Tuesday 20 June 2017

விளையும் பயிர் ...




(பிரஞ்சு எழுத்தாளர் ழான் போல் சார்த்ரு (Jean Paul Sartre - 1905/1980) இலக்கிய நோபல் பரிசு பெற்றவர்; அவருடைய நூல்கள் பல்வேறு மொழிகளில் பெயர்க்கப்பட்டுள்ளன. அவற்றுள் ஒன்று 1964-இல் வெளிவந்த லே மோ (Les Mots = சொற்கள்). நான்காம் வயதிலிருந்து பதினோராம் வயது வரைக்குமான தமது வாழ்க்கை வரலாற்றை அதில் அவர் விவரித்துள்ளார்.   

 சார்த்ரின் தந்தை ழான் பப்தீஸ்த், தம் இளமையில் காலமாகிவிடவே, தாயார் ஆன்னு மரீ (Anne Marie), குழந்தையுடன் தம் பெற்றோரின் வீட்டில் போய் வசிக்கலானார். அவருடைய தகப்பனார் ஷார்ல், பேராசிரியராய்ப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

 ஏழாம் வயதிலேயே எழுத்தாளர் ஆவதற்கான முயற்சி மேற்கொண்ட சார்த்ரு, தாம் வாசித்த சிறுவர் இதழ்களில் தம்மைக் கவர்ந்தவற்றை ஒரு சுவடியில் குறிக்கும் வழக்கத்தைக் கைக்கொண்டார். அவற்றைக் காப்பியடித்து எழுதவும் செய்தார்.

 அந்நூலிலிருந்து சில பகுதிகளை, பொருத்தமான தலைப்பு தந்து, மொழிபெயர்த்திருக்கிறேன்:)

 "என் தாயார் அளவின்றி ஊக்கமூட்டினார். இளம் படைப்பாளியைக் காட்டுவதற்காக அவர், விருந்தினரை என் அறைக்கு அழைத்து வருவார்; அவர்களின் வருகையைக் கவனிக்காத அளவுக்கு வேலையில் ஆழ்ந்திருப்பதுபோல் காட்டிக்கொள்வேன். 'மிகச் சிறு வயது, மிக அழகிய காட்சி' என அவர்கள் மென்குரலில் சொல்லிக்கொண்டு கால் விரல் நுனிகளில் வெளியேறுவார்கள். 'ஏதோ எழுதட்டும், சாதுவாக இருக்கிறானே, சத்தம் போடுவதில்லையே, அது போதும்' என்று அம்மா சொல்லுவார்.

  நான் எழுதத் தொடங்கியிருப்பதை ஷார்லிடம் என் தாயார் தெரிவித்தபோது அவர்க்குப் பெருமகிழ்ச்சி; எங்கள் குடும்பம் பற்றிய சுவையான தகவல்களை எழுதுவேன் என எதிர்பார்த்தார் போலும். என் சுவடியை எடுத்துப் புரட்டினார்; சில இதழ்களின் உளறல்களையே என் எழுதுகோல் மறுபிரசவித்திருந்தமை கண்டு உதட்டைப் பிதுக்கிவிட்டு வெளியேறினார். பின்பு என் எழுத்தில் அக்கறையே காட்டவில்லை.

 என் தாயார், 'வாழைப்பூ வணிகர்' என்னும் என் புதினத்தை வாசிக்கச் செய்துவிட வேண்டும் எனப் பல தடவை முயன்று பார்த்தார்.

 இவர் காத்திருப்பார், அவர் தம் நாற்காலியில் அமர்வதற்காக. அவர், மெளனமாய், முழங்கால்களின்மீது கைகளை வைத்துக்கொண்டு ஓய்வெடுக்கையில், அம்மா என் கையெழுத்துப் பிரதியை எடுத்துப் புரட்டிப் பார்த்துத் திடீரென வாய்விட்டுச் சிரிப்பார்; உடனே என் பாட்டனாரிடம் நீட்டி, "வாசித்துப் பாருங்கள்,அப்பா! எவ்வளவு வேடிக்கையாக இருக்கிறது!" என்பார்; அவரோ, சுவடியைக் கையால் ஒதுக்கித் தள்ளுவார்; அல்லது ஒரு கண்ணோட்டம் விட்டு, எழுத்துப் பிழைகளை எடுத்துச் சொல்லி ஏளனஞ் செய்வார்.

