Tuesday, 1 May 2012

அதிர்ச்சி வைத்தியம் - பிரஞ்சு நகைச்சுவை நாடகம்
( 17 ஆம் நூற்றாண்டு பிரஞ்சு நகைச் சுவை நாடக ஆசிரியர் மொலியேர் இயற்றிய " கற்பனை நோயாளி " என்னும் நாடகத்தில் ஒரு காட்சி; தமிழ் மன்றத்துக்காக நான் மொழி பெயர்த்தது )


திரு. அர்கான் தம்மை நோயாளியாக நம்பிக்கொண்டு டாக்டர் புயிர்கோனிடம் மருத்துவம் செய்துகொள்கிறார். அந்த டாக்டர்மீதும் பொதுவாய் மருத்துவத்தின்மேலும் அர்கானுக்கு வெறுப்பு ஏற்படுத்துவதற்காக அவருடைய வேலைக்காரி துவானேத் ஒரு மருத்துவர் போல் வேடமிட்டு அவரிடம் வருகிறாள். இருவரும் உரையாடுகின்றனர்.


துவானேத் - ஒரு புகழ் மிக்க நோயாளியாகிய உங்களைப் பார்ப்பதற்கு எனக்கு ஏற்பட்ட ஆர்வத்தை நீங்கள் தவறாகக் கருத மாட்டீர்கள்; எங்கும் பரவி யுள்ள உங்களது கீர்த்தி தான் எனக்கிந்த உரிமையைத் தந்தது. 

அர்கான் - மிக்க நன்றி.  

துவானேத் -- என்னை உற்றுப் பார்க்கிறீர்கள் என்பது தெரிகிறது. எனக்கு என்ன வயது இருக்கும் என்று நினைக்கிறீர்கள் 

அர்கான் - மிஞ்சி மிஞ்சிப் போனால் 26 அல்லது 27 . 

துவானேத் --அஹஹஹா! எனக்கு வயது 90 . 

அர்கான் - 90? 

துவானேத் - இவ்வளவு இளமையும் வலிமையும் என் மருத்துவக் கமுக்கங்களின் ஒரு விளைவு தான். 

அர்கான் - மெய்யாகவே 90 வயதுக்கு நீங்கள் அழகிய இளங்கிழவர் தான். 

துவானேத் -- நான் ஒரு மருத்துவப் பயணி. என் திறமைக்கு ஏற்ற மற்றும் பேர் பெற்ற சிக்கல்களை நாடிஎன்னை வேலை வாங்கத் தகுதி வாய்ந்த நோயாளிகளைத் தேடி,  மருத்துவத்தில் நான் கண்டுபிடித்துள்ள அரும் பெரும் கமுக்கங்களைச் சோதித்துப் பார்ப்பதற்காக,  ஊர் ஊராகநாடு நாடாகச் செல்பவன். சாதாரண அற்ப நோய்கள்ஒன்றுமில்லாத கீல்வாதம்ஒற்றைத் தலை வலிகளோடு நான் விளையாட விரும்புவதில்லை;  மூளையைத் தாக்கும் தொடர் காய்ச்சல், கடுமையான வாந்தி பேதி கொடிய மகோதரம்நெஞ்சு வீக்கத்துடன் கூடிய,  சிக்கல் மிக்க நுரையீரல் பிணிஇவையே எனக்குப் பிடித்தவைஇவற்றையே நான் முறியடிக்க முனைபவன்.  

அதனால்ஐயா,  நான் விரும்புவது என்ன வென்றால்நான் சொன்ன அந்த எல்லா நோய்களும் உங்களைப் பீடித்திருக்க வேண்டும் என்பதும் நீங்கள் சகல மருத்துவர்களாலும் கை விடப்பட்டு சாவுப் படுக்கையில் இருக்க வேண்டும் என்பதும் தான்: அப்போது தானே என் மருந்துகளின் அருமையையும் உங்களைக் குணப்படுத்த எனக்குள்ள ஆர்வத்தையும் நான் உங்களுக்குப் புலப்படுத்த முடியும்? 

அர்கான் - என்மீது உங்களுக்குள்ள நல்லெண்ணங்களுக்கு நான் உங்களுக்குக் கடமைப் பட்டுள்ளேன்,  டாக்டர்.

துவானேத் - நாடியைக் காட்டுங்கள். உம்! ஒழுங்காய்த் துடி! சரியான முறையில் உன்னை நான் துடிக்க வைப்பேன்! இந்த நாடி முரண்டு பண்ணுகிறதே! உனக்கு இன்னம் என்னைத் தெரியவில்லை என்பது எனக்குப் புரிகிறது. உங்கள் மருத்துவர் யார்? 


