Monday 14 May 2012

மன்னரின் கவிதை




( பிரான்சில் 17 ஆம் நூற்றாண்டில் பதினான்காம் லூய் மன்னன் ஆண்டபோது நிகழ்ந்த சுவையான நிகழ்ச்சிகள் சிலவற்றை மதாம் த செவிஞே என்ற பெண்மணி பதிந்திருக்கிறார். கீழ் காணும் செய்தி 1- 12 -1664 இல் எழுதப்பட்டது. இனி மொழிபெயர்ப்பு)



கொஞ்ச காலமாய் அரசர் கவிதைகள் இயற்றுவதற்குக் கடுமையாய் முயல்கிறார். 

ஒரு நாள் சிறு கவியொன்றை எழுதினார்; அது அவருக்கே பிடிக்கவில்லை. 

மார்ஷல் கிராமோனிடம் அதைக் காட்டி, " மார்ஷல், இதை வாசியுங்கள்; இவ்வளவு மட்டமான கவிதை யொன்றை நீங்கள் கண்டதுண்டா என்று பாருங்கள். அண்மைக் காலமாக நான் கவிகளை விரும்புகிறேன் என்பதால் பல தரப்பட்ட கவிகளைக் கொண்டுவருகிறார்கள்" என்றார். 

அதை வாசித்துப் பார்த்த மார்ஷல், " நீங்கள் எல்லாவற்றையும் மிகச் செம்மையாய் மதிப்பிடுகிறீர்கள்; உண்மையிலேயே இதைப் போன்ற மடத்தனமான, ஏளனத்துக்கு உரிய ஒரு கவிதையை நான் இதுவரை படித்ததே இல்லை" என்றார். 

மன்னர் சிரித்துக்கொண்டே, " இதை இயற்றியவர் ஒரு தற்பெருமை கொண்ட முட்டாள் என்பது மெய்யல்லவா?" என்று கேட்டார். 

"அவரை வேறு விதமாய் அழைத்தல் பொருந்தாது" 

" நன்று, இவ்வளவு வெளிப்படையாய் நீங்கள் அதைப் பற்றி என்னிடம் கூறியதற்கு மகிழ்ச்சி; அதை எழுதியவன் நான் தான். 

"ஆ! அவசரப்பட்டுவிட்டேன். அதைத் திருப்பித் தாருங்கள்; நான் சரியாய்ப் படிக்கவில்லை" 

" வேண்டாம், மார்ஷல், முதல் உணர்ச்சியே எப்பொழுதும் இயற்கையானது"  

மார்ஷலின் நிலையை எண்ணி அரசர் பெரிதாய்ச் சிரித்தார். வயதான ஓர் அதிகாரிக்குச் செய்யக்கூடிய மிக மோசமான கொடுமை இதுவே என்பது அனைவருடைய கருத்துமாகும். 

சிந்திப்பதை எப்போதும் விரும்புகிற நானோ, வேந்தர் இதுபற்றி எண்ணிப் பார்க்க வேண்டும் என்றும் உண்மையைத் தெரிந்து கொள்ளமுடியாத எவ்வளவு நெடுந்தொலைவில் அவர் இருக்கிறார் என்பதை அவர் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் விரும்புகிறேன்.

3 comments:

  1. முதல் உணர்ச்சியே எப்பொழுதும் இயற்கையானது"

    சிறப்பான பகிர்வுக்குப் பாராட்டுக்கள் !

    ReplyDelete
  2. வேண்டாம், மார்ஷல், முதல் உணர்ச்சியே எப்பொழுதும் இயற்கையானது"//

    இவ்வளவு அழகான கவித்துவமிக்க
    சொற்றொடரைச் சொன்ன மன்னர் நிச்சயம்
    நல்ல கவிஞராகத்தான் இருந்திருக்க வேண்டும்
    மனம் கவர்ந்த பதிவு
    பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete