மகிழ்ச்சியாய்த்தான் இருந்தது; பழைய நிகழ்ச்சிகள் பலவற்றை எடுத்துக் கூறி,  எல்லாரையும் அமைதிப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டேன்.



 கணப்பின் அருகில் ஒரு நாய்,  அடர்த்தியான மீசையுடன்,  நீட்டிய கால்களில் மூக்கைப் புதைத்தபடி,  உறக்கத்தில் ஆழ்ந்திருந்தது. கடும் புயல் அந்தச் சிறிய வீட்டைத் தாக்கிற்று; மரங்கள் காற்றால் அலைக்கழிக்கப்பட்டதைக் கதவருகே அமைந்திருந்த சன்னலின் கண்ணாடியின் ஊடே,  மின்னல் ஒளியில் கண்டேன்.

 நான் எவ்வளவோ முயன்றும்,  வீட்டாரைப் பிடித்தாட்டிய திகில் அகலவில்லை; பேச்சை நிறுத்தினேனோ இல்லையோ,  அவர்கள் யாவரும் தொலைவில் ஏதேனும் குரல் கேட்கிறதா என்பதைக் கவனிப்பதில் முனைந்தனர். மடத்தனமான அவர்களின் பீதியைக் கண்டு அலுப்புற்று நான் படுக்கப் போகலாம் என்று நினைத்த சமயம்,  பெரியவர் நாற்காலியினின்று திடீரெனக் குதித்து,  துப்பாக்கியை ஏந்தி,  குளறியபடி,  'வந்துட்டான்,  வந்துட்டான், குரல் கேக்குது!' என்றார்; ஆண்கள் கோடரிகளைத் தூக்கினார்கள். அவர்களை அமைதிப்படுத்த நான் எண்ணிய அதே கணம்,  நாய் திடுமென விழித்துத் தலையை நிமிர்த்திக் கழுத்தை நீட்டிக் கணப்பை நோக்கியபடி மரண பயமூட்டி ஊளையிட்டது. அனைவரின் கண்களும் அதை நோக்கின; அது எதையோ பார்த்து மிரண்டாற்போல,  எழுந்து அசையாமல் நின்றுகொண்டு,  கண்ணுக்குத் தெரியாத,  இன்னதென்று புரியாத,  எதையோ எதிர்த்து மீண்டும் ஓலமிடத் தொடங்கிற்று. உடல் முழுதும் ரோமம் குத்திட்டு நின்றமையால்,  பயங்கரமான எதுவோதான் அதன் ஊளைக்குக் காரணமாய் இருந்திருக்க வேண்டும்.

 முதியவர்,  'அவனை மோப்பம் பிடித்துவிட்டது; அதன் எதிரில்தானே கொன்றேன்!' எனக் கூவினார்; கலக்கமுற்ற பெண்கள் நாயோடு சேர்ந்து அலறினார்கள்.

 என்னையும் மீறி உடம்பு நடுங்கியது. அந்த இடத்தில்,  அந்த நேரத்தில்,  உணர்ச்சி வசப்பட்ட அந்த மனிதர்களுக்கிடையே,  நாயின் அத்தோற்றம் கிலியூட்டத்தான் செய்தது. பேரச்சம் என்னையும் பற்றிக்கொண்டது; எது குறித்து? தெரியவில்லை.

 யாவரும் சலனமின்றி,  வெளிறிப்போய்,  ஒரு பயங்கர நிகழ்ச்சியை எதிர்பார்த்துக்கொண்டு,  தீட்டிய காதும் படபடக்கும் இதயமுமாய்,  சிறு ஓசைக்கும் அதிர்ச்சி அடையும் நிலையில் காத்திருந்தோம். நாயோ ஹாலை சுற்றிச் சுற்றி வந்து,  சுவர்களை மோந்துகொண்டிருந்தது; அதன் செயல்கள் எங்களைப் பைத்தியமாக்கும்போல் இருந்தன. காற்றின் வேகம் குறைந்து வந்தது.  