 நாளடைவில் என் தாய்க்கு அச்சம் ஏற்பட்டுவிட்டது; விமர்சனத்தால் எனக்கு மன வருத்தம் உண்டாகக்கூடாது என்பதற்காக என் எழுத்துகளை வாசிப்பதை நிறுத்தினார், அவை பற்றி என்னிடம் பேசுவதைத் தவிர்க்கும் நோக்கத்தில்.

  இருப்பினும் தொடர்ந்து எழுதினேன்: விடுமுறைக் காலங்களிலும், நான் அதிர்ஷ்டவசமாய் நோய்வாய்ப்பட்டால், என் கட்டிலிலும். நான்  நினைவு கூர்கிறேன், உடல் தேறி வந்தபொழுது, பின்னல்வேலை செய்கிறவர்களைப் போன்று, என் சுவடியை நான் எடுப்பதும் வைப்பதுமாய் இருந்ததை. என் புதினங்களே எனக்கு எல்லாம்; என் மகிழ்ச்சிக்காக நான் எழுதினேன்.

 ஒரு காலையில் நாளிதழைத் திறந்தபோது, அச்சத்தில் உறைந்துபோனேன். பற்பல செய்திகளுக்குள் ஒன்று என்னைத் திடுக்கிட வைத்தது. எனக்கு இன்னமும் நினைவிருக்கிறது தலைப்பு: 'மரங்களில் காற்று'.

  ஒரு மாலை வேளையில், நோயாளிப் பெண்ணொருத்தி தன் கோடை வாசஸ்தலத்தின் மாடியில், தனியாய்க் கட்டிலில் புரண்டுகொண்டிருந்தாள். திறந்திருந்த சன்னல் வழியாக ஒரு மரம் தன் கிளைகளை அறைக்குள் நுழைத்தது; கீழ்த் தளத்தில் சிலர் கூடி, தோட்டத்தில் இரவு கவிவதைப் பார்த்தபடி உரையாடிக்கொண்டிருந்தனர்; அவர்களுள் ஒருவர் திடீரென மரத்தைச் சுட்டிக்காட்டி, 'அட, காற்று இருக்கிறதே!' என்றார்; ஒரே வியப்பு! வெளியில் வந்து பார்த்தால், காற்று லேசாய்க்கூட வீசவில்லை; எனினும் இலைகள் அசைந்தன.

 அப்போது ஓர் அலறல்! நோயாளியின் கணவர் அவசர அவசரமாய் மாடி யேறினார். கட்டிலில் அமர்ந்திருந்த நோயாளி, கை நீட்டி மரத்தைக் காட்டியபடி இறந்து சாய்ந்தார். மரம் தன் பழைய நிலைக்குத் திரும்பிற்று.
அவள் என்ன பார்த்தாள்?

 ஒரு மனப்பிணியாளர் மருத்துவமனையிலிருந்து தப்பிப் போய்விட்டார்; அவர், மரத்தில் மறைந்துகொண்டு, கோணங்கி காட்டியிருப்பார்; அவராய்த்தான் இருக்கவேண்டும்; ஏனெனில் வேறெந்தக் காரணமும் புலப்படவில்லை. ஆனால்? அவர் ஏறியதையோ இறங்கியதையோ எப்படி யாரும் பார்க்காமலிருக்க முடியும்? நாய்கள் ஏன் குரைக்கவில்லை? ஆறு மணி நேரத்தில் எப்படி அவரைக் கைது செய்தார்கள், நூறு கிலோமீட்டருக்கு அப்பால்? விடை தெரியா வினாக்கள்! நிருபர் தம் கருத்தைக்கூறி செய்தியை முடித்திருந்தார்: 'கிராம மக்களின் கூற்றுப்படி, மரக்கிளையை அசைத்தது சாவுக்கடவுள் தான்'.

