Wednesday, 9 October 2013

லெமூரியா

இந்தியப் பெருங்கடலில்,   குமரிகண்டம் என்றொரு விசாலமான நிலப் பரப்பு  நெடுங் காலத்துக்குமுன் இருந்ததாகவும் அது பின்பு கடலுள் மூழ்கிவிட்டதாயும் சிலர் கூறுவர்,  எழுதுவர்;   அதற்கு ஆதாரமாகத் தமிழ் இலக்கியக் குறிப்புகளைக் காட்டுவர். அந்தக் கண்டத்தில்தான் மனிதன் தோன்றினான்,   அவன் தமிழன்அவன் பேசிய தமிழே உலகின் முதல் மொழி என்றும் பறை சாற்றுவர்.

முந்தைய நாளினில் அறிவும் இலாது 
மொய்த்தநல் மனிதராம் புதுப்புனல் மீது 
செந்தா மரைக்காடு பூத்தது போலே 
செழித்தஎன் தமிழே ஒளியே வாழி!

என்ற பாரதிதாசனின் கவிதை அடிகள் இந்தக் கருத்தைத் தெரிவிக்கின்றன.   8ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட களவியல் என்னும் இலக்கண நூலின்   ஆசிரியர் இறையனார் என்பவர். அதற்கு உரை எழுதியவர்தான் தமிழ்ச் சங்கங்கள் மூன்று இருந்தன எனவும் முதலிரண்டும் அடுத்தடுத்து நிகழ்ந்த கடற்கோளினால் அழிந்தன எனவும் விவரித்தார். உரையின் காலம் 9 ஆம் நூற்றாண்டு. சங்க இலக்கியங்கள் இதுபற்றிப் பாடவில்லைஅவற்றுக்குப் பின் தோன்றிய நூல்களோ 7 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அப்பர், சம்பந்தரோ இதைக் குறித்து எதுவும்  சொல்லவில்லை. 9ஆம் நூற்றாண்டுக்காரருக்கு எப்படித் தெரிந்தது?   சான்று எதையாவது காட்டினாராஇல்லை.

ஒரு கடற்கோளைச் சிலப்பதிகாரம் (8 ஆம் நூற்றாண்டு) கூறுகிறது:

வடிவேல் எறிந்த வான்பகை பொறாது 
பஃறுளி  ஆற்றுடன்  பன்மலை அடுக்கத்துக்
குமரிக்  கோடும்  கொடுங்கடல்  கொள்ள   
(காடுகாண் காதை)

இதன் பொருள்: கடலானது,   தன்மேல் பாண்டியன் வேலை எறிந்ததால் அவன்மீது பகை கொண்டுபஃறுளி என்ற ஆற்றோடு பல பக்கமலைகளை உடைய குமரி மலையையும் மூழ்கடித்தது.

மேலை நாட்டு ஆய்வாளர் சிலர்,   கடலுள் மூழ்கிய ஒரு கண்டம் பற்றிக்   கருத்து அறிவித்து அதற்கு "லெமூரியா" எனப் பெயரிட்டனர். அதற்குக் குமரிகண்டம் என்றும் பெயருண்டு எனவோ அதில் வாழ்ந்தோர் தமிழர் எனவோ அவர்களின் மொழி தமிழ் எனவோ யாரும் சொல்லவில்லைஆனால் தமிழறிஞர் சிலர் அதைப் பிடித்துக்கொண்டு லெமூரியா தான் குமரிகண்டம் என்று சாதிக்கிறார்கள்.

பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரை,  " இலெமூரியா அல்லது  குமரிகண்டம்" என்ற 90 பக்கம் உடைய சிறு நூலில் அப்படியொரு கண்டம்  இருந்தது என்பதை நிரூபிக்க முயலுகிறார்;   ஆனால் தக்க ஆதாரங்கள் காட்டவில்லை;   தவறான தகவல்களையும் தருகின்றார்.
                                         
எடுத்துக் காட்டுகள்:

    1  --  பக். 25  -- மனிதர் தோற்றம் முதலில் ஏற்பட்டது தென் இந்தியாவிலோ   அதன் அருகிலேயோ தான். (கிழக்கு ஆப்பிரிக்காவில்தான் மனிதன் தோன்றினான் என்பது உலக அறிஞர்களின் ஒருமனமான முடிவு)

