அஞ்சல்காரர்
மெதேரீக், உரிய நேரத்தில், அலுவலகத்திலிருந்து
புறப்பட்டார்; முன்னாள்
படைவீரராகிய அவர், எட்ட அடி வைத்து
நடந்து, பிரைந்தீய்
ஆற்றின் கரையை அடைந்தார்; கரையோடு சென்றால்,
கர்வலேன் சிற்றூர் வரும்;
அங்கேதான் பட்டுவாடா
தொடங்கும்.
இரு கரையிலும் அடர்ந்து நின்ற மரங்கள்
உருவாக்கிய வளைவுக் கூரையின் கீழே, அந்தக் குறுகிய
ஆறு, நுரையாடை போர்த்து,
குதித்துக்கொண்டு ஓடிற்று;
தொலைவில், கரைகள் அகன்று, அமைதி தவழும் குளமொன்றைத் தோற்றுவித்திருந்தன.
மெதேரீக், எதையும் பார்க்காமல் நடந்தார்; ஒரே நினைப்பு: தோப்பைத் தாண்டிப் போகவேண்டும்.
அவரது உறுதி வாய்ந்த தடி, அவருடைய
நடைக்கேற்றாற்போல், தானும் நடந்தது.
ஆற்றைக் கடந்து தோப்பில் கால் வைத்தார். அது மேயருடையது. இரு கி.மீ. நீளத்திற்கு
நீண்டிருந்த அந்தத் தோப்பில், நெடுந்தூண்கள்போல்,
பருத்த மரங்கள் ஒரே நேராய்
உயர்ந்தோங்கி நின்றன. மெதேரீக் நடையைத் தளர்த்தித் தொப்பியைக் கழற்றி நெற்றி
வியர்வையைத் துடைத்துக்கொண்டார்.
அவர் மறுபடியும் விரைய முனைந்தபோது, சில மீட்டர் தொலைவில், மரத்தடியில், புல்லின்மேலே, ஒரு சிறுமியின் உடல் அம்மணமாய் மல்லாந்து
கிடக்கக் கண்டார்; கால்விரல்
நுனியில் முன்னேறி, விழிகளை அகலத்
திறந்து நோக்கினார்: பத்துப் பன்னிரண்டு வயது இருக்கலாம். என்ன இது, தூங்குகிறாளா? இல்லையில்லை, விடிகாலையில் ஒரு பெண் நிர்வாணமாய்ப் படுத்து
உறங்குவாளா? இது பிணந்தான்;
காயம் எதுவும் இல்லை;
எப்படிக்
கொன்றிருப்பார்கள்? "ஐயோ, ஒரு கொலைக்கு சாட்சி ஆகிவிட்டேனே !"
என்னதான் முன்னாள் போர்வீரர் என்றாலும், உடம்பு நடுங்கியது. மேயரின் இல்லம் நோக்கி ஓடினார். மிகத் தொன்மை வாய்ந்த
கோட்டை அது; ஓர் உயரமான
கோபுரமும் அதன் உறுப்பு. முன்காலத்தில் அதன்மேல் நின்று சுற்றுவட்டாரத்தைக்
கண்காணித்தனர். புரட்சிக்கு முந்தி, நாட்டில் கோட்டை கொத்தளங்களுடன் வாழ்ந்த பிரபு பரம்பரையில் தோன்றியவர் மேயர்.
பெயர் ரெனார்தே. காளை வலிமை கொண்ட அவர்க்குக் கிட்டத்தட்ட நாற்பது வயது; ஆறு மாதத்துக்கு முன்பு மனைவியை இழந்தவர்.
b
அஞ்சலர், வெளுத்த முகமும் இரைத்த மூச்சுமாய், தொப்பியை அகற்றிக் கையில் பிடித்துக்கொண்டு, அறைக்குள் நுழைந்தார்;
அகல மேசையின்மீது
கோப்புகள் சிதறிக் கிடக்க, எதிரில்
அமர்ந்திருந்த மேயரைக் கண்டார்.
" என்ன விஷயம், மெதேரீக்?