அர்கான் - டாக்டர் புயிர்கோன். 

துவானேத்- பெரிய மருத்துவர்கள் பற்றிய என் பட்டியலில் அவர் பெயர் இல்லை. உங்களுக்கு என்ன நோய் என்றார்? 


அர்கான் - கல்லீரல் கோளாறு என்றார்; சிலர் மண்ணீரல் பாதிப்பு என்றனர். 

துவானேத் - எல்லாரும் முட்டாள்கள். உங்களுக்கு நுரையீரல் நோய். 

அர்கான் - நுரையீரலா?

துவானேத் - உங்களுக்கு என்னென்ன செய்கிறது? 

அர்கான் - அடிக்கடி தலை வலி.

துவானேத் - சரிதான்; நுரையீரல்!  

அர்கான் - கண்ணை ஒரு திரை மறைப்பது போல் சில சமயம் தோன்றுகிறது.  

துவானேத் - நுரையீரல்! 

அர்கான் - அவ்வப்போது நெஞ்சு வலி. 

துவானேத் - நுரையீரல்! 

அர்கான் - ஒரே களைப்பு!  

துவானேத் - நுரையீரல்! 

அர்கான் - எப்போதாவது குடல் வலி போல வயிற்றில் வலி. 

துவானேத் - நுரையீரல்! உணவை விருப்பத்துடன் உண்கிறீர்களா 

அர்கான் - ஆம், டாக்டர்.  

துவானேத் - நுரையீரல்! மது பருகுவது உங்களுக்குப் பிடிக்கிறதா? 

அர்கான் -- ஆமாம், டாக்டர். 

துவானேத் - நுரையீரல்! சாப்பாட்டுக்குப் பின்பு லேசான தூக்கம் வருமா? 

அர்கான்- வரும், டாக்டர். 

துவானேத் - நுரையீரல், நுரையீரல் ! உங்கள் டாக்டர் என்ன உணவு உண்ணச் சொன்னார்? 

அர்கான் - கஞ்சி. 

துவானேத் - மண்டு! 

அர்கான் - பறவைக் கறி, கன்றுக் கறி. 

துவானேத் - மண்டு! 

அர்கான் - சூப்புமுட்டை,  பிளம் பழம். 

துவானேத்- மண்டு! 

அர்கான் - முக்கியமாக திராட்சை மதுவில் நிறைய நீர் கலந்து குடிக்கச் சொன்னார். 

துவானேத் -- மண்டு, மக்கு, முண்டம்! திராட்சை மதுவை நீங்கள் சுயமாகப் பருக வேண்டும். நீர்த்துப் போயிருக்கிற உங்கள் ரத்தத்தைக் கெட்டிப்படுத்த நிறைய மாட்டுக் கறி, பன்றிக் கறி, கோதுமை, அரிசி உண்ண வேண்டும். ரத்தத்தில் பசை உண்டாக்க முந்திரிப் பருப்பும் பிஸ்கட்டும் தின்னுங்கள். இந்த ஊரில் நான் இருக்கிற வரை அடிக்கடி வந்து பார்ப்பேன். 

அர்கான் - மிக்க நன்றி, டாக்டர். 

துவானேத் - என்ன இது? அந்தக் கையை வைத்துக்கொண்டு இருக்கிறீர்களே! 

அர்கான் - என்ன சொல்கிறீர்கள்? 

துவானேத் - நீங்கள் நானாய் இருந்தால் அந்தக் கையை உடனே வெட்டச் செய்திருப்பேன். 

அர்கான் - ஏன்? எதற்காக 

துவானேத் - எலலா உணவுகளையும் அது தன் பக்கமே இழுத்துக்கொள்கிறது, இந்தப் பக்கத்துக்குப் பயன் ஏற்படுவதைத் தடுக்கிறது. 

அர்கான் - ஆனால் என் கை எனக்குத் தேவை. 

துவானேத் - உங்கள் வலக் கண்கூடச் சரியில்லை; அதைத் தோண்டிவிட வேண்டும். 

அர்கான் - கண்ணைத் தோண்டுவதா 

துவானேத் - அது மற்ற கண்ணுக்கு இடையூறாக இருக்கிறது. 

அர்கான் - இருந்துவிட்டுப் போகட்டும். 

துவானேத் - போய் வருகிறேன்.  

( டாக்டர் போன பின்பு )  

அர்கான் - நல்ல சிகிச்சை! ஒற்றைக் கண்ணனாயும் முடவனாயும் மாற்றும் அறுவை! 

****************************************************************

No comments:

Post a Comment