     2  --  பக். 39 -    அறிவியலறிஞர்கள்கிட்டத்தட்ட மனிதரது அமைப்பும் மூளை உருவும் உடைய லெமூர் என்ற உயிர்வகை ஒன்று,   உலகின்  நடுக்கோட்டுப் பகுதியைச் சுற்றி இருப்பதைக் கூர்ந்து நோக்கி அந்த லெமூர்களில் இருந்தே மனிதர் ஏற்பட்டிருக்கவேண்டும் என்று தீர்மானித்தனர்... லெமூர் என்ற அவ்வுயிரின் பெயரையே அடிப்படையாகக்   கொண்டு இலெமூரியா என அறிஞர் பெயர் வகுத்தனர்.   (சிம்பஞ்சி--chimpanze --  குரங்குதான் மனிதனின் மிக நெருங்கிய உறவு என்பது நிறுவப்பட்டுள்ள உண்மை)

(லெமூரும்  அதன்  குட்டியும்)

  3  --  பக்- 46 -  இலெமூரிய நாகரிகக் காலம் இன்றைக்கு 20 000 ஆண்டுகளுக்கு முற்பட்டு 50 000 ஆண்டுகள் வரையில் ஆகும். (சான்று எதுவும் காட்டவில்லை).

   4 --   பக். 55 .   ஒருகால் உலகெங்கும் பரவி இருந்த இலெமூரியாக் கண்டம் படிப்படியாகச் சிதைவுற்று இறுதியில் கடலில் மூழ்கியது (இதற்கும் ஆதாரம் எதையும் கூறவில்லை)

    5  -- பக்.44  .  ஆஸ்திரேலியா உலகின் இழுப்பு வன்மைக்கு உட்பட்ட காரணத்தால் உலகின்மீது வந்து விழுந்த ஒரு விண்வீழ் மீனின் சிதைந்த பகுதியேயாம்;   அம்மீன் விழுந்த தாக்கு வன்மையினாலேதான் அதுவரை இருந்த இலெமூரியா கடல் வாய்ப்பட்டது.  (எவ்வளவு உறுதியாகக் கூறுகிறார்! சான்று தந்திருக்க வேண்டாமோ?)

 இப்படி குமரிகண்ட ஆதரவாளர்கள் முழுதுந் தவறான அல்லது ஒரு பகுதி பிழையான ஆதாரங்களைக் காட்டுகிறார்கள்;  ஆதாரம் இல்லாமலேகூடத் தகவல் தருகிறார்கள். குமரிகண்டத்தை விடுத்து லெமூரியாவுக்குப் போவோம்.

    1868 இல்பிரபல ஜெர்மன் உயிரியல் மற்றும் விலங்கியல் அறிஞர்   எர்னஸ்ட் ஹேக்கேல் (Hernst  Haeckel)   ஆதி மனிதர்களுக்கும் பசிஃபிக் தீவுகளில் வாழும் கருப்பின மக்களுக்கும் நெருங்கிய உறவு உண்டென உறுதியாய் நம்பினார்;   அப்பகுதியில் காணப்படும் கிபன் (gibbon)  என்ற குரங்கின் கருவுக்கும் மனிதக் கருவுக்கும் இடையே உள்ள வியப்புக்கு உரிய ஒற்றுமையைக் கண்டு உலகின் அந்தப் பிரதேசத்தில் ஒரு கண்டம் இருந்திருக்கிறது எனவும் அது இந்தியப் பெருங்கடலில் மூழ்கிவிட்டது எனவும் அது லெமூரியா எனவும் முடிவு கட்டினார். நம் பண்டைய மூதாதையர் கிபன் குரங்குகளை ஒத்திருந்தனர் என்பது அவரது கருத்து.
 இதோ இன்னொரு லெமூரியா! 

  பிரான்க் ஜோசப் (Frank  Joseph )  என்பவர் 2006 இல் வெளியிட்ட, "லெமூரியாவின் இழந்த நாகரிகம்" (The  Lost  civilization  of  Lemuriya)  என்னுந் தலைப்புக் கொண்ட 330 பக்க நூலில்லெமூரியாக் கண்டம் பசிபிக் பெருங்கடல் இருக்கிற இடத்தில் இருந்தது எனவும் அதில் வாழ்ந்த மக்கள் பேசிய மொழியிலிருந்து வந்ததே சமஸ்கிருதம் எனவும் கூறுகிறார்.

