Wednesday 10 October 2018

குழந்தைகளும் தெய்வங்களும்


நூல்களிலிருந்து – 20


குழந்தைகளும் தெய்வங்களும்

(2015-இல் காலமான எழுத்தாளர் வெங்கட் சாமிநாதன் இயற்றிய “நினைவுகளின் சுவட்டில்” என்னும் நூலில் அவர் தமது வாழ்க்கை வரலாறு பற்றி எழுதியிருக்கிறார். பக். 262 -267 –இல் மேற்படி தலைப்பில் கூறப்பட்டவற்றைத் தொகுத்துப் பதிகிறேன். நூல் பதிப்பித்த காலம் 2009.)

  கணினி வாங்கி மூன்று வருடங்கள் ஆகின்றன. அதை வைத்துக்கொண்டு என்னென்னமோ மாயங்கள் செய்கிறார்கள்! எனக்கு இது ஒரு தட்டச்சு யந்திரமாகத்தான் இருக்கிறதே ஒழிய, இதற்கு மேல் அதன் எல்லையற்ற சாத்தியங்களை எனக்குச் சாத்தியமாக்கிக் கொள்ள முடியவில்லை. ஐந்து வயது சின்ன சின்ன வால்கள் கூட என்ன அனாயாசமாக இதன் எதிரில் உட்கார்ந்து என்னென்னமோ செய்கிறார்கள்! எப்படி இந்தக் குஞ்சு குளுவான்களுக்கு இவ்வளவு சீக்கிரம் புரிந்துவிடுகிறது? இரண்டு காரணங்கள் சொல்லப்படுகின்றன:

  புதிய தலைமுறைக் குழந்தைகள் தமக்கு முந்திய அத்தனை தலைமுறைகளும் சேர்த்து வைத்துள்ள அறிவார்ந்த அனுபவ சேகரிப்புக்கும் வாரிசுகள்; அவ்வளவும் அவர்களுக்குப் பிதிரார்ஜிதமாகக் கிடைத்துவிடுகின்றன. இரண்டாவது அவை வளரும் சூழல். இந்தக் குழந்தைகளுக்கு இப்போது கிடைப்பதை விட நமக்கு நம் சிறு பருவத்தில் கிடைத்தது மிக மிகக் குறைவு.

  இருப்பினும் நம் குழந்தைகளுக்கு நாம் மோழைகள்தான்.

  எத்தனையோ ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருக்கும் பங்களாதேஷின் ஓர் ஒதுங்கிய கிராமத்துச் சிறுவர்களுக்குத் தன்னைத் தெரிந்திருக்கிறதே, தன்னை ஓர் ஹீரோவாகக் கொண்டாடுகிறார்களே என்று பிரஞ்சுக் கால்பந்தாட்ட வீர்ர் ஜினதீன் ஜிடானுக்கு ஒரே வியப்பு. அந்தக் குழந்தைகள் ஜிடானைச் சூழ்ந்துகொண்டு அட்டகாசமாக ஆர்ப்பரிப்பதைப் பார்த்து மனம் எவ்வளவு மகிழ்கிறது! எனக்கு வயது 74; ஆனால் நான் ஜிடானைப் பற்றி அறிந்ததே இந்த உலகக் கால்பந்தாட்டப் போட்டியின்போதுதான். இந்தக் குழந்தைகளுக்கு 9 – 10 வயதிலேயே ஜிடானைத் தெரிந்துவிட்டது. உலகம் அவர்களுக்கு ஒன்றாகிவிட்டது. இதெல்லாம் டி.வி. செய்த மாயம் என்று சொல்லலாம்.

