Monday, 10 September 2012

உருவப் பொம்மை எரிப்பு


 

தமிழகத்து ஆர்ப்பாட்டங்கள் சிலவற்றில் உருவப் பொம்மை எரிப்பது உண்டு. அப்படி எரிப்பதற்கு அடிப்படைக் காரணம் என்ன என்பது எரிப்பவர்களுக்குத் தெரியுமா? ஐயம்தான்.
 
தாம் வெறுக்கிற ஒருவரை நேரடியாகத் துன்புறுத்துவதற்கு அஞ்சுகிற அல்லது  இயலாதவர்களுள் சிலர், அரை நூற்றாண்டுக்குமுன், மந்திரவாதியை அணுகினர்.
 
பணமும்  தகவலும் பெற்றுக்கொண்ட மந்திரவாதி ஒரு துணிப் பொம்மை செய்து தெய்வத்தின்முன்  வைத்து, மந்திரம் ஓதி, பூஜை செய்வார்.
 
பின்பு பொம்மையின்மீது சில இடங்களில் ஊசியால் குத்துவார். இது செய்வினை எனப்பட்டது. இதன் பயனாய்ப் பகைவர்  நோய்வாய்ப்பட்டுச் சங்கடப்படுவார் என்பது நம்பிக்கை.
 

பொம்மையை எரித்தால் அவர் இறந்தேவிடுவாராம். இப்போது மந்திரம் இல்லை ஆனால் செயல் நிகழ்கிறது, காரணம் தெரியாமலே.
 
(படம் உதவி ; இணையம்)

Monday, 27 August 2012

முன்னோடி


 

பயன்பாட்டுக்குக் கார் வருவதற்கு முன்பு பெருஞ் செல்வர்களுக்கு இரட்டைமாட்டு வில் வண்டிகள் உதவின; அவர்கள் பயணிக்கையில், முன்புறமாய் ஒருவர், "ஐயாவோட வண்டி வருது" என அறிவித்துக்கொண்டு ஓடுவார்.  
பாதசாரிகள் ஓரமாய் ஒதுங்கி வழிவிடுவார்கள்; படுத்திருப்போர், அமர்ந்திருப்போர் மரியாதைக்கு அறிகுறியாக எழுந்து நிற்பார்கள். 

முன்னால் ஓடுபவரை முன்னோடி (முன் + ஓடி) என்றார்கள்; முன்னோடும்பிள்ளை என்பதுமுண்டு.  

இதற்கு இணையான ஆங்கிலச் சொல் ப்ரிக்கர்சர் (Precursor ). ப்ரி - முன்; கர்சர் - ஓடுபவர். Forerunner என்பதும் அப்பொருள் உடையது.

முன்னோடி என்னும் சொல் இன்று வேறு அர்த்தத்தில் வழங்குகிறது.  

அறவழிப் போராட்டத்துக்கு முன்னோடி காந்தி, தமிழ்ப் புதினத்துக்கு முன்னோடி பிரதாப முதலியார் சரித்திரம் என ஒரு துறையில் பிறர்க்கு / பிறவற்றுக்கு வழிகாட்டிகளை அச் சொல் குறிக்கிறது.
*******************************************************************

படம் உதவி ; இணையம்

Tuesday, 21 August 2012

நாடகத் தமிழ்




இயற்றமிழ், இசைத் தமிழ், நாடகத் தமிழ் எனத் தமிழை மூவகைப்படுத்துகிறோம் எது இயற்றமிழ், எது இசைத் தமிழ் என்பது எல்லாருக்கும் தெரியும். ஆனால் நாடகத் தமிழ் பற்றிச் சரியான விவரம் அறியாதார் பலர். நாடகங்களில் இடம் பெறும் உரையாடல்தான் நாடகத் தமிழ் என்று நினைப்பது தவறு.


ஆங்கிலேயரின் தொடர்பு ஏற்பட்ட பின்பு அவர்களது ட்ராமாவை நாடகம் என்றோம்; அதை முன்மாதிரியாய்க் கொண்டு அங்கம், காட்சி என்று பிரித்துப் பாட்டும் உரைநடையுமாய் நாடகங்கள் இயற்றினோம். ஆனால் பழங் காலத்தில் நாடகம் என்பது நாட்டியத்தைக் குறித்தது. இரு சங்க நூல்களுள் நாடகம் என்னும் சொல் இடம் பெற்றிருக்கிறது:


1 - பட்டினப்பாலை அடி 113


பாடல் ஓர்த்தும் நாடகம் நயந்தும் ( இதில் பாடலும் ஆடலும் கூறப்படுகின்றன)


2 - பெரும்பாணாற்றுப்படை 55 ஆம் அடி:


நாடக மகளிர் ஆடுகளத்து எடுத்து ( நாட்டியப் பெண்டிர் ஆடும் களத்தைச் சொல்கிறது)


பிற்கால நூல்களிலும் நாடகம் என்ற வார்த்தை நடனம் என்கிற பொருளிலேயே ஆளப்பட்டுள்ளது:



1 - சிலப்பதிகாரம் ( 22 - 142 ) :


நாடக மகளிர் ஆடரங்கு (நடன மாதர் ஆடுகின்ற மேடை)


2 - கம்பர் ( 1494 ) :


நாடக மயில் (ஆடும் மயில்). 

ஆகவே நாடகத் தமிழ் என்பது நாட்டியம் ஆடும்போது பாடுகிற பாட்டு. அந்தப் பாட்டுகளை எப்படிப் புனையவேண்டும், நடனம் எவ்வாறு ஆடவேண்டும் என வழி காட்டும் நாட்டிய இலக்கண நூல்களும் நாடகத் தமிழைச் சேர்ந்தவைதான். கூத்த நூல், சந்தம், சயந்தம், பரதம் முதலிய நாடகத் தமிழ் நூல்கள் அழிந்துவிட்டன. இப்போது ஒன்றுகூட எஞ்சியில்லை.

அபாத்

 

தமிழகத்தின் காஞ்சிபுர மாவட்டத்தில் வாலாஜாபாத் என்ற ஊரும் வேலூர் மாவட்டத்தில் வாலாஜாபேட்டை என்னும் ஊரும் இருக்கின்றன.


வாலாஜா என்பது ஆர்க்காட்டு நவாபாய்ப் பதவி வகித்த முகம்மதலியின் வேறு பெயர். பாரசீக மொழியில் அபாத் என்றால் ஊர் என்பது பொருளாம்.


ஐதரபாத், சிக்கந்தரபாத், அகமதபாத் முதலியவை அபாத் என்று முடிகின்றன.


உசேன் என்பவரின் பெயரால் அமைந்த உசேனபாத் நாளடைவில் உசேனூர் என மருவி இப்போது ஒசூர் ஆகிவிட்டது.


(ஆதாரம்: ரா. பி. சேதுபிள்ளை இயற்றிய ஊரும் பேரும் என்னும் நூல்.)


அபாத் என்பது இந்தியில் ஆபாத் எனப் புழங்குகிறது. இதன் பொருள் மக்கள் வாழ்கிற என்பது.