Tuesday, 6 June 2017

மாறும் இலக்கணம்





இலக்கியங்களுக்குப் பின்பே இலக்கணந் தோன்றும் என்பதைப் பலரும் அறிவர். இலக்கண ஆசிரியர்கற்றறிந்தோரின் மொழிவழக்குகளை ஆராய்ந்துஅவற்றை வகைப்படுத்தித் தேவையானவற்றுக்குப் பெயர் சூட்டி, விதிகளை உருவாக்கி நூலியற்றுவார். அந்த விதிகளைப் பின்பற்றிப் படைப்புகள் பிறக்கும்.

  ஒரு மொழியின்முதல் இலக்கண ஆசிரியரின் பணி மிகக் கடினம், அவருக்கு முன்னோடி இல்லாமையால்.

  நமக்குக் கிடைத்துள்ள தொல்காப்பியம் இலக்கண நூல்களுள் முந்தியது; இது சங்க இலக்கியங்களுக்கும் முற்பட்டது என்பது ஆய்வாளர் கருத்து. அதற்குப் பின்னர்த் தோன்றிய முக்கிய நூல் வீரசோழியம் (11 ஆம் நூ.) நிலைத்து நிற்கவில்லை; அடுத்து வந்த நன்னூல், பவணந்தியால் (13 ஆம் நூ.) இயற்றப்பட்டுத் தனக்குப் பிந்தைய

 1 --நேமிநாதம் (12)
 2-- இலக்கண விளக்கம் (17)
 3 -- தொன்னூல் விளக்கம் (17)
 4 -- இலக்கணக் கொத்து (17)
 5-- பிரயோக விவேகம் (17)
 6 -- முத்துவீரியம் (19)

  ஆகிய எல்லா நூல்களையும் புறந்தள்ளிக் காலத்தையும் வென்று இன்றுவரை ஆதிக்கஞ் செலுத்துகிறது.


தமிழறிஞர் தொன்றுதொட்டுப் போற்றிவருவன தொல்காப்பியமும் நன்னூலுமே. இவ்விரண்டுக்குமிடையே பன்னூறாண்டு கழிந்த நிலையில்வேறுபாடுகள் இருப்பது இயல்புதானே?

  காட்டுகள்:

  1 -- குற்றியலிகரம், குற்றியலுகரம், ஆய்தம் எனச் சார்பெழுத்து மூன்று என்று தொல்காப்பியர் கூறியிருக்கப் பவணந்தி ஏழு கூட்டிப் பத்தென்றார்.

 2 -- அவர் சொன்ன சாரியைகள் அக்கு, இக்கு, வற்று; அவற்றை இவர் அ, கு, அற்று என மாற்றியதோடு இற்று என்ற ஒன்றனைப் புதியதாய்ச் சேர்த்தார்.

 3 -- தொல்காப்பியத்தில் இல்லாத கிறு, கின்றுஆநின்று என்ற மூன்று நிகழ்கால இடைநிலைகளை நன்னூல் சொல்லுகிறது.

  பவணந்தியார் காலத்துத் தமிழுக்கு இலக்கணமாய்த் திகழ்வது நன்னூல்அதற்குப் பின்பு எழுநூறு ஆண்டுகள் ஓடிவிட்டனவே! அதன் விதிகள் நூற்றுக்குநூறு இப்போது எவ்வாறு பொருந்தும்?

  1 -- தன்மைப் பன்மை வினைமுற்று விகுதிகள் அம், ஆம், எம், ஏம், ஓம், கும், டும், தும், றும் என நன்னூல் ஒன்பதைப் பட்டியலிடுகிறது; அவற்றுள் ஓம் ஒன்றே உயிர்பிழைத்துள்ளது; காட்டு: வந்தோம், செய்வோம்.

  2 --  ஆநின்று இடைநிலை மாண்டுவிட்டது.

  3 -- , , உ என முச்சுட்டைச் சொன்னார் பவணந்தி; இப்போது உ பயன்படுவதில்லை.

 4 -- வினையெச்ச விகுதிகளின் வாய்பாடு 12 கூறப்பட்டுள்ளன; அவற்றுள் செய்து செய என்ற இரண்டு மட்டுமே இப்போது உண்டு; செய்தால்செய்திருந்தால், செய்துவிட்டால் முதலிய புது வினையெச்ச வடிவங்கள் தோன்றியிருக்கின்றன.

 5 --  யார் என்பது உயர்திணைக்குரியது; அதை மாணிக்கவாசகர் ஆர் என  மாற்றியதுடன், 'என் உள்ளம் ஆர்?' என அஃறிணைக்குப் பயன்படுத்தினார்.

