Tuesday 15 November 2011

ஒப்புரவறிதல்


ஒப்புரவு என்பது சமுதாயத்துக்குப் பயன்படும் தன்மை. பெருஞ்செல்வர்கள் தங்கள் செல்வத்தைச் சமுதாய நன்மைக்காகச் செலவிடல் ஒப்புரவறிதல் ஆகும்.

உடலைப் பேணி உயிரைக் காக்கும் மருத்துவமனையும் அறிவையூட்டி மனத்தைச் செம்மைப்படுத்தும் பள்ளிக்கூடமும் சமுதாயத்துக்கு மிக அவசியமான தேவைகள். இவற்றைப் போதிய அளவில் நிறுவ அரசால் இயலுவதில்லையாதலால் ஒப்புரவாளரின் பங்கு இன்றியமையாதது ஆகிறது.

பச்சையப்பர், ராஜா சர்.அண்ணாமலை, அழகப்பர் முதலியோர் ஒப்புரவாளர்களுக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார்கள்.

பண்டைக்காலச் சமுதாயத்தின் தேவைகளுக்கேற்ப ஒப்புரவறிந்த செல்வர்கள் இருந்திருக்கிறார்கள். அவர்களை வகைப்படுத்தும் மூன்று திருக்குறள்கள் ஒப்புரவறிதல் அதிகாரத்தில் வரிசையாய் இடம்பெற்றுள்ளன.

1. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு.

பொருள்: ஊருணி நீர் நிறைந்திருப்பதைப் போன்றது அறிவாளியிடம் சேர்ந்திருக்கிற செல்வம்.

விளக்கம்: ஊருணி என்பது குடிநீருக்காக மக்கள் பயன்படுத்தும் குளம். பழங்காலத்தில் குடிநீர்த் தேவைக்கென்றே ஒரு அல்லது சில குளங்களை ஊர்களில் ஒதுக்கியிருந்தார்கள். அவையே ஊருணி. ஊர்+உண்ணி= ஊருண்ணி----> ஊருணி.

2. பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்
நயனுடை யான்கண் படின்.

பொருள்: மக்கள் தின்னக்கூடிய மா, கொய்யா முதலிய பழங்களை ஈனுகின்ற மரம் ஊர் நடுவில் பழுத்திருப்பதைப் போன்றது, செல்வம் தாராள மனமுடையான் கையில் கிடைப்பது.

விளக்கம்: தற்காலத்தில் ஓரிடத்து விளை பழங்களை லாரி மூலம் நெடுந்தொலை கொண்டு சென்று விற்றுப் பணமாக்குகிறார்கள். லாரியில்லாக் காலத்தில் அந்தந்தப் பகுதி மக்களே பயன் கொண்டார்கள். கல்லால் அடித்துப் பழங்களை வீழ்த்தித் தின்று மகிழ்வது சகஜம். "காய்த்த மரம் கல்லடி படும்" என்பது பழமொழி.

3. மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தகை யான்கண் படின்.

பொருள்: மருந்துக்குப் பயன்படும் மரம் போன்றது, செல்வம், சிறந்த தகுதியுடையவனிடஞ் சேர்வது.

இதற்கு விளக்கம் தேவையில்லை.

மேற்சொன்ன மூவித ஒப்புரவாளர்களுக்கும் இடையே வேறுபாடு உண்டு என்பதை வெவ்வேறு உவமை காட்டியதன் மூலம் வள்ளுவர் அறிவிக்கிறார். அந்த வேறுபாட்டைக் குன்றக்குடி அடிகளார் விளக்கியுள்ளார்.

1. ஊருணி நீர் நிறைந்திருப்பதில் தன்னலம் உண்டு. நீர் இல்லையெனில் மக்கள் நடமாடமாட்டார்கள். ஊருணி தன் பெயரை இழந்து குட்டை என்றழைக்கப்பெற்று அலட்சியத்துக்கு ஆளாகிவிடும். அதேபோல் தன்னலம் நாடும் அறிவாளன் தன் அறிவைப் பயன்படுத்தி எதற்குச் செலவிட்டால் தனக்கு ஆதாயம் கிடைக்கும் என்பதை ஆராய்ந்து ஒப்புரவறிவான்.

2. பழுத்த மரம் கல்லடி படும்போது இலை, கிளை முதலியவையும் சேதமுறும். மரத்துக்கு ஆதாயம் எதுவும் இல்லை, இன்னல்தான் உண்டு. பழுமரம் போன்ற செல்வன் தனக்குச் சிறிது கெடுதி உண்டானால்கூட அதைத் தாங்கிக்கொண்டு சமுதாயத்துக்குப் பயன்படுவான்.

3. மருந்து மரத்துக்குக் காட்டாக வேப்பமரத்தைச் சுட்டலாம். மருந்து தேவைப்படுபவர்கள் பட்டை, இலை, ஈர்க்கு, காய், பூ முதலிய மரத்தின் பல பாகங்களையும் உரித்தும் பறித்தும் கொய்தும் எடுத்துக்கொள்வார்கள். இதனால் மரத்துக்குப் பெருஞ்சேதம். எல்லை மீறி மொட்டை அடித்தால் பட்டுப்போகவும் கூடும். மருந்து மரத்தையொத்த பெருந்தகையான் குடி முழுகிப் போனாலும் பாதகமில்லை என்று செல்வத்தை ஈவான்.

பேரறிவாளனைவிட நயனுடையான் உயர்ந்தவன். இவனைப் பார்க்கிலும் பெருந்தகையான் மேலானவன். இவன் தியாகி.

எவ்வாறாயினும் மூவகை ஒப்புரவாளராலும் சமுதாயம் பலனடைவது உறுதி.

1 comment:

  1. பேரறிவாளன், நயனுடையான், தியாகி மூவருக்குமுள்ள குணநலன்களின் சிறப்பை வேறுபட்ட உவமைகளால் சுட்டிய குறள்களின் விளக்கங்களை உங்களால் இன்று அறிந்துகொண்டேன். பகிர்வுக்கு மிகவும் நன்றி.

    ReplyDelete