Friday 14 September 2018

பெனீசியர் தமிழரா?




  
நாகரிகத்தில் உச்சந் தொட்ட பழங்கால மக்களுள் பெனீசியரும் அடங்குவர். அவர்களைப் பற்றி பற்பல தகவல்களை Jules Isaac இயற்றிய L’Antiquite என்ற வரலாற்றுப் பிரஞ்சு நூல் தெரிவிக்கிறது. (பக். 71 – 76). முக்கியமானவற்றை மொழிபெயர்த்துப் பதிகிறேன்.

  நடுநிலக் கடலின் கீழ்க் கரையில், இன்றைய லெபனான் நாட்டின் மேற்குப் பகுதியில், 3000 ஆண்டுகளுக்கு முன்பு செமித்திய இனத்தாருள் ஒரு பிரிவினர் வாழ்ந்தனர். அவர்களது நாட்டின் தலைநகர் சீதோன் (Sidon); ஆதலால் சீதோனியர் என விவிலியம் அவர்களைச் சுட்டுகிறது; கிரேக்கரோ பெனீசியர் என்றனர்; சிவப்பர் என்று அதற்குப் பொருள். இந்தச் சொல்லிலிருந்து அவர்களின் நாட்டுக்குப் பெனீசியா (Phoenicia) என்று பெயர் வந்தது.

  தங்களது மலைப் பிரதேசத்தில் உழவுத் தொழில் செய்ய முடியாத அவர்கள் கடல் வாணிகத்தை மேற்கொண்டார்கள். மேல் தளத்துடன் கூடிய பெருங்கப்பல்களைக் கட்டி அவற்றின் மூலம் ஏற்றுமதி இறக்குமதி செய்தனர்.

  மெல்லிய கண்ணாடிப் பொருள்களையும் செஞ்சாயந் தோய்த்த துணிகளையும் தயாரித்து அக்கம்பக்க நாடுகளில் விற்றனர்; அங்கிருந்து கோதுமை, பொன், குதிரை முதலியவற்றைக் கொண்டு வந்தனர்.

  கண்ணாடியை உருக்கிக் குழாய் வழிக் காற்றைச் செலுத்திப் பொருள் உருவாக்கும் தொழில் நுட்பத்தை அவர்களிடமிருந்துதான் உலகம் கற்றுக்கொண்டது.

  தாம் போகிற நாடுகளில் சிறு சிறு பகுதிகளை ஆட்சியாளரிடங் கோரிப் பெற்று அங்கே காலனிகள் அமைத்து வாணிக நிலையங்களை நிறுவினர். காலப்போக்கில் கடல் வாணிகம் அவர்களது ஏக போகமாயிற்று.

  மானிடக் கண்டுபிடிப்புகளுள் தலை சிறந்த ஒன்று அவர்களுடையது; அதுவே நெடுங்கணக்கு . பொ.யு.மு. 1200-க்கு முன்பே அதை அவர்கள் பயன்படுத்தினார்கள். அக்காலச் சுமேரியரும் எகிப்தியரும் சிக்கலான எழுத்துமுறையைக் கையாண்டனர். பெனீசியரோ 22 தனித்தனி எழுத்துகளை உருவாக்கி, வலமிருந்து இடம் எழுதினர். முதலெழுத்துக்கு அலீஃப் எனவும் இரண்டாவதுக்கு பெத் எனவும் பெயர் சூட்டினர். யூத அரபு மொழிகளின் முதலெழுத்து அலீஃப் தான்; இவையும் வலமிருந்து இடமாய் எழுதப்படுகின்றன. இவற்றின் நெடுங்கணக்குக்கு மூலம் பெனீசியருடையது.

  பெனீசியரது எழுத்துகளைக் கிரேக்கர் காப்பியடித்துச் சிற்சில மாற்றங்களைத் தம் மொழி மரபுக்கேற்பச் செய்துகொண்டு இடமிருந்து வலமாய் எழுதினர். முதலெழுத்துக்கு அல்ஃபா என்றும் இரண்டாம் எழுத்துக்கு பீடா என்றும் பெயர் வைத்தனர். அல்ஃபா பீடாவிலிருந்து alphabet என்ற ஆங்கிலச்சொல் பிறந்தது.

  ரோமானியர் கொஞ்சங் கொஞ்சம் மாற்றி a b c d முதலான எழுத்துகளைப் பயன்படுத்தினர். இவை ரோமன் எழுத்து எனப்படுகின்றன. இதுதான் ஐரோப்பா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா கண்டங்களில் அனைத்து மொழிகளையும் எழுத உதவுகிறது.

  எளிய எழுத்து முறையை உலகத்துக்குத் தந்த பெனீசியரின் பெருமையே பெருமை!

  வரலாறு இப்படியிருக்கத் திரு. மலையமான் 16.7.18 தினமணியில் “தாய்லாந்தில் தமிழ் முழக்கம்” என்ற தலைப்புக் கொண்ட கட்டுரையில் பின்வருமாறு எழுதியிருக்கிறார்:

  “மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழக வணிகர் நிலநடுக்கடல் பகுதிக்குச் சென்றார்கள். அவர்களை பினீஷியர் என்று வரலாறு குறிப்பிட்டது. (வணிகர் என்ற சொல்லின் திரிபே பினீஷியர் என்பது).”

  இரண்டு கருத்துகளை அவர் வெளியிட்டுள்ளார்:

1. தமிழர்கள்தான் பினீஷியர்.
2. வணிகர் என்ற சொல் பினீஷியர் எனத் திரிந்தது.

  முதற்கருத்தை “வரலாறு குறிப்பிட்டது” என்றாரே! எந்த வரலாற்று நூல் அப்படிச் சொல்கிறது? எந்தப் பக்கத்தில்? ஆசிரியர் யார்? என்கிற விவரங்களைத் தர வேண்டாமோ? வரலாறு விளம்புகிறது, புவியியல் புகல்கிறது எனப் பொத்தாம் பொதுவாய்க் குறிப்பிட்டுவிட்டு யார் வேண்டுமானாலும் எந்த அபத்தங்களையும் எழுதலாமோ?

  இரண்டாங் கருத்துக்கு என்ன சான்று? எந்த மொழியில் அறிஞர் கூறினார்? எந்நூலில்? இவற்றையும் அவர் தெரிவிக்கவில்லை.

  தவறான தகவல்கள் எத்தனை யெத்தனை மாணவர்களின் மூளையிற் பதிந்து தேர்வுகளில், நேர்காணல்களில், அவர்களைப் பிறர் நகைப்புக்கு ஆளாக்கும்?

  எழுத்தாளர் சிந்திக்கட்டும்!
&&&&

(படம் உதவி - இணையம்)

9 comments:

  1. உண்மை ஐயா
    ஆசிரியர் விளக்கத்தான் வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி .

      Delete
  2. மிகப் பெரிய தவறு தான் ஐயா...

    ReplyDelete
    Replies
    1. பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி .

      Delete
    2. பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி .

      Delete
  3. மிக்க நன்றி . அப்படியே செய்கிறேன் .

    ReplyDelete
  4. நெடுங்கணக்கு பினீசியரின் கொடை என்றறிந்தேன். கண்ணாடியை உருக்கிக் காற்றைச் செலுத்தி வித விதமான பொருட்கள் செய்ய அந்நாளிலேயே அறிந்திருந்தனர் என்பதும் வியப்புத் தரும் செய்தி. திரு மலையமான் என்பவர் தினமணியில் வரலாற்று உண்மைகளைத் திரித்துக் கூறியிருப்பது மிகவும் தவறு. அதைச் சுட்டிக்காட்டியமைக்கு மிகவும் நன்றி.

    ReplyDelete
  5. பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி . அவரைப் போல வேறு சிலரும் தவறான தகவல்களை அவ்வப்போது வெளியிடத் தயங்குவதில்லை .

    ReplyDelete
  6. பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி . அவரைப் போல வேறு சிலரும் தவறான தகவல்களை அவ்வப்போது வெளியிடத் தயங்குவதில்லை .

    ReplyDelete