Tuesday, 6 March 2012

இயால்மாரின் இதயம்


  

ஸ்வீடன் நாட்டுத் தொன்மக் கதையில் ஒரு கட்டம்: 

இல்மேர் என்னும் மன்னனின் மகளும் இயால்மார் என்பவனுங் காதலர்கள். அரசனின் எதிர்ப்பு இருவரையும் இணைய விடவில்லை. வீரத்தால் காதலியை அடைந்துவிடலாம் என்ற முடிவுடன் சிறுபடை திரட்டிச் சென்றான் காதலன். முழுத் தோல்விதான் போர்க்களத்தில் கிட்டியது. அதன் பின் 

19 ஆம் நூற்றாண்டுப் பிரெஞ்சுக் கவிஞர் லெக்கோன்த் தலில் (Leconte de Lisle ) அந்தக் கட்டத்தை இயல்மாரின் இதயம் என்ற தலைப்பில் கவிதையாய்த் தீட்டியுள்ளார்.  

பிரெஞ்சு மூலத்திலிருந்து தமிழில் தருகிறேன். படித்துப் பாருங்கள்.தெளிந்த இரவு, நடுக்குங் காற்று,

சிவந்த பனித்தரை,

ஆயிரம் மறவரங்கே ஆழ்துயில் கொள்ளுகின்றார்

கல்லறை இல்லாமலே.

வாளுண்டு கையிலே, ஒளியில்லை கண்ணிலே,

அசைவில்லை மெய்யிலே.

தண்மதி பொழிகிறது மங்கிய நிலவினை.இயல்மார் சற்றே நிமிர்கிறான் ரத்தம்

உறைந்த உடல்களின்

இடையே வாள்மீது இருகையும் ஊன்றி.

"அடர்ந்த தோப்பிலே பறவைகள் போலவே

விடியலில் வையகம் அதிரவே பாடிச்

சிரித்துக் களித்த அத்தனைத் திண்டோள்

இளைஞரின் நடுவே

ஏன்'பா மூச்சுண்டா யாருக் கேனும்?"இல்லை விடை. "என் தொப்பி உடைந்து நொறுங்கிற்று.

கவசமோ துளைபட்டு அதிலிருந்த ஆணிகளைச்

சுக்குநூ றாக்கிற்றுக் கோடரி. என்கண்கள்

சிந்துவது நீரா? செங்குருதி யன்றோ?

வா இங்கே, காக்கையே, மனிதர் தின்னி!

திறவுன்றன் இரும்பலகால் என்னெஞ் சத்தை.

எடுத்துச்செல் இதயத்தை இல்மேரின் புதல்வியிடம்,

சூட்டோடு சூடாக!உப்சாலா வூரிலே உயர்தர மதுபருகிப்

பொற்கிண்ணம் உராய்ந்து பாடுகின்ற கும்பலில்

தேடென்றன் காதலியை.

புறாக்கூட்டம் உறைகின்ற கோபுரத்தின் உச்சியிலே

பால்வெண் உடலும் நீள்கருங் குழலுமாய்க்

காண்பாய் அவள் நிற்க.

வெள்ளி வளையங்கள் ஊசலிடுங் காதுகளில்.

அந்தி வெள்ளிக் கோளினும் அவள்விழிகள் மிகச்சுடரும்.ஏகுவாய்! கருந்தூதா! யானந்தக் காரிகையைக்

காதலிக் கின்றேன் கழறுவாய் கன்னியிடம்.

இதோபார் இதயம் என்றே கொடுத்திடு.

அடையாளங் காண்பாள்; அதுசெக்கச் செவேலென்று

திண்ணியதாய்த் திகழ்கிறது, நடுங்கவில்லை,

வெண்ணிறமாய் மாறவில்லை என்பதனை நோக்கிப்

புன்னகைப்பாள் இல்மேரின் பொன்மகள் பறவையே!

6 comments:

 1. ஆயிரம் மறவரங்கே ஆழ்துயில் கொள்ளுகின்றார்

  "கல்லறை இல்லாமலே.

  வாளுண்டு கையிலே, ஒளியில்லை கண்ணிலே,

  அசைவில்லை மெய்யிலே.

  தண்மதி பொழிகிறது மங்கிய நிலவினை."

  அருமையான கவிதை வரிகள். பிரெஞ்சு மூலத்தைப் படிக்க வியலா என்னைப் போன்றோர்க்கு ஒரிஜினல் கவிதையைப் படித்தது போன்ற உணர்வினைத் தந்த ஆக்கத்திற்கு மிக்க நன்றி.

  ReplyDelete
  Replies
  1. பாராட்டுக்கு மிக்க நன்றி .

   Delete
 2. தங்களின் ‘மறுபிறவி’ சிறுகதை படித்தேன்.
  கருத்துள்ள நல்ல கதை.
  பிறவற்றையும் படிக்க முயல்வேன்.
  நன்றி.

  ReplyDelete
 3. உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி .

  ReplyDelete
 4. காதல் கைகூடாமல் இறக்க நேர்ந்தாலும் தான் ஒரு கோழையல்ல என்பதைத் தன் காதலியிடம் எப்படியேனும் சொல்லிவிடத் துடிக்கும் வீரனின் இறுதி மூச்சாய் ஒலிக்கும் வார்த்தைகள்! மனத்தில் கனம் ஏற்றும் இவ்வேற்றுமொழிக் கவிதையை மொழிபெயர்த்து நாங்கள் ரசிக்கத் தந்த தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

  ReplyDelete
 5. மொழிபெயர்ப்பு என்று தெரியாதபடி சரளமான நடையில் அழகிய சொற்களை கோர்த்து அருமையான கவிதை வடித்திருக்கிறீர்கள்.

  பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete