Tuesday 30 October 2018

திரைப்படம் கடந்துவந்த பாதை



  தொடக்கப் படங்களில் ஒலி சேர்க்கப்படவில்லை; அதற்கான தொழில்நுட்பம் அறியாக் காலம். அவை ஊமைப்படம் எனப்பட்டன. கதை எளிதில் புரிவதற்காக நிகழ்ச்சிகளை அதிகமாய்ச் சேர்த்திருந்தார்கள்.

  நான் சிறு வயதில் “பம்பாய் மெயில்” என்ற ஊமைப்படம் பார்த்தேன். கிணற்றிலிருந்து ஓராளைத் தோளில் தூக்கிக்கொண்டு ஒருவர் ஏறிவந்த காட்சியும் இரண்டு பேர் எதிரெதிரே ரிவால்வரை நீட்டியபடி நின்ற காட்சியும் நினைவில் நிற்கின்றன.

  பின்பு ஒலியுடன் வந்த படங்களின் விளம்பரத்தில், “தமிழ் பேசும் பாடும் படம்” என்ற விளக்கம் இடம்பெற்றது. அவற்றில் உரையாடல் கொஞ்சம்; பாட்டுகள் எக்கச் சக்கம்! “கர்ணாமிர்தமான 50 பாடல்” என்று விளம்பரஞ் செய்தனர்.

  “வள்ளி திருமணம்” படத்தில் முருகனிடம் நாரதர், தாம் வழியில் நூதனமான ஒரு கனியைக் கண்டதாகவும் அது அவன் உண்பதற்குப் பொருத்தமானது என்றும் கூறினார்.

  உடனே ஒரு வினா-விடைப் பாட்டு:

-    மார்க்கத்தில் கண்ட கனிதனக்குள்ள
  சிலாக்கிய மென்ன முனியே?

-    பார்க்கும் பொழுதே ஐம்புலனுக்கும்
  சுவைதருந் தீங்கனியே!

-    பட்சிகள் கண்டா லிந்நேரம் அதைப்பற்றிப்
  பட்சித்திடாதோ சொல்வீர்.

-    பட்சிகள் கண்டால் பறந்தோடு மாகையால்
  பட்சமுடன் செல்வீர்.

-    எட்டாத கொம்பில் இருந்திடில் அக்கனி
  எப்படிக் கொய்திடலாம்?

-    எட்டும்படிக் கிரு கொம்புண் டதைப்பற்றி
-                ஏறிப்பறித் திடலாம்.




பவளக்கொடியில் அல்லியரசியின் மகன் பவளத்தேர் கேட்டான். அவ்வளவுதான்! பாட்டு!

-    மாணிக்கத்தால் தேரியற்றி
நானுனக்குத் தாரேண்டா.

-    மாணிக்கத்தேர் தந்தை தந்தார்
ஆதலாலது வேண்டாம்.

-    நீலக்கல்லால் தேரியற்றி
நானுனக்குத் தரேண்டா.

-    நீலத்தேரோ கிருஷ்ணன் தந்தார்
ஆதலாலது வேண்டாம்.


அல்லிக்கு வேறு வழியில்லாமற் போகவே பணிப் பெண்களை நோக்கிப் பாடுகிறாள்:

பவளமெங்கே விளைகிறது பாவையரே
பவளமெங்கே?
பாலகன்தேர் வேண்டுமென்ற தாலதனைக்
கொண்டுவரப் பவளமெங்கே?
எத்தனை தூரம் இருக்குதக்காடு?
யாவர்க்குரிய இடம்? ஏது ஏற்பாடு?

(மீதி மறந்து போயிற்று.)

இவ்வாறு எதற்கெடுத்தாலும் பாட்டு.

  ஒவ்வொரு படத்துக்கும் உரிய எல்லாப் பாட்டுகளும் அடங்கிய புத்தகம் கொட்டகையில் விற்பனை செய்யப்பட்டது. விலை ஓர் அணா (1/16 ரூபாய்).