  6 --  ஆறாம் வேற்றுமைப் பொருள், உடைமை; ஆதலால் எனது வீடு, அவளது குடை என்றெழுதுவது போல் எனது மனைவி என்று எழுதுதல் கூடாது; மனைவி உடைமையல்லவே! ஆனால் பாரதிதாசன், "வலியோர் சிலர்" எனத் தொடங்கும் பாட்டில், உலகாள உனது தாய்..." என்றார்; வேறு பல அறிஞரும் இவ்வாறு எழுதுவதால், ஆறாம் வேற்றுமைக்கு முறைப்பொருளும் உண்டு என்று கொள்ளவேண்டும்.

 7 --பொதுப் பெயர்க்குப் பின் வல்லினம் மிகக்கூடாது என்பது விதி; தாய் கை, தங்கை தலை, தம்பி கால் என்பன சரிஆனால், குமரகுருபரர், தமது நீதிநெறி விளக்கத்தில், ( பா 32 ), தாய்க் கொலை என்றெழுதியிருக்கிறார்; தாய்ப் பறவை, தாய்ப் பசு என்னும் வழக்குகளும் உண்டு.

 8 -- "இப்படிச் செய், எப்படிக்கேட்டாய்?" என விதி கூறுகிறது நன்னூல்; ஆறுமுக நாவலர், (19 ஆம் நூ.) இலக்கணச் சுருக்கம் என்ற நூலில், " சுட்டு வினாக்களையடுத்த ' படி' முன் உறழ்ச்சி" என்று புது விதி வகுத்துள்ளார்; அதனால், இப்படி செய், இப்படிச் செய்; எப்படி கேட்டாய்? எப்படிக் கேட்டாய்? என இருவிதமாகவும் எழுதலாம்.

 9 -- மதுரைக் கூலவாணிகன் சாத்தனார் என்பது ஒரு பழம்புலவரின் பெயர்; அது போல் 'மதுரைக் காமராஜர் பல்கலைக் கழகம்' என்றுதான் எழுதவேண்டும்; தமிழண்ணல், மதுரை காமராஜர் என க் போடாமல் எழுதச் சொல்லுகிறார். (நூல்: உங்கள் தமிழைத் தெரிந்துகொள்ளுங்கள்).
 மாற்றங்கள் ஏற்படும் என்பதனைப் பவணந்தி எண்ணிப் பார்த்து,

    பழையன கழிதலும் புதியன புகுதலும்
    வழுவல ...

 என்றார்.

  நம் காலத் தமிழ்க்கான இலக்கண நூல், 'இக்காலத் தமிழ் இலக்கணம்' என்னுந் தலைப்புடன் 2002 இல் பிரசுரமாயிற்றுஅதனை இயற்றியவர் இன்றைய இலக்கண ஆளுமைகளுள் குறிப்பிடத்தக்கவராகிய முனைவர் த. பொற்கோ. அதன் முன்னுரையில், ( பக். 2) "இன்றைய இலக்கியத் தமிழுக்கு நன்னூலும் தொல்காப்பியமும் போதுமானவையாக அமையவில்லை; ஆகவே இன்றைய தமிழுக்கு ஒரு புதிய இலக்கணம் தேவை" என்று அவர் எழுதியிருப்பது ஏற்கத்தக்கது.

  பழைய இலக்கண நூல்களிலிருந்து விலகிப் புது முறையில் எழுதியுள்ள அதன் 264 ஆம் பக்கத்தில் புது விதி வகுத்துள்ளார். 'இக்காலத் தமிழில் அல்ல என்பது ஐம்பால் மூவிடப் பொது வினையாக மாறிவிட்டது என்று சொல்லவேண்டும்" என்று தெரிவித்துஅவனல்ல, அவளல்ல, அவையல்ல என்று காட்டுகள் தருகிறார். ஆகவேநானல்லேன், நீயல்லை, நாமல்லோம் என்றெல்லாம் பழைய விதிப்படி எழுதத் தேவையில்லை.

  123 ஆம் பக்கத்தில், " சந்தி இலக்கணத்திலும் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது; இதை உணர்ந்து இன்றைய மொழிநிலைக்கு ஏற்ப ஒரு சந்தி இலக்கணத்தை நாம் இங்கே விளக்கவேண்டியுள்ளது" என்று கூறிப் புதிய விதிகளை விவரித்துள்ளார்:

  எடுத்துக்காட்டாக,

1 -- அஃறிணைக்கே உரியவாயிருந்த பல, சில என்பவை இக்காலத்தில் உயர்திணையிலும் பயன்படுகின்றன எனச் சொல்லிசில மாணவர்கள் இங்கு வந்தார்கள் என்று காட்டு தந்துள்ளார். (பக்.343).