-- உங்கள் தோப்பிலே
ஒரு சின்னப் பெண் செத்துக் கிடக்கிறாள்.
-- என் தோப்பிலேயா?
-- ஆமாம், துணி இல்லாமல். ..
-- நிச்சயமாக அவள்
ரோக்கு தான்; நேற்று
சாயந்திரம் முதல் அவளைக் காணோம் என்று இப்போதுதான் அவளுடைய அம்மா சொல்லிவிட்டுப்
போனாள்; எந்த இடத்திலே
பார்த்தாய்? "
தபால்காரர் விவரித்தார்.
"தலையாரியையும்
டாக்டரையும் தோப்புக்கு வரச் சொல்லிவிட்டு நீ உன் வேலையைப் பார்".
உத்தரவுக்குப் பணிந்த மெதேரீக் திரும்பி
சென்றார், நிகழ்ச்சிகளை
வேடிக்கை பார்க்க முடியாதே என்ற வருத்தத்துடன்.
மேயர், தொப்பியை அணிந்துகொண்டு புறப்பட்டு, ஆற்றங்கரையை அடைந்து, அதனையொட்டி,
புறங்கை கட்டிக்கொண்டும்
குனிந்தபடியும் பொடி நடையாய் நடந்தார்.
டாக்டரும் தலையாரியும் சேர்ந்து வந்தனர்;
மேயர், டாக்டரிடம் கேட்டார்: "விஷயம் என்னவென்று
தெரியுமா? "
-- தெரியும்; ஒரு குமரி இறந்து கிடப்பதைத் தபால்காரர்
பார்த்திருக்கிறார்."
அருகருகே நடந்து சென்றனர். தொலைவில்
வெள்ளையாய்ப் பிணம் தென்பட்டது; நெருங்க நெருங்க,
முழு உருவமும்
புலனாயிற்று: ஆற்றுப் பக்கம் திரும்பிய தலை, வெளித் தள்ளிய நாக்கு, பிதுங்கிய விழிகள், சிலுவையில் அறைந்தாற்போல் அகன்று கிடந்த கைகள்,
தொடையில் கொஞ்சம் ரத்தம்.
டாக்டர் குனிந்து, எதையுந் தொடாமல்,
சுற்றி வந்து, பைனாக்குலரால் நோக்கினார்; நிமிராமலே கூறினார்: "பாலியல்
வன்முறையும் கொலையும் என்பது விரைவில் உறுதியாகிவிடும்". பின்பு கழுத்தைத்
தடவிப் பார்த்துவிட்டு, "கழுத்தை
நெரித்திருக்கிறார்கள்; வெறுங்
கையால்தான், ஆனால், நகக்குறியோ விரல் பதிவோ இல்லை. இறந்துபோய்க்
குறைந்தது பன்னிரண்டு மணி நேரம் ஆகிறது. காவல் துறைக்குத் தகவல் தர வேண்டியதுதான்" என்று சொல்லி முடித்தார். ரெனார்தே, "என்ன கொடுமை! உடைகளைத் தேட வேண்டும்"
என்றார். டாக்டர், கை கால்களைப்
பிடித்துப் பார்த்து, "குளித்துவிட்டு
வந்திருக்கிறாள்; ஆடைகள் கரையில்
இருக்க வேண்டும்" என்றதும், மேயர் தலையாரிக்கு
உத்தரவிட்டார்: "போய்க் காவலர்களை அழைத்துவா".
உடைகள் அகப்படவில்லை. ஒரு முதிய பெண், நீல கவுனும் துணித் தொப்பியுமாய் அழுதுகொண்டே
ஓடிவந்தாள். "எங்கே குழந்தே? குழந்தை யெங்கே?
" என அலறியவள், பிணத்தைப் பார்த்ததும் பரிதாபமாய் ஓலமிட்டாள்;
எலும்புந் தோலுமான கால்
கைகள் நடுங்கின.
தொலைவில் குரல்கள் கேட்டன; தெளிவற்ற பேச்சு; நெருங்கி வருகிற கும்பலின் சத்தம். வழியில்
கண்டவர்களிடம், மெதெரீக்கும்
தலையாரியும் சொல்லியுள்ளார்கள். கூட்டம் பிணத்தின் அருகில் வந்து சுற்றி நின்றது.