  சொந்தக் குரலில் இனிமையாய்ப் பாட வல்லவர்களே நடிக்க வாய்ப்புப் பெற்றனர். S.D. சுப்புலெட்சுமி, T.P. ராஜலெட்சுமி, V.A. செல்லப்பா, M.K. தியாகராஜ பாகவதர், P.U. சின்னப்பா, T.R. ராஜகுமாரி, T.R. மகாலிங்கம் (குழந்தை நட்சத்திரம்) முதலியோர் ஒளிவீசினர்.



  ஆரம்பத்தில் ஒரு படத்துக்கு இரு தலைப்பிட்டனர்:

-    சந்திரசேனா அல்லது மயில்ராவணன்
-    சிந்தாமணி அல்லது பில்வமங்கள்
-    மோகினி ருக்மாங்கதா அல்லது ஏகாதசி விரத மகிமை
-    சத்திய சீலன் அல்லது தந்தை சொல் மறவாத் தனயன்
-    வசந்த சேனா அல்லது மிருத் சகடிகா
-    சந்திர மோகனா அல்லது சமூகத்தொண்டு
-    பாலாமணி அல்லது பக்காத் திருடன்

  இரு வேறு படங்களுள் ஏதாவதொன்றைக் காட்டுவார்கள் போலும் என்று தவறாய் நினைத்தவர்கள் உண்டு.

  பின்னர் நீள நீளமான தலைப்புகள் தோன்றின;

- கணவனே கண்கண்ட தெய்வம்
- மணாளனே மங்கையின் பாக்கியம்
-    ஆயிரந் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி
-    பானை பிடித்தவள் பாக்கியசாலி
-    பெற்ற மகனை விற்ற அன்னை
-    யானை வளர்த்த வானம்பாடி
-    தாய் மகளுக்குக் கட்டிய தாலி
-    ஒரு புல்லாங்குழல் அடுப்பு ஊதுகிறது
-    பூ ஒன்று புயலானது
-    தை பிறந்தால் வழி பிறக்கும்
-    தாயைப் போலப் பிள்ளை நூலைப் போலச் சேலை
-    ஒரு ஊதாப்பூ கண்சிமிட்டுகிறது

  பாட்டுகளின் எண்ணிக்கை குறைந்துகொண்டு வந்தது; வசனம் அதிகமாய் இடம் பெற்றது. ஆனால் தரம் சுமாராய்த்தான் இருந்தது.

  ஆர்ய மாலா படத்தில் D.V. சாரி வசனம்:

பார்வதி – இளைய கன்னி எங்கே?

சிவன் -  இறந்தாள் இளைய கன்னி; கொன்றுவிட்டான் இந்தப் பாதகன். நீச்சா, பதிதா, என் முன்னே நில்லாதே, போ. நீ பூலோகத்தில் பல ஜன்மங்கள் எடுத்துக் கடைசி ஜன்மத்தில் நீச்சரால் வளர்க்கப்பட்டுக் காமாந்தகனாய்த் திரிந்து எந்த இளைய கன்னி உயிரிழக்கக் காரணமானாயோ, அவள் பொருட்டே கழுவிலேற்றப்படுவாய்.

பார்வதி – மைந்தனிடமா இந்தக் கோபமும் சாபமும்?

சிவன் – மைந்தன்! கொலைகாரனை மைந்தன் என்று கூற உன் நா கூசவில்லையா?

பார்வதி – போகட்டும், க்ஷமித்துவிடுங்கள்.

சிவன் – கொலைக் குற்றத்துக்கா க்ஷமை?”

உரையாடலை மேம்படுத்தினார் பாரதிதாசன். 1000 தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணியில் அவரது உரையாடலுக்குக் காட்டு:

சாமியார் – அடக்குவார்கள், அடங்காதே.
சிந்தாமணி – கிடக்கிறார்கள், கோழையல்ல நான்.