 இது போன்ற பயங்கரக் கதைகள் அப்போது பல நூல்களில் கூறப்பட்டிருந்தமையால் எனக்குப் புத்தகங்களைப் பற்றி அச்சம் ஏற்பட்டது; இருந்தாலும்  காப்பியடித்தேன்.

..............................................................................................................................................

 பூர்ஷ்வா குழந்தைகள் தத்தம் எதிர்காலக் கனவு பற்றிச்  சொல்லுகிற பருவத்தை நான் அடைந்தேன்.

  என் மாமனின் மக்கள், தங்கள் தந்தையைப் போன்றே பொறியாளர் ஆவார்கள் என்று நீண்ட காலத்துக்கு முன்பே எங்களுக்குத் தெரிவித்திருந்தனர்.

 என் நெற்றியில் நான் சுமந்திருந்த அறிகுறியைக் கண்டுபிடித்த முதல் ஆளாக இருக்க விரும்பிய எங்கள் குடும்ப நண்பி, திருமதி பிக்கார், " இந்தப் பையன் எழுதுவான்" எனப் பலத்த நம்பிக்கையுடன் கூறினார்; எரிச்சலுற்ற பாட்டி லூய்சு, சிறிய மற்றும் உணர்ச்சியற்ற சிரிப்பை உதிர்த்தார்; திரும்பி அவரை நோக்கிய ப்ளான்ஷ் பிக்கார் மறுபடியும் உறுதியாகச் சொன்னார்:

 "இவன் எழுதுவான்,  எழுதப் பிறந்தவன்". ஷார்ல் என்னை ஊக்குவிக்கமாட்டார் என்பது என் தாயாருக்குத் தெரியும்; சங்கடங்கள் வரக்கூடும் என அவர் அஞ்சினார்: "நீங்கள் நம்புகிறீர்களா, ப்ளான்ஷ்? நம்புகிறீர்களா?" என்று கேட்டார்; ஆனால் இரவு நான் கட்டிலில் படுத்தபோது அவர் என் தோள்களை வலுவாய் அழுத்திப் புன்னகையுடன் கூறினார்: 'என் சின்னக்கண்ணு எழுதும்!'.

 என் பாட்டனாரிடம் தெரிவித்தனர், பக்குவமாய், அவரது சீறலுக்கு அஞ்சி; அவர் தலையை ஆட்டியதோடு சரி. சில நாள்களுக்குப் பின்பு, அவர், தம் நண்பர் சிமோன்னோவிடம் பின்வருமாறு சொன்னது என் காதில் விழுந்தது: "ஒரு திறமை வெளிப்படுவதை, யாரும் தம் இறுதிக்காலத்தில் மனக் கிளர்ச்சி இல்லாமல் பார்க்க முடியாது". ஆயினும் என் கிறுக்கல்களைக் கண்டுகொள்ளாமல் இருப்பதைத் தொடர்ந்தார்.

  ஒரு நாள் மாலை, என்னைத் தம் தொடைகளில் அமரவைத்து என்னிடம் சீரியசாகப் பேசத் தொடங்கினார். நான் எழுதுவேன், அது தீர்மானிக்கப்பட்ட விஷயம். அவர் என் ஆசைக்கு மாறாய்ப் பேசுவார் என நான் அஞ்சவில்லை.