 2 --பத்துபேர் (130) , சாக்குபோக்கு (131) , பத்து பத்தாக, (156) , பாட்டுதான் (156 ) என்றெல்லாம் வன்றொடர்க் குற்றியலுகரங்களுக்கு முன் ஒற்று மிகாமல் எழுதலாம் எனப் புதுவிதி கூறியிருக்கிறார்இதைப் பின்பற்றிநான் பத்து தகவல்கள் என்று என் பதிவு ஒன்றனுக்குத் தலைப்பிட்டேன்.

  கஃறீது, முஃடீதுவாட்டடங்கண், முட்டாட்டாமரை முதலான கடினமான புணர்ச்சிகள்உயிரளபெடை, ஒற்றளபெடை, குற்றியலிகரம், மகரக்குறுக்கம் முதலிய சார்பெழுத்துகள், ஆகியவற்றைத் தமிழானது கைகழுவிவிட்டு எளிமைக் கோலம் பூண்டு பொலிவடைந்திருக்கிறதுஆனால், மேலும் எளிதாக்கலாம் என  நினைத்துஇலக்கணத்தை அறவே புறக்கணிப்பது மொழியைச் சீர்குலைக்கும். புதிய இலக்கண நூலை அடிப்படையாகக் கொண்டு பள்ளிப் பாடத்திட்டத்தைச் சீரமைப்பது அரசின் கடமை; இதனால் மாணவர்கள் நலன் பெறுவார்கள். புத்திலக்கணத்தைத் தழுவுவோம், காலத்தோடு ஒட்ட ஒழுகுவோம்.

                                                           ------------------------------------------------

 (படங்கள் உதவி - இணையம்)

8 comments:

  1. தமிழ் இலக்கிய இலக்கணங்கள் பற்றி இதுவரை அறியாத பல அபூர்வமான விஷயங்களைத் தங்களின் இந்தப் பதிவு மூலம் அறியப்பெற்றேன்.

    தொல்காப்பியமும் நன்னூலுமே நல்லதொரு வழிகாட்டியாக இருந்துள்ளன என்பதை அறிந்ததில் மிக்க மகிழ்ச்சி.

    பகிர்வுக்கு நன்றிகள், ஐயா.

    ReplyDelete
    Replies
    1. ஊக்கமூட்டும் உங்கள் பின்னூட்டத்திற்கு மிகுந்த நன்றி .

      Delete
  2. மிக மிக அருமை ஐயா...

    நன்றிகள் பல...

    ReplyDelete
    Replies
    1. பாராட்டிக் கருத்துரைத்தமைக்கு மிகுந்த நன்றி .

      Delete
  3. பள்ளியிலும் நூல்களிலும் படித்த இலக்கணங்களை விட வாசிப்பதில் அறிந்தவையே அதிகம்

    ReplyDelete
    Replies
    1. சரிதான் உங்கள் கருத்து . பள்ளியில் ஆசிரியர் கற்பிப்பதில் நான் பல தவறுகள் கண்டிருக்கிறேன் ; இலக்கண நூலும் கவர்ச்சியற்றுப் பயிற்சிகள் இல்லாமல் வெறுப்பூட்டுவதாகவே மாணவர்களுக்குத் தோன்றுகிறது . உங்கள் பின்னூட்டத்துக்கு மிகுந்த நன்றி .

      Delete
  4. தொல்காப்பியம், நன்னூல் இவையிரண்டுக்குமிடையில் தோன்றிய தமிழ் இலக்கண நூல்களில் வீர சோழியம், முத்து வீரியம் பற்றி மட்டுமே கேள்விப்பட்டிருக்கிறேன். மற்றவை பற்றி இன்று தான் தெரிந்து கொண்டேன்.
    பொற்கோ எழுதிய இக்காலத்தமிழ் இலக்கணம் பற்றியும் தெரிந்து கொண்டேன். இக்காலத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை ஆராய்ந்து, அதற்கேற்றாற்போல், புதிய இலக்கணம் எழுத வேண்டியது காலத்தின் கட்டாயம்.
    பத்துபேர், சாக்குபோக்கு, பத்து பத்தாக பாட்டுதான் என்றெல்லாம் வன்றொடர்க்குற்றியலுகரங்களுக்கு முன் ஒற்று மிகாமல் எழுதலாம் எனப் புது விதி கூறியிருப்பதை அறிந்தேன்.
    மிகவும் பயனுள்ள பதிவுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
    Replies
    1. பின்னூட்டத்துக்கு மிகுந்த நன்றி . பொற்கோவின் நூலிலும் பழையன கழித்துப் புதியன சேர்த்து அவ்வப்போது இலக்கணங்கள் வெவ்வேறு அறிஞர்களால் இயற்றப்படவேண்ண்டும் .

      Delete