Wednesday 25 April 2012

அந்த வகுப்பு - பிரெஞ்சு சிறுகதை



(பிரான்சுக்கும் ஜெர்மனிக்கும் இடையே நடந்த ஒரு போர் 1871 ல் முடிந்த போது ஏற்பட்ட உடன்படிக்கைப்படி பிரான்சின் அல்ஸாஸ், லொரேன் ஆகிய கிழக்கு மாநிலங்கள் இரண்டும் ஜெர்மனியுடன் இணைக்கப்பட்டன. ஜெர்மன் அரசு அங்கே பிரெஞ்சு கற்பிக்கத் தடை விதித்தது. அப்போது எழுதப்பட்ட இந்தச் சிறுகதையின் ஆசிரியர் (அல்போன்ஸ் தொதே) (Alphonse Daudet)

(பிரெஞ்சிலிருந்து தமிழில் :- சொ.ஞானசம்பந்தன்)

 ***************************************************

அன்று காலை நான் தாமதமாய்ப் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தேன். நேரம் தவறியமை ஒரு குற்றம். மேலும் ஆசிரியர் அமேல் படித்து வரச் சொல்லியிருந்த செய்யுளில் ஒரு சொல் கூட எனக்குத் தெரியாது. ஆகவே எனக்கு மிக்க அச்சமாய் இருந்தது. மட்டம் போட்டு விட்டுக் காடு பதுங்கலாமா என்று கூட ஒரு கணம் எண்ணினேன்; ஆனால் அந்த எண்ணத்தை மனவலிமையால் விரட்டி விட்டுப் பள்ளி நோக்கி ஓடினேன். 

வழியில் நகர மன்றத்தின் எதிரே அறிவிப்புப் பலகையருகே கூட்டம் கூடியிருந்ததைக் கண்டேன். இரண்டு ஆண்டுக் காலமாய் அந்தப் பலகை தான் எல்லாவிதமான கெட்ட செய்திகளையும் தந்து கொண்டிருந்தது; போர்க்களத் தோல்விகள், ஜப்தி நடவடிக்கைகள், ஜெர்மன் படைத்தலைமையின் ஆணைகள்!

ஓட்டத்தை நிறுத்தாமலே, “இன்னும் என்னென்ன இழவோ?” என்று மனத்துக்குள் கேட்டுக்கொண்டேன். 

மைதானத்தை நான் கடந்த போது, கொல்லர் வாக்தேர், தம் உதவியாளுடன் அறிவிப்பைப் படித்துக் கொண்டிருந்தவர், என்னைப் பார்த்து, “இவ்வளவு விரைவாய் ஓடாதேடா பையா! பள்ளிக்கு ஒன்றும் அவசரமில்லைஎன்று கத்தினார். என்னைக் கிண்டல் செய்கிறார் என்று நினைத்துக் கொண்டு மூச்சிரைக்க ஓடிப் பள்ளியினுள் நுழைந்தேன். 

எப்போதும், வகுப்புத் துவக்க நேரத்தில், தெரு வரை பேரொலி கேட்கும். எல்லாரும் சேர்ந்து காதுகளைப் பொத்திக் கொண்டு உரக்கப் பாடம் படிக்கிற ஒலி, ஆசிரியர், ’மெள்ள, மெள்ளஎன்று குரலெழுப்பி மேசை மேல் தட்டுகிற பருமனான மட்டப்பலகையின் ஒலி, இந்தச் சந்தடிக்கிடையில் திருட்டுத்தனமாய் இருக்கையை அடைந்து விடலாம் என்று திட்டமிருந்தேன்; ஆனால் அன்றைய நாள் பார்த்து ஞாயிறு காலை போல் ஒரே அமைதி! மாணவர்கள் தத்தம் இருக்கைகளில் அமர்ந்திருந்ததையும் ஆசிரியர் அக்குளில் இடுக்கிய அந்தப் பயங்கர இரும்பு மட்டப்பலகையுடன் உலவிக் கொண்டிருந்ததையும் ஜன்னல் வழியே கண்டேன். அந்தச் சுடுகாட்டு அமைதிக்கு இடையே நான் நுழைய வேண்டுமே! எனக்கு எவ்வளவு அச்சம் இருந்திருக்கும் என்பதை நீங்கள் யூகித்துக் கொள்ள முடியும். 

ஆசிரியரோ என்னை அமைதியாய்ப் பார்த்து மிக மென்மையாய்ச் சொன்னார்: 

சீக்கிரம் போய் உட்காரப்பா, நீ இல்லாமலே வகுப்பைத் துவங்கப் பார்த்தோமே! 

