Monday 21 November 2011

கனியும் கடவுளும்


பிறமொழியினர் பழங்களுக்குக் கடவுள் பெயரை இட்டார்களோ இல்லையோ தெரியாது. ஆனால் வாழைக்குத் தமிழர் அவ்வாறு பெயர் சூட்டியிருக்கின்றனர்.

ஆண்டு முழுதும் பெரிய அளவில் கிடைப்பது, மக்கள் விரும்பி உண்பது பூவன் பழம். இறைவனுக்கு அர்ச்சனை செய்யவும், திருமணம் முதலிய மங்கல விழாக்களின் போதும், இன்றியமையாதது அது. பெட்டிக்கடைகளில் தாறாகத் தொங்குவதும் அதுவே. அதற்கு பிரம்மனின் பெயரை வைத்திருக்கிறார்கள்.

படுத்திருக்கின்ற திருமாலின் உந்தியிலுள்ள பூவில் பிரம்மன் அமர்ந்திருப்பதை சிலைகளிலும் ஓவியங்களிலும் காணலாம். பூவில் உள்ள பிரம்மனைப் பூவன் என்பது பொருத்தம்தானே?

ஆண்டின் சில பருவங்களில் மட்டும் கிடைக்கிற மொந்தனை பெரும்பாலும் காயாகச் சமைத்து உண்கிறோம். முகுந்தன் என்பதன் மரூஉ மொந்தன். "முகுந்தா முகுந்தா" என்ற தசாவதாரப் பாடல் நினைவுக்கு வருகிறதா? முகுந்தன் திருமாலைக் குறிக்கும்.

அரிதாகத் தின்னக்கிடைப்பது பேயன். இது சிவனின் ஒரு பெயர். சாம்பலைப் பூசிக்கொண்டு இடுகாட்டில் பேய்க்கணங்களுடன் நடனமாடுவதால் சிவனைப் பேயன் என்பர். பேயன்பழம் பூவன்பழத்தை விட சுவை மிக்கது.

மும்மூர்த்திகளையும் நினைவு படுத்துகிற வாழைக்கு பக்தர்கள் நன்றி செலுத்தவேண்டும்.

No comments:

Post a Comment