     மூழ்கிய கண்டங்கள் பற்றி மேலும் தகவல்கள் உண்டு:

   1  -  அட்லாண்டிஸ் -- கிரேக்கத் தத்துவ அறிஞர் பிளேட்டோ அட்லாண்டிக் பெருங் கடலில் ஒரு கண்டம் அமிழ்ந்துபோயிற்று எனவும் அதன் பெயர்  அட்லாண்டிஸ் எனவும் கூறினார். பேரறிஞர் ஒருவரின் கூற்றை அலட்சியப்படுத்த முடியுமா?   அது குறித்து அறிஞர்கள் விவாதித்தனர்;   அது தவறு என முடிவு கட்டினர்.

   2 --  மு -- அகஸ்டஸ் லெப்ளோன்ழோன் (Augustus  Le  Plongeon )   என்ற 19 ஆம்  நூற்றாண்டு எழுத்தாளர் அட்லாண்டிக் பெருங்கடலில் மு என்னும் கண்டம்  இருந்து பின்னாளில் மூழ்கிற்று என ஒரு நூலில் தெரிவித்தார். அதைப் பற்றி ஆராய்ந்த ஜேம்ஸ் சர்ச்வாண்ட் (James  Churchwand)  அது பசிபிக் பெருங்  கடலில்  இருந்ததாகவும் அங்கேதான் மனிதன் தோன்றியதாயும் கூறினார்.

   இப்படி ஆளாளுக்கு எதை எதையோ எழுதியுள்ளனர். 

                                               -------------------------

14 comments:

 1. நல்லது நன்றி ஐயா...


  அன்புடன் அழைக்கிறேன் : http://dindiguldhanabalan.blogspot.com/2013/10/Pleasure-Misery-Part-1.html

  ReplyDelete
  Replies
  1. உங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி . வலைத்தளம் குறித்துக்கொண்டேன் . அழைத்தமைக்கு மிகுந்த நன்றி .

   Delete
 2. லெமூரியா பற்றிப் பல அரிய தகவல்களை அறியச் செய்தமைக்கு மிக்க நன்றி! மேலும் நடு நிலைமையில் இருந்து ஆராய்ந்து இது போன்ற உண்மை தகவல்களைத் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. தமிழ் இலக்கிய உலகிலும் வரலாற்று உலகிலும் ஆதாரமற்ற தகவல்கள் என எனக்குத் தெரிந்தவற்றை வெளிப்படுத்துகிறேன் . இது அவசியம் என்று எனக்குத் தோன்றுகிறது . பின்னூட்டத்துக்கும் ஊக்கந் தந்தமைக்கும் மிக்க நன்றி .

   Delete
 3. இப்படி எதை எதையோ எழுதி மக்களை தவறான நம்பிக்கைகளுக்கும் கருத்துகளுக்கும் அடிமைப்படுத்தும், இன்னும் சில எடுத்துக்காட்டுகளை எதிர்பார்க்கலாமா ஐயா.

  ReplyDelete
  Replies
  1. ஊக்கமூட்டும் உங்கள் பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி . முடிந்தவரை எழுதுவேன் .

   Delete
 4. ஆதாரமின்றி அவரவர்க்குத் தோன்றியதை எழுதுவதன் மூலம் குழப்பங்களே மிஞ்சுகிறது. லெமூரியா கண்டம் பற்றிய பல்வகைத் தகவல்களையும் தந்து ஒரு நேரிய அலசலை முன்வைத்தமைக்கு நன்றி. தொடர்ந்து எழுதுங்கள்.

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் . ஆதாரமில்லாத் தகவல்கள் குநப்பம் உண்டாக்கித் தடுமாற வைக்கின்றன . தொடர்ந்தெழுத ஊக்கம் தந்தமைக்கு மிகுந்த நன்றி .

   Delete
 5. அன்புள்ள பேராசிரியருக்கு
  வணக்கம்
  பயனுடைய தகவல்கள்.நன்றி.
  தங்கள் இலக்கியப் பணி சிறக்க
  வாழ்த்துக்கள்
  அன்புடன்
  வெங்கட சுப்புராய நாயகர்
  பிரஞ்சுப் பேராசிரியர்.புதுச்சேரி.

  ReplyDelete
  Replies
  1. அன்பார்ந்த ஐயா,
   உங்கள் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் அகமார்ந்த நன்றி .

   Delete
 6. பிளஸ் வோட்டு என்னுடையது!

  ReplyDelete
 7. This comment has been removed by the author.

  ReplyDelete
 8. சிலப்பதிகாரம் எழுதப்பட்டது 8ஆம் நூற்றாண்டா?

  ReplyDelete