Wednesday, 16 May 2018

ஔவை சு. துரைசாமி


நூல்களிலிருந்து – 18

  ஔவை சு. துரைசாமி

(பழந்தமிழ் நூல்களைப் புரிந்துகொள்வதற்கு இன்றியமையாதன பற்பல அறிஞர் இயற்றிய உரைகள். அச்சிறந்த பணியை ஆற்றிய இளம்பூரணர், சேனாவரையர், நச்சினார்க்கினியர், பரிமேலழகர் முதலானவர்களுக்கு நிகரான பெரும்புலவர் நம்மிடையே வாழ்ந்த ஔவை சு.துரைசாமி பிள்ளை. அவரது வாழ்க்கை வரலாறு மறைமலைநகர் காலஞ்சென்ற புலவர் தி.நா.அறிவு ஒளி 1998-இல் எழுதிய “தமிழறிஞர்” என்னும் நூலில் இடம்பெற்றுள்ளது. அதைச் சுருக்கிப் பதிகிறேன்.)  திண்டிவனத்துக்கு அருகில் ஔவையார்குப்பம் என்னுஞ் சிற்றூர் உள்ளது. அவ்வூரில் திரு. சுந்தரனார் அவர்களுக்கும் திருவாட்டி சந்திரமதி அம்மையாருக்கும் 5-9-1902-இல் இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. ஒன்று ஆண், அதுவே நம் ஔவை; மற்றது பெண், பெயர் பூமாதேவி.

  திரு.சுந்தரனார் ஊர்க் கணக்கராய்ப் பணியாற்றினார். தமிழில் ஆர்வமும் அறிவும் வாய்ந்தவர். மயிலம் முருகன் மீது பல செய்யுள் நூல்கள் பாடியுள்ளார்.

  துரைசாமி தம் பெற்றோர்க்கு ஐந்தாவது குழந்தை. உள்ளூரில் தொடக்கக் கல்வி முடித்துத் திண்டிவனம் உயர்நிலைப் பள்ளியில் இறுதி வகுப்பு வரை படித்தார். அப்போதே தமிழில் ஆர்வம் மிக்கவராய்த் திகழ்ந்தார். வேலூர் ஊரிசு கல்லூரியில் மேற்படிப்பு முடித்த பின்பு தஞ்சைக் கரந்தையில் நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் அவர்களிடமும் கரந்தைப் பாவரசர் வேங்கடாசலம் அவர்களிடமும் கழக இலக்கியங்களையும் தொல்காப்பியம் முதலிய இலக்கணங்களையும் கற்றார். ஆழ்ந்த புலமை பெற்றார். சிவநெறிக் கோட்பாட்டுக் கல்வியைத் திரு. கந்தசாமி தேசிகர், தவத்திரு. வாலையானந்த அடிகள் ஆகியோரிடம் கற்றுத் தெளிந்தார். 1930-இல் சென்னைப் பல்கலைக் கழகப் புரவலர் பட்டம் பெற்றார்.

  காவிரிப் பாக்கம், செங்கம், செய்யாறு, போளூர் ஆகிய ஊர்களில் தமிழாசிரியராக இருந்து நனிசிறப்பாகக் கற்பித்தார்.

  கற்றல், கற்பித்தல், நூலாராய்தல், நூலியற்றுதல் என்பன வாழ்க்கைக் குறிக்கோளாக அமைந்தன.

  கரந்தைத் தமிழ்ச் சங்கக் கல்லூரி, திருவேங்கடவன் கீழ்த்திசைக் கல்லூரியிற் பணியாற்றிய பின்பு அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தமிழ்த் துறையில் சேர்ந்தார். அங்கே ‘சைவ சமய இலக்கிய வரலாறு’ நூல் ஆராய்ந்து வெளியிட்டார். ஐங்குறுநூறு நூலுக்கு மிக அருமையான விரிவான விளக்கவுரை எழுதிப் பிரசுரித்தார்.

  உரை எழுதுவது எளிய செயலன்று. ஒரு நூலை முறையாகக் கற்றுத் தெளியவேண்டும். அந்நூலின் நுட்பமெலாம் ஆராய்ந்தறிய வேண்டும். பொருள் நுட்பம், இலக்கண அமைதி, மரபு, குறிப்புப் பொருள், சொல்நயம், சூழ்பொருள், நூலாசிரியரின் ஆற்றல், நூல்சார் ஏனைய செய்திகள் ஆகிய யாவற்றையும் நுண்மாண் நுழைபுலத்தால் ஆய்ந்து தெளிவாக உணர்த்த வேண்டியது உரையாசிரியரின் அரும்பணியாகும்.

  திரு. சு.வையாபுரியார் நற்றிணை ஓலைச்சுவடியை ஔவை அவர்களிடம் அளித்து நன்கு ஆராய்ந்து உரையெழுத வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஔவை அவ்வேட்டினைப் பிற ஏட்டுச் சுவடிகளோடு ஒப்பிட்டு ஆராய்ந்தார். மூவாயிரத்துக்குக் குறையாத பாட வேறுபாடுகளைச் சீர்தூக்கிப் பார்த்துத் தக்க பாடம் எதுவெனத் தெளிந்து அருமையான விளக்கவுரை இயற்றி இரு பெரும் தொகுதிகளாக வெளியிட்டார்.

  சிவனிய நூல் ஞானாமிர்தம் என்பது. இதன் பாடல்கள் இரும்புக் கடலை போன்றவை. இந்நூலையும் ஆய்ந்து ஔவை விளக்கவுரை எழுதினார்.