மேயர், தம் மேலாடையை விரித்து
சிறுமியின் உடலை மறைத்தார்.
இரு காவலர்கள் குதிரையில் விரைந்து வந்தனர்;
அவர்களுக்குப் பின்னால்,
உயரமானதொரு வெள்ளைக்
குதிரைமீது துணை ஆய்வாளர். இறங்கியதும் மேயர் மற்றும் டாக்டர் கைகளைப் பிடித்துக்
குலுக்கினார்; முதல் வேலையாய்ப்
பொதுமக்களை விரட்ட செய்தார். அவர்கள் ஆற்றின் அக்கரையில் போய் நின்றார்கள்.
உடைகள் காணாமற் போனது அனைவர்க்கும்
வியப்பளித்தது. திருட்டு ஒன்றுதான் காரணமாக இருக்க முடியும்; ஆனால் கந்தலை எவன் திருடுவான்? துணை ஆய்வர், " தந்திரமாக இருக்கலாம்; கொலையாளி சூழ்ச்சிக்கார அயோக்கியன்; எப்படியாவது அவனைப் பிடித்துவிடுவோம் "
என்று சொல்லிய கையோடு, ' பிணத்தை
நகருக்குக் கொண்டுபோக வேண்டும்; அங்கு சோதனை
நடக்கும் ' என முடித்தார்.
வண்டி ஏற்பாடு செய்து, உடலைத் தூக்க முற்பட்டபோது, தாயார், குனிந்து, மகளைத் தழுவிக்கொண்டு, "தரமாட்டேன், அவள் என் பெண், அவளைக் கொன்னுட்டாங்க, விடமாட்டேன், நான் வைச்சுக்குவேன் ' என்று கதறினாள். மேயர் மண்டியிட்டு அவளிடம்
பேசினார்: "இங்கே பாரும்மா, கொன்றவனைக்
கண்டுபிடிக்க வேண்டுமல்லவா? உடம்பைச்
சோதிக்காமல் கண்டுபிடிக்க முடியாதே! உன் மகளை மறுபடி உன்கிட்டே கொடுப்போம்"
என்றார். அவரது இதமான பேச்சு அவளை இளக்கிற்று.
அந்த சிறு உடம்பு வண்டிக்குள் மறைந்தபோது,
முதியவள், "எனக்கு இன்னமே ஒன்றுமில்லை; உலகத்திலே ஒன்றுமே இல்லை; அவளுடைய சின்னத் தொப்பிகூட இல்லையே!"
எனக் குமுறினாள்.
இரவு சீக்கிரமே படுத்த மேயர், துணை ஆய்வர் வந்தபோதுகூட, உறங்கிக்கொண்டிருந்தார். "இன்னுமா
உறக்கம்? எழுந்திருங்கள்,
புது சேதி
சொல்லப்போகிறேன்!" என்றார். மேயர் எழுந்து உட்கார்ந்தார்.
"என்ன அது?
-- அந்த அம்மா, பிள்ளையின் நினைவாகத் தொப்பி கேட்டாள் அல்லவா?
இன்று காலை, பாருங்கள், கதவைத் திறந்தபோது நிலையருகில், சிறுமியின் காலணிகள் இருக்கக் கண்டிருக்கிறாள்.
இதிலிருந்து என்ன நிரூபணம் ஆகிறது? இந்தப் பக்கத்து
ஆசாமிதான் கொலைகாரன்; கிழவிமேல்
இரக்கம்கொண்டிருக்கிறான். ஓரளவு பண்பாடும் நெகிழ் மனமும் உடையவனாகத் தெரிகிறான்;
நாம் இந்த
ஊர்க்காரர்களைப் பற்றி அலச வேண்டும்".
மேயர் எழுந்து நின்று, மழித்துக்கொள்ள வெந்நீர் கொண்டுவரும்படி
வேலையாளுக்கு ஆணையிட்டார். பின்பு, "அலசலாம்; அதிக காலம்
பிடிக்கும்; எனவே உடனே
தொடங்கிவிடுவோம்" என்றார். கண்ணாடியில் முகம் பார்த்தபடி, மழிப்புக் கிரீமைத் தடவியபின்பு, தோல் பட்டையில் கத்தியைத் தீட்டினார்.
