Monday, 21 May 2012

கிரேக்கத் தொன்மம்
உன்னத தொன்மம் ( புராணம் ) கிரேக்கர்க்கு உண்டு. கிறித்துவம் பரவுவதற்கு முன்பு அவர்கள் எண்ணற்ற தெய்வங்களைத் தொழுதுவந்தனர். தலைமைக் கடவுள் சீயஸ்; இவரது மனைவி ஹீரா, மகன் அப்பொல்லோ ( சூரியன் ). இவர்களுக்கும் வேறு முக்கிய சாமிகளுக்கும் இருப்பிடம் ஒலிம்ப்பியா மலை, சிவன் குடும்பத்துக்குக் கைலாய மலை போல. 

கடவுள்களுக்கு இடையே நட்பு, போட்டி, பூசல், பொறாமை இருந்தன; மனிதர்களின் நடவடிக்கைகளில் தலையிட்டு உதவதும் உண்டு, உபத்திரவம் புரிவதும் உண்டு. 

தெய்வங்களின் செயல்களை அடிப்படையாய்க் கொண்டு கதைகள் எழுதினார்கள்; ஒவ்வொரு பிரதான கடவுளின் சாகசங்களையும் விவரிக்கிற சுவையான கதைகள் பிறந்தன. 

கர்ணன் போன்று தெய்வ - மனித உறவில் உதித்த அசகாயசூரர் சிலரது வாழ்க்கையும் அவரது மகத்தான சாதனைகளும் தொன்மத்தில் இடம் பெற்றன. அவருள் ஒருவனான ஹெர்குலிஸ் சீயசுக்கும் மானிடப் பெண் அல்க்மெனுக்கும் புதல்வனாய்த் தோன்றி அரும் பெரும் செய்கைகளுக்குக் கர்த்தா ஆனான். புகழ் மேம்பட்ட அவனைப் பற்றிப் பலர் படித்திருக்கலாம். 

கிரேக்கரின் ஒப்புயர்வற்ற கற்பனைச் செழுமை விளைவித்த ருசிகரத் தொன்மப் படைப்புகள் தலைமுறை தலைமுறையாய், ஐரோப்பியக் கலைஞர்களின் உள்ளம்கவர் கருக்களாகி விழுமிய வண்ண ஓவியங்கள் தீட்டப்படக் காரணமாய் இருந்துள்ளன. 

அவை பல நாட்டு அருங் காட்சியகங்களை அணி செய்கின்றன. பாரிசிலுள்ள லூவ்ர் ( Louvre ) அகத்தில் காட்சி அளிப்பவற்றுள் சில:


ஒலிம்ப்பியா, அப்பொல்லோவும் கவிஞனும், பர்னாஸ் மலை, வீனசின் குளியல், பக்குசின் வெற்றி, அப்பொல்லோவும் மர்சியாசும், ஆண்ட்ரோமீடாவின் மீட்பு. 

தெய்வங்களையும் தொன்ம நிகழ்ச்சிகளையும் கிரேக்கச் சிற்பிகள் சிலைகளாய்ச் செதுக்கினார்கள். வெண் சலவைக் கல்லால் ஆன அந்த அற்புத, வியக்கவைக்கும், தத்ரூப உருவங்கள் மாதிரி, வேறெந்த நாட்டினரும் புனையவில்லை என்பது மிகையல்ல. 

லூவ்ரின் ஒரு தனிப் பகுதியில் கண்ணுக்கு விருந்து அளிக்கும் அந்தக் கலைநேர்த்தி மிக்க அழகுப் பதுமைகளைப் பார்ப்பவர்கள் 

கண்டோம் கண்டோம் கண்டோம்

கண்ணுக்கு இனியன கண்டோம்

கண்டறி யாதன கண்டோம்

என்றெண்ணிக் களிப்பது திண்ணம். 

(ஒலிம்பியாவில் இருந்த சீயஸ் சலவைக்கல் சிலையும் ரோட்ஸ் தீவில் 30 அடி உயரமாய் எழுப்பப்பட்டுக் கம்பீரமாய் வீற்றிருந்த அப்பொல்லோவின் வெண்கலச் சிலையும் கால தேவனால் சிதைக்கப்பட்டுவிட்டன.)

1 comment:

  1. இந்தியத் தொன்மக் கதைகளுக்கும் கிரேக்கத் தொன்மக் கதைகளுக்கும் உள்ள ஒற்றுமை வியக்கவைக்கிறது.

    அற்புதமான கிரேக்கக் கலைப்படைப்புகள் காலத்தால் சிதைந்தது மிகவும் வருத்தமளிக்கும் செய்தி.

    அறியாத பல தகவல்களை அறியச் செய்வதற்கு மிகவும் நன்றி.

    ReplyDelete