இருந்தாலும் அம்பிகாபதி, சிவகவி, கண்ணகி ஆகிய படங்களின் வசனந்தான் மக்களைக் கவர்ந்தது. பிரமாதமாய் உரையாடல் இயற்றிப் புகழடைந்தார் இளங்கோவன். அவரைத் தொடர்ந்து அண்ணாதுரை, கருணாநிதி, கண்ணதாசன், பாலச்சந்தர் ஆகியோர் சுவை மிகுந்த, பொருள் பொதிந்த, இலக்கிய நயங்கமழ்ந்த வசனம் எழுதிப் படங்களின் வெற்றிக்கு உதவினர்.



  காலஞ்சென்ற எழுத்தாளர் வெங்கட் சாமிநாதன் தம் “நினைவுகளின் சுவட்டில்” என்ற நூலில் எழுதியுள்ளதை (பக். 147) இங்கே குறிப்பிடுதல் பொருந்தும்.

  “அண்ணாதுரையின் ஓர் இரவு, நல்ல தம்பி போன்ற படங்கள் தமிழ் சினிமா உலகையே உலுக்கிவைத்தன. கதை வசனம் சி.என். அண்ணாதுரை, எம்.ஏ. என்ற எழுத்துகளைத் திரையில் பார்த்ததுமே தியேட்டர் கைதட்டலில் அதிரும். தமிழ் சினிமாவில் இது போன்று நிகழ்வது அதுதான் தொடக்கம்.

  பிடித்த பாட்டுகளை மக்கள் பாடிப் பாடிப் பரவசமடைந்தது போன்றே புகழ்பெற்ற வசனங்களைச் சொல்லிச் சொல்லி இன்புற்றார்கள்.

  பாடலாகட்டும் வசனமாகட்டும் எல்லாம் செவிக்கின்பம் நல்குவதுதானே? (audio). படத்தில் காட்சிக்கல்லவோ (video) முதன்மை தரவேண்டும்?  அதை நோக்கி இப்போது தமிழ் சினிமா முன்னேறுகிறது.  

(படங்கள் உதவி - இணையம்)


8 comments:

  1. ஆனாலும் அந்தக்காலம் அனைத்தும் இனிமை...

    ReplyDelete
    Replies
    1. உங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி .

      Delete
  2. நல்ல தம்பி படம் என்று நினைக்கிறேன் கிந்தனார் காலட்சேபம் நடத்துவார் ரயிலை தீஅண்டாமை ஒழிக்கும் இடமாக உயர்வு தாழ்வு அற்று யாரையும் ஏற்றிச்செல்லும் வாகனமாகப் பாட்டு இருக்கும் படங்களின் மூலம் நல்லகருத்துகள் கூறப்பட்டது

    ReplyDelete
    Replies
    1. நன்றாக நினைவு வைத்திருக்கிறீர்கள் .அந்தப் படந்தான் .ரயிலே ரயிலே என்னுஞ் சொற்கள் திரும்பத் திரும்ப வரும் .மதுவிலக்குக்கு வலுவான ஆதரவு பரப்பிய படம் .பின்னூட்டத்துக்கு மிக்க நனறி .

      Delete
  3. அந்தக்காலப் படங்களின் பாடல்களில் இருந்த இனிமை, காலம் கடந்தும் நிலைத்து நிற்கும் தன்மை, இக்காலப் பாடல்களில் இல்லையே

    ReplyDelete
    Replies
    1. மெய்தான் . கண்ணதாசன் பாடலுக்கு விஸ்வநாதன் இசையமைக்க சவுந்தரராஜனும் சுசீலாவும் பாட அது பொற்காலம் திரையிசைக்கு ! பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி .

      Delete
  4. தமிழ்த் திரைப்படத்தின் துவக்க காலம் எப்படியிருந்தது என்றறிந்தேன். பாடல்களையும் நினைவில் வைத்திருப்பது வியப்பு தான். திரைப்பட வரலாறு எழுதுபவர்களுக்கு இது உதவக்கூடிய ஆவணம். மிக்க நன்றி!

    ReplyDelete
    Replies
    1. பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி . இளைய தலைமுறை அறிந்திருக்க முடியாத சில செய்திகளை , நிகழ்ச்சிகளைத் தெரிவிப்பது முதியோரின் கடமை என்பது என் கருத்து .

      Delete