 கிராமவாசி,  ஏதோ வெறியில்,  நாய்மீது பாய்ந்து பிடித்துத் தோட்டக் கதவைத் திறந்து,  வெளியே தள்ளினார்.  அது உடனே மெளனமாயிற்று.  எங்களுக்கோ அந்த அமைதி முன்பைவிட அதிகம் பயந்தந்தது.
 திடீரென அனைவர்க்கும் அதிர்ச்சி! உருவமொன்று வெளிச் சுவரில் உராய்ந்து சென்றது; கதவின் எதிரில் வந்து,  அதைத் தயக்கத்துடன் தொட்டாற்போல் தோன்றிற்று; சில நிமிட நிசப்தம். நாங்கள் திக்பிரமை அடைந்தோம். அது மீண்டும் வந்து சுவரை உராய்ந்தது; நகங்களால் சுரண்டியது.

 சன்னல் கண்ணாடிவழி,  திடீரென்று தோன்றியது தலையொன்று: காட்டு விலங்குகளின் கண்களையொத்த கண் கொண்ட வெள்ளைத் தலை; அதன் வாயினின்றும் வெளிப்பட்டது தெளிவற்ற ஒலி,  முறையிடுவது போன்ற முணுமுணுப்பு. அதே சமயம்,  வீட்டில் கேட்டது காதை செவிடாக்கும் சத்தம்: வன அலுவலர் சுட்டிருக்கிறார்! புதல்வர்கள் விரைந்தோடி மேசையைத் தூக்கி சன்னலை அடைத்து,  அந்த மேசைக்கு ஓர் அலமாரியை முட்டுக்கொடுத்தனர்.

 அந்த எதிர்பாராத வேட்டினால் எனக்கு ஏற்பட்ட உடல்,  மன அதிர்ச்சிகளால்,  நான் பிரக்ஞை இழந்து அச்சத்தால் இறந்துவிடுவேன் எனத் தோன்றிற்று.

 யாவரும் அதிகாலைவரை ஆடாமல் அசையாமல்,  ஒரு வார்த்தைகூடப் பேச இயலாமல்,  மதி மயங்கி முடங்கிக் கிடந்தோம். சூரியனின் கிரணம் ஒன்று துவாரம் வழியாய் உள்ளே வந்ததைக் கண்ட பின்தான் வெளியே போகத் துணிந்தோம்.

 அங்கே! சுவரை ஒட்டினாற்போல,  குண்டு பிளந்த வாயுடன்,  இறந்து கிடந்தது நாய்; தோட்டத்து வேலியின் அடியில் குழி தோண்டி,  அது தெருப் பக்கம் வந்துவிட்டிருந்தது!


        +++++++++++++++++++++++++++++++++++

12 comments:

  1. மிகவும் திகிலூட்டிடும் கதையாக உள்ளது.

    //இதுவும் மொப்பசானின் கதை; என் மொழிபெயர்ப்பு; ஏப்ரல் 1998 மஞ்சரியில் வந்தது.//

    அருமையான மொழிபெயர்ப்பு. மஞ்சரியில் வெளிவந்ததற்கு பாராட்டுகள் + வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் என் மனங் கனிந்த நன்றி .

      Delete
  2. Replies
    1. உங்கள் பாராட்டிற்கு என் அகமார்ந்த நன்றி .

      Delete
  3. அருமையான மொழி பெயர்ப்பு கதை.. ...

    ReplyDelete
    Replies
    1. வருக , உங்கள் பாராட்டுக்கு என் நெஞ்சம் நிறை நன்றி .

      Delete
  4. பய உணர்வைப் படம் பிடித்துக்காட்டும் கதை ரசித்தேன்

    ReplyDelete
  5. ரசித்துப் பாராட்டிய உங்களுக்கு என் மனம் நிறை நன்றி .

    ReplyDelete
  6. அருமையான கதை அய்யா... பய உணர்வை நமக்குள் செலுத்தும் எழுத்து...

    ReplyDelete
    Replies
    1. உங்கள் பாராட்டுக்கு என் அகம் நிறைந்த நன்றி .

      Delete
  7. மிக நெருக்கமான மொழிபெயர்ப்பு.. தன்மொழியில் படித்ததைப் போல உணர்வைத்தந்தது.. வணக்கமும் வாழ்த்துகளும்

    ReplyDelete
    Replies
    1. உங்கள் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி .

      Delete