Saturday 19 November 2011

கூக்குரல்


குயில் கூ கூ எனக் கத்துவதால், “குயில் கூவுகிறதுஎன்கிறோம். சேவல் வேறு விதமாய்க் குரலெழுப்பினும் கூவுவதாய்த்தான் சொல்கிறோம்.


சேவல் 'குக்கூ' எனக் கூவியதாய்க் குறுந்தொகைத் தலைவி கூறுகிறாள். ["குக்கூ என்றது கோழி" - பா.157]

குயிலின் ஆங்கிலப் பெயர் குக்கூ. பிரெஞ்சிலும் குக்கூதான்.

புதுச்சேரி மக்கள், "ஏன் கத்துறே?" என்று கூறாமல் "ஏன் கூவுறே?" என்று கேட்பதுண்டு.

கூ கூ என்று எழுப்புகிற குரல்தான் கூக்குரல். கூ + குரல்= கூக்குரல்

பூ + குடலை = பூக்குடலை என்பது போல.கூச்சல் கூப்பாடு கூப்பிடுதல் ஆகிய சொற்களுக்கும் கூ தான் பகுதி..

விபத்து, ஆபத்து, துன்பம் நேர்கையில், 'ஐயோ! ஐயையோ!' என்று அலறுகிறோம். முன்காலத்தில் 'கூ! கூ!' எனவும் ஓலமிட்டுள்ளார்கள். [ஆதாரம்: வேதநாயகம் இயற்றியுள்ள 'பிரதாப முதலியார் சரித்திரம்' - அதிகாரம் 16, ஆண்டிச்சியம்மாள் சரித்திரம்]

"அவர்கள் தங்களுடைய நகங்களால் தங்களைத் தாங்களே அதிகமாகக் கீறிவிட்டுக் கொண்டு, கூ! கூ! எங்களை வந்து கொல்லுகிறாள் என்று கூவினார்கள்". 'கூவினார்கள்' என்ற சொற் பிரயோகம் கவனிக்கத்தக்கது.

இந்தப் பழைய வழக்கத்தைக் கவனத்தில் கொண்டு கல்கி தம் பொன்னியின் செல்வனில் (பாகம் 4, அதிகாரம் 5), "அவள் தன் செக்கச் சிவந்த இதழ்களைக் குவித்துக் கூ என்று சத்தமிட்டாள்" என எழுதியிருக்கிறார். சிறு விவரத்திலும் சிந்தை செலுத்திய அவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

கூ கூ என்ற விளையாட்டு பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? எழுபது ஆண்டுகளுக்கு முன்பு வரை சிறுவர்கள் அதை ஆடினார்கள். அறுவர் பங்கேற்ற அந்த ஆட்டத்தின் விவரம்:

துணித் துண்டொன்றின் ஒரு முனையில் எலுமிச்சம்பழ அளவில் முடிச்சுப் போட்டு வைத்துக் கொள்ள வேண்டும். வட்டமாக அமர்ந்து ஆறு சிறு சீட்டுக்களை ஒரே அளவாக நறுக்கி அவற்றில் கூகூ, திருடன், தலையாரி, போலீஸ், மந்திரி, ராஜா என ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு சொல்லை எழுதி, உருளையாக சுருட்டி, யாவற்றையும் குலுக்கி நடுவில் போட்டவுடன் ஆளுக்கொரு சீட்டை எடுத்துக் கமுக்கமாகப் படித்துப் பார்த்து வைத்துக் கொள்வார்கள். ஆட்டம் தொடங்கும்.

கூ கூ சீட்டுக்காரன் 'கூ,கூ' எனக் கத்துவான். அடியிற் காணும் உரையாடல் தொடரும்:

தலையாரி - இந்த நேரத்தில் என்ன சத்தம்?
கூ கூ - என் கோழியைக் காணோம்.
மந்திரி - போலீஸ்!
போலீஸ் - இதோ இருக்கிறேன்.
மந்திரி - திருடனைக் கண்டுபிடி.

எஞ்சியுள்ள இருவரின் முகங்களையும் காவலன் உற்று நோக்கி, ஒருவனைச் சுட்டிக் காட்டி, 'இவன்தான் திருடன்' என்பான். அநேகமாக அது சரியாக இருக்கும். உள்ளங்கையைத் திருடன் நீட்டுவான். அமைச்சன் சொல்கிற எண்ணிக்கைப் படி துணி முடிச்சால் காவலன் அடிப்பான் (மெதுவாகத்தான்!).

தண்டனை நிறைவேறியதும் ஆட்டம் முடியும். சீட்டுக்களை நன்றாகச் சுருட்டி மீண்டும் போட்டு அடுத்த ஆட்டத்தைத் தொடங்குவர். கோழிக்குப் பதில் வேறு பொருளைச் சொல்வார்கள்.

திருடன் என அரசனைக் காவலன் தவறாய்ச் சுட்டிக் காட்டிவிட்டால் அவன், "ஊரையாளுகிற ராஜாவையா திருடன் என்கிறாய்? மந்திரி, போலீசை அடி" எனக் கட்டளையிட்டு அடி எண்ணிக்கையைச் சொல்வான். காவலன் அடிபடுவான்.

பிறரது கவனத்தை ஈர்க்க 'கூ கூ' என்று கத்தும் வழக்கம் இருந்தமைக்கு இந்த விளையாட்டும் ஒரு சான்று.
( நிலாச்சாரலில் 6-7-09 இல் வெளிவந்த என் கட்டுரை)

4 comments:

  1. ஆபத்து நேர்கையில் அன்று ’கூ’ என்று கூப்பாடு போட்டிருக்கின்றனர். இன்று ஐயோ என்று கத்துறோம். நாளை எப்படிக் கத்துவார்களோ?

    கூக்குரலுக்கு இவ்வளவு பெரிய வரலாறு இருக்கிறது என்பதையறியும் போது வியக்காமல் இருக்க முடியவில்லை. இதைப் போல் வேறு பல தமிழ்ச்சொற்களுக்கும் விளக்கம் எழுதினால் நாங்கள் தெரிந்து கொள்ள வசதியாக இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. பின்னூட்டத்தை வாசிக்காமல் நெடு நாள் போக்கிவிட்டேன் . நன்றி .Better late than never .

      Delete
  2. அன்புள்ள பேராசிரியருக்கு
    வணக்கம்
    பிரெஞ்சில் l’onomatopée எனப்படும் coucou,frou frou, glou glou,tic tac, hi hi, ha ha, ding dong... ஒசை நயமுடையவை. அன்புடன் ஒரு வேண்டுகோள். கூ கூ என்ற விளையாட்டு போல் பழைய விளையாட்டுகளை பதிவு செய்யுங்கள்.
    அன்புடன்
    வெங்கட சுப்புராய நாயகர்
    புதுச்சேரி

    ReplyDelete
    Replies
    1. பிரஞ்சு onomatopee ஐ நினைவுபடுத்தியமைக்கு மிகுந்த நன்றி . தமிழின் இரட்டைக்கிளவியை அதனுடன் ஒப்பிடலாம் : வளவள , கலகல , மொறுமொறு , விறுவிறு . உங்கள் யோசனைக்கு நன்றி . வேறு விளையாட்டுகள் குறித்து எழுத முயல்வேன் .

      Delete