Saturday 10 December 2011

புதிரோ புதிர் - நகைச்சுவைக் கதை


(வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் அலுவலர் பல வீடுகளுக்குச் சென்று விட்டு ஒரு பாட்டியின் இல்லத்துக்குப் போகிறார். பாட்டி திண்ணை மீது கால்களை நீட்டி அமர்ந்துள்ளார்)


பாட்டி, தேர்தல் வருகிறது. வாக்காளர் பட்டியல் தயாரிக்கிறேன். உங்கள் பெயர் என்ன?”

அதை நான் சொல்லக் கூடாது.

என்ன, பாட்டி? கணவன் பெயரைக் கூட இப்போது சொல்கிறார்கள். நீங்கள் உங்கள் பெயரையே சொல்ல மாட்டீர்களா?”

என் பெயரும் மாமியார் பெயரும் ஒன்று. அதை எப்படி சொல்லுவேன்?”

இப்படிக் கூட ஒரு கஷ்டமா? இத்தனை வயதான பிறகு என்ன பாட்டி? சும்மா சொல்லலாம். சொல்லுங்கள்.

வயதாகிவிட்டால் மட்டு மரியாதை போய் விட வேண்டுமா? இந்தக் காலத்துப் பிள்ளைகள் முளைத்து மூன்று இலை விட்டதும், அப்பனையே பேர் சொல்லிக் கூப்பிடுகின்றன. நான் அந்தக் காலத்து மனுஷி. சொல்ல மாட்டேன்.

அப்படியானால் ஒரு ஹிண்ட் கொடுங்கள்.

இண்டாவது இடுக்காவது? என்னடாப்பா உளறுகிறாய்?”

இண்டுமில்லை, இடுக்குமில்லை. ஹிண்ட்! அதாவது ஒரு குறிப்பு. எதையாவது சொல்லுங்கள். அதை வைத்து நான் கண்டுபிடிக்கிறேன்.

(மனதுக்குள்: நல்ல வேலை கிடைத்தது நமக்கு)

கடலில் என்ன அடிக்கிறது?”

காற்று.

அதில்லை. கரையில் வந்து மோதுமே? அது!

அதுவா? அலை! அலையா உங்கள் பெயர்? புதுமையாக இருக்கிறதே!

அவசரக் குடுக்கை! இன்னும் சொல்வதைக் கேள்.

சொல்லுங்கள்.

கீழே என்பதற்கு மாற்றமாய் என்ன சொல்லுவோம்?.”

மேலே!

அதைச் சுருக்கு.

மேல்.

இரண்டையும் சேர்.

மேலே மேல்! இப்படி ஒரு பெயரா?”

சீ! முன்னே ஒன்று கண்டுபிடித்தாயே, அதையும் இதையும் சேர்.

முன்னே என்ன கண்டுபிடித்தேன்? ஆங்! அலை! அப்போ அலைமேல்

கொஞ்சம் மாற்று.

அலமேல்.

அது தான்.

அப்பாடா! ஒரு வழியாய்க் கண்டுபிடித்தாயிற்று!

இன்னும் இருக்கிறது.

ஐயையோ! இன்னுமா?”

ஏண்டாப்பா? வீடான வீட்டிலே அவச் சொல் சொல்லவா வந்தே? நீ போ. இனி மேல் ஒன்றும் சொல்லமாட்டேன்.

(இந்த மாதிரி நாலு கிழம் இருந்தால் நாம் கணக்கெடுத்து வாழ்ந்தாற் போலத்தான்.)

உன்னைப் பெற்றவளை எப்படிக் கூப்பிடுவே?”

அம்மா.

அதையுஞ் சேர்த்துக் கொள்.

அலமேல் அம்மா.

சரி.

(இந்த அம்மாவைச் சேர்க்காவிட்டால் குடியா முழுகிவிடும்?)

இப்போ, வீட்டுக்காரர் பேரைச் சொல்லுங்கள்.

அதை எப்படி நான் சொல்லுவேன்?”

நீங்கள் எங்கே சொல்லப் போகிறீர்கள்? நான் தான் கண்டுபிடிக்க வேண்டும்.

இண்டு வேண்டுமா?”

ஆமாம்.

குரங்கு இருக்கிறதல்லவா?”

என்னிடமா? நான் என்ன குரங்காட்டியா?”

சீ! நான் ஒன்று சொன்னால், நீ ஒன்று சொல்கிறாய். நீ போய்ச் சேரு.

கோபித்துக் கொள்ளாதீர்கள், பாட்டி. சொல்லுங்கள்.

குரங்குக்கு வேறு பேர் சொல்லு.

வேற பேரா?”

(இனிமேல் கையோடு அகராதி கொண்டு வர வேண்டும்).

வேறே பேரென்ன? வானரம், மாருதி, கடுவன், மந்தி......

கடலைத் தாண்டுச்சே?”

அனுமார்!

ஆங்! அதைக் கொஞ்சம் மாற்று.

அனுமாரை எப்படி மாற்றுவது?”

ஆரம்பம் அது தான். கடைசியை மாற்று.

அனு, அனு, அனு.......

நல்ல மக்கு நீ! வயிற்றில் பசியில்லை, என்ன சொல்லுவோம்?”

மந்தமாய் இருக்.

அதான் இப்போது கண்டுபிடி.

அனுமந்தம்! அனுமந்தன்!

அதான்”.

அம்மாடி! நான் வருகிறேன் பாட்டி.

(தேர்தலைச் சபித்துக் கொண்டே அலுவலர் போகிறார்)

(பி.கு. 1976 ல் ஆனந்த விகடனில் எழுதியது)

6 comments:

 1. பாட்டியம்மாவின் புதிர்களிலிருந்து பெயர்களைக் கண்டுபிடிப்பதற்கு பெரும் சாதுர்யம் தேவைதான். எப்படியோ அந்த அலுவலர் ஒருவழியாகக் கண்டுபிடித்தாரே இறுதியில். நல்ல நகைச்சுவை.

  இந்தக் காலப் பெண்களிடம் இந்தப் பிரச்சனை இருக்காது. ஏனெனில் பெரும்பாலானோர் கணவனைப் பெயர் சொல்லித்தானே அழைக்கிறார்கள்!

  ReplyDelete
 2. என் சிறுவயதில் என் பெரியம்மா, பாட்டி தம் கணவரின் பெயரைச் சொல்ல மாட்டார்கள். அந்தக் காலத்தில் வாழ்ந்தவர்களுக்கு இக்கதை நன்கு புரியும். கீதா சொல்வது போல் இக்காலத்தில் இப்பிரச்சினை இல்லை.
  தரமான நகைச்சுவை கதை.

  ReplyDelete
 3. இந்த மாதிரி நாலு கிழம் இருந்தால் நாம் கணக்கெடுத்து வாழ்ந்தாற் போலத்தான்.)

  ReplyDelete
 4. சீனி.சம்பத்.23 April 2014 at 10:21

  இப்படியும் ஒரு கிழவியா?

  ReplyDelete
 5. அருமையான நகைச்சுவைக் கதை....

  ReplyDelete