Wednesday 23 November 2011

குறையுடைய ஆசிரியர்



முற்காலத் தமிழ்நாட்டு ஆசிரியர்கள் தனிப்பட்ட முறையில் சிற்சில மாணவர்களை மட்டுஞ் சேர்த்துக்கொண்டு இலக்கியங்கற்பித்தார்கள். அவர்கள் பயிற்சி (டிரெயினிங்) பெற்றவர்கள் அல்லர். ஆதலால் கால அட்டவணையோ, பாடத் திட்டமோ இன்றித் தாம் கற்றிருந்தவற்றை மட்டும் தத்தமக்குத் தோன்றியபடி போதித்தார்கள் என நாம் ஊகிக்கலாம்.

நல்லாசிரியர்களை அடையாளங் காட்டிய நன்னூல் சில ஆசிரியர்களின் போதனைக் குறைகளையும் எடுத்துரைக்கிறது. அவற்றைக் கழல்குடம், மடல் பனை, பருத்திக் குண்டிகை, முடத்தெங்கு என்ற நான்கு உருவகங்களால் தெரிவித்து அந்த உருவகங்களையும் விளக்குகிறது.

1.கழல்குடம்

பெய்த முறையன்றிப் பிறழ உடன்தரும்
செய்தி கழல்பெய் குடத்தின் சீரே.

கழல் - கழற்சிக்காய். முற்கால விளையாட்டு ஒன்றில் தேவையாவை கழற்சிக்காய்கள். எண்கள் இடப்பட்டவை. எண் வரிசைப்படி அவற்றை ஒரு குடத்தினுள் ஒவ்வொன்றாய்ப் போட்டுவிட்டுப் பின்பு எடுத்தால் முறைப்படி வராது. முதலில் போட்டது பின்னால், பின்பு போட்டது முன்னால் என மாறி மாறி வரும். இதுபோல ஆசிரியர் சிலர் தாம் முறையாய்க் கற்றிருந்தாலும் தாறுமாறாய்க் கற்பிப்பர். முதலில் சொல்லித் தரவேண்டியதைப் பின்பும் இடையிலோ இறுதியிலோ இடம் பெறற்கு உரியதை முதலிலுமாய்ப் போதித்து மாணவரைக் குழப்புவர்.


2. மடல் பனை

தானே தரக்கொளின் அன்றித் தன்பால்
மேவிக் கொளக்கொடா இடத்தது மடல்பனை.

மடல்பனை என்பது ஒருவகைப் பனைமரம். அதில் ஏறமுடியாதபடி மடல்கள் தடுக்கும். மரத்திலிருந்து காய் விழுந்தால் நுங்கு பெறலாம். அப்படிப்பட்ட ஆசிரியர் தமக்குத் தோதான மனநிலை (மூடு) இருந்தால் போதிப்பார். மாணவர் விரும்புகிறபோது கற்க இயலாது.

3.பருத்திக் குண்டிகை

அரிதின் பெயக்கொண்டு அப்பொருள் தான்பிறர்க்கு
எளிதுஈவு இல்லது பருத்திக் குண்டிகை.

குண்டிகை என்பது குடுக்கை. வாய் குறுகியும் வயிறு அகன்றும் இருக்கும். பருத்திப் பஞ்சை ஒரு குடுக்கையில் அடைத்து வைப்பார்களாம். உள்ளே சிறிது சிறிதாகச் செலுத்தவேண்டும். வெளியில் எடுப்பதும் அப்படித்தான். இத்தகைய ஆசிரியர் தாமும் பெரும்பாடு பட்டுக் கற்றிருப்பார். மாணவர்க்கும் சிறிய அளவிலேயே பாடஞ்சொல்வார்.

4.முடத்தெங்கு

பல்வகை உதவி வழிபடு பண்பின்
அல்லோர்க்கு அளிக்கும் அதுமுடத் தெங்கே.

முடத்தெங்கு - வளைந்த தென்னை. நம் வீட்டுத் தென்னைமரம் பாதிவரை நேராய் உயர்ந்து பின்பு அடுத்த இல்லத்தின் பக்கம் வளைந்து வளர்ந்தால் அது முடத்தெங்கு. நீரை நம்மிடம் பெற்றுக்கொண்டு காயைப் பக்கத்து வீட்டில் போடும். இந்தவகை ஆசிரியர் பொருள் வாங்குவது ஒரு மாணவனிடம், நன்றாகக் கற்பிப்பது வேறொருவனுக்கு.

இந்த மாதிரி ஆசிரியர்களிடஞ் சிக்காமல் நல்லாசிரியர்களை அடைந்தவர்கள் அதிர்ஷ்டசாலிகள்!

No comments:

Post a Comment