அப்பொழுது சொன்னார்: "இந்த ஊரின் மிக முக்கிய புள்ளி ரெனார்தே. மேயர்,
பெரும் பணக்காரர்,
நிலக்கிழார், காவல்காரர்களையும் தலையாரியையும் அடிக்கிற
முரட்டு ஆள்".
அதிகாரி பலமாய் சிரித்துவிட்டு, " போதும், அடுத்த புள்ளியைப் பார்ப்போம்" என்று
சொல்ல, " இரண்டாமவர் திரு.
பேல்லு; துணை மேயர்,
மாடு வளர்ப்பவர், என்னைப் போலவே பெரிய மிராசுதார், காசிலே கெட்டி; ஆனால் இப்படிப்பட்ட வேலையை செய்யக்கூடியவர்
அல்ல" என்றார் மேயர்.
-- சரி, அடுத்து?"
ரெனார்தே முகம் கழுவிக்கொண்டபின், ஊர்க்காரர்கள் பற்றிய தகவல்களை விவரித்தார்.
துணை ஆய்வரின் கவனத்தில், ஐயத்துக்கு உரிய
மூவர் நின்றனர்: திருட்டு வேட்டையாடும் கவால், ஆற்றில் தூண்டில் போடுகிற பக்கே, கிடைக்கார க்லோவீஸ்.
கைது செய்து விசாரித்ததில், நிரபராதிகள் என்பது உறுதிப்பட்டது. கோடைக்காலம்
முழுதும் வலை வீசித் தேடியும் குற்றவாளி சிக்காமையால் காவல் துறை நடவடிக்கைகளைக்
கைவிட்டது.
(தொடரும்)
படம் உதவி - இணையம்
00000000000000000000000000000000
அடுத்த பகுதியை ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறேன்...
ReplyDeleteவாசித்துக் கருத்து எழுதியமைக்கு மிக்க நன்றி .
Deleteஅடப்பாவமே.. சிறுமியையும் விட்டுவைக்காத கொடூர மனம் கொண்ட கொலைகாரன் யாராயிருக்கும்.. கிழவி மேல் இரக்கமாம்.. சிறுமி மேல் கிஞ்சித்தும் கருணையில்லையாம்.. என்ன விநோதம்.. தொடர்ச்சிக்காகக் காத்திருக்கிறேன்.
ReplyDeleteநம் நாட்டிலும் அடிக்கடி ஏடுகளில் செய்தி வருகிறதே ! கொலைகாரனுக்கு ஒரு பக்கம் இரக்கம் மறு பக்கம் கொடூரம் ! விசித்திரம் தான் . உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி .
Deleteஎனக்கென்னவோ அந்தச்சிறுமியை இவ்வாறு கொடூரமாகக் கொன்று போட்டுள்ளது மேயர் ’ரெனார்தே’தான் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
ReplyDeleteதொடர்ந்து படிக்கும் ஆவலுடன்.....
உங்கள் ஐயம் சரிதானா என்பது அடுத்த பதிவில் தெரிந்துவிடும் . தொடர்ந்து வாசியுங்கள் . உங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி .
Deleteகதையின் போக்கு ரசிக்கச் செய்கிறது முடிவு எழுத்தாளர் கையில்
ReplyDeleteரசித்துக் கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி . இது பிரஞ்சுக் கதையின் மொழிபெயர்ப்பு .
Deleteகதை சுவாரசியமாயிருக்கிறது. கொலைகாரன் யாராயிருக்கும்? தொடர்ந்து படிக்க ஆவலாயிருக்கிறேன்.
ReplyDeleteசுவைத்துக் கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி.
Deleteரசித்தேன்....
ReplyDeleteதொடருங்கள்.
ரசித்தமைக்கும் தொடர்வதற்கு ஊக்கமூட்டியமைக்கும் மிக்க நன்றி .
Delete