  புறநானூறு ஓலைச் சுவடியொன்றை ஆராய்ந்தபோது அதற்கு முன்பு வெளிவந்த புறநானூற்று நூலில் காணக் கிடைக்காத பாடத் திருத்தங்கள், பாட வேறுபாடுகளையறிந்து ஆராய்ச்சி உரையெழுதினார். 1947-இல் புறநானூறு முதற்பகுதியும் (1 முதல் 200 செய்யுள்) 1951-இல் இரண்டாம் பகுதியும் வெளிவந்தன.

  ஔவை அவர்களுக்குக் கல்வெட்டு, வரலாறு, தமிழக ஊர்ப் பெயர்கள் குறித்த ஆராய்ச்சியும் இருந்தமையால் கழகக்கால ஊர்கள், இடங்களைத் திட்டமாக அறிந்து தெளிவிக்க முடிந்தது.

  பதிற்றுப் பத்துக்கு உரை எழுத முற்பட்டபோது மலையாள நாட்டில் சுற்றுலாச் சென்று வரலாற்றுச் சிறப்பு உடைய இடங்களை நேரிற் பார்த்தறிந்த பின்பே உரை இயற்றினார்.

  அவரது உரைச் சிறப்பு யாதெனில் சங்க இலக்கியப் பாக்களுக்கு வரைந்துள்ள முன்னுரை எளிமையும் அருமையும் திட்பமும் நுட்பமும் வாய்ந்து பொலிவதேயாம். திணை, துறைகளை விளக்குவதும், தக்க மேற்கோள்களை ஆள்வதும், உணர்ச்சி பொங்க உரை விளக்கம் வழங்குவதும் சொல் நயம், ஆட்சியருமைகளைச் சுட்டுவதும் இவர் உரை மரபாம்.

  மதுரைத் தியாகராசர் கல்லூரியிற் பேராசிரியராய் இணைந்த பின்பு, தமிழ்த் தாமரை, பெருந்தகைப் பெண்டிர், தெய்வப் புலவர், நந்தா விளக்கு முதலிய ஆய்வுக் கட்டுரைத் தொகுதகள், சேர நாட்டு வேந்தல் என்னும் வரலாற்று நூல், சிந்தாமணி ஆராய்ச்சி, சிலப்பதிகார ஆராய்ச்சி, மணிமேகலை ஆராய்ச்சி, யசோதர காவிய உரை ஆகிய நூல்களை இயற்றிய ஔவை An introduction to the study of Thirukkural என்ற ஆங்கில நூலும் எழுதியிருக்கிறார்.

  1968-இல் பணி ஓய்வு பெற்ற பின்பு முழுநேரத் தமிழ் ஆய்வில் ஈடுபட்டார். ஒரு நாளில் 100 முதல் 100 பக்கம் வரை சோர்வின்றி எழுதியமையால் கை நரம்புகள் வலிவிழந்து எழு ஆற்றாத நிலை ஏற்பட்டது. தாம் சொல்லச் சொல்ல அவற்றை எழுதுவதற்கு உதவியாளரை நியமித்துக் கொண்டு தமிழ்ப் பணியைத் தொடர்ந்தார்.

  மதுரைத் திருவள்ளுவர் கழகம் அளித்த “உரை வேந்தர்”, தூத்துக்குடி சைவ சித்தாந்த சபை வழங்கிய “சித்தாந்த கலாநிதி”, மதுரைப் பல்கலைக் கழகம் கொடுத்த “பேரவைச் செம்மல்” ஆகிய பட்டங்கள் பெற்ற ஔவை அவர்களுக்குக் கேடயம் அளித்தும் பாராட்டினர், 1969-இல் சென்னையில் நிகழ்ந்த தமிழ் எழுத்தாளர் சங்க மாநாட்டில். ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டில் பொற்கிழி வழங்கப்பட்டது.

  சில நாள் உடல் நலிவுற்றிருந்த ஔவை சு.துரைசாமி 3-4-1981-இல் மதுரையில் இயற்கை எய்தினார். தமிழ்க்கென வாழ்ந்து தாளாண்மைக்கு இலக்கியமாய்த் திகழும் உரைவேந்தர் வாழ்க்கை நிறைவாழ்வின் இலக்கணம்.

  பின்குறிப்பு: இவரது புதல்வர்களுள் ஒருவராகிய ஔவை நடராசன் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத் துணை வேந்தராய்ப் பதவி வகித்தவர்.

4 comments:

 1. பல அறியாத விஷயங்கள் பகிர்வுக்கு நன்றிசார்

  ReplyDelete
  Replies
  1. உங்கள் பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி . மொழி , நாடு , சமுதாயம் முதலானவற்றுக்குத் தொண்டு ஆற்றிய பெரியோர்களை அறிந்துகொள்வது அவசியம் .

   Delete
 2. ஔவை.சு.துரைசாமி அவர்களைப் பற்றியும் அவரது தமிழ்ச்சேவை பற்றியும் இப்போதுதான் அறிகிறேன்.

  \\ பதிற்றுப் பத்துக்கு உரை எழுத முற்பட்டபோது மலையாள நாட்டில் சுற்றுலாச் சென்று வரலாற்றுச் சிறப்பு உடைய இடங்களை நேரிற் பார்த்தறிந்த பின்பே உரை இயற்றினார்.\\

  எவ்வளவு சிரத்தை எடுத்து உரையியற்றியிருக்கிறார் என்பதை நினைக்கும்போதே வியப்பாயுள்ளது. அறியாத பல தகவல்கள் அறியத் தந்தமைக்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 3. பின்னூட்டத்துக்கு மிகுந்த நன்றி . வெள்ளைக்காரர்கள்தான் இப்படி சிரமம் பாராமல் எடுத்த செயலைத் திறம்பட ஆற்றுவார்கள் ; நம்மிடையே ஒளவை போன்ற சிலரே அவர்களுக்கொப்பானவர் .

  ReplyDelete