விரைந்து போய் அமர்ந்தேன். பின்பு தான் அச்சத்திலிருந்து சிறிது விடுபட்டு நான் கவனித்தேன்! ஆசிரியர் தம் அழகிய பச்சை நிற ஆடையை தணிக்கையின் போது அல்லது ஆண்டு விழாவின் போது மட்டும் அணிகிற ஆடையை உடுத்திருந்தார். வகுப்பில் ஒரு அசாதாரண சூழ்நிலை நிலவியது; எல்லாவற்றையும் விட எனக்கு மிகமிக வியப்பைத் தந்த காட்சி. எப்போதும் காலியாகக் கிடக்கும் கடைசி பெஞ்சுகளில் கிராமவாசிகள் சிலர் எங்களைப் போன்றே அமைதியாய் உட்கார்ந்திருந்தது தான்; அங்கே கிழவர் ஒசேர், முன்னாள் நகரத்தந்தை, முன்னாள் தபால்காரர் முதலியோரைப் பார்த்தேன். எல்லாருமே சோகமயமாய்க் காணப்பட்டனர். ஒசேர் ஓரங்கிழிந்த ஒரு பழைய புத்தகத்தைத் தம் மடி மீது விரித்து வைத்து அதன்மேல் தம் பருத்த மூக்குக் கண்ணாடியைக் கழற்றி வைத்திருந்தார். 

இவற்றைப் பற்றி நான் வியந்து கொண்டிருந்த நேரத்தில், ஆசிரியர் என்னை வரவேற்ற போது பேசிய அதே மெல்லிய குரலில், ” குழந்தைகளே, இது தான் நான் நடத்தப் போகும் கடைசி வகுப்பு. பெரிலினிலிருந்து வந்துள்ள ஆணைப்படி அல்லாஸ், லொரேன் மாநிலங்களில் இனி ஜெர்மன் மொழி மட்டுமே கற்பிக்கப்படும்; புது ஆசிரியர் நாளை வந்து விடுவார். இன்று உங்களது கடைசி பிரெஞ்சு வகுப்பு. கவனமாக இருங்கள்என்று சொன்னார். 

இந்தப் பேச்சு என்னைக் கலவரப்படுத்தியது. ஓகோ! இது தான் அறிவிப்புப் பலகையில் இருந்ததோ! 

என்னுடைய கடைசி பிரெஞ்சுப் பாடம்! 

எனக்குக் கொஞ்சம் கொஞ்சம் தான் எழுதத் தெரியும், நான் இனி படிக்கவே முடியாதோ? இவ்வளவு தானா கல்வி? ஐயோ, எவ்வளவு காலத்தை வீணாக்கினேன்? பறவைக்கூடுகளைத் தேடிப் போவதற்கோ, ஆற்றில் கும்மாளம் போடுவதற்கோ எத்தனை நாள் மட்டம் போட்டேன்? சற்று முன்பு கூடப் பெரும் சுமையாயும், வெறுப்புத் தருபவையாயும் தோன்றிய என் புத்தகங்கள், எளிதில் பிரிக்க முடியா நண்பர்களாக இப்போது மாறிவிட்டன. ஆசிரியர் மட்டும் என்ன? அவர் பிரியப் போகிறார்; அவரை இனிக் காண முடியாது என்ற எண்ணம் அவர் விதித்த தண்டனைகளையும் கொடுத்த மட்டப்பலகை அடிகளையும் மறக்க செய்து விட்டது. பாவம் அவர்! இந்தக் கடைசி வகுப்புக்காகத் தான் தம் அழகிய உடையை உடுத்தியிருந்தார். 

ஊர்ப் பெரியவர்கள் வகுப்பு அறையில் ஏன் வந்து அமர்ந்திருந்தார்கள் என்பதும் இப்போது புரிந்தது. பள்ளிக்கு அடிக்கடி வராமல் போனோமே என்று வருந்துவதற்கு அறிகுறி போலும் அவர்களது இன்றைய வருகை; ஆசிரியரது நீண்ட காலத் தொண்டுக்கு நன்றி செலுத்தவும், பிரிந்து போகிற தாய்நாட்டை வாழ்த்தவும் இது ஒரு வழி போலவும் தெரிந்தது. 

இந்தச் சிந்தனைகளில் நான் மூழ்கியிருந்த சமயம், என்னை ஆசிரியர் கூப்பிடுவது காதில் விழுந்தது; பாடம் சொல்வதற்கு என் முறை! அடடா! பாடத்தை உரத்த குரலில், தெளிவாக, தப்பே இல்லாமல் ஒப்புவிக்கும் ஆற்றலைப் பெறுவதற்கு ஈடாக என்னதான் கொடுத்திருக்க மாட்டேன்! ஆனால் துவக்கத்திலேயே குழம்பிப் போய் நிமிர்ந்து பார்க்கத் துணிவின்றி கனத்த இதயத்துடன் நான் நின்று கொண்டிருந்தேன். 