  1957-ஆம் வருடம். நான் தில்லிக்குச் சென்ற புதிது. கரோல்பாகில் ஒரு சங்கீத விழா. ஒரு நாள் பந்தலில் என் அருகில் அமர்ந்திருந்த ஒரு குழந்தை, கச்சேரி நடுவில், “சங்கராபரணம் நன்னால்லே” என்று சொல்லிச் சிணுங்கியதைக் கேட்டு அந்தப் பக்கம் பார்த்தால் அது நான்கு வயதுப் பெண் குழந்தை. “அப்படியெல்லாம் சொல்லப்படாதுடி குழந்தே” என்று பெற்றோர் அடக்கினர். குழந்தைகளுக்கு இவ்வளவு நுண்ணிய உணர்வுகள் எப்படி சாத்தியமாகின்றன? இதில் தென்னிந்தியாவே ஒரு தனிக் கலாச்சாரம்தான். இங்கே தான் குழந்தைகளை மேதைகளாகக் கொண்டாடுகிறோம். ஒரு பாலமுரளி கிருஷ்ணா, மாலி, ரவி கிரண், மாண்டலின் சீனிவாஸ் போன்றோர் போற்றப்படுகிறார்கள். மேடைக் கச்சேரி வாழ்க்கை குழந்தையிலேயே தொடங்கிவிடுகிறது. வட இந்தியாவில் என்ன மேதைமை தெரிந்தாலும் குழந்தைகளுக்கு மேடை தரப்படுவதில்லை.

  நம் மரபில் நாம் குழந்தையைத் தெய்வம் என்போம். தெய்வங்களைக் குழந்தைகளாகப் பாவித்து அன்பையும் பாசத்தையும் பொழியும் ஒரு பார்வை பெரியாழ்வாரிடமிருந்து தொடங்குகிறது. வரலாற்றிலேயே முதன்முதல் அவர்தான் தெய்வத்தைக் குழந்தையாக்கி மகிழ்ந்திருக்கிறார். இது எவ்வளவு பெரிய கற்பனை! ஆனந்தமான கற்பனை! கண்ணனது சிறு பருவத்து விளையாட்டையும் குறும்புகளையும் பாடி ஒரு புதிய உலகையே தந்து சென்றிருக்கிறார். அதைத்தான் பாகவதம் சொல்ல, வடநாடு முழுவதும் அது பக்தி இயக்கம் பரவச் செய்தது. பெரியாழ்வாருக்கு முன்பு கண்ணனைக் குழந்தையாக வட இந்தியா அறிந்ததில்லை; துவாரகை மன்னனாகத்தான் அதற்குத் தெரியும்.

  இது நமக்கே உரிய பாவம் என்று நினைத்திருந்தேன். டோரன்டோவில் உள்ள ஒண்டேரியோ கலைக்கூடத்தில் குழந்தைப் பருவ ஏசுவைப் பாதிரியார் ஒருவர் விரல் பிடித்து இட்டுச் செல்லும் ஓவியம் பார்த்தேன். “ஏசு குழந்தையாக இருந்தபோது பாதிரியார் எங்கிருந்து வந்தார்?” என்று கேட்டேன். அது ஏசுவைக் குழந்தையாகப் பாவித்த கற்பனை என்று விளக்கம் சொன்னார்கள்.

6 comments:

  1. அருமையான நூலறிமுகம்
    நன்றி ஐயா

    ReplyDelete
    Replies
    1. உங்களது பாராட்டுக் கருத்துரைக்கு மிகுந்த நன்றி .

      Delete
  2. இப்படியான குழந்தைகளை என்னவெல்லாமோ கற்பித்து மயக்குகிறார்கள் என்று நினைக்கும்போது கொஞ்சம் வருத்தம்தான்இந்த வயதில்கற்பிப்பது மனதில்பதியும் வேறுபாடுகள் இல்லாத ஒரு சமுதாயத்தை உருவாக்கலாமே

    ReplyDelete
    Replies
    1. பின்னூட்டத்துக்கு மிகுந்த நன்றி . உங்கள் வருத்தம் நியாயமானது . வேறுபாடில்லாத சமுதாயம் கற்பனையில்தான் இருக்கமுடியும் .

      Delete
  3. ஆசிரியர் சொகிறபடி குழந்தைகளின் அறிவுத்திறனைப் பார்த்தால் மலைப்பாகத் தான் இருக்கின்றது. இரண்டு வயது கூட நிரம்பாத குழந்தை, செல்போனில் தொடுதிரையை லாவகமாக விரலால் தள்ளி, அது விரும்பும் கார்ட்டூனை தேர்வு செய்கின்றது. சுவாரசியமான பகிர்வுக்கு நன்றி!.

    ReplyDelete
    Replies
    1. பின்னூட்டத்துக்கு மிகுந்த நன்றி . நானும் கவனித்திருக்கிறேன் . சிறு வயதிலேயே அறிவு முதிர்ச்சி !

      Delete