 அவர் சொன்னார்: "எதார்த்தத்தை நேருக்கு நேராகவும் தெளிவாகவும் பார்க்கவேண்டும். இலக்கியம் உணவளிக்காது; புகழ் வாய்ந்த எழுத்தாளர் பலர் பட்டினியால் செத்தார்கள் என்பது தெரியுமா? வேறு சிலர் சாப்பாட்டுக்காகத் தம்மை விற்றுக்கொண்டானர் என்பது? தன் சுதந்தரத்தைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டுமானால், வேறொரு தொழிலையுந் தேர்வது அவசியம். பேராசிரியர்க்கு நிறைய ஓய்வுண்டு; பல்கலைக்கழகப் பணிகள் இலக்கியவாதிகளின் வேலைகளுக்கு ஒப்பானவைதான். இடம் விட்டு இடம் மாறிக்கொண்டே இருக்கலாம்; பெரும்பெரும் நூலாசிரியர்களின் தொடர்புடன் வாழலாம்; அவர்களுடைய படைப்புகளை நம் மாணவர்களுக்குப் பாடஞ்சொல்கிற அதே சமயம் அவற்றிலிருந்து நாம் அகவெழுச்சி (inspiration)  கொள்ளலாம்; உன் தனிமையிலிருந்து திசை திரும்பக் கவிதை புனையலாம்; லத்தீன் கவிஞர்களை மொழிபெயர்க்கலாம்; உள்ளூர்ச் சஞ்சிகைகளுக்கு சிறசிறு இலக்கியக் கட்டுரைகள் அனுப்பலாம்; கல்வி போதனை குறித்த இதழில் கிரேக்க மொழியைக் கற்பிப்பதற்கான வழி பற்றி உயர்தரமான கட்டுரை எழுதலாம். இள வயதினரின் மனவியல் (psychology) பற்றியும் எழுதலாம்".

என்னை அவர் இலக்கியத்திலிருந்து வெளியேற்றச் செய்த முயற்சி என்னை அதில் தள்ளிற்று.

                    +++++++++++++++++++++++++++++
 (படம் உதவி - இணையம்)


10 comments:

  1. வணக்கம்
    ஐயா

    அறியாததகவலை அறியத்தந்தமைக்கு நன்றி ஐயா தொடருகிறேன்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் , கவிஞரே , பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி. தொடருங்கள் வரவேற்கிறேன் . .

      Delete
  2. //நான் எழுதத் தொடங்கியிருப்பதை ஷார்லிடம் என் தாயார் தெரிவித்தபோது அவர்க்குப் பெருமகிழ்ச்சி; எங்கள் குடும்பம் பற்றிய சுவையான தகவல்களை எழுதுவேன் என எதிர்பார்த்தார் போலும். என் சுவடியை எடுத்துப் புரட்டினார்; சில இதழ்களின் உளறல்களையே என் எழுதுகோல் மறுபிரசவித்திருந்தமை கண்டு உதட்டைப் பிதுக்கிவிட்டு வெளியேறினார். பின்பு என் எழுத்தில் அக்கறையே காட்டவில்லை.//

    //சுவடியைக் கையால் ஒதுக்கித் தள்ளுவார்; அல்லது ஒரு கண்ணோட்டம் விட்டு, எழுத்துப் பிழைகளை எடுத்துச் சொல்லி ஏளனஞ் செய்வார்.//

    //நாளடைவில் என் தாய்க்கு அச்சம் ஏற்பட்டுவிட்டது; விமர்சனத்தால் எனக்கு மன வருத்தம் உண்டாகக்கூடாது என்பதற்காக என் எழுத்துகளை வாசிப்பதை நிறுத்தினார், அவை பற்றி என்னிடம் பேசுவதைத் தவிர்க்கும் நோக்கத்தில்.//

    //இருப்பினும் தொடர்ந்து எழுதினேன்: //

    //பிரஞ்சு எழுத்தாளர் ழான் போல் சார்த்ரு (Jean Paul Sartre - 1905/1980) இலக்கிய நோபல் பரிசு பெற்றவர்; அவருடைய நூல்கள் பல்வேறு மொழிகளில் பெயர்க்கப்பட்டுள்ளன.//

    வீட்டில் உள்ளோரே ஊக்கமும் உற்சாகமும் அளிக்காவிட்டாலும் கூட, அவர் விடாமுயற்சியுடன் எழுதிக்கொண்டே இருந்ததால் மட்டுமே இத்தகைய சாதனைகளை எட்ட முடிந்துள்ளது. கேட்கவே மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

    ReplyDelete
    Replies
    1. சரியான கருத்தைத் தெரிவித்திருக்கிறீர்கள் .பலர் ஆதரிக்காவிட்டாலும் சிலர் எதிர்த்தாலும் மனவுறுதி மட்டும் இருந்துவிட்டால் " எண்ணிய எண்ணியாங்கு எய்துவர் " .பின்னூட்டத்திற்கு மனம் உவந்த நன்றி .