ஆசிரியர் குரல் கேட்டது. 

உன்னை நான் திட்ட மாட்டேன் தம்பி! நீ இப்போது தண்டனையை அனுபவித்துக் கொண்டு தான் நிற்கிறாய். இப்படித்தான், நாளை படிக்கலாம், நாளை படிக்கலாம் என்று காலத்தைக் கடத்துகிறோம். கடைசியில் என்ன ஆயிற்று பார்த்தாயா?

அந்தோ, அல்ஸாஸீக்குத் துன்பமே கல்வி கற்பதை ஒத்திப் போட்டுக் கொண்டே வந்தமையால் தான், இப்போது அந்த ஆட்கள் நம்மைப் பார்த்து, “என்ன இது! பிரெஞ்சுக்காரர்கள் என்று உங்களைச் சொல்லிக் கொண்டீர்கள்; ஆனால் உங்கள் மொழியைப் படிக்கவும் தெரியவில்லை; எழுதவும் தெரியவில்லையே,” என்று கேட்பதற்கு உரிமையுண்டு. இந்தக் குற்றத்திலே உனக்கு மட்டும் அல்ல, நம் எல்லோருக்குமே பங்கு உண்டு. உங்களுக்குக் கல்விக்கண் அளிக்க உங்கள் பெற்றோர்களுக்கு மனமில்லை; அதற்குப் பதிலாய் வயலுக்கோ நூற்பாலைக்கோ உங்களை அனுப்பினார்கள், காசுக்காக.  

நான் மட்டும் என்ன? கற்பிக்க வேண்டிய நேரத்தில், உங்களை அவ்வப்போது தோட்டத்துக்கு நீர் பாய்ச்ச அனுப்பினேனே! போதிப்பதற்குப் பதிலாய் என் சொந்த வேலையை எத்தனை முறை செய்திருக்கிறேன்? இவ்வாறு சொல்லிக் கொண்டு வந்த ஆசிரியர் பிரெஞ்சைப் பற்றிச் சொல்லத் துவங்கினார்.  

அது உலகின் மிக அழகிய மொழி, மிகத் தெளிவானது; மிகக் கட்டுக் கோப்பானது. அதை ஒரு போதும் மறக்கக் கூடாது. அதை நமக்குள் போற்றிக் காக்க வேண்டும்; ஏனென்றால், அடிமைத்தளையில் பூட்டப்பட்ட மக்கள் தம் மொழியை நன்கு பேசிக்கொண்டிருப்பார்களேயானால், அது தங்கள் விலங்கின் சாவியைக் கையில் வைத்திருப்பதற்கு ஒப்பாகும்..... 

பின்பு அவர் இலக்கணப் புத்தகத்தையெடுத்துப் புதுப்பாடம் கற்பித்தார். என்னால் அவ்வளவு நன்றாய்ப் புரிந்து கொள்ள முடிந்ததை எண்ணி வியந்தேன். அவர் சொன்னவை எல்லாம் எளியவையாய், மிக மிக இனியவையாய்த் தோன்றின. நான் முன் எப்போதும் அந்த அளவு கவனித்துக் கேட்டதும் இல்லை; அவரும் விளக்கம் சொல்வதில் அந்த அளவு பொறுமை காட்டியதும் இல்லை. பிரிவதற்கு முன்பு அவர் தமக்குத் தெரிந்தவை எல்லாவற்றையும் எங்களுக்குச் சொல்லிக் கொடுத்துவிட வேண்டும்; ஒரேயடியாய் எங்கள் தலையில் திணித்து விட வேண்டும் என்று விரும்பியது போல் தோன்றிற்று. 

பாடம் முடிந்ததும், எழுத்துப் பயிற்சி துவங்கியது. ஆசிரியர் புது அட்டைகளைத் தயாரித்திருந்தார். அவற்றில் அழகிய எழுத்துக்களில், “பிரான்ஸ், அல்ஸாஸ்; பிரான்ஸ், அல்ஸாஸ்என்று எழுதியிருந்தார். அடடா! அவற்றைப் பார்த்து எழுத ஒவ்வொருவரும் எவ்வளவு அக்கறை காட்டினோம்! எவ்வளவு அமைதி! தாளில் கிரீச்சிட்ட பேனாக்களின் ஒலி தவிர, வகுப்பில் வேறு ஒலியே இல்லை. 

ஜன்னல் வழியாய்ப் பொன் வண்டுகள் நுழைந்து பறந்தன. யாருமே அவற்றைக் கவனிக்கவில்லை. அவரவரும் எழுத்துக்கோடுகளை மிகச் சரியாய் வரைவதில் முழு மனதோடு ஈடுபட்டிருந்தனர். பள்ளிக் கூரையின் மீது புறாக்களின் மெல்லிய குரல் கேட்டது! 

