Sunday 20 November 2011

நல்லாசிரியர் யார்?



நவீன பள்ளிக்கூடங்கள் தோன்றுமுன்பு தமிழகத்தில் கல்வியைத் திண்ணைப்பள்ளிகள் வழங்கின. அங்கே தமிழ் எழுதப் படிக்கவும் அடிப்படைக் கணக்குப் போடவும் கற்றுக்கொண்டவுடன் பெரும்பாலான மாணவர்களுக்குக் கல்வி முற்றுப்பெற்றது. மேலும் படிக்க ஆர்வமும் வாய்ப்பும் வசதியுங் கொண்டோர் தனிப்பட்ட ஆசிரியரை நாடி இலக்கியங் கற்றனர்.

இந்த ஆசிரியர்கள் பெற்றிருக்கவேண்டிய குணநலன்களை உவமை மூலம் நன்னூல் விளக்குகிறது. அந்த உவமைகள்: நிலம், மலை, தராசு, பூ.

இந்த உவமைகளின் தன்மையையும் அது விவரிக்கிறது.

பாக்கள் 27 முதல் 30

27. தெரிவரும் பெருமையும் திண்மையும் பொறையும்
பருவ முயற்சி அளவில் பயத்தலும்
மருவிய நன்னில மாண்பா கும்மே.

(உறுதியும் பொறுமையும் பாடுபடுவதற்கேற்ற பலன் நல்கலும் நிலத்தின் இயல்புகள்.)

28. அளக்க லாகா அளவும் பொருளும்
துளக்க லாகா நிலையுந் தோற்றமும்
வறப்பினும் வளந்தரும் வண்மையும் மலைக்கே

(பெருந்தோற்றமும் வறட்சிக்காலத்திலும் கிழங்கு முதலிய உணவளிக்கும் ஈகைப் பண்புங் கொண்டது மலை.)

29. ஐயந் தீரப் பொருளை யுணர்த்தலும்
மெய்ந்நடு நிலையும் மிகுநிறை கோற்கே.

(நடுநிலையில் நின்று சரியான எடையைக் காட்டுதல் தராசின் குணம்.)

30. மங்கல மாகி இன்றி யமையாது
யாவரும் மகிழ்ந்து மேற்கொள மெல்கிப்
பொழுதின் முகமலர் வுடையது பூவே.

(யாவர்க்கும் மகிழ்ச்சி தருவதும் மலர்ந்திருப்பதும் பூ.)

இந்த உவமைகளால் நல்லாசிரியர்களின் பண்புகள் பொறுமை, மாணவரின் உழைப்புக்குத் தக்கவாறு கற்பித்தல், நல்ல தோற்றம் (பெர்சனாலிடி), ஏழை மாணவர்க்கும் போதித்தல், எல்லா மாணவரையுஞ் சமமாகப் பாவித்து ஐயந்தீரும்படி பாடஞ்சொல்லல், முகமலர்வுடன் இனிமையாகக் காட்சியளித்தல் ஆகியவை என நன்னூலார் கருதினார் என்பது தெரிகிறது.

No comments:

Post a Comment