Saturday 4 January 2020

யார் இவர்கள்?





 ரேஷன் கடையில், வங்கியில், வாக்குச் சாவடியில், மக்கள் வரிசையாய் நிற்குமிடத்துக்குக் கடைசியாய் வந்து பிறரை முந்துவதற்கு சகல முயற்சியும் செய்கிறார்கள்.

  கடைகளில் சிலர் பொருள் வாங்கிக் கொண்டிருக்கையில் அப்போதுதான் வந்து “எனக்கு ஒரே யொரு சாமான், கொடுத்துவிடுங்கள்” என்று உத்தரவிடுகிறார்கள்.

  வங்கியில் டோக்கன் பெற்ற பின்பு, இருக்கையில் அமர்ந்து “கூப்பிடட்டும்” என்றெண்ணிப் பொறுமையாகக் காத்திராமல் counter அருகில் கும்பலாய் நின்றுகொண்டு தலையை நீட்டி நீட்டி உள்ளே நோக்குகிறார்கள்; பணம் பெற வருகிறவர்களுக்கு இடந் தராமல் லேசாக உடலை நெளித்து அவர்களை சிரமப்பட வைக்கிறார்கள்.

  பள்ளி, திருமண மண்டபம், வங்கி முதலான பொதுக் கட்டடங்களின் வாயிற் படிகளில் நின்றபடி உரையாடுகிறார்கள்; பிறர் ஏறவோ இறங்கவோ சங்கடப்படுவதை சட்டை செய்வதில்லை.

  சாலை விதிகளைத் துச்சமாய் மதித்துத் தங்கள் வசதிக்கு ஏற்றபடி ஊர்தி செலுத்துகிறார்கள்.

  கைப்பேசியைக் கன்னத்தால் இடுக்கிக்கொண்டு தலையை ஒருபுறஞ் சாய்த்தவாறே இருவீலர் ஓட்டுகிறார்கள். பேச்சில் கவனம் சாலையிலுங் கவனம் என ஈரவதானஞ் செய்கிறார்கள். உயிர்க்கு ஆபத்து விளையக்கூடுமே என்பது பற்றிக் கவலையில்லை. சரி போகட்டும், அவர்களின் உயிரைப் போக்கிக் கொள்ள அவர்களுக்கு உரிமையுண்டுதான்; ஆனால் இதரரை விபத்துக்கு ஆளாக்குவது என்ன நியாயம்?

  போஸ்ட் கண்ட இடமெல்லாம் கால் தூக்கும் நாய் போலப் பூங்கா, சாலையோரம், ரயில் நிலையம் என எங்கே பெஞ்சு பார்த்தாலும் காலை நீட்டிப் படுத்துவிடுகிறார்கள். நால்வர் அமர்வதற்கு உரிய இடத்தை ஒருவரே ஆக்ரமிக்கிறோமே என்னுங் குற்றவுணர்வு சிறிதுமில்லை.

  திரைப்படக் கொட்டகையில் விசிலடித்தும் உரத்த குரலில் விமர்சித்தும் பிறர் அமைதியாய்ப் படம் பார்க்கவிடாமல் அட்டகாசம் புரிகிறார்கள்.

  இவ்வாறும் இன்னம் பல வழிகளிலும் தம்மை மாத்திரமே, தம் சௌகர்யத்தை மட்டுமே மனத்துட் கொண்டு ஒழுகும் இவர்கள்  யார்?

  வேறு யார்? பண்பாடற்ற இவர்கள் திண்ணமாகத் தமிழர்கள் தான்.

&&&&
(படம் உதவி இணையம்)



12 comments:

  1. ஒழுக்கம் அந்தளவு மாறி விட்டது ஐயா...

    ReplyDelete
    Replies
    1. ஆம் , வருந்தத்தக்க நிலைமை. உங்கள் பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி.

      Delete
  2. Replies
    1. வேதனைதான் , இது மாறாது என்னும் விரக்தியும்கூட. உங்கள் பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி.

      Delete
  3. உண்மை தான். வெளிநாடு சென்ற போது கவனித்தேன். எவ்வளவு கூட்டம் இருந்தாலும் வெள்ளையர்கள் அமைதியாய் வரிசையில் நிற்கிறார்கள். மேல்நாடுகளிலிருந்து எதையெதையயோ காப்பியடிக்கும் நம்மவர்கள் இதைக் கற்றுக்கொள்ள வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி ; நானும் பிரான்ஸ் ஆஸ்த்ரேலியா ஆகிய நாடுகளில் வசித்திருக்கிறேண் ;வெள்ளையரின் பண்பாடு கண்டு வியந்திருக்கிறேன்.

      Delete
  4. இது தமிழர்களுக்கான குணம் அல்ல இந்தியாவின் அனைத்துப்பகுதிகளிலும் இப்படித்தான்

    ReplyDelete
    Replies
    1. அப்படியா ? அறீவித்தமைக்கு மிகுந்த நன்றி ; நான் பிற மாநிலங்களில் சுற்றுலா போயிருக்கிறேனே தவிர அவ்விடத்துப் ப்ழக்க வழக்கம் தெரியாது

      Delete
  5. மிகவும் வருத்தமளிக்கும் நடவடிக்கைகள். குழந்தைப் பருவத்திலிருந்தே பிள்ளைகளுக்கு நாகரிகமான பழக்க வழக்கங்களைக் கற்று செயல்படுத்தத் தூண்டினால் ஒருவேளை வருங்காலத்தில் இவையெல்லாம் மாறக்கூடும். அதற்குமுன் கற்றுக்கொடுக்கும் நிலையில் உள்ளோர் தம்மை மாற்றிக்கொள்ள வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் ; பெற்றோரிடமிருந்துதான் பிள்ளைகள் கற்கிறார்கள் .பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.

      Delete
  6. உண்மைதான்.
    பழைய பெருமைகளை பேசிப்பேசியே நிகழ் காலத்தில் தனிமனித ஒழுக்கத்தை, சட்டங்களைப் பின்பற்றுவதை, தம்மைப் போலவே மற்றவரை எண்ணும் பண்பை தமிழர்கள் இழந்துவிட்டார்கள்.

    மற்றய இனத்தவர்கள் இங்கு (சுவிஸ்) இவற்றை குழந்தைப் பராயத்திலேயே பிள்ளைகளுக்கு கற்பிக்கத்தொடங்கி விடுகிறார்கள். வளர்ந்தவர்கள் அவர்களுக்கு முன்மாதிரியாக இருக்கின்றார்கள்.

    ReplyDelete
    Replies
    1. வருக , கருத்துக்கு மிக்க நன்றி.நீங்கள் கூறுவது சரியே ; பாரீஸ் தொடர்வண்டியில் ஒரு சிறுவன் எதிர் இருக்கையில் காலை நீட்டி வைத்தபோது அருகிலிருந்த தந்தை ,, " இது பண்பாடா ?" என வினவினார் ; பையன் காலை மடக்கிக்கொண்டான் .

      Delete