இந்தப் பறவைகளையும் ஜெர்மன் மொழியில் கத்தும்படி ஆணையிடுவார்களோ?’ என்று மனத்துக்குள் கேட்டுக் கொண்டேன். 

இடையிடையே நான் நிமிர்ந்து பார்த்த போது, ஆசிரியர் தம் நாற்காலியில் அசைவற்று உட்கார்ந்து தம்மைச் சூழ்ந்திருந்த பொருள்களை நோக்கிக் கொண்டிருக்கக் கண்டேன். வகுப்பு முழுவதையும் தம் கண்களில் எடுத்துச் செல்ல விரும்புபவர் போல அவர் பார்த்தார். பின் என்ன? இங்கே 40 ஆண்டுகளாய் அவர் பணியாற்றியிருக்கிறார்; அதே இடம், அதே வளாகம், அதே கட்டடம். ஒரெயொரு மாற்றம்; பெஞ்சுகளும் மேஜைகளும் புழக்கத்தின் பயனாய் வழவழப்பு அடைந்திருக்கின்றன; வளாகத்தில் மரங்கள் வளர்ந்தோங்கியுள்ளன. அவர் நட்ட படர் கொடி ஜன்னல்களில் தாவிக் கூரையை எட்டிப் பிடித்து விட்டது. எவ்வளவு துன்பம் இருக்கும் இவை எல்லாவற்றையும் விட்டுப் பிரிய! 

இருந்தாலும் கடைசி வரை வகுப்பு நடத்துவதற்கு அவருக்கு நெஞ்சுரம் இருந்தது. எழுத்துப் பயிற்சிக்குப் பின் வரலாறு, வாய்பாடு. எல்லாரும் சேர்ந்து வாய்பாடு சொன்னோம். கிழவர் ஓசேர் தம் மூக்கு கண்ணாடியை அணிந்து இரு கைகளாலும் எண் சுவடியைப் பிடித்துக் கொண்டு எங்களுடன் சேர்ந்து சொன்னார். அவரும் ஈடுபாட்டுடன் தான் சொன்னார் என்பது உணர்ச்சி மேலீட்டால் நடுங்கிய குரலிலிருந்து தெரிந்தது. அடடா! அந்தக் கடைசி வகுப்பு! அதை மறக்கவே முடியாது. 

வீட்டு மணியடித்தது. ஆசிரியர் வெளிறிய முகத்துடன் நாற்காலியை விட்டு எழுந்தார்.  

நண்பர்களே, நண்பர்களே, நான்..நான்.... 

எதுவோ அவரது தொண்டையை அடைத்தது; அவரால் வாக்கியத்தை முடிக்க இயலவில்லை. 

கரும்பலகைப் பக்கம் திரும்பினார்; சுண்ணக்கட்டியை எடுத்து முழு வலிமையுடன் அழுத்திப் பெரும் பெரும் எழுத்துக்களாய், “வாழ்க பிரான்ஸ்!என்று எழுதினார்.

பின்பு சுவரில் தலையைச் சாய்த்துக் கொண்டு, மெளனமாய், கையால் சைகை செய்தார். 

அவ்வளவு தான்.......போய் வாருங்கள்.


(பின் குறிப்பு:- முதல் உலகப் போரின் முடிவில் இரு மாநிலங்களும் மீண்டும் பிரான்சில் சேர்க்கப்பட்டன) 

(1993ல் மஞ்சரியில் எழுதியது)

2 comments:

  1. “அது உலகின் மிக அழகிய மொழி, மிகத் தெளிவானது; மிகக் கட்டுக் கோப்பானது. அதை ஒரு போதும் மறக்கக் கூடாது. அதை நமக்குள் போற்றிக் காக்க வேண்டும்; ஏனென்றால், அடிமைத்தளையில் பூட்டப்பட்ட மக்கள் தம் மொழியை நன்கு பேசிக் கொண்டிருப்பார்களே யானால், அது தங்கள் விலங்கின் சாவியைக் கையில் வைத்திருப்பதற்கு ஒப்பாகும்.....”

    தமிழர்களாகிய நாம் தெரிந்து கொள்ள வேண்டிய கருத்து.
    உண்ர்ச்சி மிக்க என் மனதைக் கொள்ளை கொண்ட கதை. அருமையான மொழியாக்கத்துக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
    Replies
    1. மெய்யாகவே மொழிப்பற்று மிக்குடைய கதை தான் . பாராட்டுக்கு மிகுந்த நன்றி .

      Delete