      Delete
  3. //அவர் சொன்னார்: "எதார்த்தத்தை நேருக்கு நேராகவும் தெளிவாகவும் பார்க்கவேண்டும். இலக்கியம் உணவளிக்காது; புகழ் வாய்ந்த எழுத்தாளர் பலர் பட்டினியால் செத்தார்கள் என்பது தெரியுமா? வேறு சிலர் சாப்பாட்டுக்காகத் தம்மை விற்றுக்கொண்டானர் என்பது? தன் சுதந்தரத்தைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டுமானால், வேறொரு தொழிலையுந் தேர்வது அவசியம்.//

    அந்தப்பெரியவர் சொல்லியுள்ளவைகளெல்லாம் முற்றிலும் மறுக்க முடியாதுதான்.

    ReplyDelete
    Replies
    1. மெய்தான்; இலக்கியம் சோறு போடுவதில்லை . வ. ரா . என்ற புகழ் பெற்ற எழுத்தாளரிடம் யாராவது எழுத்தாளராக இருக்கிறேன் என்று சொன்னால் அது சரி , பிழைக்க என்ன செய்கிறீர்கள் எனக் கேட்பாராம் . உங்கள் பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி .

      Delete
  4. //என்னை அவர் இலக்கியத்திலிருந்து வெளியேற்றச் செய்த முயற்சி என்னை அதில் தள்ளிற்று.//

    அருமை. சிலர் நம்மை கேலிசெய்து, உதாசீனப்படுத்தும்போது, நமக்குள் ஒரு வெறி ஏற்பட்டு, நாம் சாதித்துக்காட்ட வேண்டும் என்ற வீம்பு ஏற்படுவது உண்டு.

    1966-இல் 11th Std. S.S.L.C., முடித்தபின் மேற்கொண்டு படிக்கவைக்க முடியாத சூழ்நிலையில் என் குடும்பம் இருந்தது.

    நானும்கூட இதே போன்றதோர் வெறி ஏற்பட்டதால் மட்டுமே, என் நாற்பதாவது வயதுக்கு மேல் 47-வது வயதிற்குள் மூன்று வெவ்வேறு பல்கலைக்கழங்களில் சேர்ந்து B.Com., (Commerce) - 3 Years; M.A., (Sociology) - 2 Years & 2 Years PG Diploma in Personnel Management & Industrial Relations என்ற மூன்று பட்டங்களை
    என்னால் வாங்க முடிந்தது.

    அருமையானதொரு பகிர்வுக்கு நன்றிகள், ஐயா.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் பின்னூட்டம் பலருக்குத் தூண்டுகோலாக உதவும் . உங்கள் சாதனை வியக்க வைக்கிறது . பாராட்டுகிறேன் .

      Delete
  5. வருக , வருக ! உங்களுடைய பாராட்டுப் பின்னூட்டத்துக்கு மிகுந்த நன்றி . வாழ்த்துக்கும் நன்றி . .

    ReplyDelete
  6. “இலக்கியம் உணவளிக்காது; புகழ் வாய்ந்த எழுத்தாளர் பலர் பட்டினியால் செத்தார்கள் என்பது தெரியுமா? வேறு சிலர் சாப்பாட்டுக்காகத் தம்மை விற்றுக்கொண்டனர் என்பது? தன் சுதந்திரத்தைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டுமானால், வேறொரு தொழிலைத் தேர்வது அவசியம்”
    தமிழ்நாட்டில் மட்டும் தான் இந்நிலைமை என இதுநாள் வரை நினைத்துக்கொண்டிருந்தேன். உலகமுழுதும் எழுத்தாளர்களின் நிலைமை இப்படித்தான் என்றறிந்து கொண்டேன்.
    சார்த்ரு வாழ்க்கைப் பற்றிய விபரங்களை அறியச் செய்தமைக்கு நன்றி.

    ReplyDelete